இதயம் 12.1

இதயம் – 12

“லதா, நீ நெஜமாதான் சொல்றியா?” என்று மலர் நம்பாத குரலில் கேட்க, “உண்மையாத்தான் சொல்றேன் மலர். நம்ம கீர்த்தனாதான் ரேகா மேம்கிட்ட பேசிட்டு வந்தா. அவங்களே இன்னைக்கு கூப்பிட்டு சொல்லுவாங்கன்னு நினைக்கிறேன்,” என்று லதா பதில் அளித்தாள்.

“நான் செலக்ட் ஆகியிருக்கேனா? என்னால இப்ப வரைக்கும் நம்ப முடியல. ரேகா மேம் சொன்னாதான் நான் நம்புவேன்,” என்று மலர் மொழிய,

“சரிதான். இன்னும் கொஞ்ச நேரத்துல அவங்க கூப்பிட்டு சொல்லுவாங்க. அப்ப நம்பிக்கோ,” என்று லதா முடித்துக் கொண்டாள்.

“எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு லதா. இது உண்மையா இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்! ஆனா நான் இங்கே சேர்ந்து ஆறு மாசம்தான் ஆகுது. என்னை எப்படி செலக்ட் பண்ணியிருப்பாங்க? ரொம்ப வருஷமா ஒர்க் பண்றவங்க நிறைய பேர் இருக்காங்களே!” என்று மலர் சந்தேகமாக வினவ,

“எனக்கும் அதான் தெரியல. எந்த பேசிஸ்ல செலக்ட் பண்ணாங்கன்னு. ஒருவேளை பேமிலி பேக்ரவுண்ட் வச்சு செலக்ட் பண்ணியிருப்பாங்களோ. அதனாலதான் நீ செலக்ட் ஆகியிருப்பேன்னு நினைக்கிறேன்,” என்று லதா பதில் உரைத்தாள்.

“இருக்கும் லதா. அதைத் தவிர்த்து என்னை செலக்ட் பண்ண வேற காரணம் இல்லைன்னுதான் நினைக்கிறேன். இது மட்டும் சீக்கிரமா நடந்துச்சுன்னா என் தம்பி படிக்கிறதுக்கு நான் கஷ்டப்பட வேண்டியதில்லை. அவன் படிச்சு முடிக்கிற வரைக்கும் இங்கே வேலை பார்ப்பேன்,” என்று மலர் மகிழ்வுடன் கூற,

“நடக்கும் மலரே,” என்று லதா ஆறுதல் கூறினாள்.

விடயம் என்னவென்றால், ரிஷி தங்களது நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களது குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு கல்வி உதவி வழங்க முடிவு செய்திருந்தான். எல்லோருக்கும் அல்ல; ஒரு வருடத்திற்கு இருபத்தைந்து நபர்களுக்கு மட்டும். மலரும் அதில் விண்ணப்பித்திருந்தாள். ஆனால் தான் அதில் தேர்வு செய்யப்படுவோம் என்று சிறிதும் நம்பிக்கை இல்லை. காரணம், மலர் அங்கே சேர்ந்து ஆறு மாதங்கள்தான் ஆகியிருந்தது. அவளுக்கு முன்பாக பல வருடங்களாகப் பணிபுரிபவர்கள் நிறைய பேர் இருக்க, தன்னை எப்படி தேர்வு செய்வார்கள் என்று எண்ணியிருந்தாள்.

ஆனால், உடன் பணிபுரியும் கீர்த்தனா மூலம் தானும் அதில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம் என்ற செய்தி வர, அதனை நம்ப இயலாமல் லதாவிடம் பலமுறை கேட்டுக் கொண்டிருந்தாள்.

