இதயம் 12.2

“நெஜமா மேடம். நீங்க வேணா ராதா மேடம்கிட்ட கேட்டு பாருங்க. நீங்களும் ரிஷி சாரும் ரொம்ப பொருத்தமா இருக்கீங்க,” என்றவள், “கல்யாணத்துக்கு தேதி குறிச்சாச்சா மேடம்?” என்று வினவினாள்.

“இல்ல, இன்னும் எதுவும் கன்ஃபார்ம் ஆகல,” என்று ரோஹிணி கூற,

“அதெல்லாம் சீக்கிரம் கன்ஃபார்ம் ஆகிடும் மேடம்,” என்று அவளுடன் பேசியபடியே இனிப்பை செய்து முடித்திருந்தாள்.

“முதல் முறையா நீங்க வந்து இருக்கதால இன்னைக்கு பால் கேசரி செஞ்சிருக்கேன். சாப்பிட்டு பார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க மேடம்,” என்று ஒரு கிண்ணத்தில் அவளுக்கு வைத்துக் கொடுத்தவள், “சார் குளிச்சிட்டு வந்து இருப்பாங்கன்னு நினைக்கிறேன். நான் போய் நீங்க வந்திருக்கத சொல்றேன்,” என்று ரிஷியின் அறை நோக்கிச் சென்றாள்.

ரோஹிணி கூடத்தில் அமர்ந்து மலர் கொடுத்த பால் கேசரியை உண்ணத் தொடங்கினாள்.

“மலர்.”

“ரிஷி சார்,” என்று கதவைத் தட்ட, அப்போதுதான் குளித்து முடித்து வந்து உடைமாற்றியவன் கதவைத் திறந்து, “என்ன?” என்பதாய் கண்டான்.

“உங்கள பாக்க ரோஹிணி மேடம் வந்து இருக்காங்க ரிஷி சார்,” என்று மலர் கூற,

“ரோஹிணியா?” என்றவனின் முகம் யோசனைக்கு தாவியது.

அதனைக் கண்ட மலர், “ரிஷி சார், ரோஹிணி மேடம்… நீங்க கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணு. போன வாரம் போய் பாத்துட்டு வந்தீங்களே,” என்று நினைவுபடுத்த,

இப்போது ரிஷி முகத்தில் மெல்லிய திகைப்பு தோன்றி மறைய, “டூ மினிட்ஸ்ல வரேன்னு சொல்லு,” என்றவன் மீண்டும் கதவடைத்தான்.

மலர் ரோஹிணியிடம் வந்து, “சார் இப்பதான் குளிச்சிட்டு வந்திருப்பாரு போல மேடம். ரெண்டு நிமிஷத்துல வரேன்னு சொன்னாங்க,” என்றவள், “நான் போய் உங்க ரெண்டு பேருக்கும் காபி போட்டு எடுத்துட்டு வரேன்,” என்று சமையலறைக்குள் நுழைந்தாள்.

கூறியது போலவே இரண்டு நிமிடத்தில் ரிஷி கூடத்திற்கு வர, அவனைக் கண்டு ரோஹிணி எழுந்து நின்றாள்.

“எதுக்கு எழுந்துக்குறீங்க? உட்காருங்க ரோஹிணி,” என்றபடி வந்த ரிஷி அவளெதிரே அமர,

“இந்த சைடு ஒரு ஒர்க்கா வந்தேன். அப்படியே உங்களை பார்த்துட்டு போகலாம்னு,” என்று தயக்கத்துடன் இழுத்தாள் ரோஹிணி.

பதிலுக்கு ஒரு தலையசைப்பைக் கொடுத்தவன், “என்ன சாப்பிடுறீங்க? டீ, காபி?” என்று வினவிட,

“இப்பதான் மலர் ஸ்வீட் செஞ்சு கொடுத்தாங்க,” என்று அருகில் இருந்ததை காண்பித்தாள்.

பிறகு இருவரும் ஏதோ பேச ஆரம்பிக்க, சுடச்சுட இரு கோப்பை தேநீரை கொண்டு வந்து அவர்களருகே வைத்துவிட்டுப் போனாள் மலர்.

