அதில் மிகுந்த மன வேதனைக்கு உள்ளாகி விட்டாள் மதுபாலா.
அதேசமயம், அவர்களுக்கு இருந்த ஒரே நல்ல விஷயம் என்னவென்றால், அவர்கள் இருவரும் தங்கியிருப்பது அவர்களது பெற்றோரின் பூர்வீக வீடாகும்.
அதை தமையன் பறித்துக் கொண்டுத் தங்களை வீட்டிலிருந்து வெளியேற்றி விடுவானோ என்று தான் பயந்தாள்.
ஆனால் அவன் தனது மனைவியுடன் தனிக் குடித்தனம் சென்று விடுவதாக கூறியதும் தான் நிம்மதியாக அவனை வழியனுப்பி வைத்தாள் மதுபாலா.
இனிமேல் சின்னச், சின்னத் தையல் வேலைகளைச் செய்தால் போதாது என்றெண்ணித் தனக்கும், தன் தங்கைக்கும் அன்றாட வாழ்வாதாரத்திற்காக இப்போது தன்னுடன் பயின்றத் தோழியுடன் சேர்ந்து வேலை தேடிக் கொண்டு இருக்க,
அன்று முழுவதும் ஒவ்வொரு தையல் சார்ந்த தொழில் செய்யும் நிறுவனங்களுக்கு அலைந்து திரிந்ததில் தாகம் எடுத்ததால் பழச்சாறு கடைக்குள் உட்கார்ந்து இருக்கிறார்கள் தோழிகள் இருவரும்.
சாத்துக்குடி பழச்சாறை வாங்கிப் பருகி முடித்ததும்,”இங்கே பாரு மது. உனக்குத் திறமை இருக்கு! உங்கப்பா, அம்மா அந்த ஆக்ஸிடென்ட்டில் இறந்து போகாமல் இருந்திருந்தால் நீயும் என்னை மாதிரியே யூஜி முடிச்சுக் கேம்பஸ் இண்டர்வியூவில் செலக்ட் ஆகி என் கூடச் சேர்ந்து இப்போ வேலைப் பார்த்துட்டு இருப்ப. ஆனால் இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகலை. அவங்களுக்குப் படிப்புத் தேவையில்லை. திறமை தான் முக்கியம்! அதுக்குத் தான் அங்கே முன்னுரிமைக் கொடுப்பாங்க! அதனால் நீ நாளைக்கு என் கூடக் கம்பெனிக்கு வா. நான் உனக்காகப் பேசுறேன். உன் கூடவே உன்னோட டிசைன்ஸ் எல்லாத்தையும் மறக்காமல் கொண்டு வந்துரு”என்று அவளுக்கு அறிவுறுத்தினாள் பிரேமா.
அவளது வார்த்தைகள் கொடுத்த நம்பிக்கையில்,“சரி டி”என்றதும்,
தாங்கள் இருவரும் பருகிய பழச்சாறுக்கானப் பணத்தைக் கொடுத்த துர்காவிடம் விடைபெற்றுக் கொண்டுத் தன் இல்லத்திற்குச் சென்று பூட்டியிருந்த கதவைச் சாவி கொண்டுத் திறந்து உள்ளே சென்று அன்று முழுவதும் மதிய வெயிலில் சுற்றியதால் உடம்பு களைத்துப் போயிருக்கத் தனக்காக உணவைக் கூடச் சமைக்காமலேயே படுக்கையில் வீழ்ந்து விட்டாள் மதுபாலா.
மாலையில் விழிப்புத் தட்டி எழுந்து விட்டுத் தனது வேலை முடிந்து வீட்டிற்கு வந்திருந்த தங்கையிடம், தன் தோழி கூறியதை தெரிவிக்க,
அதைக் கேட்டதும்,”சூப்பர் க்கா! படிப்புக்கு மட்டுமில்லாமல் திறமைக்கும் அங்கீகாரம் கொடுக்கிற கம்பெனிகள் நிறைய இருக்குன்னு நான் தான் உங்கிட்ட முன்னாடியே சொல்லி இருக்கேனே? அதுவும் உன்னோட தையல் எல்லாமே செம்மயா இருக்கும். நீ நல்லா வரையவும் செய்வ! அப்பறம் என்னக்கா? உனக்குக் கண்டிப்பாக அந்த வேலை கிடைச்சிரும்”என்று அவளிடம் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள் சுதா.
அவளும் தனக்குச் சாதகமான பதிலைக் கூறி விட்டதால் முயன்று தான் பார்ப்போமே! அதை தவிர தனக்கும் வேறு வழியில்லை! என்று முடிவெடுத்து விட்டு இருவருக்கும் தேநீரைத் தயாரித்து வந்தாள் மதுபாலா.
“நாளைக்கு எனக்குச் சம்பள நாள்க்கா”என்று அறிவித்த தங்கையிடம்,
“அப்படியா? அதுக்குள்ளே தேதி இரண்டு ஆயிடுச்சா?”என்றவளோ,
“அதில் உனக்குத் தேவையான டிரெஸ் எடுத்துக்கோ சுதா”என்று அவளுக்கு அறிவுறுத்தினாள் மதுபாலா.
