இதயம் 17.1

இதயம் 17 :

“போயிட்டு வரேன், மா,” என்றபடி காலணிகளை அணிந்த மலர், ரிஷியின் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.

அவளது மனமும் முகமும் நிர்மலமாக இருந்தது. காரணம், நேற்றைய இரவெல்லாம் நன்றாகச் சிந்தித்து, இது எந்தக் காலத்திலும் சரிப்பட்டு வராது; இது தனக்கும் நல்லதல்ல, அவருக்கும் நல்லதல்ல என்று முடிவுக்கு வந்திருந்தாள்.

நேற்று மகிழுந்தில் ரிஷியின் பேச்சில் அவளது இதயம் தாளம் தப்பியது என்னவோ உண்மைதான். ஆனால், அது சரிப்பட்டு வராது, நடக்காது என்று அறிந்த பின் அதற்கு ஆசைப்படுவது உசிதமல்ல என்பது மலரின் எண்ணம்.

சிறுவயதிலிருந்தே மலர், தனக்குக் கிடைக்காத ஒன்றின் மேல் எப்போதும் ஆசை வைக்க மாட்டாள். தன்னாலும், தன்னுடைய பெற்றோராலும் எது முடியுமோ, அதை மட்டுமே ஆசைப்பட்டுக் கேட்டு வாங்கிப் பழகியவள். இப்போது வரை அப்படித்தான்.

வளர்ந்து தந்தையின் பொறுப்புகளைத் தோளில் சுமந்த பிறகு, இன்னுமே மனதில் முதிர்ச்சி பிறந்திருந்தது. கிடைக்காத ஒன்றிற்காக ஆசைப்பட்டு, ஏங்கி அழுது வாழ்வை அழித்துக் கொள்வதற்குப் பதில், தன்னிடம் இருப்பதை வைத்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதுதான் மலரின் கொள்கை. இப்போது வரை அப்படித்தான் தன்னுடைய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

அதனால்தான், மீன் விற்கும் தனக்கு ஒரு கறிக்கடைக்காரனோ அல்லது மளிகைக் கடைக்காரனோதான் ஒத்து வருவான்; அதற்கு மேல் ஆசைப்படுவதற்குத் தனக்குத் தகுதி இல்லை என்று அவளுக்கு நன்கு புரிந்திருந்தது.

இப்போது வந்து ரிஷிக்குத் தன் மீது பிடித்தம் ஏற்பட்டுள்ளது என்பதற்காக, தானும் ஆசை வளர்த்துக்கொண்டு, பிறகு அவனது வீட்டில் ஒப்புக்கொள்ளாமல் தன்னையும் தன் குடும்பத்தையும் கீழ்த்தரமாகப் பேசுவதை அவள் விரும்பவில்லை.

மற்றவர்களைப் பற்றி அவளுக்குத் தெரியவில்லை. ஆனால், நிச்சயம் ராதாவும் அவரது மருமகளும் கண்டிப்பாக இதற்கு எந்தக் காலத்திலும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அவர்களை எதிர்த்து திருமணம் செய்ய ரிஷியும் முன்வர மாட்டான். அவள் அறிந்தவரை, ரிஷி மிகவும் குடும்பத்துடன் ஒத்துப்போகிறவன்தான்.

என்னதான் வெளிநாட்டில் வாழ்ந்தாலும், எல்லாவற்றிலும் தாயின் முடிவை ஏற்றுக்கொள்பவன், கலந்தாலோசிப்பவன். அப்படிப்பட்டவன் நிச்சயமாகக் குடும்பத்தை எதிர்த்து தன்னைத் திருமணம் செய்ய நினைக்க மாட்டான்.

அதற்கு மேல், அவர்களை எதிர்த்து தன்னால் வாழ முடியாது என்பது நிச்சயமாகத் தெரியும். காரணம், தன்னுடைய குடும்பச் சூழ்நிலை. தனக்கே இங்கு ஆயிரம் சுமைகள் இருக்கின்றன. இதில் புதிய பிரச்சனையா?

இன்னும் சாகித்யாவின் படிப்பு முடியவில்லை. முரளி இப்போதுதான் கல்லூரியில் முதலாண்டு எடுத்து வைத்திருக்கிறான். வித்யா இன்னும் பள்ளிப் படிப்பை முடிக்கவில்லை. குறைந்தபட்சம் சாகித்யா படித்து முடித்து, பணிக்குச் செல்லும் வரையாவது தன்னுடைய தேவை நிச்சயமாகக் குடும்பத்திற்கு இருக்கும்.

சாகித்யா படித்து முடித்துவிட்டால், நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்துவிடும். பிறகு அவள் முரளி மற்றும் வித்யாவைப் படிக்க வைத்துக்கொள்வாள்.

பழைய படங்களில், நாடகங்களில் வருவது போல, வாழ்க்கை முழுவதும் அவர்களது முன்னேற்றத்திற்கு மட்டுமே உதவ வேண்டும் என்று எண்ணம் கொண்டவள் மலர் அல்ல. அதற்காக அவர்களை அம்போவென்று விட்டுச் செல்லும் ரகமும் அல்ல. அவர்கள் சொந்தக் காலில் நிற்கும் வரையிலாவது தாய்க்குத் தோள் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறாள்.

