இதயம் 10.2

“எப்போலயிருந்து, கண்ணா? ஹாஸ்பிடல் போனியா? நான் கிளம்பி வரவா?” என்று ராதா சிறிது பதற்றத்துடன் வினா தொடுத்தார்.

“அம்மா, இப்போ நான் நல்லாதான் இருக்கேன். நைட் தான் ஃபீவர். டாக்டர் வந்து இன்ஜெக்ஷன் போட்டு, டேப்லெட் கொடுத்து இருக்காரு. டூ டேஸ் பாலோ பண்ண சொல்லி இருக்காங்க. நீங்க வர்ற அளவுக்கு ஒன்னும் இல்ல. பதறாதீங்க,” என்று தாயை சமாதானம் செய்தான் ரிஷி.

சாப்டியா, கண்ணா? டேப்லெட் போடணும்ல,” என்று அவனது பேச்சில் சமாதானம் அடைந்தவர் கேட்க,

“இனிமேல்தான் மா. இப்பதான் மலர் வந்து குக் பண்ணிட்டு இருக்கா,” என்று பதில் அளித்தான்.

“சரி, கண்ணா,” என்றவர் மேலும் சில வார்த்தைகள் பேசிவிட்டு, உடல்நலத்தை நன்றாக பார்த்துக்கொள்ளக் கூறி அழைப்பை துண்டித்தார்.

அடுத்த கணமே மலருக்கு ராதாவிடமிருந்து அழைப்பு வந்தது.

“ராதா மேடம் எதுக்கு கூப்பிடுறாங்க?” என்று அவரது பெயரை அலைபேசி திரையில் கண்டவள் யோசித்தவாறே அழைப்பை ஏற்று காதில் பொருத்த,

“என் பையனுக்கு காய்ச்சல்னு அவன் சொல்லித்தான் தெரியுது. ஏன் நீ கால் பண்ணி சொல்ல மாட்டியா? அவனுக்குத்தான் உடம்பு சரியில்லையில்ல?” என்று ராதா எடுத்தவுடன் கோபத்துடன் கேட்க,

“இல்ல மேடம், லேசான காய்ச்சல்தான். நான்தான் டாக்டர் வர வச்சு, ஊசி எல்லாம் கூட வச்சேன்,” என்று மலர் விளக்கம் கொடுத்தாள்.

“டாக்டர் வர வச்சா என்கிட்ட சொல்லக் கூடாதா?” என்று அதட்டியவர், “இனிமே எதுனாலும் உடனே எனக்கு கால் பண்ணணும், சரியா?” என்று கட்டளையிட,

“சரிங்க மேடம்,” என்று ஒப்புக்கொண்டாள் மலர்.

“என்ன சமைக்கிற?” என்று ராதா கேள்வி தொடுக்க,

“நாட்டுக்கோழி வாங்கிட்டு வந்து குழம்பு வச்சு இட்லி சுடுறேன், மேடம்,” என்று மலர் பதில் இயம்பினாள்.

“நண்டு வாங்கிட்டு வந்து சூப் வச்சு கொடு. காய்ச்சல் வந்த வாய்க்கு நல்லா இருக்கும்,” என்று ராதா கூற,

“சரிங்க மேடம்,” என்று கேட்டுக்கொண்டாள்.

“நான் சொல்ற மாதிரி கசாயம் வைச்சு எடுத்துட்டு போய் இப்பவே கொடுக்கிற, சரியா?” என்றவர், கசாயம் வைக்கும் செய்முறையை கூற, கவனமாக கேட்டுக்கொண்டவள் அதனை செய்யத் தொடங்கினாள்.

பத்து நிமிடத்தில் கசாயத்தை தயாரித்தவள் எடுத்துக்கொண்டு வெளியே வர, ரிஷி கூடத்தில் அமர்ந்திருந்தான்.

“ராதா மேடம் உங்களுக்கு கசாயம் வச்சு கொடுக்க சொன்னாங்க, சார்,” என்றவள் அவன் முன்னே கசாயக் குவளையை வைக்க, அமைதியாய் தலையசைத்து எடுத்துக்கொண்டான்.

பின் உள்ளே சென்று சமைத்து முடித்து, உணவை மேஜை மேல் எடுத்து அடுக்கியவள், ரிஷியை உணவு உண்ண அழைத்தாள்.

அவன் உணவருந்தும் நேரத்தில் பாத்திரங்களை விளக்கி ஒதுக்கி வைத்தவள், வீட்டிற்கு கிளம்ப தயாரானாள்.

உண்டு விட்டு எழுந்தவன், “இன்னைக்கு நீ ஆபீஸ்க்கு லீவ் எடுத்துக்கோ, மலர்,” என்று கூற,

மலரின் முகம் சடுதியில் பூவாய் மலர்ந்தது.

