இதயம் 18
“ஏய், என்னோட பிஸ்கட்டை எடுக்காதடா!” என்று வித்யா கத்த, “ஒரே ஒரு பிஸ்கட் தானே எடுத்தேன். ரொம்ப பண்ணாதடி,” என்று முரளி அவளிடமிருந்து வாங்க முயற்சித்தான்.
“வேணும்னா வாங்கி சாப்பிடு. ஏண்டா என்னதை எடுக்கிற? உனக்கு வாங்கிக் கொடுத்ததை நல்லா மொக்கிட்டு, இப்ப என்னதை எடுக்குறியா?” என்று வித்யா கோபமாக உரைக்க, “ஒரு பிஸ்கட் தானே கொடுத்தால் என்னடி” என்பது போல் முரளியும் விடாது பார்த்தான்.
“ஒரு பிஸ்கட்டுக்கு எதுக்கு ரெண்டு பேரும் இப்படி அக்கப்போர் பண்ணிட்டு இருக்கீங்க? முரளி, வா. காசு தரேன், போய் வாங்கிக்கோ,” என்று மாதவி அறைக்குள் எட்டிப் பார்த்துக் கூற, “எனக்கு அதெல்லாம் வேணாம். அவகிட்ட இருக்க பிஸ்கட் தான் வேணும்,” என்று நின்றான் முரளி.
“அது சரி, நீ வேணும்னே அவக்கிட்ட வம்பு இழுக்கற முரளி,” என்று மாதவி முறைக்க, “ஆமாம்மா, வேணும்னா வேற வாங்கிச் சாப்பிடச் சொல்லு. எதுக்கு என்கிட்ட வந்து திருடிட்டு இருக்கான்?” என்று முரளியைப் பார்த்து வக்கணை காட்டினாள்.
இவர்களது சண்டையில் உறங்கிக் கொண்டிருந்த மலர் எழுந்து, “ஏண்டா, ரெண்டு பேரும் என் உயிரைப் போட்டு வாங்கிட்டு இருக்கீங்க? எனக்கு என்னைக்காவது ஒரு நாள் தான் லீவு கிடைக்குது. அதுலயும் தூங்க விடாம இம்சை பண்றீங்க. தொல்லை பண்ணாம வெளியே போய் சண்டை போடுங்க,” என்று திட்டிவிட்டு மீண்டும் உறக்கத்தைத் தொடர, இருவரும் கப்சிப் என்றாயினர்.
“ஆமா, அவளுக்கே என்னைக்காவது ஒரு நாள் தான் லீவு கிடைக்குது. அதையும் தொந்தரவு பண்ணாம இரண்டு பேரும் அமைதியா இருங்க. முரளி, என் கூட வா. நான் பிஸ்கட் வாங்கித் தரேன்,” என்று மாதவி அழைத்துச் சென்றார்.
இங்கு மலர் முகத்தைப் போர்வையால் போர்த்திக்கொண்டு விட்ட உறக்கத்தைத் தொடரும் முயற்சியில் இருந்தாள்.
ரிஷி நான்கு நாட்கள் அவளுக்கு விடுமுறை கொடுத்துவிட்டு ஊருக்குச் சென்றிருக்க, மலர் மீனை விற்றுவிட்டு வந்து நிம்மதியாய் உறங்கிக் கொண்டிருந்தாள். அதுவும் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆகிப் போக, மீன் விற்றதும் வேறு வேலை இன்றி சாப்பிட்டு உறங்கிக் கொண்டிருந்தாள்.
மதிய உணவைக்கூட உண்ண எழாது உறங்கியவள், மாலை நான்கு மணிக்குத்தான் கண்விழித்தாள்.
எழுந்தவள் குளியலறை சென்று முகம் கழுவி வர, அதனைக் கண்ட மாதவி, “எந்திருச்சிட்டியா, மலரு? டீ போட்டு தரவா?” என்று கேட்க, “ஹ்ம்ம்… கொடும்மா,” என்றவள் தொலைக்காட்சியை ஓடவிட்டு கூடத்தில் அமர்ந்தாள்.
இரண்டு நாட்கள் எந்த வேலையும் செய்யாது உறங்கி ஓய்வெடுப்பது அவ்வளவு சுகமாக இருந்தது. கடைசியாக இதேபோல் ஓய்வெடுத்தது எப்போது என்று நினைவில் இல்லை. தந்தை இறந்த பிறகு முழுவதும் அவளுக்கு ஓட்டம் தானே.
இந்த விடுமுறைக்குக் காரணம் ரிஷிதான். அவன் ஊருக்குச் செல்லவில்லை என்றால் தனக்கு விடுமுறை கிடைத்திருக்குமா என்று எண்ணம் வர, ரிஷியின் முகம் மனக்கண்ணில் வந்து போனது.
