“ப்ச்! எங்கே தேடியும் ஒரு வேலையும் கிடைக்க மாட்டேங்குதேடி!”என்று தன்னிடம் அலுத்துக் கொண்ட தோழியைக் கனிவுடன் பார்த்த பிரேமாவோ,
“நான் என் கம்பெனியில் உன்னைப் பத்திச் சொல்லி வேலைக்கு ரெக்கமண்ட் பண்றேன்டி. நீ வேணும்னா அங்கே வந்து என் கூடவே வேலையைப் பாரு”என்க,
உடனே தனது விழிகளைப் பெரிதாக்கிக் கொண்டு,”அங்கேயா? அது எவ்வளவு பெரிய கம்பெனி டி? அங்கே எனக்கெல்லாம் வேலைக் கிடைக்குமா என்ன?”என்று சோர்வுடன் கூறினாள் மதுபாலா.
“கண்டிப்பாக கிடைக்கும். நீ முதல்ல என் கூட வந்து ஏதாவது ஜூஸ் குடி”என்று அவளைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு ஒரு பழச்சாறு கடைக்குள் நுழைந்தாள் பிரேமா.
மதுபாலா! கொழுகொழுவான உடல்வாகு கொண்டப் பெண் அவள்! தனது குண்டுக் கன்னங்கள் மற்றும் பெரிய விழிகளாலேயே தன்னை ஒருமுறை பார்க்கும் அனைவரையும் மீண்டுமொரு திரும்பிப் பார்க்கச் செய்து விடுவாள் எனலாம்!
அவளது பெற்றோரான நக்கீரன் மற்றும் வாணியும் ஒரு துணிக்கடையில் பல வருடங்களாக வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
சில வருடங்களுக்கு முன்பு அவர்கள் இருவரும் ஒரு லாரியில் அடிபட்டுத் தங்களது உயிர் நீத்து விட்டிருந்தனர்.
அவர்களுக்கு மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள்.
மூத்தவன் பாஸ்கர், அவனுக்கு அடுத்துப் பிறந்தவள் தான் மதுபாலா மற்றும் இவர்களுக்கு மிகவும் இளையவள் சுதா. ஏனெனில் இவள் மதுபாலாவிற்கு அடுத்து ஆறு வருடங்கள் கழித்துப் பிறந்திருந்தாள்.
இவர்களது பெற்றோர் உயிரோடு இருந்த காலத்தில் பாஸ்கரையும், மதுபாலாவையும் நன்றாகப் படிக்க வைத்தனர்.
பாஸ்கருக்கு அவ்வளவாகப் படிப்பு மண்டையில் ஏறவில்லை. ஆதலால் பெட்ரோல் பங்க்கில் வேலைக்குச் சேர்ந்து விட்டான். அதில் அவனது வீட்டாருக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.
ஆனால், தனது பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி அடைந்து இருந்தாள் மதுபாலா.
அதனால் அவளுக்குப் பிடித்த பி. எஸ்சி ஃபேஷன் டிசைன் இளங்கலைப் படிப்பில் சேர்த்து விட்டார்கள் அவளது பெற்றோர்.
அவள் தன் படிப்பின் இரண்டாம் வருடத்தில் இருக்கும் போதே நக்கீரனும், வேணியும் இறந்து விடத் தன் படிப்பைப் பாதியில் நிறுத்தி விட்டுத் தங்கையைப் படிக்க வைக்க முடிவெடுத்தாள்.
அதற்குப் பிறகுப் பாஸ்கர், மதுபாலா மற்றும் சுதாவும் பெற்றோரின்றி வாழப் பழக முதலில் சிரமப்பட்டுப் போயினர்.
ஆனால் போகப், போகத் தங்களைச் சமன்படுத்திக் கொண்டு வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.
ஆரம்பத்தில் பாஸ்கரும் நாள் தவறாமல் வேலைக்குப் போய்த் தனக்கும், தன் தங்கைகளுக்கும் உணவு மற்றும் இதர செலவுகளுக்கானப் பணத்தை ஈட்டிக் கொண்டு தான் இருந்தான்.
