இதயம் 16.2

தனது பையை நெஞ்சோடு இறுக்கிக்கொண்டவள், நிமிர்ந்து அவனை நோக்கி,

“ப்ளீஸ்… எதுவும் பேசாதீங்க…” என்று கெஞ்சும் பாவனையில் பார்த்திட, அவனது இதழோரம் மென்னகை துளிர்த்தது.

இதுவும் பேசாமல் சாலையைப் பார்த்து வாகனத்தை இயக்க, ரிஷியின் அலைபேசி அழைத்தது. அலைபேசியை ப்ளூடூத்தில் ஏற்கனவே இணைத்திருந்தவன், அழைப்பை ஏற்று ஒலிபெருக்கியை ஆன் செய்தான்.

ராதாதான் அழைத்திருந்தார்.

ரிஷி அழைப்பை ஏற்றதும்,

“என்ன பண்ற, கண்ணா? பிஸியா? காலையிலிருந்து கால் பண்ணவே இல்ல…” என்று பாசமான குரலில் வினவிட,

“ஆமாம்மா… கொஞ்சம் ஒர்க். இப்பத்தான் வீட்டுக்குப் போயிட்டு இருக்கேன். போயிட்டு நானே கால் பண்ணலாம்னு இருந்தேன்.” என்று ரிஷி பதிலுரைத்தான்.

சாலையைப் பார்த்து முகத்தைத் திருப்பிக்கொண்ட மலர் மனதிற்குள், “இவரது மகன் தன்னைப் பார்ப்பதை அறிந்தால், ராதாவின் குரலில் இதே போல பாசம் இருக்குமா?” என்று சந்தேகம் முளைத்தது.

பொதுவான பேச்சுகளுக்குப் பிறகு ராதா,

“கண்ணா… நாளைக்கு தரகரை வரச் சொல்லி இருக்கேன். நம்ம சொந்தத்துல பார்த்த பொண்ணுதான். எதுவும் உனக்குப் பிடிக்கல. அதுதான் தரகரை வச்சு பொண்ணு தேடலாம்னு முடிவு பண்ணி இருக்கேன். உனக்கு என்ன மாதிரி பொண்ணு வேணும்னு இப்பவாவது சொல்லு, கண்ணா. லாஸ்ட் டைம் அந்த ரோகினியை கண்டிப்பா உனக்குப் பிடிக்கும்னு நாங்க எல்லாம் எதிர்பார்த்து ஏமாந்து போயிட்டோம்…” என்று வருத்தம் தோய்ந்த குரலில் கூற,

இவனது விழிகள் மலரின் புறம் சாய்ந்தது. அதே சமயம் மலரும் ரிஷியைத்தான் பார்த்திருந்தாள்.

ஒரு நொடி இருவரது விழிகளும் நேர்கோட்டில் பயணிக்க, அவள் மீது இருந்த பார்வையை அகற்றாது,

“என் பக்கத்துல இருக்க பொண்ணு மாதிரி வேணும், மா…” என்றிட,

மலர் ஏகமாய் அதிர, விலோசனங்கள் ஆழியாய் விரிந்தது. அதில் இவனது அதரத்தில் அழகான புன்னகை சயனித்தது.

மகனது பதிலைக் கேட்ட ராதா,

“என்ன கண்ணா சொல்ற? யாரு உன் பக்கத்துல இருக்க பொண்ணு?” என்று ஆர்வமும் வியப்பும் போட்டி போடக் கேட்க,

மலர் படபடவென அடித்துக்கொண்ட இதயத்துடன் அவனை நோக்கினாள்.

விழிகள், “எதுவும் சொல்லிவிடாதே…” என்று கெஞ்ச, அந்த விழிகளின் பாவனையில் இவனது இதயம் தடுமாறித் தத்தளித்தது.

ஆழ்துளையாய் தன்னை ஈர்த்த அந்த விழிகளில் மெதுவாய் கரைந்து போவதை உணர்ந்தவன், அவளிடமிருந்து பார்வையை அகற்றினான்.

“என்ன கண்ணா… பதிலே காணோம்?” என்று ராதா வினவிட,

அதில் தன்னிலை அடைந்தவன்,

“சிக்னல்ல நிற்கிறேன்மா. பக்கத்துல ஒரு பொண்ணு ஸ்கூட்டியில் நின்னுட்டு இருந்தா. அவளைப் பார்த்துத்தான் சொன்னேன்.” என்று பதில் அளிக்க,

இவ்வளவு நேரம் மூச்சை இழுத்துப் பிடித்திருந்தவள்,

“ஊஃப்…” என்று ஆசுவாசமாய் வெளியிட்டாள்.