உடனடியாக இதழில் ஒரு புன்னகையும் தோன்றியது. காரணம் ரிஷிதான். மலர் அன்று மகிழுந்தில் வைத்து பேசிவிட்ட பிறகு, ரிஷி அவளிடம் அவனது விருப்பத்தை வைத்து எதையும் பேசிவிடவில்லை. முன்பு போலவே நடந்து கொண்டான்.
தான் பேசிய பிறகு அவன் கூறிச் சென்ற வார்த்தையில் திகைத்தவளுக்கு, இன்னும் எப்படி விளக்கிக் கூறுவது என்று புரியவில்லை. அதனை எண்ணிக் கவலையோடு வலம் வர, அதற்கெல்லாம் அவசியமில்லை என்பதுபோல ரிஷி அமைதியாகிப் போனான்.
மலரும் ஒரு வழியாக அவருக்குப் புரிந்துவிட்டது போல என்று நிம்மதி அடைந்து, வழக்கம்போல அவனது வீட்டிற்குப் பணிக்கு சென்று வந்தாள். அதன் பிறகு மூன்று நாட்கள் கழித்து தான் ஊருக்குச் செல்வதாகக் கூறி, மலருக்கு நான்கு நாள் விடுமுறை கொடுத்துவிட்டு சென்றிருந்தான் ரிஷி.
அந்த விடுமுறையைத்தான் சுகமாய் அனுபவித்துக் கொண்டிருந்தாள் கருணை மலர்.
தாய் தேநீரைக் கொண்டு வந்ததும், அதன் வாசத்தை உள்ளிழுத்தவாறு ஒரு மிடறு பருகியவள், “எங்கம்மா, தம்பி தங்கச்சிங்க மூணு பேரையும் காணோம்?” என்று வினவிட, “பக்கத்துல ஒரு சூப்பர் மார்க்கெட் திறந்து இருக்காங்கல்ல… அங்க ஐஸ்கிரீம் ஏதோ ஆஃபர்ல கொடுக்கிறாங்களாம். அதை வாங்கிச் சாப்பிடப் போயிருக்குதுங்க,” என்று மாதவி பதில் அளித்தார்.
“ஓ… என்ன ஆஃபர்மா?” என்று மலர் கேட்க, “ஏதோ பாதி விலைக்கு கொடுக்கிறாங்கன்னு சாகித்யா சொன்னா. ஆளுக்கு ஒரு ஐஸ்கிரீம் வேணும்னு நூத்தம்பது ரூவா வாங்கிட்டுப் போயிருக்குதுங்க,” என்று மாதவி பதில் மொழிந்தார்.
“சரி மா,” என்று கேட்டுக் கொண்டவள், தேநீரை அருந்தியபடியே தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்த பாடலைப் பார்த்திருந்தாள்.
அப்போது அவளது அலைபேசி இசைக்க, “நமக்கு யாரு போன் பண்றது?” என்று எண்ணியபடி எழுந்து சென்று பார்க்க, ராதா அழைத்திருந்தார்.
“ஐயையோ, இந்தம்மாவா? இவங்க எதுக்கு எனக்கு கால் பண்றாங்க?” என்று அலறியவள், அழைப்பை ஏற்று காதில் பொருத்த, “மலர், வீட்டுக்கு வா,” என்று ராதாவின் குரல் அதிகாரமாய் ஒலித்தது.
“மேடம்?” என்றவள் புரியாது கேட்க, “நான் வீட்லதான் இருக்கேன். மலர், கிளம்பி வா,” என்று ராதா மீண்டும் அழைத்தார்.
“சரிங்க மேடம்,” என்று அழைப்பைத் துண்டித்தவள், “சார் நாலு நாள் லீவ் கொடுத்துட்டுப் போனாரு. எதுக்கு இந்தம்மா வந்திருக்காங்கன்னு தெரியலையே,” என்று சலித்தவள், “ரிஷி சார் வீட்டுக்குப் போயிட்டு வரேன்மா,” என்று மாதவியிடம் குரல் கொடுத்தாள்.
“எதுக்குடி? அதான் சார் ஊருக்குப் போயிருக்காருன்னு சொன்னியே?” என்று மாதவி வினவிட, “சாரோட அம்மா வந்திருக்காங்க போல. ஏதோ வேலைக்காக அவங்கதான் கூப்பிட்டாங்க. வேலை செய்யதான் கூப்பிடுவாங்கன்னு நினைக்கிறேன். போய் முடிச்சுட்டு வரேன்,” என்று பதில் அளித்தாள்.
“ரெண்டு நாள் கொடுத்த லீவைக்கூட அனுபவிக்க விடமாட்றாங்க,” என்று அலுத்துக் கொண்ட மாதவி, “ பார்த்து போய்ட்டு வா,” என்றார்.
“லீவு கொடுக்கிறேன்னு சொல்லி இப்படி ஆசை காட்டி மோசம் பண்றாங்களே! எதுக்கு இந்தம்மா திடீர்னு வந்துருக்காங்க? ஏதும் வேலையா இருக்குமா? சார் கூட நம்ம கிட்ட சொல்லலையே. இந்தம்மா வேற ஆயிரம் நொனநாட்டியம் பார்க்குமே… எப்படி சமாளிக்கப் போறேனோ? முருகா, காப்பாத்துப்பா!” என்று புலம்பியபடி ரிஷியின் வீட்டை அடைந்தவள், அழைப்பு மணியை அழுத்தினாள்.
