மறுநாள் காலையில் தான் வேலைக்குத் தயாராகி விட்டுத் தனது தமக்கையையும் கிளப்பி விட்டுக் கொண்டிருந்தாள் சுதா.
மதுபாலாவிடம் புது உடையைக் கொடுத்து அதை உடுத்தி விட்டு வரச் சொல்லி அவளை நன்றாக அதே சமயம் மிதமாக அலங்கரிக்கத் தொடங்க,
“இதெல்லாம் எதுக்குடி? இன்னும் எனக்கு அந்த வேலை உறுதியே ஆகலை! அதுக்குள்ளே இந்த அலப்பறை எல்லாம் தேவை தானா?”என்று அவளிடம் சலித்துக் கொள்ள,
“மூச்! நான் சொல்வதை மட்டும் தான் நீ இப்போ கேட்கனும்க்கா!”என்று அவளை அமைதிப்படுத்தி விட்டு அவளை முழுமையாகத் தயாராக்கி முடித்து விட்டிருந்தாள் சுதா.
“சரிம்மா!”என்று அவளிடம் பவ்யமாக கூறிப் புன்னகைத்தாள் மதுபாலா.
“உன்னை எனக்குத் தெரிஞ்ச அளவுக்கு ரெடி பண்ணி இருக்கேன்க்கா”என்றவளை வாஞ்சையாகப் பார்த்து,
“சூப்பராக இருக்குடி”என்று அவளைப் பாராட்டி விட்டு,
“வா, சாப்பிட்டுட்டுக் கிளம்புவோம்”என்ற மதுபாலாவிடம்,
“நீ பாத்திரம், தட்டை எல்லாம் எடுத்து வை அக்கா. நான் நமக்கு மதியத்துக்கு டிபன் பாக்ஸில் சாப்பாடு வச்சிட்டு வர்றேன்”என அவளிடம் தெரிவித்து விட்டு அந்த வேலையில் இறங்கினாள் சுதா.
சிறிது நேரத்திற்குப் பிறகுச் சகோதரிகள் இருவரும் தங்களது காலை உணவை உண்டு முடித்ததும்,
“பஸ் ஸ்டாப் வரைக்கும் உன் கூட நடந்து வர்றேன்க்கா”என்று அவளுடன் நடந்து கொண்டே,
“பிரேமா அக்கா கிட்டே விஷயத்தைச் சொன்னியா?”என விசாரிக்க,
“இல்ல டி. அங்கே வேலைக்குச் சேர்ற வரைக்கும் நாங்கப் பேசிக்க வேண்டாம்னு இருக்கேன்! என்னால் அவளோட வேலை பாதிச்சுடக் கூடாதுல்ல? அதான். ஆனால் கன்ஃபார்ம் ஆனதும் அங்கேயே அவகிட்டே பேசிட்டு, நாம மூனு பேரும் ஹோட்டலுக்குப் போய்ச் சாப்பிட்டுட்டு வருவோம்”என்றுரைத்தாள் மதுபாலா.
“அதுக்கு நான் தான் பணம் கொடுப்பேன்! நீ முதல் மாச சம்பளத்தை வாங்கினதும் எங்களுக்கு ட்ரீட் கொடு”என்று அவளைச் சம்மதிக்க வைத்து விட்டாள் சுதா.
“சரிடி. பஸ் வந்துடுச்சுப் பாரு. நீ பார்த்துப் போயிட்டு வா. பை”
“ஓகேக்கா. ஆல் தி பெஸ்ட்”என்று அவளுக்கு வாழ்த்து தெரிவித்து விட்டுப் பேருந்தில் ஏறிக் கொள்ள,
தானும் நடந்து கிளாமர் கேலக்ஸி அலுவலகத்தை அடைந்து உள்ளே சென்று, ரிசப்ஷனில் தனது வரவைத் தெரிவித்து விட்டுக் காத்திருந்தாள் மதுபாலா.
அப்போது தனது அலுவலக அறையில் இருந்தவனுக்கு ரிசப்ஷனில் இருந்து அழைப்பு வரவும், அதை ஏற்றுக் காதில் வைத்தான் புகழேந்தி.
“ஹலோ சார். மிஸ். மதுபாலா வந்துட்டாங்க”எனத் தெரிவித்தாள் ரிசப்ஷனிஸ்ட்.
