அன்பு – 22.1

மனோரஞ்சன் சென்னைக்கு குடி பெயர்ந்தாலும் தினமும் சந்தனாவிற்கு அழைத்துப் பேசினான். புதிதாய் சேர்ந்த கல்லூரி, துளிர்விட்ட நட்பு என அனைத்தையும் அவளிடம் பகிர்ந்து கொண்டான்.

சில மாதங்கள் நன்றாய் செல்ல, மனோவிற்கு இப்போதெல்லாம் தலை வலித்தது. அவ்வப்போது கோபமாய் பேசுவது, குழப்பத்திலே சுற்றுவது என்றிருந்தான். அவனது நடவடிக்கைகளில் பெற்றவர்களுக்கு பயம் வர, அருகிலே ஒரு மருத்துவரிடம் பரிசோதனை செய்தனர்.

“உங்கப் பையனுக்கு இருக்கது (Post-Traumatic Psychosis) போஸ்ட் ட்ராமாட்டிக் சைக்கோசிஸ். (Traumatic Brain Injury) சீவியர் ட்ராமாட்டிக் ப்ரெய்ன் இஞ்சுரி நடந்தவங்களுக்கு இது வர சான்ஸ் அதிகம். மனோரஞ்சனுக்கும் இந்தப் பிராப்ளம்தான். சின்ன வயசுல அடிபட்டதோட தாக்கம்தான். பாஸ்ட் ரிப்போர்ட் அண்ட் எக்ஸ்ரே வச்சு பார்த்ததுல, கண்டிப்பா ஒரு சர்ஜரி பண்ணணும்…” என அவர் உரைத்ததும் உமாகாந்தன்‌ மற்றும் சதாம்பிகாவின் முகத்தில் கவலையும் பயமும் குடி கொண்டது.

“பயப்படாதீங்க… சின்ன சர்ஜரிதான். ஆப்ரேஷன்ல இருக்க ஒரு டிபால்ட் என்னென்னா, உங்கப் பையனோட பாஸ்ட் மெமரீஸ் லாஸ் ஆகலாம். ஆகாமலும் போகலாம். இட் டிபர்ஸ் ஃப்ரம் பேஷண்ட் டூ பேஷண்ட்!” என அவர் சாதகப்பாதகங்களைக் கூற, ஒருமனதாக பெற்றவர்கள் சிகிச்சைக்கு ஒப்புக் கொண்டனர். மனோவிடம் சிறிய சிகிச்சை செய்ய வேண்டும் என்றளவில் மட்டுமே பகிரப்பட்டது. அவன் சந்தனாவிடம் எதையும் கூறவில்லை. அவளைக் கலவரப்படுத்த வேண்டாம், சிகிச்சைக்குப் பின்னர் சொல்லிக் கொள்ளலாம் என்றுவிட்டான்.

ஒரு மாதத்தில் சிகிச்சை செய்யலாம் என மனோவின் உடல்நிலையை பரிசோதித்து தேதி குறித்துக் கொடுத்தார் மருத்துவர். ஒரு மாதம் நிறைவடைந்து விட, குறித்த நாளும் வந்து, சிகிச்சை முடிந்திருந்தது.

நல்லபடியாக சிகிச்சை முடிந்திருந்தாலும் மனோவின் பழைய நினைவுகள் துடைத்தெடுத்தாற் போல அழிந்துவிட்டது. அவனது தாத்தாவுடனான விபத்து நிகழ்ந்தவை மட்டுமே அவனுக்கு நினைவிற்கு வந்தது. அதற்கடுத்து சந்தனாவை சந்தித்தது, நடந்தது என எதையுமே அவனால் நினைவு கூற முடியவில்லை.

“ம்மா… தாத்தா, தாத்தா எங்கம்மா?” என அவன் ஐந்தாறு வருடங்களுக்கு முன்னர் இறந்து போன தாத்தாவிற்காக இப்போது வருந்தினான்.

