இதயம் 14.2

இருவரும் ஒரு இடத்தைத் தேடி அமர, ரிஷியும் வந்து அமர்ந்தான்.

ஷாலினி தனக்குத் தேவையானவற்றைக் கூறிவிட்டு மலரைக் காண, மலர் உணவுப் பட்டியலைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

அதனைக் கண்ட ஷாலினி, “உனக்குப் பிடிச்சது ஆர்டர் பண்ணிக்கோ மலர். என்ன வேணும்?” என்று கேட்க,‌ “எனக்கு ஒரு சிக்கன் நூடுல்ஸ்,” என்று மலர் கூறினாள்.

“போதுமா?” என்று ஷாலினி வினவ, “போதும் மேடம். இதுவே சாப்பிட முடியாது,” என்று முடித்துவிட்டாள் மலர்.

ரிஷி தனக்குத் தேவையானவற்றைக் கூறியதும், ஷாலினி மலரின் உடன்பிறந்தவர்கள் கேட்டவற்றை நினைவில் வைத்து, “ஒரு சிக்கன் நூடுல்ஸ், சிக்கன் லாலிபாப், ஒரு பட்டர் நான் வித் பெப்பர் சிக்கன், தென் ஒரு பிரான் பிரியாணி… இதெல்லாம் பார்சல் பண்ணிருங்க,” என்றாள்.

அதனைக் கேட்ட மலர், “இந்த பிரான் பிரியாணிலாம் எங்க வீட்ல கேக்கவே இல்லையே மேடம்?” என்று வினவ,

“தெரியும் மலர். உங்க அம்மாவுக்கும் சேர்த்து ஆர்டர் பண்ணேன்,” என்று ஷாலினி பதில்மொழிந்தாள்.

கேட்காதவற்றையும் சேர்த்து வாங்கிக் கொடுக்கும் ஷாலினி மீது மலருக்கு அன்பும் பாசமும் பெருகியது. மெல்லிய புன்னகையுடன் ஷாலினியிடம் தலையசைத்தவள், ஆர்டர் செய்த உணவு வரவும் உண்ணத் தொடங்கினாள்.

பின்னர் மலரை அவளது வீடு இருந்த தெருவில் இறக்கிவிட,

“போயிட்டு வரேன் ஷாலினி மேடம். அடிக்கடி வாங்க,” என்று புன்னகையுடன் கூற,‌ “கண்டிப்பா மலர். உன்னைப் பாக்கவே வரேன்,” என்று பதில் அளித்து அவளை அனுப்பினாள்.

போகும் மலரையே புன்னகையுடன் பார்த்த ஷாலினி, “மலர் ரொம்ப நல்ல பொண்ணு இல்லண்ணா?” என்று வினவிட,
ஒரு கணம் தானும் அவளைப் பார்த்துவிட்டு திரும்பியவன், ஆம் என்பதாய்த் தலையசைத்து மகிழுந்தை உயிர்ப்பித்தான்.

“அவளோட இன்னசென்ஸ் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு அண்ணா. அதுக்கு மேல, வீட்ல இருக்குறவங்களை விட்டுட்டு ஒரு சாப்பாடு கூட சாப்பிட மாட்டேன்னு சொல்றா. எவ்வளோ நல்ல பொண்ணு! இந்தக் காலத்தில் இப்படி எல்லாம் ஆட்களைப் பாக்குறது ரொம்ப ரேர்,” என்று ஷாலினி பேசியபடி வர, ரிஷி அதனைக் கேட்டுக்கொண்டிருந்தான்.

மறுநாள் ஷாலினி ஊருக்குக் கிளம்பிவிட, மலருக்கு வழக்கம்போல நாட்கள் நகர்ந்தது.

அலுவலகத்தில் இருந்து அப்போதுதான் வீட்டிற்குள் நுழைந்தாள் மலர்.

“வந்துட்டியா மலர்? நான் டீ போடுறேன். போய் டிரஸ் மாத்திட்டு வா,” என்று மாதவி தையல் இயந்திரத்தில் இருந்து எழுந்து செல்ல, அவரிடம் தலையசைத்துவிட்டு உடை மாற்றி வந்தவள், தேநீரை அருந்திவிட்டு ரிஷியின் வீட்டிற்குப் புறப்பட்டாள்.

பாதி தூரம் கடந்ததும் லேசான தூறல் விழத் தொடங்க, அண்ணாந்து வானத்தைப் பார்த்தவள் நடையைத் துரிதப்படுத்தினாள்.

இருந்தும், அவள் ரிஷி வீட்டை அடையும் முன்பு சடசடவெனப் பொழிந்த மழை அவளை முழுதாய் நனைத்திருந்தது.

“குடை எடுத்துட்டு வந்திருக்கலாமோ? ஈரத் துணியோட எப்படி வேலையைப் பார்க்கிறது?” என்று எண்ணியபடி அழைப்பு மணியை அழுத்த, ரிஷி வந்து கதவைத் திறந்தான்.