காலை சமையலை முடித்தவள் மனதிற்குள், “இவங்களே ரிஷி சாருக்கு வைஃபா வந்தா ரொம்ப நல்லா இருக்கும். இவங்க ராதா மேடம் போல சிடுமூஞ்சி இல்லை; சிரிச்ச முகத்தோட பேசுறாங்க. கடவுளே, ரிஷி சாருக்கு இவங்கள கண்டிப்பா பிடிக்கணும். அப்பதான் நான் இங்க நிம்மதியா வேலை பார்க்க முடியும்,” என்று கடவுளிடம் அவசர அவசரமாக கோரிக்கையை வைத்தவள் திரும்ப, அங்கே ரிஷி நின்றிருந்தான்.

அவன் வரவை அறிந்தவள், “உங்களுக்கு சாப்பாடு எடுத்து வைக்கவா ரிஷி சார்?” என்று வினா தொடுக்க,

“நான் வெளியே போறேன். நீ ஒர்க் முடிச்சிட்டு வீட்டை பூட்டிட்டு கிளம்பு,” என்று கூறினான் ரிஷி.

“சரிங்க சார்,” என்று மலர் தலையசைக்க, ரிஷி ரோஹிணியிடம் கூறிவிட்டு தன்னுடைய அலைபேசியை எடுக்கச் சென்றான்.

ரோஹிணி உண்டு முடித்துவிட்டு கிண்ணத்தை வைக்க சமையலறை வர,

“பால் கேசரி நல்லா இருந்ததா மேடம்?” என்று ஆர்வமாக அவளது முகம் கண்டாள் மலர்.

“ரொம்ப நல்லா இருந்தது மலர்,” என்று ரோஹிணி அவளைப் பாராட்ட,

“தேங்க்ஸ் மேடம்,” என்றவள், “எனக்கு சமையல்ல நிறைய தெரியும் மேடம். வெஜ், நான்-வெஜ் எல்லாமே சூப்பரா சமைப்பேன். வீட்டைக்கூட நல்லா பளபளன்னு கிளீன் பண்ணி வச்சுருவேன்,” என்று அடுக்க,

ரோஹிணி புரியாது அவளைக் கண்டாள்.

“இதெல்லாம் எதுக்கு உங்ககிட்ட சொல்றேன்னு யோசிக்கிறீங்களா மேடம்?” என்று மலர் கேட்டிட, ரோஹிணி தலை ஆம் என அசைந்தது.

“நாளைக்கு சாரை கல்யாணம் பண்ணிட்டா நீங்கதானே இந்த வீட்டுக்கு ஓனரம்மா? அதுதான் முன்னாடியே உங்ககிட்ட என்னோட திறமை எல்லாம் சொல்லி வைக்கிறேன். ராதா மேடம் வேற, ‘சாருக்கு கல்யாணம் ஆயிட்டா அவங்க வைஃப் விருப்பப்பட்டாதான் நான் இங்க வேலை பார்க்க முடியும்’ன்னு சொல்லிட்டாங்க,” என்று மலர் விளக்க,

ரோஹிணியின் இதழ்களில் புன்னகை படர்ந்தது.

மலரின் கைகளைப் பிடித்துக் கொண்டவள், “உன்னை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு மலர். நீ சொல்ற மாதிரி நடந்தா, நீயா போகிற வரைக்கும் உன்னை நான் வேலையிலிருந்து போக சொல்ல மாட்டேன்,” என்று மாறாத புன்னகையுடன் கூற,

“கண்டிப்பா நடக்கும் மேடம். சாருக்கு உங்களை நிச்சயமா பிடிக்கும். நீங்கதான் எனக்கு ஓனரம்மாவா வரப் போறீங்க,” என்று கூறிவிட்டு நிமிர, ரிஷி வாயிலில் நின்று கொண்டிருந்தான்.

அதனைக் கண்ட ரோஹிணி, “சரி, நான் போயிட்டு வரேன் மலர். நாம் இன்னொரு நாள் பேசலாம்,” என்று கூற,

“சரிங்க மேடம்,” என்று தலையசைத்தவள், “முதல் தடவை வந்து இருக்கீங்க. சாமி ரூம்ல போய் சாமி கும்பிட்டு, விபூதி குங்குமம் வச்சிட்டு போங்க மேடம்,” என்றாள்.

“பாக்க சின்ன பொண்ணு மாதிரி இருக்க; பேசுறதெல்லாம் பெரியவங்க பேசுற மாதிரி இருக்கு,” என்ற ரோஹிணி, அவள் கூறியதை மறுக்காது செய்ய, மலர் அதனை இருவரும் அறியாது தன்னுடைய அலைபேசியில் புகைப்படம் எடுத்துக்கொண்டாள்.

ரிஷி அமைதியாய் அவர்கள் இருவரையும் பார்த்திருந்தான்.