அவர்கள் எதிர்பார்த்தது போலவே, தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர் அங்கிருந்த அறிவிப்புப் பலகையில் ஒட்டப்பட, மலர் லதாவுடன் சென்று தன்னுடைய பெயர் இருக்கிறதா என்று தேடினாள். கருணை மலர் என்ற பெயர் இருபதாவது இடத்தில் இருக்க, மலரின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

தாள முடியாத மகிழ்வில் லதாவை கட்டிக்கொண்டாள். லதாவிற்கும் மலருக்கு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சிதான். ஏனெனில், மலரது குடும்பச் சூழ்நிலையை அங்கு நன்கு அறிந்திருந்தவள் லதா மட்டுமே. பல நேரம் மலரைக் கண்டு வியந்திருக்கிறாள்; எப்படி ஒற்றை ஆளாக இத்தனை வேலையும் செய்து குடும்பத்தைப் பார்த்துக் கொள்கிறாள் என்று.

“உனக்கு கிடைக்கணும்னு நான்கூட வேண்டிக்கிட்டேன் மலரே. கிடைச்சா நீ கொஞ்சம் நிம்மதியா இருப்ப. இல்லைன்னா தம்பிக்கு பீஸ் கட்ட நீ ரொம்ப கஷ்டப்பட்டிருப்ப,” என்று லதா உண்மையான அக்கறையுடன் கூற,

“ஆமாடி. இது மட்டும் கிடைக்கலைன்னா, நாலு வருஷத்துக்கு முரளிக்கு காலேஜ் பீஸ் கட்டவே எனக்கு நாக்கு தள்ளியிருக்கும்,” என்று மலரும் தனது நிலையை கூறினாள்.

மகிழ்ச்சியில் அன்று மதியம் மலருக்கு பசிக்கவே இல்லை. முகம் முழுவதும் சிரிப்புடன்தான் சுற்றிக் கொண்டிருந்தாள். அவளுக்கு கிடைத்ததில் சிலருக்கு உண்மையான மகிழ்ச்சி இருந்தாலும், பலருக்கு பொறாமையாகத்தான் இருந்தது. காரணம், அவளுக்கு முன்பாக எத்தனை வருடங்கள் தாங்கள் வேலை செய்திருக்க, இவளுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துவிட்டது என்று.

அடுத்த சிறிது நேரத்தில் ரிஷியிடமிருந்து ஒரு அறிவிப்பு வந்தது. இந்த வாய்ப்பில் தேர்வாகாதவர்கள் அடுத்த முறை தேர்வாக வாய்ப்புள்ளது; யாரும் வருத்தப்பட வேண்டாம். பணியாளர்களின் குடும்பச் சூழ்நிலை மற்றும் இன்ன பிற காரணங்களைக் கருத்தில் கொண்டுதான் அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று கூறியிருக்க, சலசலப்பு சிறிது நேரத்தில் அடங்கிப் போனது.

மலருக்கு ஒரு பெரிய சுமையை இறக்கி வைத்த நிம்மதி உணர்வு ஏற்பட்டது. வீட்டிற்குச் சென்று மாதவியிடம் கூற, அவரும் பெரிதாய் மகிழ்ந்து போனார்.

இளையவர்களுக்கும் மகிழ்ச்சிதான். அதிலும் முரளிதான் சந்தோஷத்தில் குதித்துக் கொண்டிருந்தான். காரணம், முரளி எந்தக் கல்லூரியில் சேர்ந்தாலும் அந்தக் கல்லூரி கட்டணத்தை ஏற்கும் பொறுப்பை ரிஷியின் நிறுவனம் ஏற்றிருந்தது. பணத்தைப் பார்க்காமல் தான் விரும்பிய கல்லூரியில் சேரலாம் என்பதுதான்.