இப்போது இடையில் வந்து இந்தக் காதல், கல்யாணம் இதெல்லாம் எதற்கும் இடமில்லை. தனக்கு, தன்னுடைய கடமைதான் இப்போதைக்குப் பெரிது. அப்படியே திருமணம் செய்ய எண்ணினாலும், ரிஷியைத் திருமணம் செய்யத் துளியும் மலர் விரும்பவில்லை.

காரணம், ரிஷியைப் பிடிக்காமல் இல்லை. ரிஷியின் மீது மலருக்கு அன்பும் மரியாதையும் இருக்கிறது. ஆனால், அது அவன் கொடுத்த பணியின் நிமித்தமும், முரளியின் படிப்பிற்கு உதவிய பண்பின் பொருட்டும்தான். மற்றபடி, தனிப்பட்ட முறையில் அவனுக்கு மலரின் மீது ஏற்பட்ட உணர்வு ஏதும் மலருக்குச் சிறிதும் இல்லை.

மலர் ரிஷியை கனவிலும் அந்தக் கோணத்தில் கண்டதில்லை. இனிமேலும் எண்ணப் போவதில்லை. ஏனெனில், அவனுக்கும் தனக்கும் எந்த விதத்திலும் ஒரு சதவீதம்கூட பொருத்தமில்லை.

மனம் ராதாவின் பேச்சுக்களை எண்ணி அஞ்சினாலும், ஒரு தாயாக அவரது நிலையில் இருந்து சிந்தித்தது. தான் அவர் இடத்திலிருந்தால், இவ்வளவு வசதியான வாழ்வில் இருந்து கொண்டு, தன்னுடைய மகனுக்கு ஒரு மீன் விற்கும் பெண்ணைத் திருமணம் செய்யச் சம்மதிப்போமா? நிச்சயமாக இல்லை என்றுதான் தோன்றியது.

அப்படியே தான் எண்ணினாலும், அவருக்கும் அதுபோன்ற எண்ணமும் பெருந்தன்மையும் இருக்க வேண்டும் என்று என்ன அவசியம்? அவர், அவருடைய அந்தஸ்துக்கும் தகுதிக்கும் ஏற்றவாறுதானே மருமகள் வேண்டும் என்று எண்ணுவார்? இதில் தவறு இருப்பதாக மலருக்குச் சிறிதும் எண்ணமில்லை.

ஆக, ரிஷியின் ஆசைதான் முற்றிலும் தவறு; ஏற்றுக்கொள்ள முடியாதது. இப்போது ஏதோ வயதுக்கோளாறில் அவரது விருப்பத்திற்கு தான் சம்மதித்துவிட்டாலும், இருவரும் சேர்ந்து வாழ்வதற்கு எந்தச் சாத்தியக்கூறும் இல்லை. எதிர்காலத்தில் உருவாகவும் வாய்ப்பில்லை. காரணம், தன்னுடைய பின்புலம்தான்.

“குப்பமா?” என்று ஒருவித அருவருப்பு உணர்வுடன் தன்னைப் பார்த்தவர் எப்படி குடும்பத்தில் ஒருத்தியாக ஏற்றுக்கொள்வார்? அதற்குச் சிறிதும் வாய்ப்பில்லை.

அப்படியே ஏற்றுக்கொண்டாலும், தன்னால் அங்கே நிம்மதியாக வாழ முடியாது என்று மலருக்கு நன்றாகத் தெரியும். கஞ்சியாக இருந்தாலும், மன நிம்மதியோடு குடித்து வாழ வேண்டும் என்பது மலரின் கொள்கை.

ஆக, இரவெல்லாம் உறங்காமல் சிந்தித்தவள், இன்று நிச்சயமாக ரிஷியிடம், “இது எந்தக் காலத்திலும் சரிப்பட்டு வராது. உங்களது படிப்பிற்கும் அந்தஸ்திற்கும் ஏற்றபடி ஒரு பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்து கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கை நிச்சயமாக நன்றாக இருக்கும்,” என்று கூறிவிட வேண்டுமென உறுதிபூண்டாள்.

மனம் மீண்டும் நேற்று ரிஷி தன்னிடம் ஒட்டுமொத்த நேசத்தையும் குரலில் தேக்கி, “மலர், நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்று கேட்ட நிகழ்விற்குச் சென்றது.

அவனது முகத்திலிருந்த அவாவும், குரலில் தளும்பி வழிந்த நேசமும் மலரை ஒரு கணம் திகைக்கச் செய்தது. ஏற்கனவே இது எதிர்பார்த்த ஒன்று என்றாலும், அந்தக் கணம் அப்படி உடனடியாகக் கேட்பான் என்று சிறிதும் எண்ணியிருக்கவில்லை.

விழிகளைப் பெரிதாய் விரித்து அதிர்ந்து போன மலர், இமை அசையாது அவனைக் காண, நொடிகள் அமைதியாகக் கழிந்தன.

அவள் திகைப்பை மெதுவாய் உள்வாங்கியவன், தனது கரங்களை அவளது கரத்தின் மீது படியச் செய்தான்.

அவளது வலக்கரத்தைத் தன்னுடைய இரு கரங்களுக்குள் பொதிந்து கொண்டவன், “மலர், ட்ரஸ்ட் மீ. நான் உன்னை நல்லா பார்த்துக்குவேன். நம்ம லைஃப் கண்டிப்பா நல்லா இருக்கும்,” என்றான். அவனது ஒட்டுமொத்த நேசத்தைச் சுமந்து வந்த குரல், உணர்ச்சியின் பிடியில் லேசாகக் கரகரத்தது.

error: Content is protected !!
Scroll to Top