அவளது வெப்ப மூச்சு தன்னைத் தாக்கித் தவிக்க வைப்பதை உணர்ந்தவன், வலக்கையால் கழுத்தோரம் வருடியபடி ஓரக்கண்ணால் அவளைக் கண்டான்.

இங்கு மகனது பதிலில் வியப்படைந்த ராதா,

“யாருடா அந்த பொண்ணு? நீயே திரும்பிப் பாக்குற அளவுக்கு! இதுவரைக்கும் எவ்வளவு அழகான பொண்ணு காட்டுனாலும் வேணாம்னு சொல்லிட்டு இருந்தியே! உனக்குத் தெரிஞ்ச பொண்ணாடா?” என்று ஆர்வமும் ஆசையும் போட்டி போட வினவிட,

“தெரிஞ்ச பொண்ணு எல்லாம் இல்லம்மா. சும்மா பார்த்தேன்…” என்றவன் முடித்துவிட்டான்.

“என் பையனுக்கே புடிச்சிருக்குனா கண்டிப்பா அந்தப் பொண்ணை நான் பார்க்கணுமே, ரிஷி! எப்படி இருந்தா அவ? ரொம்ப அழகா இருந்தாளா?” என்றவரது குரலில் இருந்த அவா ரிஷிக்குப் புன்னகையை வரவழைத்தது.

அவள் மீது ஒரு கணம் பார்வையைப் பதித்து மீண்டவன்,

“ஆமாம்மா… ரொம்ப அழகா இருந்தா.” என்று ரிஷி மொழிய,

பட்டென்று அவனைத் திரும்பிப் பார்த்தாள் மலர்.

அதில் ரிஷி, “என்ன?” என்பதாய் விழியுயர்த்தி ஆழப்பார்வை பார்த்திட, அந்தப் பார்வையில் இவளுக்குத் தொண்டை வறண்டு போனது.

ஏதுமில்லை என்ற ரீதியில் தலையாட்டியவள், தனது பையில் இருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து அருந்தி, தொண்டையை நனைத்துக்கொண்டாள்.

“ரோகினியை விட அழகா இருந்தாளாடா?” என்று மீண்டும் ராதா கேட்க,

“ரோகினியெல்லாம் அவ பக்கத்துல வரவே முடியாதும்மா…” என்றவனது குரல் அவளுக்குள் மெதுவாய் சுகமாய் இறங்கியது.

தான் அழகா என்று முதல்முறையாக அவளுக்கு எண்ணம் பிறந்தது. சிறுவயதிலிருந்தே பள்ளியிலும் கல்லூரியிலும் சிலர் அவளது நிறத்தை வைத்து கிண்டலடித்திருக்க, மலருக்கு மனதில் தான் வெளித்தோற்றத்தில் மிகவும் சுமாராக இருக்கிறோம் என்று ஆழப் பதிந்து போயிருந்தது.

முதல் முறையாய் தன்னை ஒருவன் அழகென்று கூறியதில், இதயத்தில் மெல்லிய சாரல் அடிப்பதை உணர்ந்து விதிர்விதிர்த்துப் போனாள்.

நொடிநேரம் தான் உணர்ந்த மகிழ்ச்சியை எண்ணித் தன்னையே வந்துகொண்டவள்,

“மலரே… உனக்கு வாழ்க்கையில் நிறைய கடமை இருக்கு. அதுக்கு மேல இதெல்லாம் எந்தக் காலத்திலும் நடக்காது. அமைதியா கிட…” என்று தன்னைத் தானே கொட்டிக்கொண்டாள்.

“நிஜமாவாடா? எனக்கு அந்தப் பொண்ணைப் பார்க்கணும்டா. போட்டோ ஏதாவது எடுடா…” என்று ராதா மொழிய,

ரிஷி பதில் அளிப்பதற்குள் ஷாலினி அலைபேசியை வாங்கி,

“அண்ணா… யார் அந்தப் பொண்ணு? அதுவும் அழகா இருப்பாங்கன்னு வேற சொன்னியாமே! என்னைவிட அழகா இருப்பாளா?” என்று குறும்புச் சிரிப்புடன் வினவினாள்.

“ஹ்ம்ம்… இருப்பா…” என்ற ரிஷியின் குரலில் மென்சிரிப்பு படர,

“அண்ணா… நிஜமாவா? என்னைவிட அழகாக இருந்தாளா அந்தப் பொண்ணு?” என்று நம்பாத குரலில் ஷாலினி வினவினாள்.

