இதயம் 13.1

இதயம் – 13

“ம்மா, இந்தப் புடவை எனக்கு நல்லா இருக்கா?” என்று வினவிய மலர், முன்னும் பின்னும் சுற்றிக் காண்பிக்க,

“ரொம்ப நல்லா இருக்கு, மலர். இன்னும் கொஞ்சம் நல்லா கட்டணும். நான் சரி பண்ணி விடுறேன்,” என்றவர் எழுந்து வந்து மலருக்குப் புடவையை ஒழுங்குபடுத்தினார்.

தான் கட்டியிருந்த ஆலிவ் பச்சை நிறப் புடவைக்கு தோதாக ஒரு ஜிமிக்கி எடுத்து அணிந்தவள், கழுத்தில் மெல்லிய சங்கிலி போட்டுக் கொண்டாள். பிறகு, கூந்தலை நன்கு உலர்த்தியவள், ஒரு சிறிய கிளிப்பில் அதனை அடக்கினாள்.

வேறு எந்த ஒப்பனையும் இன்றி, நெற்றியில் சிறிதான வட்டப் பொட்டு ஒன்றை ஒட்டிக் கொண்டவள், “ஓகே தானம்மா? வேற எதுவும் மாத்தணுமா?” என்று வினவிட,

“எல்லாமே நல்லா இருக்கு, மலர். மூக்குத்தி இன்னொன்னு இருக்குல்ல, அதை மாத்திக்கிறியா?” என்று வினவினார்.

தனது ஒற்றைக்கல் மூக்குத்தியில் விரலை வைத்து பார்த்தவள், “இதுவே இருக்கட்டும்மா. நல்லாத்தான் இருக்கு. அந்த மூக்குத்தி கொஞ்சம் பெருசா இருக்கும்,” என்று மறுத்துவிட, மாதவியும் “சரி” என்று கூறினார்.

மலரின் கல்லூரித் தோழி ஒருத்திக்குத் இன்று திருமணம். அதற்காகத்தான் தயாராகிக் கொண்டிருந்தாள். காலை பத்து முதல் பதினொரு மணி வரை முகூர்த்தம். திருமணத்திற்கு சென்று விட்டு அப்படியே அலுவலகத்திற்குக் கிளம்பி விடலாம் என்று முடிவு செய்திருந்தாள்.

ரிஷி வீட்டிற்குச் சென்று வேலை முடித்துவிட்டு, அங்கிருந்து அப்படியே திருமணத்திற்குச் செல்லும் யோசனை. தன் வீட்டிற்கு வந்து சென்றால் நேரத்திற்குச் செல்ல முடியாது; மற்ற தோழிகள் காத்திருக்க நேரிடும் என்பதால் இவ்வாறு முடிவு செய்திருந்தாள்.

“முடியை பின்னல் போட்டுவிடவா, மலரு?” என்று மாதவி கேட்க,

“தினமும் பின்னித்தான் போடுறேன். இருக்கட்டும்மா,” என்றவள், தன்னுடைய பையை எடுத்துக்கொண்டு புறப்பட்டாள்.

மலருக்குப் புடவை கட்டிப் பெரிதான அனுபவம் எதுவும் இல்லாததால், நடந்து செல்வதற்குச் சற்று சிரமமாக இருந்தது.

“யாருதான் இந்தச் சேலையெல்லாம் கண்டுபிடிச்சது? ஒரு நாள் கட்டிட்டு போயிட்டு வரதுக்குள்ள நாக்கு தள்ளுதுப்பா…” என்று புலம்பியபடி ரிஷியின் வீட்டை அடைந்திருந்தவள், அழைப்பு மணியை அழுத்தினாள்.

உள்ளே இருந்து கதவைத் திறந்த ஷாலினி, மலரைப் புடவையில் கண்டுவிட்டு,

“வரேவ்வா! சேரில உனக்கு சூப்பரா இருக்கு!” என்று மெலிதான கூச்சலிட,

“ஷாலினி மேடம்! நீங்க எப்ப வந்தீங்க?” என்று மகிழ்வுடனும் திகைப்புடனும் வினவினாள் மலர்.