மருத்துவர் அவனை பரிசோதித்துவிட்டு, “பழசு எதையும் ஞாபகப்படுத்த வேண்டாம். அவருக்கா ஞாபகம் வந்தா ஓகே. ரொம்ப ஃபோர்ஸ் பணணாதீங்க. அது அவருக்கு ஸ்ட்ரெஸ் ஆகிடும்!” என்று கூறிவிட, யாரும் அவனிடம் நடந்தவற்றைப் பற்றி உரைக்கவில்லை.

மனோவிற்கு கொஞ்சம் கொஞ்சமாக நிதர்சனம் புரிய, உடல் தேறியதும் மீண்டும் கல்லூரி செல்ல ஆரம்பித்தான். அவனது அலைபேசியை மருத்துவமனையில் தவறவிட்டிருந்தான். அதனாலே சந்தனா அவனைத் தொடர்பு கொள்ளும் வழியும் அற்றுப் போனது. மனோ புதிய நண்பர்கள், புதிய வாழ்க்கை என அதனோடு ஒத்துப் போய்விட, சந்தனா அவனின் அழைப்புகளுக்காக தினமும் காத்திருக்கத் தொடங்கினாள்.

அவனுக்கு ஏதாவது ஆகியிருக்குமோ என அவள் மனம் இல்லாத கற்பனைகளைத் தூவ, பயத்தில் தாயறியாது தலையணையை நனைத்திருக்கிறாள். கொஞ்சம் நாட்கள் செல்ல, மனோ கண்டிப்பாய் திரும்பி வருவான். அவனுக்கு ஏதுமாகியிருக்காது என தன்னையே தேற்றிக் கொண்டாள். இருந்தும் அவனைத் தொடர்பு கொள்ள ஏதேனும் வழித் தொன்படுகிறதா என தேடிக் கொண்டே இருந்தாள்.

ஏனோ மனோ அருகே இருக்கும் போது பெரிதாகத் தோன்றவில்லை. அவன் குரல் கேட்காமல், அவன் முகம் பார்க்காமல், குட்டி என்ற விளிப்பை ஸ்பரிசிக்காது முதன்முதலாக சந்தனா தடுமாறிப் போனாள்.

எதிலுமே கவனம் செல்லவில்லை. பன்னிரெண்டாம் வகுப்பிலிருந்தாள். மனோவின் மீதான தன் எண்ணத்தைக் காதலென மனம் உறுதி செய்திருந்தது. அவளுக்கு அப்போதுதான் மனோவின் உணர்வுகள் அட்சர சுத்தமாய்ப் புரிந்தது. அவனின் தவிப்புகள் எல்லாம் இப்போது இவளுக்குத் தவிப்பைக் கூட்டின. படிப்பில் கவனம் செல்லவில்லை. முயன்று நன்றாய்ப் படித்தாள்.

“எனக்கு இருக்க ஒரே கவலை குட்டி மட்டும்தான் கா. அவ நல்லா படிச்சு நல்ல வேலைக்குப் போய்ட்டா, என்னை மாதிரி கஷ்டப்படாம ஒரு வசதியான வீட்ல அவளைக் கட்டிக் கொடுத்துட்டு நிம்மதியா போய் சேர்ந்துடுவேன் கா!” எனப் பூரணி மரிக்கொழுந்திடம் பேசியவை எல்லாம் சந்தனாவின் மனதில் ஆழப்பதிந்தன.

நன்றாய் படித்து பணக்காரர்களானால் மட்டுமே சதா தனக்கும் மனோவிற்குமான திருமணத்திற்கு ஒப்புக் கொள்வார் என உறைக்க, மனோவின் மீதான காதலை மானசீகமாக மனதில் வளர்த்தாலும், சந்தனா முழு மூச்சாக படித்தாள். மனோ என்ற மந்திரச் சொல்லை அடிப்படையாகக்கொண்டு படித்து முடித்து நல்ல மதிப்பெண் பெற்றாள். மாநிலத்தில் முதல் மாணவியாக மதிப்பெண் பெற்று கோயம்புத்தூரிலே மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கப் பெற்றாள்.