“அக்கா, நான் ஜிஆர்டி காலேஜ்ல சேரப் போறேன். முன்னாடி நீ பீஸ் கட்டணுமே, அங்க பீஸ் அதிகம்னு நினைச்சு கவலைப்பட்டுட்டு இருந்தேன். இப்போ என் பிரெண்ட்ஸ் கூட அங்கதான் சேரப் போறேன். எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு க்கா. ரிஷி சாருக்கு நான் ரொம்ப தாங்க்ஸ் சொன்னேன்னு சொல்லுக்கா,” என்று மகிழ்வுடன் மலரைக் கட்டிக்கொள்ள,

“கண்டிப்பா சொல்றேன் டா. நானும் சார்கிட்ட தேங்க்ஸ் சொல்லணும்னு நினைச்சேன். ஆபீஸ்ல அவரைப் பார்க்க முடியல. வேலைக்கு போகும் போதுதான் பார்த்து சொல்லணும்,” என்று மலரும் பதில் மொழிந்தாள்.

உடைமாற்றிவிட்டு தேநீர் அருந்தியவள், ரிஷியின் வீட்டிற்குச் சென்றாள். வழக்கம்போல ரிஷி வந்து கதவைத் திறந்ததும்,

“குட் ஈவினிங், ரிஷி சார்,” என்று முகம் முழுவதும் புன்னகையுடன் கூறியவள் உள்ளே நுழைந்து,

“ரொம்ப தேங்க்ஸ், ரிஷி சார். ஆபீஸ்லயே உங்ககிட்ட சொல்லணும்னு நினைச்சேன். ஆனா உங்கள பார்க்க முடியல. அந்த இருபத்தஞ்சு பேர்ல என்னை செலக்ட் பண்ணுவீங்கன்னு நான் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை சார். நீங்க பண்ணியிருக்கறது ரொம்ப பெரிய உதவி சார்,” என்று மனமுவந்து நன்றி நவின்றாள்.

ரிஷி வழக்கம் போல ஒரு தலையசைப்புடன் அகன்று விட, மலர் சமையலறைக்குள் நுழைந்து அவனுக்கு குழம்பியைத் தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டாள்.

மனதிற்குள் மட்டும், “இந்த ரிஷி சார் ஏன் இவ்ளோ அமைதியா இருக்காரு? அவங்க வீட்ல இருக்கவங்ககூட பெருசா பேசி பார்த்ததில்லை. நானு…” என்று எண்ணிக்கொண்டாள்.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை ஆதலால், மலர் பொறுமையாய் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்க அழைப்பு மணி ஓசை கேட்டது.

தக்காளி சட்னிக்காக வதக்கி வைத்திருந்ததை அடுப்பில் இருந்து இறக்கி வைத்தவள், “வரேன்,” என்று குரல் கொடுத்தபடி சென்று கதவைத் திறக்க, வெளியே நின்றிருந்தாள் ரோஹிணி.

ரோஹிணி ரிஷிக்காக பார்த்திருக்கும் பெண். ராதா தன் குடும்பத்துடன் சென்று ரோஹிணியை பெண் பார்த்து வந்து ஒரு வாரம் கழிந்திருந்தது.

“ரோஹிணி மேடம், நீங்களா?” என்று மலர் திகைப்பும் மகிழ்வுமாய் கேட்க, எதிரில் இருந்தவள் யாரென தெரியாமல் விழித்தாள் ரோஹிணி.

“உள்ள வாங்க மேடம். ஏன் வாசல்ல நிக்கிறீங்க?” என்று மலர் வரவேற்க, ரோஹிணி மலரைப் புரியாது பார்த்தபடி, “இது ரிஷிகேஷவ் வீடுதானே?” என்று வினவினாள்.

“ஆமா ரோஹிணி மேடம், இது ரிஷி சார் வீடுதான். நீங்க பஸ்ட் உள்ள வாங்க. உங்களை வெளியே நிக்க வச்சே பேசிட்டு இருக்கேன்,” என மலர் அவளது கைபிடித்து உள்ளே அழைக்க, ரோஹிணி தனது காலணிகளைக் கழற்றிவிட்டு உள்ளே வர எத்தனித்தாள்.