“அவங்களை என் ரூமுக்கு வரச் சொல்லுங்க”என்று வைத்து விட்டுத் தனது காரியதரிசியையும் தன்னறைக்கு வருமாறு அழைத்து விட்டுக் காத்திருந்தான்.
“மேம்! உங்களை சார் வரச் சொன்னார்”என்றதுமே,
அங்கேயிருந்து புகழேந்தியின் அறைக் கதவைத் தட்டினாள் மதுபாலா.
“எஸ் கமின்”என்று பதில் வரவும்,
உள்ளே செல்ல யத்தனிக்க, அப்போது அங்கே வந்த வெற்றிச் செல்வனே,”குட் மார்னிங் மிஸ். மதுபாலா”என்று அவளைப் பார்த்துப் புன்னகைத்தான்.
அவளும்,“குட் மார்னிங் சார்”எனப் புன்னகை செய்தாள்.
“வாங்க, உள்ளே போகலாம்”என்று புகழேந்தியிடம் தானும் அனுமதிப் பெற்று விட்டு முதலில் மதுபாலாவை உள்ளே செல்ல வழி அமைத்துக் கொடுத்து விட்டு அவளுக்குப் பின் தானும் அறைக்குள் நுழைந்தான் வெற்றிச் செல்வன்.
அவர்கள் இருவரும் ஒன்றாக உள்ளே வந்ததைப் பார்த்ததும், தனக்குள் கொழுந்து விட்டெரியத் தொடங்கியப் பொறாமைத் தீயைத் தண்ணீரைக் குடித்து அணைத்து விட்டு,
“குட் மார்னிங் சார்”என்றான் வெற்றிச் செல்வன்.
அவனைப் பின்பற்றி,”குட் மார்னிங் சார்”என்றிருந்தாள் மதுபாலா.
“ம்ஹ்ம். குட் மார்னிங். ரெண்டு பேரும் உட்காருங்க”என்று அவர்களை அமரச் சொல்லி விட்டு,
“மிஸ். மதுபாலா! இந்தக் கம்பெனியில் உங்களுக்கு வேலை கன்ஃபார்ம் ஆயிடுச்சு! உங்களோட அப்பாயிணட்மெண்ட் ஆர்டர் லெட்டரை நேரில் கொடுக்கலாம்னு தான் வரச் சொன்னேன்! இந்தாங்க!”என்று கூறி விட்டு அவள் தன்னுடைய அலுவலகத்தில் வேலை செய்வதற்கான நியமனக் கடிதத்தை அவளிடம் கொடுத்தான் புகழேந்தி.
அதைக் கேட்டதுமே அவளது முகத்தில் உருவானப் பரவசத்தையும், மலர்ச்சியையும், அதை விட, அவளது கண்கள் பெரிதாக விரிந்து அது காட்டியப் பாவனையிலும் சில கணங்கள் அவனால் அவளிடமிருந்து தனது பார்வையை வழக்கம் போல் விலக்கிக் கொள்ள முடியாமல் திண்டாடிப் போய் விட்டவனின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல்,
“தாங்கயூ சோ மச் சார்! இந்த வேலை எனக்கு ரொம்பவே முக்கியமானது! ஆனால், இதை என்னோட திறமையால் பெறனுமே தவிர்த்து என்னோட வீட்டுக் கஷ்டத்தையோ, பொருளாதார நிலைமையைப் பத்தியோ சொல்லி அனுதாபத்தால் வாங்கக் கூடாதுன்ற எண்ணத்தில் ரொம்பவே உறுதியாக இருந்தேன்! நான் நினைச்ச மாதிரியே அதைச் சாதிச்சுக் காட்டிட்டேன்!”என்று தன் வழியோரங்களில் வழிந்து கொண்டிருக்கும் ஆனந்தக் கண்ணீரைக் கைக்குட்டையைக் கொண்டுத் துடைத்து விட்டுப் புன்னகையுடன் அவனை பார்த்துக் கூறியிருந்தாள் மதுபாலா.
அதைக் கேட்டு விட்டு அவளது நேர்மையும், உண்மையும் தன்னை வெகுவாக ஈர்ப்பதை உணர்ந்து கொண்டு,
“எஸ்! உங்களோட திறமைக்கான அங்கீகாரம் தான் இது! ஆனால் இத்தோட எல்லாம் முடிஞ்சுப் போயிடலை. மிஸ். மதுபாலா. இதுக்கப்புறம் தான், நீங்க இன்னும் உங்களோட திறமையையும், நேர்மையையும், விசுவாசத்தையும் எங்களுக்கு உங்க வேலையில் காட்டனும்! புரியுதா?”என்றிருந்தான் புகழேந்தி.
