இதயம் – 14
ஷாலினி அதிர்வும் திகைப்புமாக ரிஷியைக் கண்டு, “அண்ணா!” என்று அழைக்க, “என்ன ஷாலினி?” என்று இயல்பாகக் கேட்டபடி அவள் அருகே வந்தவன், “நான்தான் பார்த்துக்கிறேன் சொன்னேன்ல… என்ன பிரச்சனை உங்களுக்கு?” என்று பேசிவிட்டு காதில் இருந்த ப்ளூடூத்தை கழற்றினான்.
அதனைக் கண்டதும் தான் இருவருக்கும் புரிந்தது, அவன் தங்களிடம் பேசவில்லை என்று.
அடுத்த நொடி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, “என்ன ஷாலினி, கூப்பிட்ட?” என்று ரிஷி வினவினான்.
“ஒன்னும் இல்லண்ணா,” என்ற ஷாலினி. “வா மலர், நம்ம போய் பெர்ஃப்யூம் வாங்குவோம்,” என்று அடுத்த இடத்திற்கு அழைத்துச் சென்றாள்.
தங்கையை ஒரு நொடி பார்த்தவன் தானும் அங்கிருந்து அகல, “நான் ஒரு செகண்ட் ஷாக் ஆகிட்டேன் மேடம். சார் போன்ல பேசிட்டு இருந்ததை நம்மகிட்டதான் பேசினார்னு நினைச்சுட்டேன்,” என்று ஆசுவாசத்துடன் மலர் கூற, ஷாலினியும் அதனைச் சிரிப்புடன் ஆமோதித்தாள்.
பின்னர் ஷாலினி தனக்குத் தேவையானவற்றை எடுத்துப் போட்டுக்கொண்டிருக்க, மலர் அவளுடன் வேடிக்கை பார்த்தபடி வந்தாள்.
“என்ன மலர், நீ எதுவும் வாங்கல. உனக்கு ஏதும் வேண்டாமா?” என்று ஷாலினி கேட்க,
“நான் இங்கெல்லாம் வாங்க மாட்டேன் மேடம்,” என்றாள் மலர்.
“ஏன்? என்னாச்சு?” என்று ஷாலினி வினவினாள்.
“இங்கெல்லாம் ரேட் தீ விலை இருக்கும். நமக்கெல்லாம் நம்ம ஏரியா அண்ணாச்சி கடைதான் கரெக்ட்,” என்று பாவனையாய் கூற, அதனைக் கண்ட ஷாலினிக்குப் புன்னகை எழுந்தது.
“விலைக்கு தகுந்த மாதிரிதான் குவாலிட்டியும் இருக்கும் மலர்,” என்று ஷாலினி கூற, “இருக்கலாம் மேடம். எனக்கு நான் கொடுக்கிற காசுக்கு இருக்கிற குவாலிட்டியே போதும்,” என்று பதில்மொழிந்தாள்.
“அது சரி… ஏதாவது வாங்கிக்கோ மலர். நான் பே பண்ணுறேன்,” என்று இயம்ப, “நான் வாங்குற மாதிரி எதுவும் இங்க இல்லையே மேடம்,” என்று விழிகளைச் சுழற்றினாள்.
“காஸ்மெட்டிக்ஸ் எதுவும் யூஸ் பண்ண மாட்டியா மலர்? ஜஸ்ட் பேஸ் வாஷ் கூட?” என்று ஷாலினி கேட்க, “அதெல்லாம் நான் ஒரு தடவை கூட யூஸ் பண்ணதில்ல மேடம். நமக்கு சோப்பே போதும்,” என்று பதில்மொழிந்தாள்.
“சரி வா… உனக்கு சாக்லேட், ஸ்னாக்ஸ் ஏதாவது வாங்கித் தரேன்,” என்று ஷாலினி அழைக்க, “அதெல்லாம் வேண்டாம்,” என்று மறுத்தாள் மலர்.
