“என்ன தேவையில்லாம பேசினேன்? என்ன பேச வச்சது நீதான்டி! உன்னோட லெவல் என்னன்னு உனக்குத் தெரியுமா? இன்னைக்கு வேலைய விட்டு துரத்தினா, ஒரு மாசம் கூட உன்னால வீட்டுக்கு சோறு போட முடியாது. பிச்சைதான் எடுப்ப. நீ என் மகன் மேல ஆசைப்படுறியா?” என்று ராதா ஆவேசமாகக் கேட்க, “என்ன?” என்று பார்த்தவளின் முகத்தில் ஏகமாய் திகைப்பு.
“என் பையனோட லெவல் என்னன்னு தெரியுமா உனக்கு? எங்க ஸ்டேட்டஸ் தெரியுமா? அவனுக்குப் பொண்ணு கொடுக்க எத்தனை இன்டஸ்ரியலிஸ்ட் பணக்காரங்க, ஏன், ஜமீன் வம்சத்தில்கூட நீ நான்னு போட்டி போட்டுட்டு வராங்க. அப்படிப்பட்டவனுக்கு நீ பொண்டாட்டியாக ஆசைப்படுறியா? அவனைக் கல்யாணம் பண்ணிக்க ஒரு சதவீதமாவது உனக்குத் தகுதி இருக்கா?” என்று ஆத்திரம் நிறைந்த குரலில் வினா தொடுக்க, மலரிடம் பதில் இல்லை.
அவரது பேச்சில் ஏகமாய் அதிர்ந்து போயிருந்தாள். தான் எப்போது அவரது மகன் மீது ஆசைப்பட்டோம் என்று அவளுக்குப் புரியவில்லை.
“பதில் சொல்லு! இதுக்குத்தான் இந்த மாதிரி லோ கிளாஸ் பீப்பிளை வீட்டுக்குள்ள விடக்கூடாதுன்னு சொல்றது. ச்சை!” என்ற அவரது பார்வை அருவருப்புடன் மலர் மீது படிய, அவள் கூசி போனாள்.
“உன் முகத்தை என்னைக்காவது கண்ணாடில பாத்திருக்கியா நீ? கூலி வேலை பாக்குறவன் கூட உன்னை கல்யாணம் பண்ணிக்க யோசிப்பான். ஆனா, உனக்கு வெளிநாட்டில் போய்ப் படிச்சிட்டு வந்த என் பையன் கேக்குதா? எங்களோட சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா உனக்கு? எங்க வீட்ல வேலை பாக்குற ஆளுங்களே அஞ்சு பேர் இருப்பாங்க. நீ வீட்டு வேலை பார்த்து உன்னோட குடும்பத்தைக் காப்பாத்திட்டு இருக்க. உனக்கு என் மகன் மேல ஆசையா?” என்று ஏகமாய் முறைத்துப் பார்க்க, மலருக்கு விழிகளில் நீர் தேங்கியது.
இதற்காகத்தானே இதுபோல பேச்சு வாங்க நேரிடும் என்று தானே ரிஷியிடம் படித்துப் படித்துக் கூறினாள், “உனக்கும் எனக்கும் எந்தக் காலத்திலும் ஒத்து வராது,” என்று. ஆனால், தான் பயந்து கொண்டிருந்த ஒன்று நடந்துவிட்டது என்று கருத்த முகத்துடன் நின்று கொண்டிருந்தாள்.
“பதில் சொல்லு!” என்று ராதா உச்சபட்ச கோபத்தில் அதட்ட, “நான் எதுவும் பண்ணல, மேடம். சார் தான் என்னைப் பிடிச்சிருக்குன்னு சொன்னாங்க. ஆனா, நான் எப்பவோ இதெல்லாம் ஒத்து வராதுன்னு சொல்லிட்டேன், மேடம்,” என்று அழுகையை அடக்கிய குரலில் தன்னிலை எடுத்துக் கூறினாள்.