“உள்ளே வா, மலர்,” என்று வழிவிட்ட ஷாலினி, “இப்பத்தான் கொஞ்ச நேரம் முன்னாடி வந்தேன்,” என்று பதில்மொழிய,

“வரேன்னு என்கிட்ட சொல்லவே இல்ல,” என்றும் மலர் வினா தொடுத்தாள்.

“திடீர்னு ஒரு வொர்க் வந்துருச்சு, மலர். அதுதான்,” என்று விளக்கம் கொடுத்த ஷாலினி,

“என்ன விசேஷம்? சாரியெல்லாம் கட்டிட்டு வந்து இருக்க?” என்று வினவிட,

“என் பிரண்டுக்கு மேரேஜ். அதான் பிரெண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து சேலை கட்டிட்டு போலாம்னு கேட்டாங்க,” என்று பதில் அளித்தாள் மலர்.

“சேரில சூப்பரா இருக்க, மலர். சுடிதார்ல சின்ன பொண்ணு மாதிரி தெரியிற,” என்று ஷாலினி சிரிப்புடன் கூற,

“நிஜமாவே நல்லா இருக்கா?” என்று ஐயத்துடன் கேட்டாள் மலர்.

“இது என்ன கேள்வி? நிஜமாவே நல்லா இருக்க. உண்மைக்கே சூப்பரா இருக்கு, மலர்,” என்று ஷாலினி இயம்ப,

இருந்தும் நம்பாத பாவனையில் புன்னகைத்து வைத்தாள் மலர்.

“நீ சிரிக்கிறதைப் பார்த்தா நான் சொல்றதை நம்பாத மாதிரி இருக்கே? இரு, உன்னை நம்ப வைக்கிறேன்,” என்றுவிட்டு எழுந்து சென்று,

“அண்ணா, இங்க வா!” என்று தமையனை அழைத்தாள்.

“மலர், இப்ப எதுக்கு ரிஷி சாரைக் கூப்பிடுறீங்க?” என்று மலர் பதற,

“என்ன, ஷாலினி?” என்றபடி வெளியே வந்தான் ரிஷி.

“அண்ணா, நீயே சொல்லு. மலர் இந்தச் சாரில அழகாத்தானே இருக்கா?” என்று வினவிட,

ரிஷியின் பார்வை ஒரு கணம் மலர் மீது படிந்து மீண்டது.

“சொல்லுண்ணா…” என்று ஷாலினி மீண்டும் கேட்க,

“ஹ்ம்ம்… நல்லா இருக்கு,” என்று ரிஷி மெலிதான தலையசைப்புடன் கூறினான்.

“பாத்தியா, மலர்? அண்ணனே சொல்லிட்டாரு. இப்பவாவது நம்புறியா?” என்று ஷாலினி கேட்க,

“நீங்க சொன்னப்பவே நம்பிட்டேன். இதுக்கு எதுக்கு சாரைக் கூப்பிட்டீங்க?” என்று மெலிதான முணுமுணுப்புடன் கூறிச் சிறிதாய் புன்னகைத்தவள்,

“நான் போய் சாருக்குச் சத்துமாவு கஞ்சி ரெடி பண்றேன். உங்களுக்கு காபி ஓகேவா?” என்று வினவினாள்.

“காபி ஓகேதான், மலர். நானும் வரேன் உன் கூட,” என்றவள், மலருடன் சமையலறையில் நுழைய,

“நீங்க இப்பத்தான் வந்தீங்க. போய் ரெஸ்ட் எடுங்க. நான் காபி கொண்டு வரேன்,” என்றாள் மலர்.

“ஏசி கார்ல ஜம்முன்னு உக்காந்துட்டு வந்தேன். இதுக்கு எதுக்கு ரெஸ்ட்?” என்ற ஷாலினி, சமையலறை திண்டில் ஏறி அமர்ந்தாள்.

“என்ன வேலையா வந்திருக்கீங்க, மேடம்?” என்று மலர் கேட்க,

“என்னோட பிஎச்.டி. தீசிஸ் ஒர்க்குக்காக ஒரு ப்ரொபசரை பார்க்க வந்திருக்கேன்,” என்று ஷாலினி பதிலளித்தாள்.