இருவரும் அங்கிருந்து அகன்ற நொடி, தனது அலைபேசியை எடுத்தவள் ராதாவிற்கு அழைப்பை விடுத்து ரோஹிணி வந்த விடயத்தைக் கூறிவிட்டாள். அதுமட்டுமின்றி, தான் எடுத்த புகைப்படத்தையும் அனுப்பிவிட்டவள், வேலையை முடித்துவிட்டு வீட்டிற்குப் புறப்பட்டுவிட்டாள்.

ரோஹிணியுடன் வெளியே சென்ற ரிஷி, மதிய உணவை வெளியே முடித்துக் கொண்டுதான் வீட்டிற்கு வந்தான். பன்னிரெண்டு மணிக்கு முன்பாகவே, மதியம் சமையல் செய்ய வர வேண்டாம் என்று மலருக்கு செய்தி அனுப்பியிருந்தான். அதனால் மலர் உண்டுவிட்டு ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்று விட்டாள்.

நான்கு மணி நேரம் நன்றாக உறங்கி எழுந்தவள், தாய் கொடுத்த தேநீரை அருந்திவிட்டு தயாராகி ரிஷியின் வீட்டிற்குச் சென்றாள்.

“குட் ஈவினிங், ரிஷி சார்,” என்று புன்னகையுடன் மலர் நுழைய, அவளுக்கு வழிவிட்டு கூடத்தில் இருந்த நீள்விருக்கையில் அமர்ந்தவன்,

“மலர்,” என்று அழைத்தான்.

“சார்,” என்றவள் அவனருகே வர,

“அம்மாக்கு கால் பண்ணி ரோஹிணி வந்த விஷயத்தை சொன்னியா?” என்று அழுத்தமாக வினவினான்.

அவனின் குரலில் இருந்த பேதத்தை உணர்ந்தவள், மெல்லிய குரலில், “ஆமா சார்,” என்று பதிலளித்தாள்.

“யாரைக் கேட்டு சொன்ன மலர்?” என ரிஷி அவளை கூர்மையாகப் பார்க்க, மலரிடத்தில் பதில் இல்லை.

“நான் உன்னை அம்மாக்கு கால் பண்ணி ரோஹிணி வந்த விஷயத்தை சொல்லச் சொன்னேனா? சொல்லு மலர்,” என்று அழுத்தத்துடன் குரல் உயர,

“ம்ஹூம்…” என்று மெலிதாய் அவளது தலை அசைந்தது.

“அப்புறம் இந்த போட்டோ?” என்றவன் தன் அலைபேசியில் மலர் எடுத்திருந்த புகைப்படத்தைச் சுட்டிக் காட்டினான். அதில் ரோஹிணி, ரிஷியின் வீட்டு பூஜை அறையில் சாமி கும்பிடுவது போல் நின்றிருந்தாள்.

“இந்த போட்டோ யாரைக் கேட்டு எடுத்த நீ?” என்று ஒருவித அதட்டலுடன் அவளை நோக்க,

“அது வந்து சார்…” என்றவள், என்ன பதிலளிப்பது எனத் தெரியாமல் பதட்டத்தில் துப்பட்டாவின் நுனியைத் திருகத் தொடங்கினாள்.

“ஆன்சர் மீ, மலர்!” என்ற ரிஷி கோபத்துடன் மலரை உறுத்து விழிக்க,

“அது நானாதான் எடுத்தேன் சார். மேடம்க்கு அனுப்பலாம்னு…” என்றவள் தயக்கத்துடன் அவனது முகம் நோக்கினாள்.

பயத்தில் வெளுத்திருந்த அவளது முகத்தைக் கண்டவனுக்கு திட்ட மனம் வரவில்லை. இருந்தும் கோபம் குறையவில்லை. அவள் செய்து வைத்த செயலால் ரிஷிதான் அல்லாடிக் கொண்டிருந்தான்.

மலர் ராதாவிற்கு அழைத்து ரோஹிணி வந்த விடயத்தையும், அதோடு சேர்த்து இருவருக்கும் பிடித்தம் இருப்பது போல் தெரிகிறது என்றும் கூறிவிட, வீட்டிலிருந்து ஒவ்வொருவராக மாற்றி மாற்றி அழைத்து, “ஏன் எங்களிடம் கூறவில்லை? நீயே பேசி கொள்வாயா? பெரியவர்கள் முடிவு செய்ய வேண்டாமா? திருமண தேதி குறிக்க வேண்டும். நிச்சயத்திற்கு தேதி குறிக்க வேண்டும்,” என்று அவர்கள் விருப்பத்திற்கு முடிவு செய்து பேசிக்கொண்டே செல்ல, ரிஷிக்கு ரத்த அழுத்தம் எகிறியது.

