இதயம் – 15
“என்ன மலரு, நேரமாச்சு. கிளம்பாம இங்கேயே உலாத்திட்டு இருக்க?” என்று மாதவி கேட்க,
“இதோ கிளம்பிட்டேன் மா,” என்ற மலர், கையில் தனது பையை எடுத்துக் கொண்டாள்.
“சாப்பாடு எடுக்காம போற, மலரு,” என்று அங்கிருந்த டிபன் பாக்ஸைச் சுட்டிக்காட்டி மாதவி கூற,
“மறந்துட்டேன்,” என்றவள், அதனை எடுத்து வைத்துக் கொண்டாள்.
“என்ன மலரு, நேத்துல இருந்து ஏன் ஒரு மாதிரி சுத்திட்டு இருக்க?” என்று மாதவி வினவ,
“என்ன ஒரு மாதிரி சுத்துறேன்? நல்லாத்தான் இருக்கேன். எனக்கு ஒண்ணுமில்ல,” என்று பட்டென்று பதில் அளித்தவள், காலில் செருப்பை மாட்டிக் கொண்டு நடக்கத் தொடங்கினாள்.
மனதிற்குள் மட்டும் ஒருவித பயம் மெதுவாக ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தது. காரணம், ரிஷியின் நேற்றைய செயல்கள்தான். இந்தக் கணம் நினைத்தாலும் அடிவயிற்றிலிருந்து பயப்பந்து உருண்டது.
எப்படி அவனைப் பார்க்கப் போகிறோம்? வேற ஏதாவது பேசினால் என்ன செய்வது? என்று எண்ணங்கள் வந்து குடைய, தன் போக்கில் மனதிற்குள் புலம்பியவாறே நடந்து சென்றாள்.
இன்றைக்கு விடுமுறை எடுக்கலாம் என்று எண்ணியவள், திடீரென்று காரணமின்றி எடுத்தால் தாய், உடன்பிறந்தவர்கள் என்று வரிசையாகக் கேள்வி கேட்பார்கள்; உடல்நிலை சரியில்லையா என்று கவலைப்படுவார்கள் என்று நினைத்துதான் இப்போது கிளம்பினாள்.
திடமாகக் கிளம்பிவிட்டாள்தான். ஆனால், ரிஷியை எப்படி எதிர்கொள்வது என்றுதான் சுத்தமாகத் தெரியவில்லை.
நன்றாகத்தானே இருந்தான். திடீரென்று ரிஷிக்கு என்ன ஆனது என்று மலருக்குச் சந்தேகம். நேற்று வரை தனது முகத்தைக் கூட நிமிர்ந்து பார்த்துப் பேசாதவருக்கு இப்போது என்ன வந்தது? ஏன் இப்படிச் செய்தார்? என்று பலவாறான யோசனைகள் வந்து போயின.
மலருக்கு ரிஷியின் மீது நிறைய மதிப்பும் மரியாதையும் இருந்தது. இப்போதுவரை அது மாறவில்லை. அவன் நேற்று செய்த செயல்களை ஏதோ புரியாமல், தெரியாமல் செய்து விட்டான் என்று தனக்குத்தானே கூறிக் கொண்டவளுக்கு, ரிஷியைத் தவறாக எண்ண மனம் வரவில்லை.
காரணம், அவனிடம் பணிபுரியும் இந்த ஒன்றரை வருட காலத்தில், ஒரு முறை ஏன் ஒரு நொடி கூட தவறான பார்வையைத் தன் மீது வீசாதவன். அப்படியிருக்க, ரிஷியின் மீது எப்படி தவறான எண்ணம் தோன்றும்?
தனக்குள்ளே புலம்பியவாறு சென்றவள், ரிஷியின் வீட்டை அடைந்து அழைப்பு மணியை அழுத்தினாள். அவன் வந்து திறக்கும் இடைவெளியில் இதயம் படபடவென அடித்துக் கொண்டது.
