இதயம் 19
அலைபேசியின் ஓசையில் லேசாக உறக்கம் கலைந்த ரிஷி, விழிகளைத் திறக்காமலே அதனை எடுத்து அழைப்பை ஏற்று காதில் பொருத்தினான்.
மறுமுனையில், “ரிஷிகண்ணா…” என்றழைக்க, “சொல்லுங்கம்மா…” என்றவனது குரல் உறக்கம் கலையாததில் கரகரத்தது.
“என்ன கண்ணா, இன்னும் எந்திரிக்கலையா?” என்று ராதா பாசமாகக் கேட்க,
“ஆமாமா… நீங்க கால் பண்ணதும் தான் எழுந்துட்டேன்…” என்று ரிஷி பதில் மொழிந்தான்.
“மணி ஏழரை ஆயிருச்சு கண்ணா…” என்று ராதா மொழிய,
“அப்படியா?” என்றவனது விழிகள் சுவர் கடிகாரத்தில் பதிந்தது.
மணி ஏழு முப்பது என்று கடிகாரம் காண்பிக்க, “டிராவலிங் டயட்ல தூங்கிட்டேன் ம்மா…” என்று ரிஷி பதிலளித்தான்.
“நான் தான் டிஸ்டர்ப் பண்ணி எழுப்பி விட்டுடேனா கண்ணா?” என்று ராதா வருந்த,
“அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா. நீங்க கால் பண்ணலைன்னா கொஞ்ச நேரத்துல நானே எழுந்திருப்பேன்…” என்று ரிஷி சமாதானம் கூறினான்.
“சும்மாதான் கண்ணா… உன் கிட்ட பேசணும் போல இருந்துச்சு. அதான் கால் பண்ணேன்…” என்று ஒட்டுமொத்த பாசத்தையும் தேக்கி ராதா பேச,
“ஒரு ஃபைவ் மினிட்ஸ் மா… நான் போய் ஃபேஸ் வாஷ் பண்ணி, பிரஷ் ஆயிட்டு வந்துடறேன்…” என்று ரிஷி கூறினான்.
“சரி கண்ணா…” என்று ராதா அழைப்பிலேயே காத்திருக்க, ரிஷி எழுந்து முகம் கழுவி வந்து மீண்டும் தாயிடம் பேசினான்.
ஐந்து நிமிடங்கள் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்தவன் முகம் யோசனையைத் தத்தெடுத்தது.
காரணம், மலர் இன்னும் வரவில்லை. எப்போதும் ஏழு மணிக்குச் சரியாக வந்துவிடுவாள். ரிஷி என்றாவது எழாமல் உறங்கியிருந்தால்கூட எழுப்பிவிட்டிடுவாள். ஆனால், இன்று என்னாயிற்று என்று மனம் சிந்தித்தது.
தன்னால் வர முடியவில்லை அல்லது ஏதாவது வேலை இருந்தால் தாமதமாக வர நேரிட்டால், முன்பே ரிஷியிடம் மலர் தெரிவித்திடுவாள்.
ஆனால், இன்று என்னவென்று தெரியவில்லை. ஒரு வேலை அவளுக்கு ஏதாவது பிரச்சனையா? அல்லது வேறு ஏதாவதா? உடல்நலக்குறைவா? என்று பலவாறாகச் சிந்தித்தவன், மலருக்கு அழைப்பை விடுத்தான்.
முழுதாக அழைப்பு சென்று துண்டாக, மலர் அழைப்பை ஏற்கவில்லை.
“ஏன் கால் அட்டென்ட் பண்ண மாட்றா?” என்று நெற்றியைச் சுருக்கியவன் மீண்டும் அழைப்பை விடுக்க, அப்போதும் எடுக்கவில்லை.
சில நிமிடங்கள் அமைதியாகச் சிந்தித்தான்.
அவனுக்கு மலரது எண்ணைத் தவிர வேறு அலைபேசி எண், அவர்களது வீட்டில் உள்ளவர்களது என எதுவும் தெரியாது.
அவளது வீடும் எங்கிருக்கிறது என ரிஷிக்குத் தெரியாது. தான் இருக்கும் பகுதியில் இருந்து மிகவும் அருகாமையில்தான் உள்ளது என்று தெரியும். ஆனால், சரியாக எங்கிருக்கிறது என்று தெரியவில்லை.
சில நொடிகள் அமைதியாக இருந்தவன், பிறகு அவளுக்குப் புலனத்தில் செய்தி அனுப்ப, அது அவள் ஆன்லைனில் இல்லை என்று காண்பித்தது.