“உனக்கு இல்ல… உன்னோட தம்பி, தங்கச்சிங்களுக்கு நான் வாங்கிக்கொடுத்தேன். போய் கொடு,” என்ற ஷாலினி நிறைய இனிப்பு வகைகளை வாங்க,
“போதும் மேடம்,” என்று தடுக்க முயற்சித்தாள் மலர்.
“நான் என்ன தினமுமா வாங்கிக்கொடுக்கிறேன்? நான் வர்றதே எப்பவாவது தான். அமைதியா இரு மலர்,” என்று அவளை அதட்டிய ஷாலினி, நாலைந்து இனிப்பு வகைகளை எடுத்துப் போட்டாள்.
ஷாலினி வாங்கி முடித்த நேரம், ரிஷியும் தனக்குத் தேவையானவற்றை வாங்கிவிட்டு வந்தான். அவனே எல்லாவற்றிற்கும் பணத்தைச் செலுத்த, மலரும் ஷாலினியும் ஏதோ பேசியபடி இருந்தனர்.
அவர்கள் வெளியே வரும் நேரம் இருள் கவிழத் தொடங்கியிருக்க,
“காலையில வந்தது… வீட்டு பக்கமே போகவே இல்ல. எங்க அம்மா தேடும். சீக்கிரமா நைட் சாப்பாடு செஞ்சு வச்சுட்டு கிளம்பணும்,” என்று மலர் கூற,
“டின்னர் வெளியே பாத்துக்கலாம்,” என்றாள் ஷாலினி.
“சரி… அப்போ என்னை போற வழியில மெயின் ரோட்டுல இறக்கி விட்டீங்கன்னா, வீட்டுக்கு நடந்து போயிடுவேன்,” என்று மலர் மொழிய,
“எங்களோடவே டின்னர் முடிச்சிட்டு போ மலர்,” என்று ஷாலினி அழைத்தாள்.
“அதெல்லாம் வேணாம் மேடம். வீட்ல எங்க அம்மா சமைச்சு வச்சிருப்பாங்க. அந்த சாப்பாடு வீணாப் போயிரும்,” என்று மலர் மறுக்க,
“ஒரு நாள்தானே… என் கூட சாப்பிட வர மாட்டியா?” என்று ஷாலினி அவளது முகம் கண்டாள்.
மலர் மறுக்கவியலாது ஷாலினியை நோக்க,
“மார்னிங் நீ ஃபங்ஷனுக்கு கூப்டப்ப நான் வந்தேன்தானே? உனக்கு விருப்பம் இல்லாட்டி வர வேணாம்?” என்று அவள் சொல்லியதையே திருப்பிக் கூறினாள்.
“விருப்பம் இல்லாமல்லை மேடம். எனக்கு என் தம்பி, தங்கச்சியை விட்டுச் சாப்பிட மனசில்லை,” என்று தயக்கத்துடன் இழுக்க,
“அவ்வளவுதானா? அவங்களுக்கும் வாங்கிக்கொடுக்கிறேன். கொண்டுபோய் கொடுத்துடு,” என்று இலகுவாய் ஷாலினி முடித்துவிட்டாள்.
இருந்தும் மலர் தயக்கத்துடன் பார்க்க,
“இன்னும் என்ன மலர்?” என்று ஷாலினி கேள்வியாய் நோக்கியவள்,
“நான் வாங்கித் தந்தா கொண்டு போக மாட்டியா? நீ சமைக்கிறதை மட்டும் நான் சாப்பிட்டேன்ல?” என்று வினா எழுப்பினாள்.
இவள் நிச்சயம் தன்னை உண்ண வைக்காமல் விடமாட்டாள் என்பதை உணர்ந்த மலர், “சரி,” என்பதாய்த் தலையசைக்க,
“குட் கேர்ள்,” என்று அவள் கன்னம் கிள்ளிப் புன்னகைத்த ஷாலினி, “அண்ணா, பக்கத்துல ஏதாவது ரெஸ்டாரன்ட் இருந்தா அங்க போ,” என்றாள்.