“அப்படியே அழுது நல்லவ மாதிரி நடிக்காதடி. இதுதான உன்னோட பிளான்? பணக்காரனைப் பார்த்து வளைச்சுப் போட்டு, குடும்பத்தோட செட்டில் ஆகுற ஐடியாவில்தானே இப்படி பண்ண?” என்று ராதா கோபத்தில் விழிகளால் அவளை எரிக்க, “நிச்சயமா இல்ல, மேடம். எனக்கு என்னோட தகுதி என்னன்னு தெரியும், மேடம். தகுதிக்கு மீறி நான் என்னைக்கும் ஆசைப்பட மாட்டேன்,” என்றவளது குரல் தழுதழுத்தது.
“அப்படி உன்னோட தகுதி என்னன்னு உனக்குத் தெரிஞ்சிருந்தா, என் பையன் மேல ஆசைப்பட்டு இருப்பியா? இல்ல, அவனை மயக்கி உன் பின்னாடி சுத்தவிட்டு இருப்பியா?” என்று கேட்க முடியாத வார்த்தைகளால் தணலை அள்ளிக் கொட்ட, “போதும், நிறுத்துங்க, மேடம்! எனக்கும் இதுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. நான் என்னைக்குமே உங்க மகனை அப்படி பார்த்ததில்லை. இனி பார்க்கவும் மாட்டேன்,” என்று மலரும் லேசான கோபம் எட்டிப் பார்த்த குரலில் மொழிந்தாள்.
“பண்றதெல்லாம் பண்ணிட்டு உனக்குக் கோபம் வேற வருதா?” என்று ராதா எகிறிக் கொண்டு வர, மலர் பயத்துடன் இரண்டெட்டு பின் வாங்கினாள்.
“என்னோட பேக்ரவுண்ட் தெரியாம நீ என் பையன் கிட்ட விளையாடிட்ட. நான் யாருன்னு காட்ட நினைச்சா, நீ இருக்குற இடம் தெரியாம அழிஞ்சு போயிருவ,” என்று ராதா விழிகளால் அவளைச் சுட்டுப் பொசுக்க, மலருக்கு நெஞ்சுக்கூடு அச்சத்தில் சில்லிட்டது.
“உனக்கு எவ்வளவு திண்ணக்கம் இருந்தா, ரிஷிய வீட்டில
கல்யாணத்துக்குப் பேசச் சொல்லி அனுப்பி இருப்ப?” என்று ஆங்காரமாய் ராதா கத்த, தான் அறிந்து கொண்ட செய்தியில் மேலும் அதிர்ந்து போனாள் மலர்.
இரண்டு நாட்கள் ரிஷி அமைதியாக இருந்தது, அவனுக்கு நிதர்சனம் புரிந்துவிட்டது. இனி தன்னிடம் அதுபோல நடந்து கொள்ள மாட்டான் என்று மலர் மகிழ்ந்திருக்க, அவன் என்னவென்றால் வீட்டில் சென்று திருமணத்திற்குப் பேசியுள்ளானா? அதுவும் தன்னுடைய குடும்பத்தைப் பற்றி தெரிந்திருந்தும் அவர்களிடம் பேசியிருக்கிறானே என்று மலருக்குள் ஏகமாய் அதிர்வு இறங்கியது.
“அன்னைக்கு ரிஷிய பார்க்க வந்திருந்தாளே ரோகிணி… அவளை நீயும் பார்த்த தானே?” என்று ராதா கேட்க, மலரின் தலை மேலும் கீழும் அசைந்தது.
“அந்தப் பொண்ணு எவ்வளவு அழகா இருந்தா, எவ்ளோ படிச்சிருக்கா தெரியுமா? அவங்க அப்பா எவ்வளவு பெரிய பிசினஸ்மேன்னு தெரியுமா? அவங்க அந்தப் பொண்ணுக்கு இருநூறு பவன் கல்யாணத்துக்குப் போடத் தயாரா இருந்தாங்க. அந்தப் பொண்ணோட உன்னை கம்பேர் பண்ணா, அவ கால் தூசிக்காது. நீ சமமாவியா?” என்று ராதா கேட்க, மலரின் தலை இல்லை என்று அசைந்தது.