குளிரில் முழுதாய் நனைந்து, சிறிது நடுக்கத்துடன் நின்றிருந்தவளைக் கண்டு திகைத்தவன், “மழை நின்னதும் வர வேண்டியதுதானே மலர்? எதுக்கு இப்படி நனைஞ்சு வந்திருக்க?” என்று கேட்டபடி வழியை விட்டான்.

“இல்ல சார். நான் கிளம்பும்போது மழை இல்ல. பாதி தூரம் வந்ததும் லேசா தூறல் போட்டுச்சு. வேகமா வந்துரலாம்னு நினைச்சுத்தான் வந்தேன். இருந்தாலும் நனைஞ்சிட்டேன்” என்றவள் நடுங்கியபடி கூற,

அவளை ஒரு கணம் பார்த்தவன், உள்ளே சென்று ஒரு பூத்துவாலையை எடுத்து வந்து நீட்டினான்.

அதனை நன்றி கூறிப் பெற்றுக்கொண்டு உடலின் மீது போர்த்திக்கொண்டவள், “இப்படியே எப்படி வேலையைப் பார்ப்பது?” என்று சிந்திக்க,
“அந்த ரூம் கபோர்டுல ஷாலினியோட டிரஸ் இருக்கும். போய் சேஞ்ச் பண்ணிக்கோ,” என்றான் ரிஷி.

“இல்ல சார். கொஞ்ச நேரம் ஃபேன்ல நின்னா காய்ஞ்சிடும்,” என்று மலர் கூற,

“உன்னை டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வரச் சொன்னேன் மலர்,” என்று மீண்டும் அழுத்திக் கூறினான்.

அதனை மறுக்க இயலாதவள் அந்த அறைக்குள் சென்று அலமாரியைத் திறந்தாள்.

அதில் ஷாலினியின் உடைகள் நிறைய இருந்தன. அதுவும் புதிதாகத் தெரிந்தன. இதில் எதை எடுப்பது? ஏதாவது ஒரு உடையை எடுத்தால் அது ஷாலினிக்கு மிகவும் பிடித்ததாக இருந்துவிட்டால் என்ன செய்வது? தான் உடுத்தியதை அவள் உடுத்தவும் முடியாது என்று யோசித்தபடி நின்றிருந்தாள்.

பிறகு ஒரு முடிவு செய்தவளாக ஷாலினிக்கு அலைபேசியில் அழைப்பு விடுக்க, அடுத்த நொடியே அழைப்பு ஏற்கப்பட்டது.

“சொல்லு மலர், என்ன பண்ற?” என்று ஷாலினி தொடங்க,

“நான் இங்க உங்க வீட்லதான் இருக்கேன். வரும்போது மழைல நனைஞ்சிட்டேன். சார் உங்க டிரஸ் ஏதாவது எடுத்து போட்டுக்கச் சொன்னாங்க. இங்க நிறைய டிரஸ் இருக்கு. அதுல எது எடுக்கிறதுன்னு தெரியல. நான் எடுக்கிறது உங்களுக்குப் பிடிச்சதா இருந்தா என்ன பண்றது? நீங்களே ஏதாவது ஒரு டிரஸ்ஸைச் சொல்றீங்களா?” என்று மலர் விளக்கம் கொடுத்தாள்.

“மலர்!” என்று ஒரு கணம் திகைத்த ஷாலினி, “ஈர டிரஸோட நின்னுகிட்டு எனக்கு கால் பண்றியா? எதையாவது எடுத்துப் போட வேண்டியதுதானே! நான் என்ன சொல்லப் போறேன்? போ… ஃபர்ஸ்ட் போய் டிரஸ் சேஞ்ச் பண்ணு. நீ எதை போட்டாலும் எனக்கு ப்ராப்ளம் இல்ல,” என்று அதட்டினாள்.

“சரிங்க மேடம்,” என்று அழைப்பைத் துண்டித்தவள், அதிலிருந்து ஒரு உடையை எடுத்து மாற்றிவிட்டு வெளியே வந்து, தன்னுடைய ஈர உடையை ஒரு பையில் போட்டு வைத்தாள்.

பிறகு அவன் தனக்குக் கொடுத்த பூத்துவாலையை என்ன செய்வது என்று யோசித்தவள், அதனை ஜன்னல் கம்பியில் காயப் போட்டு விட்டு சமையலறைக்குள் நுழைந்துவிட்டாள்.

வேக வேகமாக இரவு சமையலை முடித்தவள், நின்ற மழை மீண்டும் வருவதற்குள் வீட்டிற்குள் அடைந்துவிட்டாள்.

மறுநாள் மாலை ரிஷியின் வீட்டிற்குச் செல்லும்போது, நேற்று அவன் கொடுத்த ஷாலினியின் உடையை துவைத்து இஸ்திரி போட்டு எடுத்துக்கொண்டாள்.

ரிஷி தான் இந்த உடையைத் திருப்பிக் கொடுத்தால் வாங்குவானா என்பது மலருக்குச் சந்தேகமாகவே இருந்தது. காரணம், தன் விரல் பட்ட உடையையே உடுத்த விரும்பாதவன் அவன். அப்படி இருக்கும்போது, தான் உடுத்திய ஆடையை எப்படி தங்கைக்குக் கொடுப்பான் என்பதுதான்.