“ரொம்ப தேங்க்ஸ், ரிஷி சார். நானே கேட்கலாம்னு இருந்தேன்,” என்று அழகாய் புன்னகைத்தவள்,

“ராதா மேடம் உங்களுக்கு நண்டு எடுத்து சூப் வச்சு கொடுக்க சொன்னாங்க. சாயந்தரம் வரும்போது வாங்கிட்டு வரவா, சார்?” என்று கேள்வி எழுப்பினாள்.

சம்மதமாய் தலையசைத்தவன் பணத்தை எடுக்க உள்ளே செல்ல, இவள் மீதமிருந்த உணவை டப்பாவில் அடைத்து தனது பையில் வைத்துக்கொண்டாள்.

இரவு வெகுநேரம் உறங்காது, அவ்வப்போது எழுந்து சென்று ரிஷிக்கு உடல் சுடுகிறதா என்று நெற்றியை தொட்டுப் பார்த்துவிட்டு இருந்தவளுக்கு, காலை எழும்போது உடல் மிகவும் சோர்வாக இருந்தது. அதனால்தான் இன்று விடுப்பு எடுக்கலாமா என்று யோசித்துக்கொண்டிருந்தாள். ரிஷியே தானாக எடுத்துக்கொள்ள சொல்ல, மிகவும் மகிழ்ந்து போனாள்.

ரிஷி பணத்தை எடுத்து வந்து மேஜை மேல் வைக்க, அதை எடுத்துக்கொண்டவள்,

“வர்றேன், ரிஷி சார்,” என்றவாறு அங்கிருந்து அகன்றாள்.

அதன்பிறகு நாட்கள் வழக்கம் போல நகர்ந்தது.

அன்று ஒரு வாடிக்கையாளருக்கு காப்பீடு போடுவதில் மலருக்கு மிகப்பெரிய சிக்கலாக இருந்தது.

எதை கூறினாலும் அந்த வாடிக்கையாளர் கேட்காமல் தன் போக்கிற்கே பேச, அவளால் முடியவில்லை. அவர் விருப்பப்படி காப்பீடு போட்டால் குறைந்தபட்சம் முப்பதாயிரம் செலவாகும். அவர் அவ்வளவு பணத்தை செலவு செய்ய விரும்பவில்லை. ஆனால் தன் விருப்பப்படிதான் காப்பீடு இருக்க வேண்டும் என்று மலரை கட்டாயப்படுத்திக் கொண்டிருந்தார்.

வெகுநேரம் அவரிடம் போராடியவள் சோர்ந்து போய்விட்டாள்.

இதனை சரி செய்ய பொது மேலாளரிடமோ அல்லது வாடிக்கையாளர் உறவு மேலாளரிடமோ தான் செல்ல வேண்டும். அவர்கள் இருவரும் சரியான சிடுமூஞ்சிகள். தான் இந்த பிரச்சினையை எடுத்துச் சென்றால், கண்டிப்பாக தன்னைத்தான் திட்டுவார்கள் என்று கவலையாக இருந்தது.

அருகில் இருந்த தோழி லதா,

“என்னடி, ஏன் இப்படி சோகமா இருக்க?” என்று வினவ,

மலர் தன்னுடைய பிரச்சினையை கூறினாள்.

“வேற வழியே இல்ல. இந்த மாதிரி பிரச்சினைய ஜி.எம். கிட்டதான் சொல்லணும். இல்லனா சி.ஆர்.எம். கிட்ட போ. அவங்க ரெண்டு பேரும்தான் இதை ஹேண்டில் பண்ண முடியும்,” என்று லதா அறிவுரை வழங்க,

இவளும் வேறு வழியின்றி எழுந்து மேலாளரின் அறையை நோக்கி சென்றாள்.

மேலாளரின் அறைக்கு ரிஷியின் அறையை கடந்துதான் செல்ல வேண்டும். அவனது அறையை கடக்கும் போது, அவளுக்கு ஒரு யோசனை தோன்ற,

“மே ஐ கம் இன், சார்?” என்று கதவைத் தட்டினாள்.

“எஸ், கம் இன்,” என்று ரிஷியிடமிருந்து அனுமதி வர,

“சார் கிட்ட எப்படியாவது பேசி இதை சரி பண்ணிடணும்,” என்று எண்ணியபடி உள்ளே நுழைந்தாள்.

ரிஷி தன்னறைக்கு வந்தவளை கேள்வியாக நோக்கினான். பெரும்பாலும் பணிபுரிபவர்கள் நேரடியாக ரிஷியை காணும் வாய்ப்பு குறைவுதான். அவர்களுக்கு என்ன தேவைப்பட்டாலும் பொது மேலாளரையோ, வாடிக்கையாளர் உறவு மேலாளரையோதான் அணுகுவார்கள்.

