மனோ அமைதியாய் அவளை அணைத்திருந்தான். நாசியெங்கும் குட்டியின் சுகந்தம்தான். அவனுடைய குட்டி. அவனுக்கு மட்டுமே பாத்தியப்பட்ட குட்டி என எண்ணி இறுமாந்திருந்த நாட்கள் எல்லாம் இப்போது அவனை வதைத்தன.
இந்தக் குட்டி, இந்த சந்தனா தனக்கில்லை என்று நினைத்து நினைத்து அழுதான் மனோ. அவனுக்கும் வலித்தது. வந்ததிலிருந்து ஒரு நொடி கூட ஏன்? எதற்காக என்னை ஏமாற்றினாய் என ஒரு கேள்வி கேட்டு தன்னைக் குற்றவாளி கூண்டில் இப்பெண் நிறுத்தியிருந்தால் கூட மனம் கொஞ்சம் மட்டுப்பட்டிருக்கும்.
ஆனால், எங்கேயும் இவள் தன்னை விட்டுவிடவில்லை. இன்னுமே என்னை உயிரில் பொத்திப் பாதுகாக்கிறாள். ஆனால், நான் விட்டுவிட்டேன். என்னுடைய உயிர்ப் பெண்ணை விட்டுவிட்டேனே என எண்ணியவனின் நெஞ்சம் கனத்தை சுமக்க முடியாது அவளிடமே தஞ்சம் புகுந்தது.
ஐந்து முறைக்கும் மேலே வந்த அழைப்பை நிராகரிக்க முடியாது தீனா ஏற்றுக் காதிற்கு ஈந்தான். மறுபுறம் ஷோபனா இவர்களைக் காணாது பதற்றத்தில் என்னவென விசாரிக்க, குரலை சரி செய்த தீனா, “ஹம்ம்… ஷோபி, இங்க ஒரு எமர்ஜென்சி. என் ரிலேட்டீவ் ஒருத்தர் ஹாஸ்பிடல்ல இருக்காரு. நானும் ரஞ்சனும் வந்திருக்கோம். எங்களுக்காக வெயிட் பண்ணாத நீ?” என்றான்.
ஷோபனா என்ற பெயரில் தீச்சுட்டாற் போல மனோவிடமிருந்து விலகியிருந்தாள் சந்தனா. ஆம், இங்கே அமர்ந்திருப்பது அவளுடைய மனோ இல்லையே. ஷோபனாவின் ரஞ்சன் என அவள் வலிக்க வலிக்க ஏற்றுக் கொண்ட உண்மைதான். இருந்தும் இப்போதும் ரணப்பட்டது இதயம்.
“குட்டி…” மனோ அவளருகே வர விழைய, “தீனா… தீனா, நீங்க கிளம்புங்க. நீ… ரஞ்சன்… ரஞ்சனை கூட்டீட்டு கிளம்பு. பாவம், ஷோபனா வெயிட் பண்ணுவாங்க!” என்றாள் அடைத்த தொண்டையை விழுங்கி. ரஞ்சன் என்ற விளிப்பில் மனோவின் இதயம் மறித்துப் போனது. அவனுக்கும் வலித்தது. ஆம், அவள் கூறியது போல இப்போது அவன் ரஞ்சன். ஷோபனாவிற்குப் பாத்தியப்பட்ட ரஞ்சன். அவள் குட்டியின் மனோ இல்லையே.
“ஏன்டி… ஏன் இப்படி பேசுற குட்டி?” என வேதனை ததும்ப அவள் கையை இறுக்கிப் பிடித்தான். நிராசையாய் தன்னை நோக்கிய விழிகளில் சந்தனாவின் உறுதியெல்லாம் உருக, இறுகியிருந்த இதயம் இளக ஆரம்பித்தது.
வலுக்கட்டாயமாக தன்னிடமிருந்து அவன் கையைப் பிரித்த சந்தனா, “ரஞ்சன்… ப்ளீஸ் நீங்க கிளம்புங்க!” என்றாள் அந்நியபாவனையில். எட்ட நிறுத்திவிட்டாள் பெண். சத்தியமாய் மனோவால் தாங்கவே முடியவில்லை. அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான்.