ஆனால் வாங்க மாட்டான் என்று தான் கொடுக்காமல் இருக்கக் கூடாதே. அது தவறல்லவா என்று எண்ணியே ஷாலினியின் ஆடையை எடுத்துக்கொண்டு சென்றாள்.

ரிஷி அதனை நிச்சயம் வாங்க மாட்டான் என்பது அவளுடைய கணிப்பாக இருந்தது.

“குட் ஈவினிங் சார்,” என்று புன்னகையுடன் உள்ளே நுழைந்தவள், “இது நீங்க நேத்து கொடுத்த ஷாலினி மேடமோட டிரஸ். துவைச்சு அயர்ன் பண்ணி கொண்டு வந்துட்டேன் சார்,” என்று அந்தப் பையை நீட்டினாள்.

ஆனால் அவளது கணிப்புக்கு மாறாக, “அந்த டேபிள்ல வைச்சிடு,” என்று ரிஷி முடித்துவிட, மலர் ஒரு கணம் திகைத்துப் பின் சுதாரித்தவள், அதனை மேஜை மீது வைத்துவிட்டு தன்னுடைய பணியைக் கவனிக்கச் சென்றாள்.

ஆனால் மனதிற்குள் மட்டும்,
“என்னடா அதிசயமா இருக்கு! நான் தொட்ட டிரஸ் தூக்கிப் போட்டாரு. இதை வாங்க மாட்டார்னு நினைச்சா, வச்சிட்டு போகச் சொல்லிட்டாரு. ஒருவேளை ஷாலினி மேடம் நான் போட்டதை போட்டுக்குவாங்களோ? ஆனா எப்படி? அதற்கான வாய்ப்பே இல்லையே!” என்று சிந்தித்தபடிதான் சமையலை முடித்தாள்.

அன்று காலை வீட்டைத் துடைக்காததால், அப்போது பெருக்கித் துடைக்கத் தொடங்கினாள். ரிஷி கூடத்தில் அமர்ந்து மடிக்கணினியில் ஏதோ வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.

மூன்று அறைகளையும் சுத்தமாகத் துடைத்து முடித்தவள், சமைத்த உணவை மேஜை மீது எடுத்து வைத்துவிட்டு, அவனுக்குப் பாலையும் காய்ச்சி வைத்துவிட்டு கிளம்ப ஆயத்தமானாள்.

ரிஷியிடம் சென்று, “ரிஷி சார், சாப்பாடு எடுத்து டேபிள் மேல வச்சுட்டேன். பாலைக் காய்ச்சி டம்ளர்ல ஊத்தி வச்சிட்டேன். நான் வீட்டுக்குப் போறேன் சார்,” என்று வழக்கம்போல் கூற,

எப்போதும் முகம் காணாது சரியெனத் தலையசைப்பவன், நிமிர்ந்து அவள் முகம் பார்த்து, “எனக்கு ஒரு காபி போட்டுத் தர்றியா மலர்?” என்று வினவினான்.

“சரிங்க சார்,” என்று அடுத்த கணமே தலையசைத்தவள், குளிர்சாதனப் பெட்டியில் இருந்து பாலை எடுத்து குளம்பியைத் தயாரிக்கத் தொடங்கினாள்.

மனதிற்குள் மட்டும், “இந்த நேரத்தில் காபி எப்பவும் சார் குடிக்க மாட்டாரே. தலைவலியா எதுவும் இருக்குமோ?” என்று எண்ணியவாறு காபியைத் தயாரித்து முடித்தவள் அவனிடம் கொண்டு சேர்த்தாள்.

பிறகு, “நான் கிளம்பவா, ரிஷி சார்?” என்று வினவிட,

சிறு தலையசைப்புடன் அனுமதி கொடுத்தான்.

மலர் தனது பையை எடுத்துக்கொண்டு கதவருகே செல்ல,

“மலர்…” என்ற ரிஷியின் குரல் அவளைத் தடுத்தது.

“சார்…” என்று திரும்பியவள் திகைத்து அதிர்ந்து போனாள். காரணம், சில கணங்களுக்கு முன்பு அந்த நீள் இருக்கையில் அமர்ந்திருந்தவன், அவள் அருகே வெகு நெருக்கத்தில் மூச்சு காற்று உரசும் தூரத்தில் நின்றிருந்தான்.

மலர் அதிர்ந்த முகத்தை இயல்பாக்கியவள், “ரிஷி சார்…” என்று படபடப்பை மறைத்தபடி அவன் முகம் நோக்கினாள்.

அவளது முகத்தை ஒரு கணம் இமைக்காது பார்த்தவன், “என்னை விட்டுப் போகாத மலர்…” என்றிட, மலர் ஏகமாய் அதிர்வுடன் அவனைக் கண்டாள்.

error: Content is protected !!
Scroll to Top