இப்போது தன்னை தேடி வந்திருப்பவளை ரிஷி புருவம் சுருக்கி பார்க்க,

“ரிஷி சார், நீங்கதான் எனக்கு உதவி பண்ணனும்,” என்று அந்த வாடிக்கையாளரின் காப்பீடு படிவத்தை அவன் முன் வைத்தாள்.

அதனை எடுத்துப் பார்த்த ரிஷி, மலரை விழிகளில் தேங்கிய வினாவுடன் காண,

“ரிஷி சார், இந்த க்ளைண்டுக்கு தர்ட் பார்டி லைசன்ஸ் நாளைக்கு எக்ஸ்பைரி ஆகுது. ஓன் டேமேஜ் எக்ஸ்பைரியாக இன்னும் டென் டேஸ் இருக்கு. இப்ப ரினிவல் பண்ணா இரண்டையும் தனித்தனியாகத்தான் பண்ண முடியும். அப்படி பண்ணா அமவுண்ட் முப்பதாயிரம் கிட்ட வரும். அவங்க இவ்வளவு பே பண்ண ரெடியா இல்ல. ஆனாலும் இரண்டும் ஒரே நேரத்துல ரினிவல் பண்ண சொல்றாங்க. அப்படி பண்ணா அவங்க ஒன் வீக் வண்டிய எடுக்கவே கூடாது. அதுக்கும் அவங்க ரெடியா இல்ல. சார், எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல,” என்று பாவமாய் அவன் முகத்தை பார்த்தாள்.

“இந்த பிராப்ளத்தை நீ ஜி.எம். கிட்டயோ, சி.ஆர்.எம். கிட்டயோதான ரிப்போர்ட் பண்ணணும். என்கிட்ட ஏன் டைரக்டா வந்த?” என்று ரிஷி வினவ,

“சார், அவங்க ரெண்டு பேரும் ரொம்ப ஸ்ட்ரிக்ட். நான் இதை போய் சொன்னா கண்டிப்பா என்னைத்தான் சார் திட்டுவாங்க. எனக்காக இதை கொஞ்சம் சரி பண்ணி குடுங்க. ப்ளீஸ், சார்,” என்று விழிகள் சுருக்கி அவனிடம் கெஞ்சினாள்.

ஒரு நொடி அவளை அமைதியாக பார்த்தவன், பிறகு தனது அலைபேசியை எடுத்து யாரிடமோ பேசினான்.

அடுத்த ஐந்து நிமிடங்களில் அந்த பிரச்சினை சரியாகி இருந்தது. வாடிக்கையாளர் இவர்களது நிபந்தனைக்கு ஒத்துக்கொள்ள, இவளுக்கு அதிர்ச்சியாய் இருந்தது.

இவ்வளவு நேரம் தான் தொண்டை நீர் வற்ற கெஞ்சிக்கொண்டிருக்க, இவர் ஐந்து நிமிடம் பேசியதும் சரி என்று கூறிவிட்டார்களே என்று.

அகத்திலிருந்த அவளது முகம் அப்படியே பிரதிபலிக்க, அலைபேசியில் பேசி முடித்து வந்தவன் அவளை கேள்வியாக நோக்கினான்.

“இவ்வளவு நேரம் நான் இதைத்தான் சார் சொன்னேன். ஆனா அவர் ஒத்துக்கவே இல்ல. நீங்க பேசுனதும் எப்படி சார் உடனே ஓகே சொன்னாரு?” என்று ஆச்சரியம் விலகாது கேட்க,

“கஸ்டமர் ஹான்ட்லிங்ல நீ இன்னும் நிறைய கத்துக்கணும்,” என்று ரிஷி பதில்மொழிந்தான்.

“சரிங்க சார்,” என்று தலையசைத்தவள்,

“ரொம்ப நன்றி, சார்,” என்று நன்றி நவில்ந்தாள்.

“டோன்ட் ரிப்பீட் திஸ் அகெய்ன். எல்லா இஷ்யுவையும் நீயே ஹேண்டில் பண்ண கத்துக்கணும். அதர்வைஸ் ஜி.எம். கிட்ட போகணும். டைரக்டா என்கிட்ட வரக்கூடாது. உன்னை பார்த்து மத்தவங்களும் இதையே செய்வாங்க இல்லைன்னா உனக்கு மட்டும் என்ன ஸ்பெஷல்னு க்வஸ்டீன் வரும். யூ ஆர் அன் ஆர்டினரி வொர்க்கர் ஜெஸ்ட் லைக் எனிஒன் எல்ஸ்” என்று கண்டிப்பாக கூறிவிட,

“சரிங்க சார்,” என்று கேட்டுக்கொண்டவள் மீண்டும் நன்றி கூறி வெளியேறினாள்.