“இல்ல தானே? அப்புறம் என்ன? இதுக்கு என் மகனை வளைச்சுப் போடப் பாத்த?” என்று சொல்லி மீண்டும் மீண்டும் அவளது ஒழுக்கத்தைக் கேள்விக்குறியாக்க, மலருக்கு மனதே விட்டுப் போனது.
“மேடம், போதும்… ப்ளீஸ்,” என்றவள் கையெடுத்துக் கும்பிட, “எப்படி நல்லவ வேஷம் போடுறா பாருங்கண்ணா,” என்று அருகில் இருந்தவரிடம் ராதா கூறினார்.
இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த ராதாவால் அண்ணன் என்று அழைக்கப்பட்ட ராமச்சந்திரன், “உன் குடும்பத்தைப் பத்தி என் தங்கச்சி சொன்னா. இனிமே என் மருமகன் இருக்கப் பக்கமே தலை வைச்சு நீ பார்க்கக் கூடாது. அப்படி மீறி ஏதாவது பண்ண, உன் குடும்பத்தை உருத் தெரியாம அழிச்சிடுவேன். உன் தங்கச்சியும் தம்பியும் ஸ்கூல்தானே படிச்சிட்டு இருக்காங்க? ஸ்கூல் போனவங்க திரும்பி வரவே மாட்டாங்க. பாத்துக்கோ,” என்றிட மலருக்கு சர்வமும் ஒடுங்கியது.
“உன் தங்கச்சி மெடிக்கல் காலேஜ்ல படிக்கிறாள்ல? காலேஜ்ல வச்சு அசிங்கப்படுத்திடுவேன், பாத்துக்கோ,” என்று மீண்டும் சாகித்யாவை இழுத்து வைத்துப் பேச, “போதும்… ப்ளீஸ்! என்ன விட்டுருங்க. இனிமே நீங்க இருக்க திசைப் பக்கம் கூட நான் வரமாட்டேன்,” என்று மலர் அழுகையுடன் கைகூப்பினாள்.
“அதுதான் உனக்கும் உன் குடும்பத்துக்கும் நல்லது. போ இங்கயிருந்து,” என்று ராதா நாயை விரட்டுவது போல விரட்ட, அங்கிருந்து வெளியே ஓடி வந்தவளுக்கு அழுகை பெருகியது.
துடைக்கத் துடைக்க வற்றாத நதியாகிப் போன கண்ணீரைத் துப்பட்டாவால் துடைத்தபடி வீட்டை நோக்கிச் சென்றவளுக்கு நெஞ்சு வேதனையில் துடித்தது.
தன்னைப் பற்றி எவ்வளவு கேவலமாகப் பேசி விட்டனர்! தந்தை இறந்த பின்பு சாப்பாட்டிற்காகத் துன்பப்பட்ட போதும், நேர்மையாக உழைத்து உண்ண வேண்டும் என்பதற்காகத்தானே இப்படி அல்லும் பகலும் வேலைக்கு ஓடிக் கொண்டிருக்கிறேன்? என்னைப் போய், என்னுடைய ஒழுக்கத்தைப் போய் அசிங்கப்படுத்திவிட்டனர் என்று நெஞ்சம் விம்மியது.
இதையெல்லாம் விட, தன்னுடைய குடும்பம், தன்னுடைய வாழ்வே தன் குடும்பத்தினர்தானே! அப்படிப்பட்டவர்களை உருத் தெரியாமல் அழித்துவிடுவேன் என்று மிரட்டுகின்றனரே என்று கை, கால் எல்லாம் நடுங்கியது.
எங்கே தன் குடும்பத்தினரை ஏதாவது செய்துவிடுவார்களோ என்று உள்ளம் பதைபதைத்திட, அந்தப் பகுதியைக் கடந்தவள் ஒரு மரத்தடியில் அமர்ந்துவிட்டாள்.
