இதயம் – 16
மாலை இருள் கவிழத் துவங்கியிருந்ததால், பூங்கா முருகன் கோவிலில் அவ்வளவாகக் கூட்டம் இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆட்கள் தென்பட, தனது காலணியைக் கழற்றிவிட்டு உள்ளே நுழைந்தாள் மலர்.
நுழையும் போதே மனதிற்குள், “முருகா! உன் பிள்ளையை எப்படியாவது காப்பாத்துப்பா…” என்று கூவியபடியே தான் நுழைந்தாள்.
அன்று வெள்ளிக்கிழமை என்பதால், அபிஷேகம் முடிந்து அலங்காரத்துடன் அழகான புன்னகையுடன் நின்றிருந்த முருகனைக் கண்டு, “இதெல்லாம் உனக்கே நியாயமா, முருகப்பெருமானே? ஏன் இப்படி என் வாழ்க்கையில் விளையாடிட்டு இருக்க?!” என்று வினவியபடி கைகளைக் கூப்பி வணங்கினாள்.
*”இவ்வளவு நாள் என் வாழ்க்கை நல்லாத்தானே போயிட்டு இருந்துச்சு. திடீர்னு எதுக்கு இந்த ஸ்பீட் பிரேக்கர்? இந்தப் புது இம்சை எனக்கு எதுக்கு? நீயே சொல்லு. இதெல்லாம் சரியா வருமா? அவர் எங்க, நான் எங்க? எதுக்காக இப்படி? ஏற்கனவே அவங்க அம்மாவுக்கும் அண்ணிக்கும் என்னைப் பார்த்தாலே ஆக மாட்டேங்குது. இதுல இந்த விஷயம் தெரிஞ்சா என்ன வேலையிலிருந்து நிப்பாட்டிருவாங்களே! இந்த வேலையை நம்பித்தானே என் குடும்பமே இருக்கு. அதுவும் அவர் கம்பெனி வேலையை நம்பித்தான் என் தம்பி படிப்பு இருக்கு. முரளி இப்பத்தான் காலேஜ் ஜாயின் பண்ணியிருக்கான். தயவுசெய்து இதையெல்லாம் முடிச்சுவிட்ரு.
அவருக்கு இதெல்லாம் கொஞ்சம்கூட ஒத்து வராது என்று புரியிற மாதிரி நீதான் ஏதாவது பண்ணணும். இல்லன்னா நான் பொழப்புக்கு சிங்கிதான் தட்டணும். தயவுசெய்து என்னைக் காப்பாத்திருப்பா, முருகா…”*
என்று மீண்டும் மனம் உருகி வேண்டிக்கொண்டவள், சன்னதியைச் சுற்றிவந்து ஒரு ஓரமாய் அமர்ந்துவிட்டாள்.
கடவுளிடம் மனபாரத்தைக் கூறிவிட்டாலும், உள்ளே இருந்த அச்சம் மட்டும் சிறிதும் குறையவில்லை.
*”இப்போதான் பணத் தேவை எல்லாம் குறைந்து, கடனையும் ஓரளவுக்கு அடைத்துவிட்டு நிம்மதியா மூச்சு விட்றேன். அது உனக்குப் பொறுக்கலையா? இப்படி ஒரு இடியைத் தலையில இறக்குறியே! இதெல்லாம் ராதா மேடம்க்குத் தெரிஞ்சா என் நிலைமை என்னாகிறது?
சும்மாவே அவங்க நல்லவிதமா நடந்துக்க மாட்டாங்க. இப்போ இது மட்டும் தெரிஞ்சா கண்டிப்பா பெரிய பிரச்சனையாகிடும்.
எதுக்கு இப்ப அவரோட என்னைக் கோர்த்து விடப் பாக்குற? நான் என்னோட தகுதிக்கு ஏத்த மாதிரி ஒரு கறிக்கடைக்காரனையோ, மளிகைக்கடைக்காரனையோ தானே கேட்டேன்! அதுவும் இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சுத்தானே கேட்டேன். அதுக்குள்ள எதுக்கு இந்த வம்பு?
அதுவும் அவங்க அண்ணி, பணத்துக்காக நான்தான் இவரை மயக்கிட்டேன்னு கூட வாய் கூசாம பேசுவாங்க. இதெல்லாம் கேட்கணும்னு எனக்கு என்ன அவசியம்? கண்டிப்பா அவங்க கண்டபடி பேசுவாங்க…”*
என்று எண்ணியவள், நேரத்தைப் பார்த்துவிட்டு எழுந்து வெளியே சென்றாள்.