இடையில் மலர் தனது தாயிற்கு அழைப்பை விடுக்க,
அழைப்பை ஏற்றவர், “என்ன மலரு? காலையில போன… இன்னும் ஆளைக் காணோம். வேலை அதிகமா?” என்று கவலையுடன் கேட்க,
“ஐயோ… அதெல்லாம் இல்லம்மா. நான் தான் சொன்னேன் இல்ல, சாரோட தங்கச்சி வந்திருக்காங்கன்னு. அவங்க தனியா இருக்கேன்னு இருக்கச் சொன்னாங்க,” என்று விளக்கம் அளித்தாள்.
“சரிடி… எப்ப வருவ?” என்று மாதவி வினவ,
“இன்னும் ஒரு மணி நேரத்துல வந்துருவேன் மா,” என்று பதிலளித்தவள், “நைட்டுக்கு சாப்பாடு செஞ்சுட்டியாம்மா?” என்று வினவினாள்.
“இல்ல மலரே… இப்பதான் சப்பாத்திக்கு மாவு பிசையப் போறேன்,” என்று மாதவி பதிலளிக்க,
“நல்லது… சமைக்காதம்மா. நான் நைட்டுக்கு சாப்பாடு வாங்கிட்டு வரேன்,” என்றாள்.
“என்ன மலரே, திடீர்னு? சம்பள நாள் கூட இல்லையே!” என்று மாதவி ஐயத்துடன் கேட்க,
“அது சார் ஓட தங்கச்சிதான் வாங்கித் தர்றாங்க,” என்று மலர் பதில் அளித்தாள்.
“அவங்களா? அவங்க எதுக்கு வாங்கித் தராங்க? எதுவும் பிறந்தநாளா?” என்று மாதவி விடாது வினவ,
“இல்லம்மா… சும்மாதான்,” என்று இழுத்தாள் மலர்.
“சும்மா எதுக்கு வாங்கித் தராங்க மலர்? நம்மளால எதுக்கு அவங்களுக்கு வீண் செலவு? வேணாம்னு சொல்ல வேண்டியதுதானே,” என்று மாதவி அதட்டல் குரலில் கூற,
அது அலைபேசியைத் தாண்டி வெளியே இருந்த இருவரின் காதிலும் தெளிவாக விழுந்தது.
ஷாலினியைப் பார்த்து சங்கடமாய்ச் சிரித்து வைத்தவள், தாயிடம், “நான் வேண்டாம்னு தான் சொன்னேன். அவங்கதான் சாப்பிட கூட்டிட்டுப் போறாங்க,” என்று இழுக்க,
“சாப்பிட கூட்டிட்டுப் போனா, நீ மட்டும் சாப்பிட்டு வர வேண்டியதுதானே? குடும்பத்துக்கே வாங்கிட்டு வர்றது என்ன பழக்கம்?” என்று திட்டினார்.
மலர் பேசுவதற்குள் அலைபேசியைக் கையில் வாங்கிய ஷாலினி, “ஹலோ ஆன்ட்டி! நான் ஷாலினி, ரிஷி அண்ணாவோட சிஸ்டர்,” என்று தன்னை அறிமுகப்படுத்தியவர், “மலரை ஏதும் சொல்லாதீங்க. அவ வேண்டாம்னு சொன்னா, நான்தான் வாங்கித் தரேன்னு சொன்னேன்,” என்று மலருக்காகப் பேசினாள்.
இப்படி ஷாலினி அலைபேசியை வாங்கிப் பேசுவாள் என்று எதிர்பாராத மாதவி திகைத்துப் பின், “திட்டவெல்லாம் செய்யலம்மா. உங்களுக்கு எதுக்கு வீண் செலவுன்னுதான் கேட்டேன்,” என்று பதில்மொழிய,
“இதுல வீண் செலவுலாம் எதுவும் இல்ல ஆன்ட்டி. வேண்டாம்னு மறுக்காதீங்க,” என்றாள் ஷாலினி.
அதற்கு மேலும் அவளிடம் மறுக்க முடியாதவர், “சரிம்மா,” என்றுவிட,
“சரிங்க ஆன்ட்டி. மலர் கிட்ட கொடுக்கிறேன்,” என்று அலைபேசியை மலரிடம் நீட்டினாள்.