மகள் மருத்துவ படிப்பில் சேர்ந்ததும் பூரணிக்கு மனம் நிறைந்து போனது. அவள் படித்து முடித்ததும் அவளைப் போலவே மருத்துவராய் இருக்கும் நல்ல பையனாய் பார்த்து அவளுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டுமென மனதில் அப்போதே ஆசையை வளர்த்தார்.

சந்தனா கல்லூரியில் நுழைந்ததும் ஆங்கில வழிக் கல்லூரியில் பயில வெகுவாகத் திணறிப்போனாள். குகேஷ் அவளுக்குப் படிப்பில் உதவுவதாக நட்புக்கரம் நீட்ட, இறுக்கிப் பிடித்துக் கொண்டாள். சில நாட்களிலே யசோவும் அவர்கள் இருவருடன் சேர்ந்து மூவராகிப் போயினர்.

குகேஷின் சொந்த ஊர் பெங்களூர். அவன் இங்கே விடுதியில் தங்கிப் பயின்றான். அவ்வப்போது சந்தனா வீட்டிற்கு யசோவும் அவனும் வந்து செல்வர். சந்தனா அவனுக்கென எதாவது சமைத்து எடுத்து வருவாள். அவள் எடுத்து வராத நாட்களில் யசோதா எடுத்து வருவாள். அப்படியே அவர்கள் நட்பு பிரிக்க முடியாததாகிப் போனது.

சந்தனாவின் மனதில் மனோவிற்கான காதலும் தேடலும் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போனது. படித்து முடித்ததும் கண்டிப்பாக அவனைக் கண்டு பிடிக்க வேண்டும் என்று மனதில் உருப்போட்ட வண்ணமிருந்தாள். யாரேனும் தன்னைப் பார்க்க வந்தால், அது மனோவாக இருக்குமென எண்ணி ஒவ்வொரு முறையும் ஏமாந்து போனாள். அப்போதெல்லாம், ‘மனோ சீக்கிரம் வருவான். வந்துடுவான்!’ என சுயசமாதானத்தில் சுயதேற்றலில்தான் நாட்களைக் கடத்தினாள்.

அவனைக் கண்டு பிடித்ததும் ஏன் தன்னைக் காண வரவில்லை, அலைபேசியில் அழைப்பு விடுக்கவில்லை என சண்டையிட வேண்டும். தான் எத்தனை அவனைத் தேடியிருக்கிறோம் என தன் பிரியங்களை அவனிடம் கொட்ட வேண்டும். அவன் முகம் பார்த்து வெட்கப்பட்டு, தயங்கி தன் அள்ள அள்ள குறையாத காதலை உரியவனிடம் சேர்பிக்க வேண்டும் என்று மனம் முழுவதும் ஆசையை சேர்த்து வைத்திருந்தாள். எங்கே சென்றாலும் மனோ என தனக்கு முன்னே வந்து நிற்கும் அவனுக்காகவென நிறைய நிறைய வாங்கிக் குவித்தாள்.

அவனை நேரில் காணும் போது இதையெல்லாம் கொடுத்து அவனது முகபாவனைகளை சிந்தாமல் சிதறாமல் உள்வாங்க வேண்டும் என எத்தனையோ எண்ணங்கள், ஆசைகள் என மானசீகமாக அவனுடனே வாழ்ந்த அழகான நாட்கள் அவை. ஒவ்வொரு நொடியும் நிமிடங்களும் மனோவுக்காகவென வாழ்ந்த அழகிய காதல் காலம் அது. அவளும் அவனும் அன்றி ஒருவருக்கும் அதில் இடமிருந்தது இல்லை. இப்போதும் இல்லையென்பது மறுக்க முடியாத மெய்.