“புரியுது சார்! நான் இந்த வேலையில் என்னோட பெஸ்ட்டைக் கொடுப்பேன்!”என்று அவனுக்கு வாக்களித்தாள் மதுபாலா.
“ம்ஹ்ம். அப்பறம் உங்ககிட்ட ஒரு முக்கியமான கேள்விக் கேட்கனும்”என அவளைக் கூர்மையானப் பார்வையுடன் நோக்கிக் கேட்கவும்,
“எஸ் சார். கேளுங்க”என்றவளிடம்,
“நீங்களும், மிஸ். பிரேமாவும் பெஸ்ட் ஃப்ரண்ட்ஸ் தானே?”என்று அவளிடம் அழுத்தமாக வினவினான் புகழேந்தி.
அதைக் கேட்டதும் திடுக்கிட்டுத், திகைத்துப் போய் அவனைத் தர்மச் சங்கடத்துடனும், குற்ற உணர்வுடனும் நோக்கி,
“ஆமாம் சார். நாங்கப் பெஸ்ட் ஃப்ரண்ட்ஸ் தான். அவ சொல்லித் தான் நான் இந்த ஆஃபீஸூக்கு நேர்காணலுக்கு வந்தேன்!”என உண்மையை மறைக்காமல் ஒப்புக் கொண்டு விட்டிருந்தாள் மதுபாலா.
அவளது நேர்மைத் தனக்குப் பிடித்து இருந்தாலும் கூட,”அப்படி நீங்க ரெண்டு பேரும் பெஸ்ட் ஃப்ரண்ட்ஸ் ஆக இருந்தாலுமே உங்களுக்கும், அவங்களுக்கும் இங்கே தனித் தனிப் பிரிவில் தான் வேலை! அதனால் நீங்க ரெண்டுப் பேரும் காலையில் வேலை ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியான நேரத்திலும், லன்ச் டைம் அண்ட் ஈவ்னிங் வேலை முடிஞ்சதுக்கு அப்பறம் மட்டும் உங்களுக்குள்ளே பேசிக்கலாம், ஒன்னாக வீட்டுக்குப் போறதாக இருந்தாலும் அதில் எங்க யாருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது! ஆனால் வேலை நேரத்தில் நீங்க ஒருத்தருக்கு, ஒருத்தர் பேசி, டைம் வெஸ்ட் பண்ணி, அதனால் வேலையில் ஏதாவது தாமதம் வந்தால் அதுக்கு நீங்களும், மிஸ். பிரேமாவும் தான் காரணம்! ஓகேவா?”என்று அவளிடம் தீர்க்கமாக கேட்டான் புகழேந்தி.
அவன் அவ்வாறு கூறியதில் ஒரு நியாயம் இருந்ததால்,”ஓகே சார்! எங்க ரெண்டு பேரோட ஃப்ரண்ட்ஷிப்பால் கம்பெனியில் எந்தப் பிரச்சினையும் வராது!”என்று அவனுக்கு உறுதி அளித்து விடவும்,
“ம்ம். குட்! நான் சொன்னதைக் கேட்டு உடனே வாக்குவாதத்தில் இறங்காமல் அதைப் புரிஞ்சிக்கிட்டீங்க. அதுக்கு என்னோட பாராட்டுக்கள்! அதே மாதிரி இந்த ஆஃபீஸில் இனிமேல் நீங்களும் ஒரு ஊழியை! ஆல் தி பெஸ்ட்!”என்று அவளின் முன்புத் தன் கையை நீட்டினான் புகழேந்தி.
உடனே அதைப் புரிந்து கொண்டுத் தானும் தன்னுடைய கரத்தை நீட்டவும்,
அதை நாசூக்காகப் பிடித்துக் குலுக்கி விடுவித்து விட்டு,
“நீங்க இப்போதிருந்தே இங்கே உங்களோட வேலையைப் பத்தின எல்லாத்தையும் தெரிஞ்சிக்கலாம். இல்லைன்னா நாளைக்குக் காலையில் எப்பவும் போல் ஆஃபீஸ் ஆரம்பிக்கிற நேரத்தில் வந்து உங்க வேலையைத் தொடங்கலாம்”என்று அவளுக்கு விளக்கிக் கூறினான் புகழேந்தி.
