அவனது பார்வையில் இருந்த தீட்சையை எதிர்கொள்ள முடியாமலும், தானும், தனது தோழியும் இருந்தக் கோலத்தையும் அவதானித்து விட்டு,
“ஹேய்! அவங்களுக்கு விஷ் பண்ணிட்டு அப்படியே நாம ஆஃபீஸூக்குள்ளே போயிடலாம்டி!” என்று பிரேமாவிடம் முணுமுணுத்தாள் மதுபாலா.
அதைக் கேட்டதுமே தானும் தன் அதிர்ச்சியில் இருந்து விடுபட்டுக் கொண்டு,
“சரி டி. முதல்ல மொபைல்களைப் பையில் போட்டுடலாம். அப்பறம் அவங்களுக்கு நம்மளோட குறிக்கோள் என்னன்னுத் தெரிஞ்சிருச்சுன்னா அசிங்கமாகப் போயிடும்!”என்று அவளுக்கு அறிவுறுத்தினாள் தோழி.
உடனே அவளைப் பின்பற்றித் தானும் தன் செல்பேசியைக் கைப்பையில் போட்டு விட்டுத் தன் முதலாளியையும், அவனது தமக்கையையும் பதட்டத்துடன் பார்த்தாள் மதுபாலா.
அதைக் கவனித்து விட்டு,”அவங்க ரெண்டு பேரும் செல்ஃபி எடுத்துட்டு இருந்து இருக்காங்க போலவே! நாம தான் அவங்களைத் தொந்தரவு செய்துட்டோம்”என்று தன்னுடைய தம்பியிடம் தெரிவித்தாள் வெண்பா.
“ஆமாம்க்கா. நானும் அதைக் கவனிச்சேன் தான். ஆனால் நம்ம கிட்டே இருந்து அதை எப்படி மறைக்கிறாங்கப் பாருங்களேன்”என அவர்கள் இருவரையும் கூர்மையாகப் பார்த்து விட்டுத் தமக்கையிடம் உரைத்தான் புகழேந்தி.
“ம்ஹ்ம். அவங்களோட முகத்தைப் பாரேன்! அசடு வழியுது! எனக்குச் சிரிப்பாக வருது”என்று புன்னகையுடன் மொழிய,
அப்போது அவர்களை அண்மித்து,”குட் மார்னிங் சார்! குட் மார்னிங் மேம்”என்று தங்களது முகங்களைப் பாவமாக வைத்துக் கொண்டு அவர்களுக்கு வணக்கம் வைத்தார்கள் மதுபாலாவும், பிரேமாவும்.
அதில் அவர்களைப் பார்த்து இன்னும் தனது புன்னகையை விரிவாக்கிக் கொண்டு,
“குட் மார்னிங்! இங்கே என்னப் பண்ணிட்டு இருக்கீங்க? ஆஃபீஸூக்குள்ளே போற ஐடியா இல்லையா என்ன?”என்று கேட்டிருந்தாள் வெண்பா.
“அது வந்து மேம்!! நாங்க இப்போ தான் வந்தோம். ஸ்கூட்டியை நிறுத்திட்டு உள்ளே போகலாம்னு தான்!”என்றப் பிரேமாவின் வதனத்தை ஆராய்ச்சிப் பார்வையால் அளந்து விட்டு,
“ஓஹோ! அது தான் விஷயமா? நான் கூட நீங்க ரெண்டு பேரும் செல்ஃபி எடுத்துட்டு இருந்தீங்கன்னு நினைச்சேன்”என்றவளைச் சங்கடத்துடன் நோக்கினர் அவ்விருவரும்.
“குட் மார்னிங்!”என்று இருவருக்கும் பொதுவாக உரைத்து விட்டு,
“மிஸ். மதுபாலா. நீங்க ஒரு பத்து நிமிஷம் கழிச்சு எம். டி ரூமுக்கு வாங்க”என்று அவளிடம் தெரிவித்து விட்டுத் தன் தமக்கையுடன் அலுவலகத்திற்குள் நுழைந்து விட்டிருந்தான் புகழேந்தி.
அவர்கள் போனதும் தான் பெண்கள் இருவருக்கும் சீராக மூச்சு விட முடிந்தது என்று கூறலாம்!
உடனே தாங்களும் அலுவலகத்திற்குள் நுழைந்து தத்தமது வேலை இருப்பிடத்திற்குச் சென்று விட்டார்கள் மதுபாலா மற்றும் பிரேமா.
“என்ன இன்னைக்குச் சேலையில் வந்திருக்கீங்க?”என்று தன்னிடம் விசாரித்த வினோதினியிடம்,
“இன்னைக்குத் தான் எனக்கு ஐடி கார்ட் கொடுக்கப் போறாங்க மேம். அதே மாதிரி இப்போ ஒரு பத்து நிமிஷம் கழிச்சு எம். டி என்னை வரச் சொல்லி இருக்கார்”என்று அவளிடம் தெரிவித்தாள் மதுபாலா.
உடனே அவளும்,“அட ஆமால்ல! நான் மறந்தே போயிட்டேன்! நீங்க கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் செஞசிட்டு எம். டி யைப் பார்க்கப் போயிட்டு வாங்க. அதுக்கப்புறம் நீங்க வந்ததும் உங்களுக்கான இன்றைய வேலைகளைச் சொல்றேன்!”என்றுரைத்து விடவும்,
“ஓகே மேம்”என்றவளோ,
தன் அறைக்கு வந்து கைப்பையில் இருந்து தண்ணீர்ப் போத்தலை எடுத்து அதிலிருந்து நீரைக் குடித்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு சில நிமிடங்கள் நாற்காலியில் அமர்ந்திருந்தாள் மதுபாலா.