அவளுடைய எதிர்பார்ப்பிலும் ஆசையிலும் நாட்கள் ஓடின. சந்தனா இளங்கலை படித்து முடித்தாள். கோயம்புத்தூரிலே ஒரு மருத்துவமனையில் மருத்துவராகப் பணியில் சேர்ந்தாள்.

பூரணி சந்தனா வேலைக்குச் சென்றுவிட்டதால் அவளுடைய திருமணப் பேச்சைத் துவங்க, அவளுக்கு என்ன செய்வதென தெரியாது திக்கற்றுப் போனாள். மனோ எங்கிருக்கிறான் எனத் தெரியாது என்னவென உரைப்பது எனத் தவித்துப் போனவளுக்கு பற்றுக் கோலாய்க் கிடைத்ததுதான் முதுநிலை படிப்பு. குகேஷூம் யசோவும் முதுநிலை படிக்கப் போவதாகக் கூற, இவளும் அவர்களுடன் இணைந்து கொண்டாள்.

முதலில் சம்மதிக்க மாட்டேன் என்ற பூரணியை நண்பர்களை வைத்துப் பேசி சம்மதித்து ஒரு வருடம் கடுமையாகப் படித்து முதுநிலை நுழைவுத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றாள். கோயம்புத்தூரிலே இருந்தால், மனோவைக் கண்டு பிடிக்க முடியாது என்றெண்ணி முதுநிலை படிப்பை சென்னை மருத்துவக் கல்லூரியில் தேர்வு செய்தாள். யசோவும் குகேஷூம் கூட சென்னையில்தான் படிக்க விருப்பம் தெரிவிக்க, பூரணியை பலவகையில் சமாதானம் செய்து படிப்பில் சேர்ந்தாள்.

கல்லூரி விடுதியிலே தங்கிக் கொண்டனர் மூவரும். சந்தனா மனோவைக் கண்டு பிடித்துவிடலாம் என சென்னை முழுவதும் சுற்றி வந்தாள். எங்கேனும் அவன் தென்பட்டு விட மாட்டானா என தன் மனத்தவிப்பை அவள் மட்டுமே அறிவாள்.

அவள் முதுநிலை கடைசி வருடத்தில் இருந்தாள். அப்போதுதான் அவள் தீனாவை சந்திக்க நேர்ந்தது. ஏனோ அந்நாளை தன் வாழ்வில் இருந்து நீக்கிவிட்டால் எத்தனை நன்றாய் இருக்குமென எண்ணி மாய்ந்த நாட்கள் ஏராளம்.

“ஹே… குட்டி.‌.. நீ எங்க இங்க?” அவன் இவளைப் பார்த்ததும் ஆர்ப்பரிக்க, சந்தனாவிற்கு உயிரே திரும்பி வந்தது போலிருந்தது. தீனாவைப் பார்த்துவிட்டாள்.

இனி மனோவை கண்டு பிடித்துவிடலாம் என அவள் மனம் துடித்தடங்க, “தீனா….. நான் இங்கதான் பிஜி பண்றேன். நீ, நீங்க எங்கடா இங்க?” எனத் திக்கித் திணறிக் கேட்டாள்.

“குட்டி‌… நான் ஃப்ரெண்ட் ஒருத்தன் அட்மிட் ஆகியிருக்கான்னு பார்க்க வந்தேன்!” என்றான்‌.

“தீனா… மனோ, மனோ எங்க இருக்கான் டா. அவன் ஃபோன் நம்பர் கொடு டா!” என்றாள் தனக்குள்ளிருந்த தவிப்பை மறைத்து.

“குட்டி, உன் ஃபோனை கொடு…” என வாங்கியவன் தனது எண்ணையும் மனோவின் இலக்கத்தையும் பதிந்து கொடுத்தான். இருவரும் பனிமணைக்குச் சென்று தேநீர் அருந்தினர். இத்தனை வருட இடைவெளியை நிரப்ப, பேச என ஆயிரம் இருந்தது. ஆனாலும் தீனாவிற்கு நேரமில்லை.

error: Content is protected !!
Scroll to Top