“சாரி குட்டி… சாரி டி. சாரி!” என்றான் தேம்பலாய் தெளிவில்லாத குரலில். ரஞ்சன் என அழைக்காதே. எனக்குப் பிடிக்கவில்லை எனக் கத்த வேண்டும் போலிருந்தது மனோவிற்கு. நேசம் ததும்ப தன்னைப் பார்த்த பார்வையிலிருந்த அந்நியத் தன்மை அவனைக் குத்திக் கிழித்தது. வலியைத் தாங்க முடியவில்லை அவனால். இரண்டு நிமிடங்கள் கூட தன்னால் தாங்க முடியவில்லையே. இத்தனை வருடங்கள் இந்தப் பெண் எப்படி இதையெல்லாம் ஏற்றுக் கொண்டாளோ என நினைத்ததும், இதயம் முழுவதும் வேதனைப் படர்ந்தது.
“மனோ… ப்ளீஸ் டா. இப்போ நீ கிளம்பு. நம்ப காலைல பேசலாம்!” என்றாள் அழுகையாய். ஏனோ எத்தனை முயன்றும் இவனிடம் சந்தனாவின் கோபங்கள் எடுபடவில்லை. மனோ என்ற மந்திரச் சொல்லுக்கு முன்னால் சந்தனா வெறும் சுழியமாகிவிடுகிறாள். எப்போதுமே அப்படித்தான் என சிறுவயது நினைவில் விரக்தியாய் உதடுகள் வளைந்தன.
மனோ அசையவே இல்லை. இந்தப் பெண்ணை விட்டுவிட்டு செல்ல சத்தியமாய் அவனுக்கு தெம்பில்லை. வலுகட்டாயமாய் அவனைப் பிரித்தவள், “தீனா… ப்ளீஸ்டா டா. நீயாவது என் பேச்சை கேளு டா. அவரை… ரஞ்சனைக் கூட்டீட்டுப் போடா. ஷோபி பையனோட தனியா இருப்பாங்க. இவருக்காக வெயிட் பண்ணுவாங்க!” என்றாள் ஷோபிக்காகப் பார்த்து. ஏனோ ஷோபனாவிற்குத் துரோகம் இழைத்துவிடக் கூடாதென மனம் படும்பாட்டை அவள் மட்டுமே அறிவாள்.
‘குட்டியை விட்டுட்டேன்… என் குட்டியை மறந்துட்டேன். அவளுக்கு துரோகம் பண்ணிட்டேன்!’ மனோவின் உடலிலுள்ள ஒவ்வொரு அணுவும் அவளுக்காக போர்க்கொடித் தூக்க, ரஞ்சன் மொத்தமாய் வலுவிழந்து போனான். கனவிலும் இப்படியொரு நிலை வருமென அவன் எண்ணி
இருக்கவில்லையே.
சந்தனாவையே மனோ பார்த்திருக்க, அவன் முகத்தைப் பார்த்தால் இன்னுமே மோசமாய் உடைந்துவிடுவோம் என மனம் அஞ்சி நடுங்க, தீனாவைப் பாவமாய்ப் பார்த்தாள்.
இதற்கு மேலும் என்னை வதைக்காதே என அவள் எண்ணி அவனைக் காண, “மனோ… வா போகலாம்!” என அவன் கையைப் பிடித்தான் தீனா.
“முடியாது தீனா… என் குட்டியை நான் மறந்துட்டேன் டா. இத்தனை வருஷம் அவளைக் கஷ்டப்பட வச்சிருக்கேன். நான்… நான் ரொம்ப தப்பானவன் தீனா. இப்பவும் அவளை விட்டுட்டு வர சொல்ற நீ?” என வேதனையோடு உளறியவனைக் கண்டு இருவருக்கும் மனம் பிசைந்தது.
“ரஞ்சன் ப்ளீஸ்… ஷோபி வெயிட் பண்றாங்க…” என்றாள் கடுமையைக் குரலில் புகுத்தி.
“பதினெட்டு வருஷம் எனக்காக என் குட்டி வெயிட் பண்ணியிருக்கா!” என்றான் ரஞ்சன் வலிக்க வலிக்க. அந்த குரலில் சந்தனாவிற்கு நெஞ்சடைத்தது. ஏனோ தன்னுடைய வலியை அவன் கூறக் கேட்டதும், ஆமாம் எனக் கூறி அவனிடமே கதற வேண்டும் என்றொரு உந்துதல் பிறக்க, அதை உள்ளேயே அமிழ்த்தி விட்டாள்.
ஆம், யாரிடமும் இதுவரை அவள் சொல்லி அழுதது இல்லை. சொல்லி அழ வேண்டிய உரிமைப் பட்டவன் இப்போது அவளுக்கு உரிமையில்லாதவனாகி விட்டான் என நினைத்ததும் நெஞ்சில் ஈட்டி குத்திய வலியை உணர்ந்தாள் சந்தனா.