“ஆமா, ஷாலினி…” என்று இம்முறை சிறிது அழுத்தத்துடன் கூற,

“ஓ… எப்படி இருப்பாங்க அவங்க?” என்றவளது குரலில் சுருதி குறைந்து ஒலித்தது.

இப்போது ரிஷியின் பார்வை அமைதியாய், ஆர்ப்பரிப்பு இல்லாமல் மலரின் மீது படர்ந்தது.

அவனது பார்வையை உணர்ந்தவள், நகக் கண்களை ஆராய்ச்சி செய்யும் பாவனையில் குனிந்துகொள்ள,

“ஹ்ம்ம்… எப்படி சொல்றது…” என்று யோசித்தவனது குரலில் அருகில் இருந்தவளுக்கான நேசம் மிகுந்திருந்தது.

“எப்படியாவது சொல்லுண்ணா…” என்று மெல்லிய சலிப்போடு ஷாலினி இயம்ப,

“இதோ இந்த வானத்துக் கருப்பை அள்ளிப் பூசிக்கிட்ட மாதிரி இருப்பா…” என்றவனது ஆழ்ந்த குரலில் அவள் மீதிருந்த ரசனை குறிஞ்சியாய் பூத்துக் கிடந்தது.

குனிந்திருந்தவள் படக்கென்று நிமிர்ந்து அவனை இமை சிமிட்டாது நோக்கினாள். அந்தக் குரல், அதில் அள்ளித் தெளிக்கப்பட்டிருந்த ரசனை, மெதுவாய் இவளது இதயத்தின் அறையெங்கும் அதிர்வைப் பரப்பியது.

அவளது பார்வையை உணர்ந்தவன்,

“வட்டமான முகம்… அதுல அழகான கண்ணு… குட்டியான மூக்கு… அந்த மூக்குல அவ போட்டிருக்க கல்லு வச்ச மூக்குத்திதான் அவளோட மொத்த அழகையும் ஒளிச்சு வச்சுருக்கு. அந்த மூக்குக்கீழே சின்னக் குழியோட மேவாயும் உதடும்… இன்னும் எவ்வளவோ அவகிட்ட எனக்கு அழகா தெரிஞ்சது…” என்று ரசனை மிகு குரலில், அமைதியாய் அவளிடத்தில் கத்தியின்றி, ரத்தமின்றி யுத்தத்தைத் தொடங்கி வைத்தான்.

மலருக்கு மெலிதாய் விழிகள் கலங்குவதாய்த் தோன்ற, இமைசிமிட்டித் தன்னைச் சமாளித்தவள், அவனது குரல் தனக்குக் கேட்காத பாவனையில் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

இங்கு ரிஷியின் வர்ணனையில் ஷாலினி ஏகமாய் வியந்து,

“ரிஷிண்ணா! இது நிஜமாகவே நீங்கதானா? ஒரு நிமிஷம் சிக்னல்ல பார்த்த பொண்ணையா இவ்வளவு நோட் பண்ணி இருக்கீங்க? என்னால் நம்பவே முடியல. எனக்கு அவங்களை உடனே பாக்கணும் போல இருக்கு…” என்று ஆர்ப்பரிக்க,

“சான்ஸ் கிடைக்கும்போது உனக்குக் காட்டுறேன்.” என்றவன், இரு நிமிடங்கள் பேசிவிட்டு அலைபேசியைத் துண்டித்தான்.

அதன் பிறகு அங்கே மௌனம் அழையா விருந்தாளியாய் புகுந்துகொண்டது.

ரிஷி அமைதியாய் மகிழுந்தை இயக்கி வந்து அதன் தரிப்பிடத்தில் நிறுத்த, மலர் ரிஷியின் திசைப் பக்கம் கூடத் திரும்பாது கதவைத் திறக்க முயற்சி செய்ய, அது பூட்டியிருந்தது.

அதனை உணர்ந்தவள் தலையை மட்டும் திருப்பி அவனைக் காண, ரிஷி இப்போது அவளைப் பார்த்தவாறு திரும்பி அமர்ந்திருந்தான்.

அதனைக் கண்டவளுக்கு அச்சம் அலை அலையாய் மேலெழும்ப, கைகள் இரண்டையும் இறுக்கிக்கொண்டபடி அவனை நிமிர்ந்து நோக்கினாள்.

இரண்டு நிமிட மௌனங்களுக்குப் பிறகு,

“மலர்… நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்று வினவியிருந்தான் ரிஷிகேஷவ்.

error: Content is protected !!
Scroll to Top