“வலது காலை எடுத்து வச்சு உள்ள வாங்க மேடம்,” என்று மலர் அழைக்க, அதே போலவே உள்ளே நுழைந்தாள் ரோஹிணி.

“உக்காருங்க மேடம். என்ன சாப்பிடுறீங்க? டீ, காபி, ஜூஸ்?” என்று மலர் அடுக்க,

“எனக்கு எதுவும் வேண்டாம்,” என்று ரோஹிணி மறுத்தாள்.

“முதல் தடவையா வந்து இருக்கீங்க. எதுவுமே சாப்பிடாம போறீங்களா? நான் உங்களுக்கு ஸ்வீட் செய்றேன்,” என்றவள் நகரப் போக,

“ரிஷி எங்க? நான் அவரைப் பாக்கணும்,” என்று அவளைத் தடுத்திருந்தாள் ரோஹிணி.

“ரிஷி சார் குளிச்சிட்டு இருக்காங்க மேடம். ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணுங்க, வந்துருவாங்க,” என்று மலர் கூற, ரோஹிணி சம்மதமாய் தலையசைத்தாள்.

“பத்து நிமிஷத்துக்குள்ள நானும் உங்களுக்கு ஸ்வீட் செஞ்சு கொண்டு வரேன் ரோஹிணி மேடம்,” என்று மலர் சமையலறை செல்லப் போக,

“உங்களுக்கு எப்படி என்னை தெரியும்?” என்று கேட்டவாறு ரோஹிணியும் உள்ளே வந்தாள்.

“அதான் ராதா மேடம் உங்க போட்டோ காட்டுனாங்களே. அப்போ பார்த்தேன். போட்டோல பார்த்ததை விட நீங்க நேர்ல இன்னும் அழகா இருக்கீங்க,” என்று புன்னகையுடன் மலர் கூற, ரோஹிணி இதழ்களில் கீற்றாய் மென்னகை மலர்ந்தது.

“பொண்ணு பாக்க போறேன்னு சொன்னப்பவே எனக்கு தெரியும் மேடம். கண்டிப்பா சாருக்கு உங்களை பிடிக்கும்னு,” என்று மலர் தன் போக்கில் பேச,

“நீங்க யாருன்னு சொல்லவே இல்லையே?” என்று ரோஹிணி வினவினாள்.

“நான் இங்கதான் மேடம் வேலை பாக்குறேன். சமைக்கிறது, கிளீனிங் எல்லா வேலையும்,” என்று மலர் கூற,

“ஓ… உங்க நேம்?” என்று முன்பிருந்த பாவனையிலேயே கேட்டாள்.

தான் வேலை செய்பவள் என்று கூறியும் எந்த முகமாற்றமும் இல்லாமல் பேசுபவளை மலருக்கு மிகவும் பிடித்துவிட்டது.

“என்னோட பெயர் கருணை மலர் மேடம்,” என்று கள்ளமில்லா புன்னகையுடன் மலர் மொழிய,

“உன்ன மாதிரியே உன்னோட பேரும் ரொம்ப அழகா இருக்கு,” என்று மென்னகைத்தாள் ரோஹிணி.

“பேர் வேணா அழகா இருக்குன்னு நான் ஒத்துக்குறேன் மேடம்,” என்று மலர் கூற,

“ஏன், நீயும் தானே அழகா இருக்க? குட்டியா பொம்மை மாதிரி,” என்று சிரித்தாள் ரோஹிணி.

“நீங்க சிரிக்கும் போது இன்னும் அழகா இருக்கீங்க மேடம். உங்க போட்டோ பார்த்த உடனே சொன்னேன் ராதா மேடம்கிட்ட, ‘நீங்க ஹீரோயின் மாதிரி இருக்கீங்க’னு,” என்று மலர் கூற, ரோஹிணி நம்பாத பாவனை கொடுத்தாள்.

error: Content is protected !!
Scroll to Top