ஷாலினி வேறு, “அண்ணா, எங்ககிட்ட கூட சொல்லலையே! அண்ணியை பார்க்கப் போறேன்னு அன்னைக்கு கேட்டதுக்கு, ‘யோசிச்சு சொல்றேன்’னுதானே சொன்ன? என்கிட்டதான் ஃபர்ஸ்ட் முடிவை சொல்லுவேன்னு நினைச்சேன். இப்ப மலர் கால் பண்ணி சொல்லித்தான் தெரிஞ்சது. உனக்கு அவங்கள புடிச்சி இருக்கா? எனக்கும் புடிச்சிருக்கு ண்ணா. அம்மா நெக்ஸ்ட் மந்த் கல்யாண தேதி வைக்கலாம்னு பேசிட்டு இருக்காங்க,” என்று கூறிவிட, அவர்களை சமாளிப்பதற்குள் ரிஷி வெகுவாய் திணறிப் போனான்.

அதன் விளைவுதான் இப்போது மலரை கோபத்துடன் வறுத்தெடுத்துக் கொண்டிருந்தான்.

நிமிடங்கள் கடந்தும் அவன் ஏதும் பேசாமல், பார்வை மாற்றாமல் இருப்பதில் மலருக்கு அச்சம் மேலோங்க,

“அது உங்களுக்கு கல்யாணம் ஆகப்போகுதுன்ற எக்சைட்மெண்ட்ல சொல்லிட்டேன் சார். இனிமே சொல்ல மாட்டேன்,” என்று விளக்கம் கொடுத்தாள்.

“நான் சொன்னேனா எனக்கு கல்யாணம் ஆகப்போகுதுன்னு?” என்று விடாக்கொண்டனாக ரிஷி வினவிட, மலருக்கு திகைத்த நிலைதான். இதற்கு என்ன பதில் கூறுவாள்?

“சொல்லு மலர், நான் உன்கிட்ட வந்து சொன்னேனா எனக்கு கல்யாணம் ஆகப்போகுதுன்னு?” என்று மீண்டும் அழுத்திக் கேட்க,

“இல்லை” எனும் விதமாக தலையை இடம் வலமாக ஆட்டினாள் மலர்.

“அப்புறம் ஏன் என் வீட்டுக்கு கால் பண்ணி உன் இஷ்டத்துக்கு சொல்லி வச்சிருக்க? அதுவும் எங்க ரெண்டு பேருக்கும் புடிச்சிருக்குன்னு நீயா கற்பனை பண்ணி அதை அம்மா கிட்ட தெரியப்படுத்தி இருக்க?” என்று விரலை மெதுவாக தாளம் போட்டபடி அவளைப் பார்த்து புருவம் உயர்த்த,

மலருக்கு நிச்சயமாய் என்ன எதிர்வினை ஆற்றுவது என்று தெரியவில்லை.

அவளுக்கு ரிஷி மேல் நிறைய மதிப்பும், மரியாதையும், கூடவே அன்பும் இருந்தது. அவனுக்கு திருமணம் நடக்கப் போவதை எண்ணி மகிழ்ந்தவள், தான் செய்யும் காரியத்தை உணராது ராதாவிடம் கூறியிருந்தாள். இப்போது ரிஷி அதனைக் கேட்கும்போதுதான், அவனது விருப்பமின்றி தான் பேசியது மிகவும் தவறு என்று புரிந்தது.

“இனிமே இந்த மாதிரி செய்ய மாட்டேன் சார்,” என்று வருத்தம் இழையோடிய குரலில் அவனுக்கு உறுதியளிக்க,

“செய்யக்கூடாது. எனக்குத் தெரியாம எந்த நியூஸும் என் அம்மாவுக்கு போகக்கூடாது. புரிஞ்சுதா?” என்று ரிஷி அதட்டினான்.

“மாட்டேன் சார்,” என்று அடுத்த நொடியே பதில் மொழிய,

“ஹ்ம்ம்…” என்று தலையசைத்தவன், “எனக்கு ஒரு காபி கொண்டு வா, போ,” என்றிட, அங்கிருந்து ஓடியே போனாள் மலர்.

error: Content is protected !!
Scroll to Top