இருவரும் பேசியபடி வேலையைக் கவனிக்க,

“மலர், ரிஷி சார் கம்பெனில சாப்பிட்டுக்குவாரு. நீங்க என்ன பண்ணுவீங்க? உங்களுக்கு மதியத்துக்கும் சேர்த்து சமைச்சிடவா?” என்று வினவ,

“நான் ஆப்டர்நூன்தான் ப்ரொபசரை பார்க்க போறேன். வெளியவே லஞ்ச் பாத்துக்கிறேன். நீ இன்னைக்கு ஆபீஸ்க்கு லீவா?” என்று வினவினாள் ஷாலினி.

“இல்லை. கல்யாணம் பத்து டூ பதினொன்னுதான். முடிச்சுட்டு பன்னிரெண்டு மணிக்கு ஆபீஸ்க்குப் போயிடுவேன். நீங்க மதியம் வர வீட்லதான் இருப்பீங்களா?” என்று பதில் வினவ,

“ஆமா, மலர். எனக்கு எந்த ஒர்க்கும் இல்ல. சாப்பிட்டு தூங்கி எழுந்து கிளம்பிப் போகணும்,” என்று பதில்மொழிந்தாள் ஷாலினி.

“அப்ப என்கூட கல்யாணத்துக்கு வரீங்களா?” என்று மலர் வினா எழுப்ப,

“நானா?” என்று திகைப்புடன் கேட்டாள் ஷாலினி.

“ஆமா, நீங்கதான். கல்யாணம் இங்க பக்கத்துலதான். வர்றீங்களா?” என்று மலர் மீண்டும் அழைக்க,

“நான் எப்படி அங்கே? எனக்கு யாரையும் தெரியாதே,” என்று தயங்கினாள் ஷாலினி.

“அதான் நான் இருக்கேன் இல்ல. நான் பாத்துக்குறேன் உங்களை,” என்றவள், அவள் தயங்குவதைக் கண்டு,

“உங்களுக்கு விருப்பம் இல்லைன்னா வேண்டாம்,” என்று கூற,

“விருப்பம் இல்லாமல்லாம் இல்ல, மலர். அங்க யாரையும் தெரியாது. அதான் யோசிச்சேன். சரி, வா போகலாம். நான் ரெடி ஆகிட்டு வரேன்,” என்று திண்டிலிருந்து குதித்தாள்.

“ஒரு வார்த்தை ரிஷி சார்கிட்ட சொல்லிட்டு வாங்க, மேடம்,” என்று மலர் கூற,

“அண்ணன் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க, மலர். நான் பார்த்துக்கிறேன். நானும் சாரி கட்டிட்டு வரவா?” என்று வினவினாள்.

“கட்டிட்டு வாங்க, மேடம். என் பிரண்ட்ஸ் எல்லாருமே சாரிலதான் வருவாங்க,” என்று மலர் கூற,

“என்கிட்டயும் இதே கிரீன்ல ஒரு சாரி இருக்கு. நான் போய் ரெடியாகுறேன்,” என்று ஷாலினி அறைக்குச் சென்றாள்.

ஷாலினி இடத்தில் வேறு யாராவது இருந்தால், நிச்சயமாக மலர் தன்னுடன் அழைத்திருக்க மாட்டாள். என்னவோ, தன்னுடன் இயல்பாகப் பழகும் ஷாலினியைக் கண்டால், சாகித்யாவுடன் இருப்பது போலத்தான் மலருக்குத் தோன்றும். அதனால்தான் அழைத்தாள்.

மலர் சமையலை முடிக்க, அதே நேரம் ஷாலினி தயாராகி வந்தாள். பாசிப் பச்சை நிறப் புடவையில் அழகாகத் தயாராகி இருந்தவளைக் கண்ட மலர்,

“அழகா இருக்கீங்க,” என்று புன்னகையுடன் கூற,

“உன்னைவிட அழகு கம்மிதான், மலர்,” என்று பதில் புன்னகைத்தாள் ஷாலினி.