“ரஞ்சன், இப்போ உங்களுக்கு வொய்ஃப், பையன்னு ஒரு குடும்பம் இருக்கு. அவங்களோட பொறுப்பு உங்களோடது…” என்றவள் சில நொடிகள் நிறுத்தி, “என்னோட மனோ என்னைக்கும் பொறுப்பைத் தட்டிக் கழிக்க மாட்டான். ப்ளீஸ் கிளம்புங்க. காலைல பேசிக்கலாம்” என்றாள் இறைஞ்சலாய்.
“மனோ…வா டா!” என தீனா அவனை இழுத்துச் செல்ல, குழந்தையைப் பிரிந்து செல்லும் தாயாய் அவளையே பார்த்துக் கொண்டே அவன் செல்ல, சந்தனா அங்கேயே உட்கார்ந்து முகத்தை மூடிக் கொண்டாள். இத்தனை நேரம் அவனுக்காகவென அடக்கி வைத்திருந்த அழுகைப் பெரிதாக வெடித்துச் சிதறியது.
லட்சுமி கதவைத் திறந்து வந்தார். இவ்வளவு நேரம் நடந்த அனைத்தையும் அவரும் கேட்டுக் கொண்டுதான் இருந்தார். அவர்கள் அகன்றதும் சந்தனாவின் அழுகைப் பொறுக்காது அவளருகே விரைந்தார்.
“சந்து மா… என்ன டா… ஏன் டா?” என அவர் கலங்கிப் போய் கேட்க, அவரை நிமிர்ந்து பார்த்தவள், “லட்சுமி மா… எனக்கு என் அம்மா வேணும் லட்சுமி மா. அவங்களை வரச் சொல்லுங்க லட்சுமி மா. என்னைத் தனியா விட்டுட்டுப் போய்ட்டாங்க மா!” என உதட்டைப் பிதுக்கி அவள் ஏங்கி ஏங்கி அழ, லட்சுமிக்கு கண் கலங்கிவிட்டது.
ஐந்து வருடங்களுக்கு முன்பு இந்தப் பெண் இப்படித்தானே அழுதாள். அப்போதும் அவருக்குத் துடித்துப் போனது. இப்போதும் கூட தவித்துதான் போனார்.
அவளருகே அமர, அவரை இறுக அணைத்து தேம்பினாள். மனோ என்ற மனிதன் முன்னே அவள் போட்டிருந்த அரிதாரங்கள் எல்லாம் உருகியிருந்தன. இப்போது யாரும் தன்னைக் கேள்வி கேட்க மாட்டார்கள் என நினைத்து நினைத்து அழுதாள். சற்று முன்னே குட்டி என அவன் விளித்த அழைப்பை நினைத்து வெடித்து அழுதாள். அவள் அழுகையும் தேம்பலும் மட்டுமே வீடு முழுவதும் நிறைந்து கிடக்க, லட்சுமிக்கு மனது கேட்கவில்லை. அவளை மடியில் போட்டுத் தட்டிக் கொடுத்தார். சில பல நிமிடங்களில் அழுகை கொஞ்சம் கொஞ்சமாக மட்டுப்பட, விசும்பினாள் பெண்.
“ஒன்னும் இல்ல டா சந்து மா. ஒன்னும் இல்ல. தூங்கி எழுந்தா சரியாகிடும்!” என அவர் வாஞ்சையாய் அவளது தலையைத் தடவிக் கொடுத்தார்.
அந்தக் குரலில் தலையை நிமிர்த்திப் பார்த்தவள், “நிஜம்மா தூங்குனா எல்லாம் சரியாகிடுமா லட்சுமி மா. சொல்லுங்கம்மா?” எனக் கேட்டவளின் குரலில் நிராசைக் கொட்டிக் கிடந்தது. தூங்கியெழும் போது இதெல்லாம் ஒரு கனவாய் மாறிவிட்டால் எப்படியிருக்கும் என அற்பத்தனமாய் யோசித்து சில நொடிகள் மகிழ்ச்சியில் திளைத்த மனது, நிதர்சனம் உணர்ந்து இறுகிப் போனது.
சந்தனாவின் கேள்வியில் முகத்தில் குரலில் என லட்சுமிக்கும் கண்கள் கலங்கி ஏதோ செய்தது. “தூங்குனா சரியாப் போய்டும் சந்து மா!” என அவர் தட்டிக் கொடுக்க, அவர் மடியில் முகம் புதைத்துக் கண்ணீர் உகுத்தாள். வேண்டாம் என வெகுபிரயத்தனப்பட்டும் மனம் மீண்டும் மீண்டும் மனோ தன்னைவிட்டுச் சென்ற நாளிலே சென்று நின்றது.