நடக்க முடியவில்லை. கை, கால் எல்லாம் கிடுகிடுவென நடுங்கியது அச்சத்தில்.
இந்த ஊரில் தங்களுக்குப் பெரிதாக யாரையும் தெரியாது. பஞ்சம் பிழைக்கத்தான் இங்கு வந்துள்ளோம். இவர்கள் தங்களை ஏதாவது செய்தாலும் கேட்க ஆளில்லையே! இப்போது என்ன செய்வது என்று பயத்தில் இம்மையும் புரியவில்லை, மறுமையும் புரியவில்லை அவளுக்கு.
ரிஷியின் மேல் கோபமாக வந்தது.
‘தான் எவ்வளவு படித்துப் படித்துக் கூறினேன்… நீங்கள் வேறு, நான் வேறு’ என்று. அவருக்கு எதுவுமே புரியவில்லையா? எப்படி யோசிக்காமல் அவரது குடும்பத்தினரிடம் போய்க் கூறினார்? அதன் விளைவுகளை நான் தான் சந்திக்க நேரிடும் என்று அவருக்குக் கிஞ்சித்தும் சிந்தை இல்லையா?” என்று உள்ளம் கதறியது.
செய்யாத தவறுக்கு இவ்வளவு பெரிய பழியைத் தூக்கிச் சுமப்பது நெஞ்சில் வலி ஏற்படுத்த, கையை வைத்து இதயத்தில் அழுத்திக் கொண்டாள்.
“தான் யாருக்கு என்ன துன்பம் செய்தோம்? தானுண்டு, தன் வேலையுண்டு என்று தானே இருக்கிறேன். பிறகு ஏன் எனக்கு இவ்வளவு துன்பத்தைக் கொடுக்கிறாய், கடவுளே?” என்று அழுகையுடன் மனதிற்குள் கதறினாள்.
இங்கு ராமச்சந்திரனோ, “ராதா, எனக்கு இந்தப் பொண்ணைப் பார்த்தா இப்படியே விட்டுவிடுவான்னு தோணல. பேசாம ஆள் வச்சு, அவங்க வீட்ல இருக்க யாரையாவது தூக்கிருவோமா?” என்று கேட்டிட,
“ண்ணா, அவ இவ்வளவு எல்லாம் ஒர்த் இல்லைண்ணா. அவ வீட்டு ஆளுங்களை ஒன்னும் இல்லாம பண்ணிடுவோம்னு சொன்னப்பவே பயந்துட்டா. அவ முகத்தை நான் பார்த்தேன். நான் அவளைத் திட்டும்போது கூட கொஞ்சம் தைரியமாகத்தான் இருந்தா. ஆனா, அவ வீட்டாளுங்களைச் சொல்லும்போது ரொம்பவே பயந்துட்டா. அவளுக்கு என்னைப் பத்தி நல்லாவே தெரியும். கண்டிப்பா இனி ரிஷி பக்கம் திரும்பமாட்டா,” என்று ராதா உறுதியாகக் கூறினார்.
“பாப்போம். இல்லாட்டினா, எனக்குத் தெரிஞ்ச ரவுடியை விட்டு மிரட்டி ஊரைவிட்டு போக துரத்திடலாம்,” என்று ராமச்சந்திரன் கூற, ராதாவிற்கும் அது சரியான யோசனையாகப்பட்டது.
“கொஞ்ச நாள் பாப்போம் ண்ணா. திரும்பவும் வாலாட்டுனா, அவ குப்பத்துக்கே தொரத்திவிடலாம்,” என்று ராதா கூற, ராமச்சந்திரன் அதனை ஆமோதித்தார்.
இங்கு மலர்தான் அந்த அந்தி சாயும் பொழுது, கேட்க யாருமற்று தெருவின் ஓரத்தில் அமர்ந்து அழுகையில் கரைந்து கொண்டிருந்தாள்.