“பொய்!” என்று உடனடியாக மலர் மறுக்க,

“நம்பலைன்னா போ, மலர்,” என்று போலியாய் சலித்த ஷாலினி,

“கிச்சன்ல வேலை செஞ்சு உன்னோட மேக்கப் எல்லாம் கலைஞ்சிருச்சு. வா, கொஞ்சம் டச்-அப் பண்ணி விடுறேன்,” என்று அழைத்தாள்.

“நான் மேக்கப் எதுவும் போட்டுட்டு வரலையே!” என்று மலர் ஐயத்துடன் கேட்க,

“போடலைன்னா என்ன? இப்ப போட்டுக்கோ. வா,” என்று கைப்பிடித்து தன்னறைக்கு அழைத்துச் சென்றவள், மலருக்குச் சிறிதான ஒப்பனைகள் செய்துவிட்டாள்.

“இதெல்லாம் எதுக்கு, மேடம்? வேண்டாம்,” என்று மலர் மறுக்க,

“ஹெவியா எல்லாம் போடல. லைட்டாதான் போடுறேன். ஒரு டென் மினிட்ஸ்ல முடிச்சிடலாம்,” என்று அவளைச் சரிகட்டிய ஷாலினி அழகாக ஒப்பனை செய்துவிட,

மலருக்கே கண்ணாடியில் தன் உருவம் அழகாய்த் தெரிந்தது.

என்ன மலர், உன்னை நீயே ரசிக்கிறியா? என்று சிரிப்புடன் ஷாலினி புருவம் உயர்த்த,

“கொஞ்சம் அழகாத்தான் தெரியுறேன்…” என்று மெல்லிய கூச்சத்துடன் கூறினாள் மலர்.

“கொஞ்சமில்லை, ரொம்பவே அழகா இருக்க, மலர்,” என்று ஷாலினி கண்ணடிக்க, மலரின் முகத்தில் புன்னகை இமை நீண்டது.

“சரி, வா கிளம்பலாம்,” என்று ஷாலினி அழைக்க,

“சார் சாப்பிட்டதும் எல்லாத்தையும் ஒதுக்கி வச்சுட்டு வரேன்,” என்று மலர் கூற,

“அகைன் கிச்சனுக்குப் போனா மேக்கப் எல்லாம் கலைஞ்சிடும், மலர். ஈவினிங் வந்து எல்லாத்தையும் பாத்துக்கலாம்,” என்று ஷாலினி மறுத்தாள்.

இருந்தும் மலரது முகம் யோசனையைத் தத்தெடுக்க,

“அண்ணா ஒண்ணும் சொல்ல மாட்டாரு, மலர். வா, நான் பாத்துக்குறேன்,” என்று கைப்பிடித்து வெளியே அழைத்து வந்தவள், ரிஷியின் அறைக் கதவைத் தட்டினாள்.

அப்போதுதான் குளித்து முடித்து வந்தவன் கதவைத் திறக்க,

“அண்ணா, நானும் மலரும் ஒரு பங்க்ஷனுக்குப் போயிட்டு வரோம்,” என்று ஷாலினி கூற,

“என்ன பங்க்ஷன்?” என்று ரிஷி வினவினான்.

“மலரோட காலேஜ் பிரண்டுக்கு மேரேஜ். இங்கதான் பக்கத்துல. போயிட்டு வந்திட்றோம்,” என்று ஷாலினி விளக்க,

“எதுல போறீங்க?” என்று மீண்டும் ஒரு கேள்வியைத் தொடுத்தான் ரிஷி.

அதைப் பற்றிச் சிந்திக்காதவள் மலரிடம் திரும்பி,

“எதுல போறோம், மலர்?” என்று வினவினாள்.

“நாங்க முன்னாடி பஸ்ல போற பிளான்லதான் இருந்தோம், மேடம். இப்ப நீங்க வர்றதால ஆட்டோ புடிச்சுக்கலாம்,” என்று மலர் தனது எண்ணத்தைக் கூற,

ஷாலினி பதில் அளிக்கும் முன்,

“என்னோட காரை எடுத்துக்கோங்க,” என்றிருந்தான் ரிஷி.