அலுவலகத்தில் இருந்து வீட்டிற்குச் சென்றுவிட்டுத்தான் கோவிலுக்கு வந்திருந்தாள். இப்போது நேராக ரிஷியின் வீட்டிற்குத்தான் செல்ல வேண்டும்.
“இன்று என்ன பேசுவானோ?” என்று உள்ளுக்குள் அச்சம் விரவியது.
“பேசாம நாமளே அவர்கிட்ட நேரடியா, ‘இதெல்லாம் ஒத்து வராது, சார்,’ அப்படின்னு சொல்லிடலாமா?” என்று எண்ணியபடி நடக்க, அவளை உரசும் நெருக்கத்தில் வந்து நின்றது ஒரு மகிழுந்து.
அதில் அதிர்ந்து துள்ளியவள் திரும்பித் திட்டப் போக, கார் கதவைத் திறந்து உள்ளிருந்து கையசைத்தான் ரிஷி.
திட்டப் போனவளின் வாய் அப்படியே மூடிவிட, “என்ன, இப்பத்தான் நினைச்சிட்டு இருந்தோம்; அதுக்குள்ள முன்னாடி வந்து நிற்கிறாரே!” என்று நினைத்தபடி திகைப்புடன் அவனை நோக்கினாள்.
அவளது திகைப்பை மெதுவாய் உள்வாங்கியவன், “மலர், கெட் இன்.” என்று இயல்பாய் அழைத்திட,
“என்ன… நானா?” என்று திகைத்து விழித்தாள் மலர்.
“உன்னைத்தான், மலர். உள்ள வா.” என்று மீண்டும் ரிஷி அழைத்திட,
“இல்ல, வேண்டாம் சார். நான் ஷேர் ஆட்டோல வந்துருக்கிறேன்.” என்று உடனடியாக மறுத்தாள்.
இப்போது அவன் முகத்தில் இருந்த இயல்பு லேசாகக் குறைவது போலிருக்க,
“உன்ன கார்ல ஏறச் சொன்னேன், மலர்.” என்று அழுத்தமாகக் கூறினான்.
“இல்ல சார்… வேண்டாம். ப்ளீஸ்…” என்று விழிகளைச் சுருக்கி அவள் கெஞ்ச,
அவளது சுருங்கிய விழிகளில் ஒரு கணம் நிலைத்து மீண்டவன்,
“ரெண்டு பேரும் ஒரே பிளேஸ்க்குத்தானே, மலர், போறோம். கெட் இன்.” என்று குரலில் அழுத்தத்தைக் குறைத்து, அவளை அழைத்துச் செல்லும் அவாவை அதிகரித்தான்.
அவனது குரல் பேதத்தை உணர்ந்தவள், மெல்லிய தயக்கத்துடன் ஏறி உள்ளே அமர, ரிஷி அவளுக்குத் தானே சீட் பெல்ட்டை அணிவிக்க முயல, சட்டென்று மூச்சை உள்ளிழுத்துச் சுருங்கினாள் மலர்.
அதில் இவனது இதழ்களில் கீற்றாய்ப் புன்னகை முளைக்க,
“மலருக்கு என்னைப் பார்த்து அவ்வளவு பயமா?” என்று வினவியபடி பெல்ட்டை மாட்டிவிட்டான்.
அவனது கேள்வியில் ஒரு கணம் திகைத்தவள், பிறகு இயல்பாகி,
“அதெல்லாம் இல்ல…” என்று மறுத்துவிட்டு, பின் மெல்லிய குரலில்,
“இந்த ரெண்டு நாளாத்தான் பயந்துட்டு இருக்கேன்…” என்று இதழ்களுக்குள் முணுமுணுத்தாள்.
அவளது முனகல் ரிஷியின் காதில் அட்சரசுத்தமாய் வந்து விழுந்துவிட, புன்னகை இன்னும் இமை நீண்டது.
அதனை வியப்பாய் விழிவிரித்துக் கண்டவள் மனதிற்குள்,
“சாருக்கு இவ்வளவு அழகா சிரிக்கத் தெரியுமா?” என்று எண்ண,
மலரின் பார்வையை உணர்ந்து அவள் புறம் திரும்பியவன்,
“என்ன?” என்பதாய் சிரிப்பு மாறாமலே ஒற்றைப் புருவம் உயர்த்தி வினவினான்.