“மல்லிக்கா சொன்ன மாதிரி ஆபீஸ்ல ரிஷி சார் ரொம்ப நல்லவர்தான். இந்நேரம் அந்த ரெண்டு சிடுமூஞ்சிங்ககிட்ட போயிருந்தா என்னை கழுவி கழுவி ஊத்தி இருப்பாங்க. ரிஷி சார் எதுவுமே கேட்காம சரி பண்ணிட்டாரு. நல்ல மனுஷன்,” என்று அவனை பாராட்டியவள், தன்னிடத்திற்கு சென்று மற்ற வேலைகளை கவனிக்கத் தொடங்கினாள்.

புன்னகையுடன் தன் இடத்திற்கு வந்து அமர்ந்தவளை கண்ட லதா,

“என்ன மலரு, சிரிச்சிட்டே வர்ற? அந்த சிடுமூஞ்சி கிட்ட திட்டு வாங்கிட்டு சோகமா வருவேன்னு நினைச்சேன்,” என்று ஆச்சரியமாய் கேட்க,

“நான் எதுக்கு அவங்க கிட்ட திட்டுவாங்க போறேன்? நான்தான் அவங்க கிட்ட இதை கொண்டு போகவே இல்லையே,” என்று மலர் சிரிப்புடன் பதில்மொழிந்தாள்.

“நான் நேரா ஆர்.கே. சார் கிட்டயே போய் பிரச்சினை சொல்லி உதவி கேட்டேன்,” என்று மலர் கூற,

“நிஜமாவா? எம்.டி. சார்கிட்டயே போயிட்டியா?” என்று நம்பாது விழி விரித்தாள் லதா.

“ஆமா, லதா,” என்று மலர் மொழிய,

“ஆனா அப்படி போகக் கூடாது மலரு. ரூல்ஸ் படி இந்த சிடுமூஞ்சி கிட்டதானே போகணும்?” என்று லதா பதில் வினவினாள்.

“கரெக்ட்தான். நானும் அந்த சிடுமூஞ்சி கிட்ட போகலாம்னுதான் எந்திரிச்சு போனேன். போற வழியில எம்.டி. சார் ரூமை பார்த்தவுடனே பேசாம அவர்கிட்டே உதவி கேட்டுடலாம்னு கேட்டேன். அஞ்சு நிமிஷத்துல சரி பண்ணிட்டாரு. பண்ணி முடிச்சுட்டு இனிமே என்கிட்ட டைரக்டா வரக்கூடாது, ஜி.எம். கிட்டதான் போகணும்னு ஸ்ட்ரிக்டா சொல்லி அனுப்பிட்டாரு,” என்று மலர் விளக்கம் அளிக்க,

“ஆர்.கே. சார்கிட்டயே நேரடியா பேசிட்டு வந்துட்ட… பெரிய ஆள்தான் போ!” என்று லதா வம்பிழுத்தாள்.

“அதெல்லாம் ஒன்னும் இல்ல. நீங்கதானே ஆர்.கே. சார் ரொம்ப நல்லவரு, யார்கிட்டயும் கோபப்பட மாட்டாருன்னு சொன்னீங்க. அதுதான் அந்த தைரியத்துல போய் கேட்டேன்,” என்று மலர் கூற,

“எல்லாம் சரிதான் மலரு. ஆனா இனிமே இது மாதிரி பண்ணாத. இந்த விஷயம் மட்டும் அந்த ரெண்டு சிடுமூஞ்சிக்கும் தெரிஞ்சதுன்னா உன்ன வச்சு செஞ்சுருவாங்க,” என்று லதா அக்கறையுடன் கூற,

“இனிமே போக மாட்டேன்டி. இந்த தடவ என்ன பண்றதுன்னு தெரியல, அதுதான். ஆனா அவங்களுக்கு தெரிய வாய்ப்பு இல்லடி. ஆர்.கே. சார் சொல்ல மாட்டார்ல,” என்று பதில் இயம்பினாள்.

“சார் சொல்ல மாட்டாங்கதான். இருந்தாலும் கொஞ்சம் கவனமா இருந்துக்கோடி,” என்று லதா எச்சரிக்க,

சரியென்று கேட்டுக்கொண்டவள் அலுவலகம் முடிந்து வீட்டிற்கு சென்று படுத்துவிட்டாள்.

இரண்டு நாள் ரிஷி அவனது வீட்டிற்கு செல்வதால், இவளுக்கு விடுமுறை கொடுத்திருந்தான்.

அதனால்தான் வந்தவுடன் எதைப் பற்றிய கவலையும் இன்றி தேநீரை அருந்திவிட்டு மெத்தையில் சரிந்துவிட்டாள்.

error: Content is protected !!
Scroll to Top