ஷாலினி பதில் அளிக்கும் முன்,

“ஆனால் நாங்கள் எட்டு பேர் போகணுமே…” என்று மலர் ரிஷியின் முகம் காண,

“மலர், அண்ணாவோட கார் பெருசுதான். எட்டு பேர் தாராளமா போகலாம். நான் நல்லா ட்ரைவ் பண்ணுவேன். அதிலயே போயிட்டு வந்துடலாம்,” என்று ஷாலினி முடித்துவிட்டாள்.

மலர் மீண்டும்,

“சார் எதுல போவாங்க ஆபீஸ்க்கு?” என்று தனது சந்தேகத்தைக் கேட்க,

“அதான் பைக் இருக்கே, மலர். அண்ணா அதுல போயிடுவாங்க,” என்று பதில் அளித்தாள்.

மலர் புரிந்ததாய்த் தலையசைக்க,

“நம்ம திடீர்னு பிளான் போட்டுட்டோம். முன்னாடியே தெரிஞ்சிருந்தா டிரைவரை காரை எடுத்துட்டுப் போகச் சொல்லி இருக்க மாட்டேன். நான் வந்த கார்லயே போயிருக்கலாம்,” என்று ஷாலினி மொழிந்தாள்.

ரிஷி தனது மகிழுந்தின் சாவியை எடுத்து வந்து கொடுக்க,

“போயிட்டு வர்றோம், ண்ணா,” என்று ஷாலினி உரைத்தாள்.

“சேஃப் ஜர்னி,” என்று ரிஷி தங்கைக்கு அறிவுரை கூற,

“நான் பார்த்துக்கிறேன், ண்ணா,” என்று பதில் கொடுத்தவள் மலருடன் வெளியே வந்தாள்.

ஷாலினி ஓட்டுநர் இருக்கையில் அமர, அவளது பக்கத்து இருக்கையில் அமர்ந்த மலர்,

“நான் உங்களுக்கு வழி சொல்றேன், மேடம்,” என்றாள்.

“மஹால் பேரு சொல்லு, மலர். நம்ம கூகுள் மேப்ஸ் போட்டுக்கலாம்,” என்ற ஷாலினி,

“உன்னோட பிரண்ட்ஸ எங்க பிக்-அப் பண்ணணும்?” எனக் கேள்வி கொடுத்தாள்.

“அவங்க பஸ் ஸ்டாப்ல இருப்பாங்க,” என்றவள் தனது தோழிக்கு அழைத்து, அனைவரும் வந்துவிட்டதை உறுதி செய்து கொண்டாள்.

பேருந்து நிறுத்தத்தை நோக்கி மகிழுந்தைச் செலுத்தியபடி வந்த ஷாலினி,

“கிஃப்ட் எதுவும் வாங்கலையா, மலர்?” என்று வினவ,

“வாங்கி இருக்கோம், மேடம். பிரண்ட்ஸ் கிட்ட இருக்கு,” என்று பதில் அளித்தாள்.

“நான் எதுவும் கிஃப்ட் வாங்கலையே, மலர்,” என்று ஷாலினி மலரை காண,

“அதுதான் நாங்க வாங்கி இருக்கோமே, மேடம்,” என்று பதில் உரைத்தாள் மலர்.

“இருந்தாலும் நான் எப்படி சும்மா வந்துட்டுப் போறது? பக்கத்துல எதுவும் கிஃப்ட் ஷாப் இருக்கா, மலர்?” என்று வினவ,

“பக்கத்துல இருக்கு, மேடம்,” என்று மலர் பதில் இயம்பினாள்.

“சரி, உன்னோட பிரண்ட்ஸ பிக்-அப் பண்ணிட்டு, கிஃப்ட் வாங்கிட்டு பங்க்ஷனுக்குப் போகலாம்,” என்று ஷாலினி கூற, மலர் தலையசைத்து வைத்தாள்.

error: Content is protected !!
Scroll to Top