‘முகத்தை நார்மலா வை, மலர். ஒண்ணுமில்ல. நம்ம ரிஷி சார்தான். நேத்து ஏதோ தெரியாம பேசியிருப்பாரு,’ என்று தனக்குத்தானே ஆறுதல் கூறியவள், முகத்தை முயன்று சாதாரணமாக வைத்துக் கொள்ள, ரிஷி வந்து கதவைத் திறந்தான்.
அவனது முகத்தில் நேற்றைய நிகழ்வின் சிறு சுவடுகூட இல்லாமல் இருக்க, இவளிடம் ஒரு சிறு திகைப்பு தோன்றி, பின் அது ஆசுவாசமாக மாறியது.
எப்போதும் காலை வணக்கம் கூறுபவள், அன்று எதுவும் கூறாமல் சமையலறைக்குள் நுழைந்துவிட்டாள்.
ரிஷியும் அவளிடம் எதுவும் பேச முயற்சிக்கவில்லை.
குளிர்சாதனப் பெட்டியில் இருந்து பாலை எடுத்து, அவனுக்குச் சத்துமாவு காய்ச்சத் தொடங்கியவளது மனம், ‘என்ன, எதுவுமே நடக்காத மாதிரி அமைதியா இருக்காரு?’ என்று எண்ண, மற்றொரு மனம், ‘அப்படி நடந்து கொள்வது நல்லதுதானே? நீ வேற எதையும் எதிர்பார்க்குறியா?’ என்று கேட்டிட,
‘அப்படிலாம் ஒண்ணுமில்ல,’ என்று அதனைத் தட்டிவைத்தாள்.
பிறகு சத்துமாவு கஞ்சியை எடுத்துவிட்டு திரும்பியவள், சமையலறை வாயிலில் நின்றிருந்த ரிஷியைக் கண்டாள்.
அதனைக் கண்டு ஒரு கணம் திகைத்தவள், பின் இயல்பாகி, “எதுவும் வேணுமா, சார்?” என்று கேட்டிட,
ரிஷி பதிலற்று அவளையே நோக்கினான்.
அதில் சிறிதாய் படபடத்துப் போனவள்,
“சார்…” என்று மெல்லிய குரலில் அழைத்திட,
“வேணும், மலர்,” என்று அவளது முகத்தைக் கண்டான்.
அவனது பதிலில் உள்ளுக்குள் பெரிதாய் அதிர்ந்தவள், முகத்தில் எதையும் காட்டாமல்,
“என்ன வேணும், சார்?” என்று கேட்டுவைத்தாள்.
“என்ன கேட்டாலும் கிடைக்குமா, மலர்?” என்றவன், சுவற்றில் சாய்ந்தபடி வினவிட,
“சார்…” என்ற திகைத்தவளுக்கு அடுத்த வார்த்தை வரவில்லை.
“சொல்லு, மலர்,” என்று இயல்பாக அவளை நோக்கினான்.
சத்தியமாக மலருக்கு என்ன எதிர்வினை ஆற்றுவது என்றே தெரியவில்லை.
“பதில் சொல்லு, மலர். சாப்பிட என்ன கேட்டாலும் கிடைக்குமா?” என்று மீண்டும் அவளை விழியுயர்த்திப் பார்க்க,
“ஆங்… கிடைக்கும், சார்,” என்று சட்டென்று கூறியவளது குரலில் ஆசுவாசம் குடியிருந்தது.
அதனை உணர்ந்த ரிஷி, இதழ் கடையில் தோன்றிய புன்னகையை மறைத்து,
“நான் சாப்பாடுதான் கேட்டேன், மலர். அதுக்கு இவ்வளவு ஷாக்? நீ வேற எதுவும் நினைச்சியா?” என்று புருவம் உயர்த்த,
“நான்… நான் என்ன நினைக்கப் போறேன்? நான் எதுவும் நினைக்கல,” என்று சடுதியில் மறுத்தாள் மலர்.