“நான் இப்போவே வேலையில் சேர்றதுக்குத் தயாராக இருக்கேன் சார்”என்றுரைத்து விட்டாள் மதுபாலா.
அதைக் கேட்டதும் அவளை யோசனையாக நோக்கி,”ஏன்? நீங்க வீட்டுக்குப் போய் உங்களுக்கு வேலைக் கிடைச்சதை உங்க குடும்பத்துக்கிட்டே சொல்லலையா?”என்றவனிடம்,
அதில் தனது முகத்தில் கவலைப் படர,”என் கூட இருக்கிறது என் தங்கச்சி மட்டும் தான் சார். அவளும் இப்போ வேலைக்குப் போயிருப்பாள். அதனால் நான் சாயந்தரம் வீட்டுக்குப் போய்த் தான் அவகிட்டே விஷயத்தைச் சொல்ல முடியும்!”என வலி நிறைந்தப் பார்வையுடன் கூறினாள் பெண்ணவள்.
உடனே அவளைக் கழிவிரக்கத்துடன் பார்த்து,”ரொம்ப சாரி மிஸ். மதுபாலா! எனக்கு உங்களோட தனிப்பட்ட வாழ்க்கையைப் பத்தி எதுவும் தெரியாது! அதனால் தான், இப்படி கேட்டுட்டேன்! நீங்க எதையும் மனசுல வச்சிக்காதீங்க!”என்று அவளுக்குத் தன்னிலை விளக்கம் அளித்தான் புகழேந்தி.
“பரவாயில்லை சார். நான் எதையும் மனசுல வச்சிக்கலை! இந்தக் கேள்வி எல்லாம் எனக்குப் பழக்கமானது தான்!”என்றவளோ,
நீண்டப் பெருமூச்சை வெளிப்படுத்தி விட்டு,”இப்போ என்னோட வேலை என்ன? அதைப் பத்தி நான் யார் கிட்டே கேட்டுத் தெரிஞ்சிக்கனும்?”என்று நேரடியாக விஷயத்திற்கு வந்திருந்தாள் மதுபாலா.
“என்னோட பி. ஏ மிஸ்டர். வெற்றிச்செல்வன். உங்களுக்கு எல்லா விவரங்களையும் சொல்வார்”என்றுரைத்து விட்டுத்,
தனது காரியதரிசியை அறைக்கு வருமாறு அழைப்பு விடுத்துக் காத்திருந்தான் புகழேந்தி.
சில நிமிடங்களிலேயே அவனிடம் அனுமதி பெற்று அறைக்குள் வந்திருந்தான் வெற்றிச்செல்வன்.
அவனை அமரச் சொல்லி விட்டு,”இவங்களை நம்ம ஆஃபீஸில் வேலைக்குச் சேர்த்துட்டோம். அதனால் இவங்களுக்கு என்னென்ன வேலைகள்ன்னுத் தெளிவாகச் சொல்லி, முடிஞ்சா அதை ஒரு அட்டவணையாகத் தயாரிச்சுக் கொடுங்க!”அவனுக்கு அறிவுறுத்த,
அதற்கு அவனோ,”ஓகே சார்”எனப் பதிலளிக்கவும்,
“இப்போ நீங்க ரெண்டு பேரும் போகலாம்”என்று அவர்களிடம் கூறி அனுப்பி வைக்கத்,
தாங்களும் அவனிடம் விடைபெற்றுக் கொண்டு அவ்வறையை விட்டு வெளியேறினார்கள் வெற்றிச்செல்வன் மற்றும் மதுபாலா.
அவர்கள் சிரித்துப், பேசிக் கொண்டுச் செல்வதை தனது அறையின் ஜன்னலில் இருந்து பார்த்துக் கொண்டு இருந்தான் புகழேந்தி.
என்ன தான், அவர்கள் இருவரும் தனக்கு முன்பாக இயல்பாக நடந்து கொள்வதைப் போல் அவனுக்குத் தோன்றினாலும் கூட இடையிடையே அவர்களைப் பார்க்கும் போதெல்லாம் அவர்களுக்குள் ஏதேனும் காதல் மலர்ந்து விடுமோ என்ற ஐயம் இன்னும் உறுதியாக எழத் தொடங்கி விட்டிருந்தது புகழேந்தியின் மனதில்!
- தொடரும்