அன்பு 9.2

மூவரும் கிளம்பி அருகேயுள்ள கோவிலுக்குச் சென்றனர். ரஞ்சன் தாயின் அறிவுறுத்தலின்படி அவனது ராசி, நட்சத்திரம் கூறி பூஜை செய்ய சொன்னாள் ஷோபனா. சிறிது நேரம் கோவிலில் அமர்ந்தவர்கள், பின்னர் வீட்டிற்கு வந்தனர்.

ஷோபனா இறங்கிக் கொள்ள, ரஞ்சன் மகனைப் பள்ளியில் விட்டுவிட்டு அலுவலகம் நோக்கி நகர்ந்தான். கோவிலுக்கு செல்லும்போது அசைவம் சாப்பிடக் கூடாதென மதியத்திற்கு மட்டுமே இறைச்சி சமைத்து கணவனுக்கும் மகனுக்கும் டப்பாவில் அடைத்துக் கொடுத்துவிட்டாள்.

சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு மாலை கணவனுக்காக அணிச்சல் செய்ய வேண்டும் என எண்ணியவாறே வீட்டிற்குள் நுழைந்தாள். கொஞ்சம் வீடு அலங்கோலமாகக் கிடக்க, அவற்றை சுத்தம் செய்தவள், சற்று ஓய்வெடுத்துவிட்டு வேலையைத் தொடங்கினாள்.

இரண்டு மாதம் கண்ணும் கருத்துமாய்க் கற்றுக் கொண்டவை இந்த ஒரு நாளுக்காகத் தானே என பொறுமையாய் இரண்டு மணி நேரம் செலவழித்து அணிச்சலை செய்து முடித்திருந்தாள். முகம் முழுவதும் திருப்தி படர, அதை புகைப்படம் எடுத்து சந்தனாவிற்கு அனுப்பி வைத்தாள்.

சில நிமிடங்களிலே எதிர்ப்புறமிருந்து செய்தி வந்து விழுந்தது. “ரொம்ப நல்லா வந்திருக்கு ஷோபி. உங்க ஹஸ்பண்ட்க்கு கண்டிப்பா பிடிக்கும்…” என அவள் அனுப்பியிருக்க, இவளுக்கு முகம் மலர்ந்து போனது. சந்தனாவிற்கு ஒரு நன்றியைத் தெரிவித்தவள், மறக்காது மாலை வந்துவிட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தினாள்.

மதிய உணவை உண்டுவிட்டு, அருமை என ரஞ்சன் மனைவிக்கு அழைத்துப் பாராட்டவும், அவளது உள்ளம் நிறைந்து போனது. அவளும் சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் உறங்கி எழுந்தாள். மாலையானதும் அஷ்வின் பள்ளி முடிந்து வந்துவிட்டான். அவனுக்கு புதிய உடை ஒன்றை மாற்றி அவனைத் தயார் செய்தவள், தானும் புதுப்புடவை ஒன்றை உடுத்தினாள்.

கட்டிலுக்கு அடியில் கணவனுக்குத் தெரியாது ஒளித்து வைத்திருந்த நெகிழிப்பையைத் திறந்தாள். வண்ண வண்ண புகைப்படச் சட்டங்கள் இருந்தன. அனைத்தும் அவளும் அவனும்தான். அஷ்வினும் அவர்களுள் அடக்கம்.

சிரிப்புடன் அதைத் தொட்டுத் தடவியவள், எடுத்து ஒவ்வொன்றாய் மாட்ட, அஷ்வின் அவளுக்கு உதவினான். தாயும் மகனும் சிரிப்புடன் அனைத்தையும் மாட்டினர். சின்னவனை தொலைக்காட்சி முன்பு அமர்த்திவிட்டு விரிந்திருந்த கூந்தலை பின்னி பூ வைத்தாள்.

ரஞ்சனுக்கு ஷோபனாவைப் புடவையில் அத்தனைப் பிடிக்கும். அவன் வாய் மொழியாகப் பலமுறை கேட்டிருக்கிறாள். அதனாலே அவன் ஆசையாய் எடுத்துக் கொடுத்த அயிரை நிறப் புடவையை உடுத்தியிருந்தாள். அது அவளைப் பாந்தமாய் தழுவியிருந்தது.

தன்னை அலங்கரித்தவள் நேரம் பார்க்க, அது ஐந்தானது. அலைபேசியை எடுத்து சந்தனாவிற்கு அழைத்தாள்.