பதிலின்றி அவளைப் பார்த்தவனது இதழ்களில் கீற்றாய்ப் புன்னகை முளைத்தது.
அவளது கையில் இருந்த சத்துமாவு கஞ்சியை வாங்கிக் கொண்டவன், கூடத்திற்குச் சென்று அமர்ந்துவிட,
‘மலரே, இவருகிட்ட கொஞ்சம் கவனமா இருக்கணும். நேத்து ஏதோ தெரியாம பேசிட்டாருன்னு நினைச்சா, இன்னைக்கு ஞாபகம் வச்சு இருக்காரு,’ என்று புலம்பியவள், காலை உணவைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டாள்.
மனம் மட்டும் சற்று முன்பு தன்னிடம் வம்பளந்தவன் மீதே மையம் கொள்ள, மனதினில் நேற்று நடந்த நிகழ்வு நிழலாடியது.
மூச்சுக்காற்று உரசும் நெருக்கத்தில் தன்னருகே நின்றிருப்பவனை, படபடக்கும் இதயத்துடன் மலர் விழியுயர்த்திக் காண, அவனது பார்வை முழுவதும் மலரது முகத்தில்தான் இருந்தது.
மெதுவாக அவளது ஆழி விழிகளைத் தொட்டு, பிறகு ஒற்றைக்கல் மூக்குத்தி அணிந்த நாசியில் சறுக்கி, அவளது சிறிய அதரங்களில் நிலைக்கொண்டது.
அவனது பார்வையை உணர்ந்தவள் கதவோடு மேலும் ஒன்றிக்கொள்ள, இப்போது அவளது விழிகளை மட்டும் இமைக்காமல் நோக்கினான்.
“சார்… சார்…” என்று தனக்கே கேட்காத குரலில் மலர் திணற,
“என்னை விட்டுட்டுப் போகாத, மலர்,” என்று மீண்டும் அழுத்தமாகக் கூறினான்.
“என்ன… என்ன சொல்றீங்க நீங்க?” என்றவள் திக்கித் திணறிக் கேட்க,
“நீ கிளம்புனதும் என்னோட உலகம் இருண்டு போய்டுச்சு, மலர்,” என்றவனது குரல் நேசத்தில் கனிந்து அவளது செவியில் உருகியது.
இதுவரை உணர்ந்திடாத அந்தக் குரல் அவளது இதயத்தைப் பெரிதாய் அதிரச் செய்ய, மூச்சை இழுத்துப் பிடித்தாள். உள்ளங்கை இரண்டையும் இறுக்கிக் கொண்டவளது விழிகள் அவனையே வெறித்துப் பார்த்தன.
கைகள் இரண்டையும் அவளைச் சிறை செய்தது போல கதவின் மீது ஊன்றியவன், குனிந்து அவளது செவியருகே,
“மலர்…” என்று தனது ஒட்டுமொத்த தவிப்பையும் தேக்கி அழைக்க,
இவளுக்கு அவனது விழிகளிலும் குரலிலும் தென்பட்ட தவிப்பு நடுக்கத்தை உண்டாக்கியது.
தொண்டைக்குழி வறண்டு போக, உமிழ்நீரை விழுங்கி அதனைச் சரிசெய்தவள்,
“ப்ளீஸ்… தள்ளிப் போங்க…” என்று மெதுவான குரலில் முணுமுணுக்க,
“என்னை விட்டுத் தள்ளிப் போகாத, மலர்,” என்றவனது குரல் உணர்ச்சியின் மிகுதியில் கரகரத்தது.
மலருக்கு அதிர்ச்சியிலும் திகைப்பிலும் வேறு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அதுவும் அவனது விழிகள் காட்டிய உணர்வு அவளை முழுவதுமாகத் தாக்க, விழிகளை மூடித் திறந்தாள்.