இவ்வளவு நேரம் ஷாலினி பேசியதைக் கேட்ட மலர், வீட்டிற்குச் சென்றால் கண்டிப்பாக தனக்குத் திட்டு உள்ளது என்பதை உணர்ந்தபடி அலைபேசியைக் காதில் வைக்க, இவ்வளவு நேரம் இவர்கள் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்த வித்யா, “அக்கா, எனக்குப் பன் பரோட்டா வாங்கிட்டு வா!” என்று கத்தினாள்.
மாதவியின் குரலை விட அதிகமாக வித்யாவின் குரல் கேட்க, மலரிடம் மீண்டும் ஒரு சமாளிப்பான புன்னகை பூத்தது.
“சரி வித்யா,” என்று மலர் பதிலளிக்க, “அப்புறம் அக்கா, எனக்கு சிக்கன் லாலிபாப் வாங்கிட்டு வா,” என்று வித்யா அடுக்கினாள்.
“சரிடி,” என்று மலர் மென்குரலில் கூற, “அக்கா, எனக்கு சிக்கன் நூடுல்ஸ்,” என்று முரளி மெதுவாய்க் கூச்சலிட்டான்.
“சரிடா,” என்று தம்பியிடம் கூறியவள், “சாகிக்கு என்ன வேணும்னு கேளுங்க,” என்க,
“அக்கா, எனக்கு நான் வாங்கித்தா… என் பிரெண்ட்ஸ் எல்லாம் அது ரொம்ப நல்லா இருக்கும்ன்னு சொல்லி இருக்காங்க,” என்று சாகித்யாவின் குரல் கேட்டது.
“சரி சாகி. அம்மாவுக்கு என்ன வேணும்?” என்று மலர் கேட்க,
“எனக்கு எதுவும் வேணாம் மலர். மதியம் மிஞ்சின சோறு இருக்கு. தண்ணி ஊத்தி வச்சிருக்கேன். அதையே சாப்பிடுகிறேன்,” என்று மாதவி பதில்மொழிந்தார்.
“சரிம்மா,” என்று அழைப்பைத் துண்டித்த மலர், “அது என்னைக்காவது ஒரு நாள்தான் ஹோட்டல்ல வாங்கிக் கொடுப்பேன். அதனாலதான் கொஞ்சம் எக்சைட் ஆயிட்டாங்க,” என்று சிரிப்புடன் ஷாலினியிடம் கூற, அவள் புன்னகையுடன் தலையசைத்தாள்.
அடுத்த ஐந்து நிமிடத்தில் ரிஷியின் கார் ஒரு பெரிய உணவகத்தின் முன் வந்து நிற்க, மலரும் ஷாலினியும் கீழே இறங்கினர். ரிஷி மகிழுந்தை நிறுத்துவதற்காகச் சென்றான்.
“வா மலர், நாம உள்ள போவோம். அண்ணா வருவாங்க,” என்று ஷாலினி மலரின் கையைப் பிடிக்க,
“இந்த ரெஸ்டாரன்ட்டை நிறைய டைம் பார்த்திருக்கேன். இன்னைக்குத்தான் உள்ள வர வாய்ப்பு கிடைச்சிருக்கு,” என்ற மலர், விழிகளால் அவ்விடத்தைச் சுற்றிப் பார்த்தாள்.
“நானும் இன்னைக்குத்தான் மலர் வரேன். ஆம்பியன்ஸ் ரொம்ப நல்லா இருக்குல்ல?” என்று வினவ,
“அப்படின்னா?” என்று புரியாமல் அவளை நோக்கினாள் மலர்.
“ஆம்பியன்ஸ்னா இங்க சுத்தி இருக்கிற அட்மாஸ்பியர், மலர்,” என்று ஷாலினி விளக்கம் கொடுக்க, “ஓ…” என்று இழுத்த மலர், “ஆமா, ரொம்ப நல்லா இருக்கு. அந்த லைட் எல்லாம் கூட,” என்று பதில் இயம்பினாள்.