“அதைப் போன மாசமே எடுத்துக்கச் சொல்லிட்டீங்க தானே? நானும் நாலு டிரெஸ் எடுத்துக்கிட்டேன். இதுக்கப்புறம் உங்களுக்குத் தேவையான துணிகளை எடுங்க அக்கா. அந்தப் பிரேமாக்கா வேலை செய்றக் கம்பெனியில் உங்களுக்கும் வேலை கிடைச்சிட்டா அங்கே போட்டுட்டுப் போக நல்லதா நாலு டிரெஸ் இருக்கனும்! அதான் சொல்றேன்”என்றுரைத்தாள் சுதா.
அவளது கரிசனத்தில் கண்ணைக் கரித்துக் கொண்டு வர,”சரிடி. நாளைக்கு வேலை விட்டு வரும் போது நீயே எடுத்துட்டு வர்றியா?”என்க,
“சரிக்கா”என்றதும்,
தாங்கள் இருவரும் தேநீரைப் பருகி விட்டு, இரவுச் சாப்பாட்டிற்கு என்னச் சமைக்கலாம் என்பதை ஆலோசனை செய்யத் தொடங்கினர் மதுபாலா மற்றும் சுதா.
அன்றிரவு நேரத்தில், தன் அலுவலகத்தில் இருந்து, அப்போது தான், வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்த தனது தம்பியைப் பொருமலுடன் பார்த்துக் கொண்டு இருந்தாள் வெண்பா.
தமக்கையின் பார்வையின் பொருளை அறிந்து கொண்ட அவளது தம்பியோ,”என்னக்கா உனக்கும், மாமாவுக்கும் எதுவும் சண்டையா? அதனால் தான், இங்கே வந்து இப்படி உர்ருன்னு உட்கார்ந்துட்டு இருக்கியா?”என அவளிடம் சீண்டலாக கேட்கவும்,
“டேய்! உதை வாங்குவா! எங்க ரெண்டு பேருக்கும் எந்தச் சண்டையும் இல்லை! நான் எதுக்கு இப்படி உட்கார்ந்து இருக்கேன்னு உனக்குச் சத்தியமாகத் தெரியாது! அப்படித் தானே?”என்றாள் ஆதங்கமாக.
அதில் புன்னகை முகிழ,”ஆமாம்க்கா!”என்று கூறி அழகு காண்பித்தவனைக் கடுமையாக முறைத்து விட்டு,
“நீ எப்போ தான் கல்யாணம் செய்துக்கலாம்னு இருக்கிற?”என்றிருந்தாள் வெண்பா.
“தெரியலையேக்கா”என்றவனிடம்,
“ப்ச்! நீ ஏன்டா இப்படி இருக்கிற? இந்த வருஷம் ஆகஸ்ட் மாசம் வந்தால் உனக்கு முப்பத்தி மூனு வயசு ஆகிடும்! இன்னும் நீ கல்யாணம் செய்துக்கிற அக்கறை இல்லாமல் திரியிறியே? வாழ்க்கை முழுக்க இப்படியே இருந்துடலாம்னு நினைப்பா?”என்று வருத்தத்துடன் கேட்கவும்,
அதுவரையில் விளையாட்டுத் தனமாகப் பேசிக் கொண்டிருந்தவனோ,”அக்கா! இங்கே பாரு! எனக்கு எப்போ கல்யாணம் பண்ணிக்க விருப்பம் வருதோ, அப்போ நல்லப் பொண்ணாகப் பார்த்துக் கண்டிப்பாக கட்டிக்கிறேன்! போதுமா?”என்று அவளிடம் தெளிவாக உரைக்க,
“அது நடக்கிற வரைக்கும் என்னால் உன்னை நினைச்சு வருத்தப்பட்டுட்டு இருக்க முடியாது! நான் வேணும்னா உனக்குப் பொண்ணுப் பார்க்கத், தரகர் கிட்டே ஜாதகத்தைக் கொடுக்கவா? இல்லைன்னா, உன்னைப் பத்தின தகவல்களை மேட்ரிமோனியில் போட்டு வைக்கவா?”என்றதும்,
“இல்லைக்கா. அதெல்லாம் எனக்குச் செட் ஆகாது!”என்றத் தம்பியுடன் அதற்கு மேல் மல்லுக்கு நின்றால் தனக்குத் தான் சக்திக் குறையும் என்பதைப் புரிந்து கொண்டு அவனிடம் சொல்லிக் கொண்டுக் காரிலேறி தனது வீட்டிற்குச் சென்று விட்டாள் வெண்பா.
தன்னை நினைத்துக் கவலைப்படும் தமக்கைக்காகவாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றெண்ணிப் பெருமூச்சு விட்டுக் கொண்டான் புகழேந்தி.
தொடரும்