சரியாகப் பத்து நிமிடம் கழித்து அங்கேயிருந்து கிளம்பித் தன்னுடைய முதலாளியின் அறைக் கதவின் முன்பு நின்று அதை தட்டவும்,
அந்த ஒலியைக் கேட்டு விட்டு,”அந்தப் பொண்ணுச் சொன்ன நேரத்துக்கு வந்துட்டாள்!”எனத் தம்பியிடம் கூறி மெச்சிக் கொண்டாள் வெண்பா.
“எஸ்க்கா. அந்தப் பொண்ணு எப்பவும் இப்படித் தான் நேரம் தவறாமல் இருப்பாள்!”என்று பகிர்ந்து கொண்டவனோ,
அவளை வெகு நேரம் காத்திருக்க விடாமல்,
“எஸ் கமின்”என்று அவளுக்கு அறைக்குள் வர அனுமதி அளித்தான் புகழேந்தி.
உடனே அந்த அறைக் கதவை மெல்லத் திறந்து உள்ளே நுழைந்து,
“சார்! மேம்…”என ஆரம்பித்தவளை இடைமறித்து,
“ஆமாம். நாங்க தான் உங்களை ஒரு பத்து நிமிஷம் கழிச்சு வரச் சொன்னோம். அது எங்களுக்கு ஞாபகம் இருக்கு! அது எதுக்காகன்னு நம்ம மூனு பேருக்கும் தெரியும். அதனால் நேரடியாக விஷயத்துக்கு வருவோமா?”என்று அவளிடம் தடாலடியாக கேட்டிருந்தாள் வெண்பா.
அதில் தானும்,”ம்ஹ்ம். ஓகே மேம்”என்று பதிலளித்தாள் மதுபாலா.
“அப்போ சரி”என்று தங்கள் இருவரின் உரையாடலைப் புன்னகையுடன் நோக்கிக் கொண்டிருந்த தம்பியிடம்,
“உன்னோட பி. ஏ – கிட்டே சொல்லி இவங்களுக்குக் கொடுக்க வேண்டியதை எல்லாம் கொண்டு வரச் சொல்லு”என அறிவுறுத்தினாள் வெண்பா.
“சரிக்கா”எனத் தன் காரியதரிசியை அறைக்கு வருமாறு அழைப்பு விடுத்தான் புகழேந்தி.
சிறிது நேரத்திலேயே தனது முதலாளியின் அறைக்கு வந்து சேர்ந்திருந்தான் வெற்றிச்செல்வன்.
தனது முதலாளிக்கும், அவரது தமக்கைக்கும் வணக்கம் வைத்து விட்டு மதுபாலாவும் அங்கு அமர்ந்து இருப்பதைக் கண்டவுடன்,
“குட்மார்னிங் மேம்”என்று அவளுக்கும் முகம் மலர வணக்கம் கூறவும்,
அதற்கு அவளும்,”குட் மார்னிங் சார்”என்றுரைத்தாள்.
அதைக் காதில் புகை வராத குறையாகப் பார்த்த தம்பியை வியப்புடன் நோக்கினாள் வெண்பா.
ஏனென்றால் இவன் தொழில்முறை வாழ்க்கையில் அநேகப் பெண்களைப் பார்த்து இருக்கிறான்!
அவர்களிடம் மிகவும் கண்ணியமாகத் தான் நடந்து கொள்வான்!
அதேபோல், தான் பார்த்த வரையிலும் எந்தப் பெண்ணையும் காதலும், ரசனையும் நிறைந்தப் பார்வையிலும் தொடர்ந்ததே இல்லை!
ஆனால் இப்பொழுது என்னவென்றால், இந்தப் பெண்ணை மட்டும் ரசனையாகப் பார்ப்பதும், இவள் வேறு ஆணிடம் பேசும் பொழுது இப்படி பொறாமைக் கொள்வதும் பதிதாகத் தெரிந்தது வெண்பாவிற்கு!
அதனாலேயே இவனுக்குத் திருமணம் செய்து வைக்க ஏற்றப் பெண் கிடைத்து விட்டாள் என்பதைப் புரிந்து கொண்டு மிக விரைவாக இதைச் சாத்தியமாக்க வேண்டும் என்றும் முடிவெடுத்துக் கொண்டு,
“மிஸ்டர். வெற்றிச்செல்வன்! இவங்களோட ஐடி கார்ட்டை எங்கிட்டே கொடுங்க. நான் என் கையால் இவங்களுக்கு அதை தர்றேன்”என்று தன்னுடைய இளவலின் காரியதரிசியிடம் வலியுறுத்தினாள்.
அதில் அவளது உடன்பிறந்தவனுக்கு மேலும் பொறாமை ஊற்றெடுத்து விட்டது போலும்!
“அக்கா! நான் தான் இதுக்கு முன்னாடி இங்கே புதுசாக வேலைக்குச் சேர்ந்த எல்லாருக்கும் இதெல்லாம் கொடுத்தேன். அதே மாதிரி, நாம எம். டி யோட கையால் இதையெல்லாம் வாங்கலையேன்னு இவங்களுக்கும் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும்ல? அதனால் நானே இதைக் கொடுக்கவா?”என்று தன்னுடைய தமக்கையிடம் கேட்டுக் கொண்டான் புகழேந்தி.
“ஏன்? நான் கொடுத்தால் என்னவாம்? நானும் இந்த ஆஃபீஸூக்கு ஒரு முதலாளி – தான் அப்படின்னு நீ சொல்லி இருக்கியே! அப்போ அதெல்லாம் ஒரு வாய் வார்த்தைக்காக மட்டும் தான் சொன்னியா?”எனப் பாவமாக வினவினாள் வெண்பா.