கதவைத் திறந்த ராதா, “கூப்பிட்ட உடனே வரமாட்டியா? ஏன் இவ்வளவு நேரம்?” என்று கேட்க, ‘இந்த வந்தவுடனே சிடுசிடுக்க ஆரம்பிச்சுருச்சு இந்தம்மா’ என்று மனதிற்குள் அலறியவள், “நடந்து வர நேரமாயிருச்சு, மேடம்,” என்று பதிலளித்தாள்.
“எதையாவது ரீசன் சொல்றதே வேலையா வச்சிரு,” என்று திட்டியவர் உள்ளே செல்ல, மலரும் அமைதியாக அவரது பின்னே சென்றாள்.
ராதா கூடத்தில் இருந்த நீள்விருக்கையில் அமர, அவரது அருகில் ஒரு நடுத்தர வயது நபர் அமர்ந்திருந்தார். அவருடைய வயது ஐம்பது இருக்கும்.
மலருக்கு அவர் யார் என்று தெரியவில்லை. அதனைத் தெரிந்துகொள்ள விருப்பமும் கொள்ளாதவள், “ராதா மேடம், உங்களுக்கு டீ போட்டுக் கொண்டு வரவா?” என்று வினவினாள்.
“அதெல்லாம் இனிமே நீ செய்யத் தேவையில்லை. உன்கிட்ட பேசணும். அதான் வர சொன்னேன்,” என்ற ராதாவின் வார்த்தைகளைக் கேட்டு, மலர் அவரைப் புரியாது நோக்கினாள்.
“என்ன, எதுவுமே தெரியாத மாதிரி பாக்குற? பிளான் பண்ணி எல்லா வேலையும் பார்த்துட்டு, இப்ப நல்லவ மாதிரி முகத்தை வச்சுக்கிட்டா நான் நம்பிடுவேனா?” என்று ராதா ஒருவித கோபமும் வெறுப்பும் கலந்து கேட்க, மலருக்கு உண்மையாகவே அவர் கூறுவதன் அர்த்தம் புரியவில்லை.
“மேடம்…” என்றவள், தான் என்ன தவறு செய்தோம் என்று தெரியாது ராதாவைக் காண, “என்ன, மேடமா? உனக்கு எவ்வளவு கொழுப்பு இருந்தா இந்த மாதிரி ஒரு வேலையைப் பார்த்திருப்ப? என் அண்ணி முதல்லயே சொன்னாங்க, குப்பத்துக் காரிய எல்லாம் வேலையில வைக்காதன்னு. நான்தான் கேக்கல,” என்றவர் ஒருவித அசூயையுடன் மலர் மீது பார்வையைப் பதித்தார்.
மலரை அந்தப் பார்வை வெகுவாய் தாக்கிட, என்ன தவறு செய்தோம் என்று தெரியாது பேச்சு வாங்குவது அவளுக்குக் காயத்தை ஏற்படுத்தியது.
முயன்று முகத்தைச் சாதாரணமாக வைத்தவள், “நான் என்ன தப்பு பண்ணேன்னு தெரிஞ்சுக்கலாமா, மேடம்? எதுக்கு என்ன இப்படி பேசிட்டு இருக்கீங்க?” என்று திடப்படுத்தி கேட்டுவிட, “செய்றதெல்லாம் செஞ்சுட்டு எப்படி ஒண்ணுமே தெரியாத மாதிரி கேக்குறா பாருங்கண்ணா!” என்று அருகில் இருந்தவரிடம் பொருமினார் ராதா.
உண்மையாகவே மலருக்கு எதுவும் புரியவில்லை. ஆனால் ராதாவிற்கு அது மலரின் நடிப்பாகவே தெரிந்தது.
ஒருமுறை அவளை அமைதியாக நோக்கியவர், “பாக்குறதுக்கு கருப்பா, கேவலமா இருக்க. கொஞ்சம் நல்லா இருந்தா கூட பரவால்ல. என் வீட்டு வேலைக்காரியா வரக்கூட உனக்குத் தகுதி இல்லை. ஏதோ அன்னைக்கு கெஞ்சி கேட்டியேன்னு போனா போகுதுன்னு வேலை போட்டுக் கொடுத்தா, நீ என் தலை மேலேயே கை வைப்பியா?” என்று ஆங்காரத்துடன் ராதா கேட்டிட, தன்னுடைய புறத்தோற்றத்தைப் பற்றிய அவரது கூற்றில் அடிபட்டுப் போனவள், “எதுக்கு, மேடம், தேவையில்லாம என்ன இப்படி பேசிட்டு இருக்கீங்க?” என்று கேட்டுவிட்டாள்.