ஆசைகள் ஈடேறக் கூடுமோ? 2.1

அதற்கடுத்த நாள் காலையில் எழுந்து இருவரும் கிளம்பி விட்டதும்,”இந்த வேலை உனக்குக் கண்டிப்பாக கிடைக்கும்! ஆல் தி பெஸ்ட் க்கா!”என்று அவளுக்கு வாழ்த்துக் கூறி விட்டுத் தன் வேலைக்குச் சென்று விட்டாள் சுதா.

உடனே தன்னுடைய தோழி துர்காவிற்குச் செல்பேசி அழைப்பு விடுத்து,“ஹலோ பிரேமா! கிளம்பிட்டியா? எங்கேடி இருக்கிற?”என்று அவளிடம் விசாரித்தாள் மதுபாலா.

அவளோ,“ஆங்! கிளம்பிட்டேன்டி. நீ உங்கத் தெரு முக்கில் வந்து நில்லு. நானே உன்னை வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்”என்றுரைத்து விட்டு அழைப்பை வைத்தாள்.

உடனே தானும் வீட்டைப் பூட்டி விட்டுத் தெருவின் கடைசியில் போய்க் காத்திருந்தாள் மதுபாலா.

சிறிது நேரம் கழித்து அங்கே தனது இரு சக்கர வாகனத்தில் வந்து சேர்ந்து,”ஹாய் டி! என்ன ரெடியா?”என்று அவளிடம் புன்னகையுடன் கேட்டாள் பிரேமா.

“ம்ம்ம். ரெடி தான். ஆனாலும் ரொம்ப பயமாகப், பதட்டமாக இருக்கு!”என்று தனது நிலையை அவளிடம் தெரிவித்தாள் மதுபாலா.

“அது புது ஆஃபீஸூன்றதால் அப்படி இருக்கு. அங்கே வந்ததும் நீயே எல்லா இடங்களையும் பாரு! உனக்கே அந்த இடம் ரொம்பப் பிடிச்சுப் போயிடும்!”என்று தோழிக்கு உறுதி அளித்து அவளைத் தன் வண்டியில் ஏற்றிக் கொண்டுத், தான் வேலை செய்யும் கம்பெனிக்கு அழைத்துச் சென்றாள் பிரேமா.

“கிளாமர் கேலக்ஸி”என்று ஆங்கிலத்தில் தங்க நிறத்தில் எழுதப்பட்டிருந்த பெயர்ப் பலகையைக் கண்டும், அந்தப் பிரம்மாண்டமான அடுக்குமாடி கட்டிடத்தைக் கண்டுச் சில கணங்கள் மலைத்துப் போய் நின்று விட்டிருந்தாள் மதுபாலா.

அது ஒரு ஆண்களுக்காகப் பிரத்தியேகமாக ஆடைகளை வடிவமைக்கும் பிரபலமான தொழில் நிறுவனம் ஆகும்!

அதன் கிளைகள் இந்த மாநிலத்தில் மட்டுமில்லாமல் ஆறு மாநிலங்களில் இருக்கிறது!

அந்த அலுவலகத்தையே ஆவென்று வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்த தோழியின் தோளைத் தட்டி,”என்னடி ஆஃபீஸைப் பார்த்துட்டு அப்படியே நின்னுட்ட? உள்ளே போகலாம். வா”என்று அவளை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றாள் பிரேமா.

அங்கே இருந்த வரவேற்புப் பெண்ணிடம் தங்களது விவரத்தைச் சொல்லவும், அந்தப் பெண்ணோ மதுபாலாவின் தோற்றத்தைக் கண்டு முகத்தைச் சுளித்து விட்டு,”நீங்க உங்களோட டீடெயில்ஸைக் கொடுத்துட்டு வெயிட் பண்ணுங்க. நான் சாரோட பி. ஏ வந்ததும் அவர்கிட்டே இன்ஃபார்ம் பண்றேன்”என்றுரைக்கவும்,

அவளது ஏளனப் பார்வையால் தனது மனதில் ஏற்பட்ட வலியை மறைத்துக் கொண்டு,”சரி. நான் வெயிட் பண்றேன். நீ போய் உன் வேலையைப் பாரு டி”எனத் தோழியிடம் மொழிந்தாள் மதுபாலா.