அதேபோல் தனது படிப்பைப் பாதியில் விட்டு, விட்டுத் தன் தாய் சொல்லிக் கொடுத்த தையல் வேலையைப் பார்த்துப் பணம் ஈட்டத் தொடங்கினாள் மதுபாலா.
எல்லாம் நன்றாகப் போய்க் கொண்டிருந்த சமயத்தில், வருடங்கள் செல்லச், செல்லத் தனக்கு முப்பத்து இரண்டு வயதாகி விட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்து போனான்.
தனக்குப் பெண் பார்த்து திருமணம் செய்து வைக்கப் பெற்றோர் இல்லை என்பதாலும், இந்த வயதிற்கு மேல் தனக்குப் பெண் கிடைப்பது கடினம் என்பதாலும் தன்னுடன் சக ஊழியராகப் பணியாற்றி வந்த தன்னைப் போல் பொற்றோரைப் பறி கொடுத்திருந்த கோமதியைத் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தான் பாஸ்கர்.
அதேபோல், தங்களது சம்பளத்தைச் சேர்த்து வைத்து தாலியும் வாங்கி விட்டு, திருமணத்திற்குப் பிறகு குடித்தனம் நடத்த வாடகைக்கு வீடும் பார்த்து விட்டான்.
அதை இரக்கமே இல்லாமல்,”நான் என் கூட வேலைப் பார்க்கிற கோமதியைக் கல்யாணம் செய்துக்கப் போறேன்”என்று தன்னுடைய தங்கைகளிடம் அறிவித்து விடவும், அவனை இயலாமையுடன் பார்த்தார்கள் பெண்கள் இருவரும்.
அதையெல்லாம் கண்டு கொள்ளாமல்,”எங்களால் உங்களுக்குச் சிரமம் வேண்டாம். நாங்க ரெண்டு பேரும் தனியாக வீடு பார்த்து தங்கிக்கிறோம்”என்றதும்,
“கங்கிராட்ஸ்ண்ணா. நீ சொன்ன மாதிரியே செய்”என்றுரைத்து விட்டாள் மதுபாலா.
அவளது பதிலையே தான் தானும் யோசித்து வைத்திருப்பதை அவனுக்குக் காட்டும் விதமாக தமக்கையின் பின்னால் சென்று நின்று கொண்டாள் சுதா.
இவர்கள் இருவரும் இவ்வளவு எளிதாக தனது முடிவை ஏற்றுக் கொண்டார்களே! என்ற ஆச்சரியம் மற்றும் சந்தோஷத்துடன் அந்த வீட்டை விட்டு வெளியேறினான் பாஸ்கர்.
“அவர் கல்யாணம் செய்துக்கிறது எல்லாம் சரி தான்! ஆனால் உனக்கும் முப்பது வயசு ஆயிடுச்சு தானேக்கா? உனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கனும்னு நினைப்பு இருக்கா பாரு? சுயநலப் பிசாசு!”என்று அவனைக் கரித்துக் கொட்டிய தங்கையிடம்,
“விடு சுதா. அவராவது நல்லா இருந்துட்டுப் போகட்டும்”என்றாள் மதுபாலா.
பாஸ்கர் இங்கே இருந்த வரைக்கும் அவனது சம்பாத்தியம் மற்றும் தனது தையல் வேலையில் கிடைத்தப் பணத்தையும் சேர்த்து எப்படியோ சுதாவை இளங்கலைக் கணினி அறிவியல் படிப்பைப் படிக்க வைத்து விட்டாயிற்று.
அவள் முதுகலைப் படிப்பும் இருந்தால் தான் நல்ல வேலையாக கிடைக்கும் என்றெண்ணினாள் மதுபாலா.
ஆனால் அதற்குப் போதிய பணம் இல்லாத காரணத்தினால் தனது முதுகலைப் படிப்புக் கனவை விட்டு, விட்டு ஒரு கம்ப்யூட்டர் சென்டரில் வேலைக்குச் சேர்ந்து விடத் தற்போது அங்கே நான்கு வருடங்களாகப் பணிபுரிந்து கொண்டிருக்கிறாள் சுதா.