சிறிது நேரம் காத்திருந்து பார்க்கலாம் என்று எண்ணியவன், எழுந்து குளித்துவிட்டு வர, அப்போதும் மலர் வந்திருக்கவில்லை.
என்னவோ சரியில்லை என மனது உணர்த்த, சுதாகரைத் தொடர்புகொள்ள முயற்சித்தான்.
அவன் மூலம் அவளது வீடு அல்லது வீட்டினரின் அலைபேசி எண் என ஏதாவது கிடைக்குமா என்று முயற்சித்துப் பார்க்க எண்ணினான்.
ஆனால், சுதாகரையும் தொடர்புகொள்ள இயலவில்லை.
தனது உதவியாளரை அழைத்து, “மலர் நேற்று அலுவலகம் வந்தாளா?” என்று விசாரிக்க, “அவர் வரவில்லை. காரணமும் கூறவில்லை…” என்று பதிலளித்தார்.
ஏதோ நடந்திருக்கிறது. என்னவோ சரியில்லை என்று எண்ணியவன், அதனைக் கண்டுபிடிக்க வழி தெரியாது நின்றான்.
அப்போதுதான் சுதாகரிடமிருந்து ரிஷிக்கு அழைப்பு வந்தது.
மனதிற்குள் மகிழ்ச்சி மின்ன, உடனடியாக அழைப்பை ஏற்றான்.
மறுமுனையில், “என்ன ரிஷி, இந்த நேரத்தில் கால் பண்ணியிருக்க?” என்று சுதாகர் கேட்க, அப்போதுதான் ரிஷிக்கு அவனுக்கு இப்போது இரவு நேரம் என்பது உரைத்தது.
“சாரிடா… டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?” என்று மன்னிப்பை வேண்ட,
“அதெல்லாம் ஒன்னும் இல்லடா. இப்பதான் சாப்பிட்டு, படுக்கப் போறேன். சொல்லுடா… என்ன விஷயம்? எதுவும் எமர்ஜென்சியா?” என்று சுதாகர் வினவினான்.
“அது… மலர் இன்னும் வேலைக்கு வரல. எப்பவும் லீவ்னா முன்னாடியே இன்ஃபார்ம் பண்ணிடுவா. பர்மிஷன் வேணும்னாலும் கால் பண்ணிச் சொல்லிடுவா. ஆனா, இப்ப கால் பண்ணேன், கால் போகல. வாட்ஸ்அப்லயும் மெசேஜ் போட்டேன். ஆன்லைன்ல இல்ல. எனக்கு அவ நம்பரைத் தவிர வேற எதுவும் தெரியாது. அதான் என்ன பண்றதுன்னு தெரியல. உனக்கு கால் பண்ணேன். அவளுக்கு எதுவும் பிராப்ளம்மான்னு தெரியல…” என்று ரிஷி தனது தவிப்பை மறைத்து அவனிடம் விளக்கினான்.
இருந்தும், சுதாகருக்கு சிறிதான சந்தேகம் முளைத்தது.
தன் வீட்டில் பணி செய்யும் பெண்ணுக்காக இப்படி தேடி விளக்கம் ரிஷி கொடுக்கிறானே என்று.
இருந்தும் அதனை ஒதுக்கித் தள்ளியவன், “பிரச்சனை எல்லாம் எதுவும் இருக்காது டா. இரு, நான் கால் பண்ணிப் பாக்குறேன்…” என்று அழைப்பைத் துண்டித்த சுதாகர், மலருக்கு அழைப்பை விடுத்தான்.
குளித்து முடித்து அலுவலகத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்த மலர், சுதாகரின் அழைப்பைக் கண்டு, “சுதாகர் அண்ணா எதுக்குக் கூப்பிடுறாங்க திடீர்னு?” என்று சிந்தித்தவாறு அழைப்பை ஏற்றாள்.
மறுமுனையில், சுதாகர் எதுவும் நடவாத பாவனையில், “என்ன மலர், எப்படி இருக்க?” என்று வினவிட,
“நல்லா இருக்கேன் ண்ணா. நீங்க, அண்ணி, அம்மா எல்லாம் எப்படி இருக்கீங்க? குட்டிப் பையன் என்ன பண்றான்?” என்று அவனிடம் கேட்டாள்.
எப்போதும் அவளது குரலில் இருக்கும் துள்ளல் இல்லாததை உணர்ந்தவன்,