“ஓகே டி. பார்த்துக்கோ”என்று கூறி விட்டுத், தான் வேலை பார்க்கும் இடத்திற்குப் போய் விட்டாள் பிரேமா.

அங்கேயிருந்த நாற்காலியின் நுனியில் அமர்ந்து கொண்டவளுக்கு ஒரு குளிர் பானத்தைக் கூட வரவழைத்து உபசரிக்கவில்லை அந்த வரவேற்புப் பெண்.

காலையில உண்டு விட்டு வந்த உணவுக் கொடுத்த தெம்பில் அமைதியாக உட்கார்ந்து கொண்டு அந்த அலுவலகத்தின் உரிமையாளர் வரும் வரைக் காத்திருக்கலானாள் மதுபாலா.

அதே நேரத்தில் அந்த அலுவலகம் மட்டுமில்லாமல் அதைப் போன்ற மற்ற ஆறு மாநிலங்களில் இருக்கும் அதன் கிளைகளுக்கும் ஒரே உரிமையாளன், தனது உயர் ரக மகிழுந்தில் இருந்து இறங்கினான்.

அவனது வரவைக் கண்டதுமே அந்த அலுவலகமே பரபரப்பாக இயங்க ஆரம்பித்து விட்டது.

அந்த மாற்றத்தைக் கண்டு, அதன் உரிமையாளரின் வருகையை அறிந்து கொண்டுத் தனது இருக்கையில் இருந்து நேராக நிமிர்ந்து அமர்ந்து கொண்டாள் மதுபாலா.

அலுவலகத்தினுள் நுழைந்தவனைக் கண்டதும்,”இவர் தான் புகழேந்தி சாரா?”என்று அவனைப் பிரம்மிப்புடன் பார்த்து முணுமுணுத்தவளைக் கவனித்து விட்டு வரவேற்பில் இருந்த பெண்ணை அழைத்து,

“அந்தப் பொண்ணு யாரு?”என்று அவளிடம் விசாரித்தான் ஆடவன்.

“அவங்க துர்கா மேடமோட ஃப்ரண்ட்டாம் சார். அவங்க இங்கே வேலை கேட்டு வந்திருக்காங்களாம். துர்கா மேம் ஏற்கனவே உங்ககிட்ட அதைப் பத்திச் சொல்லிட்டாங்களாம். வெற்றி சார் வந்ததும் சொல்றேன்னு வெயிட் பண்ண வச்சிருக்கேன் சார்”என்று அவனுக்குப் பவ்யமாகப் பதிலுரைத்தாள் அந்தப் பெண்.

“ஓஹோ! வெற்றி இன்னும் வரலையா?”என்றவனிடம்,

“இன்னும் இல்லை சார்”என்க,

உடனே தனது பார்வையை மதுபாலாவிடம் திரும்பி அவளைச் சில நிமிடங்கள் ஆராய்ச்சியாகப் பார்த்து விட்டு,”அப்போ ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சு அவங்களை என் ரூமுக்கு வரச் சொல்லுங்க”என்று வரவேற்புப் பெண்ணிடம் உத்தரவிட்டு விட்டுத் தன் அலுவலக அறைக்குள் புகுந்து கொண்டான் புகழேந்தி.

உடனே மதுபாலாவை அழைத்து,”ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சு எம். டி சார் ரூமுக்குப் போங்க”என்றுரைத்து விட்டுத் தன் வேலையைத் தொடர்ந்தாள் வரவேற்புப் பெண்.

அதே சமயத்தில் அங்கே வந்து சேர்ந்தான் புகழேந்தியின் காரியதரிசி வெற்றிச் செல்வன்.

அவனும் மதுபாலாவைக் கண்டதும் அவளைப் பற்றி விசாரித்து விட்டு,”அது தான் அஞ்சு நிமிஷம் ஆயிடுச்சே? அப்பறம் என்ன? என் கூட வாங்க”என்று அவளைத் தன்னுடன் முதலாளியின் அறையின் வெளியே நின்று கதவைத் தட்டவும்,

“யாரு?”என்ற குரலைக் கேட்டதும்,

“நான் வெற்றி வந்திருக்கேன். என் கூட அந்த மதுபாலாவும் வந்திருக்காங்க”என்று வெளியே இருந்தே அவனுக்குப் பதிலளித்தான் காரியதரிசி.

error: Content is protected !!
Scroll to Top