அதனை எதிர்பாராது திகைத்துப் பின் தன்னைச் சமாளித்தவள், ஒன்றுமில்லை என்பதுபோல் இடவலமாகத் தலையசைத்துவிட்டு, சாளரத்தின் புறம் திரும்பிக் கொண்டாள்.
என்னவோ இந்த இரண்டு நாட்களாக இவன் அருகில் இதயம் படபடவென அடித்து, பந்தயக் குதிரை போல் ஓடிக்கொண்டிருக்கிறது.
என்னென்னவோ இவனிடம் பேச வேண்டும் என்று எண்ணிக்கொண்டு வர, இவனைக் கண்டால் வாயிலிருந்து வார்த்தையே வந்த பாடில்லை என்று மனதிற்குள் மலரால் புலம்பத்தான் முடிந்தது.
“நான் இதைவிட இன்னும் நல்லா ஸ்மைல் பண்ணுவேன், மலர்… எனக்குப் பிடிச்சவங்க கூட இருந்தா மட்டும்…” என்று இரண்டு நிமிடங்களுக்கு முன் அவள் நினைத்ததற்குப் பதில் அளிக்க, அதில் அதிர்ந்து திரும்பியவள் விழிகளை விரித்து அவனை நோக்கினாள்.
“நான் மனதிற்குள் எண்ணியது எப்படி இவருக்குத் தெரிந்தது?” என்று அதிர்ந்து, அவனது முகத்தையே அகலாது நோக்க, ரிஷியின் இதழ்களில் குறுஞ்சிரிப்பு பூத்தது.
அதுவும் அவன் கூறிய வார்த்தையின் அர்த்தம் பிடித்தவர்களுடன் இருந்தால் அழகாய் புன்னகைப்பானே. அப்படியானால் நானும் அவனது பிடித்தத்தில் அடக்கமா என்று இதயத்தினோரம் மெலிதாய் அதிர்வு பூத்தது.
“என்ன, மலர்… இப்படி பார்க்கிற? நான் அழகா இருக்கேனா?” என்று மாறாத சிரிப்புடன் புருவம் உயர்த்த,
“ஆங்…” என்று விழித்தாள் மலர். காரணம், ரிஷியின் இந்தப் புதிய பரிமாணம்தான்.
இத்தனை நாட்கள் தன்னுடைய முகத்தைக்கூட பார்த்துப் பேசாதவன், இப்போது இப்படியெல்லாம் பேசினால் அவளும்தான் என்ன செய்வாள்? அதிர்வையும் திகைப்பையும் மலரால் தாங்க முடியவில்லை.
அதனை அவளது முகம் கண்ணாடியாய் பிரதிபலிக்க,
“என்ன… பதிலே காணோம்?” என்று கேட்டபடி வாகனத்தை இயக்கிக்கொண்டிருந்தான் ரிஷி.
“ம்ஹூம்… அதெல்லாம் ஒண்ணும் இல்ல, சார்…” என்று விட்டு மலர் வெளியே விழிகளைப் பதிக்க,
“அப்போ நான் மலர் கண்ணுக்கு அழகா தெரியலையா?” என்றவனது இதழ் கடையோரம் புன்னகையில் துடித்தது.
அவனது கேள்வியில் திகைப்பும் அதிர்வும் வந்து குடிகொள்ள, பதிலற்று அவனைக் கண்டாள்.
“என்ன, மலர்? நான் கேக்குறது உண்மைதானா?” என்று மீண்டும் ரிஷி அவளை ஓரக்கண்ணால் பார்த்தபடி வினவிட,
“இல்ல… அப்படியெல்லாம், சார்…” என்று லேசாகப் பதறி மலர் பதிலளித்தாள்.
அவளது பதற்றத்தைக் கண்டு இதழ்களுக்குள் புன்னகையை மறைத்தவன், மெதுவாய் அவள் புறம் திரும்பி,
“அப்போ நான் மலர் கண்ணுக்கு அழகா தெரியுறேனா?” என்று ஆழ்ந்த குரலில் கேட்க, அந்தக் குரல் அவள் இதயத்தில் பூகம்பத்தைக் கிளப்பியது.