“சொல்லுங்க ஷோபி…” அவள் அழைப்பை ஏற்க, “எங்க இருக்கீங்க சந்தனா?” என இவள் வினவினாள்.

“இப்போதான் அப்பார்ட்மெண்ட் வந்தேன் ஷோபி. ஒரு ஹாஃப் அன் அவர். நாங்க வந்துட்றோம்…” எனக் கூறி அவள் அழைப்பைத் துண்டிக்க, ஷோபனா இரவு உணவை ஒரு உணவகத்தில் முன்பதிவு செய்தாள். ஏழு மணிக்கு வந்து வீட்டில் கொடுக்குமாறு அவள் கூறியிருந்தாள். கூடவே சில இனிப்புகளையும் வரவழைத்தாள்.

முதன்முதலாக மாமியார் இல்லாது அவளாய் இத்தனையும் செய்திருக்கிறாள். ஒருபுறம் மகிழ்ச்சி என்றாலும் மறுபுறம் ஏதேனும் குறை இருந்துவிடக் கூடாது என மனம் அடித்துக் கொண்டது. எனவே ஒன்றுக்கு இரண்டு முறை அனைத்தையும் சரி பார்த்து முடிக்க, மனம் திருப்தியடைந்தது‌‌.


காலையில் சந்தனா மகிழ்ச்சியுடன் கிளம்பினாள். மனோவுடன் விளையாட, தாய் அனுமதி கொடுத்ததும் அவளுக்கு சந்தோஷம் தாளவில்லை.

இருவரும் வந்ததும் தீனா அவளிடம் ஓடி வந்தான்.

“குட்டி… பல் வலி சரியாகிடுச்சா? உனக்கு சாக்லேட் வச்சிருக்கேன் நான்!” என அவன் இன்னட்டை நீட்ட, பூரணி மகளைக் கேள்வியாகப் பார்த்தார்.

“இல்ல தீனா, பல்லு வலி சரியாகலை. அதனால எனக்கு சாக்லேட் வேணாம்…” என சின்னவள் பதிலுரைக்க, பெற்றவளின் மனம் கனத்துப் போனது. தனக்காகவென மகள் பொய் உரைத்திருக்கிறாள் எனப் புரிந்தது. வருத்தமிருந்தாலும், ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தது. இனிமேல் தனக்குத் தெரியாமல் மகள் இந்த வீட்டில் உள்ளவர்களிடம் எதையும் வாங்கி உண்ண மாட்டாள் என்ற நிம்மதி பிறந்தது.

அவளது கன்னத்தைத் தட்டியவர், “போய் விளையாடு குட்டி…” என்றார் வாஞ்சையாக.

“சரிம்மா…” எனத் துள்ளி குதித்தவள், புத்தகப் பையை ஒரு ஓரமாக வைத்துவிட்டு தீனாவுடன் சென்றாள்.

“குட்டி இன்னைக்கு என்ன விளையாடலாம்?” என அவன் ஆர்வமாய் வினவ, “நேத்து விளையாண்ட மாதிரி ஒளிஞ்சு பிடிச்சு விளையாடலாம்?” அவள் கூறினாள்.

“சரி ஓகே, நீதான் ஃப்ர்ஸ்ட் கவுண்ட் பண்ணணும்…”

“போ… நீ கண்ணை மூடு. நான் ஒளியுறேன்…” என அவள் அடமாய் நிற்க,

“சரி, சா பூத்ரி போடலாம். யாரு ஜெய்க்குறாங்களோ அவங்க ஒளியணும். உனக்கு ஓகே வா?” தீனா கேட்க, இவள் சமாதான உடன்படிக்கைக்கு வந்தாள்.

“தீனா, மனோ எங்க? அவனையும் வர சொல்லு. விளையாடலாம்…” சின்னவள் வீட்டையே எட்டிப் பார்த்தாள். நிமிர்ந்து சாளரத்தையும் பார்த்தாள். அவன் எங்குமே தென்படவில்லை.

“மனோவை மாமா ஹாஸ்பிடல் கூட்டீட்டுப் போய்ட்டாரு. அவன் வீட்ல இல்ல?” தீனா கூற, இவளுக்கு ஏமாற்றமாய்ப் போய்விட்டது.

“எப்போ வருவான் அவன்?” சந்தனா கேட்க, உதட்டைப் பிதுக்கினான் மற்றவன். காலையிலிருந்த உற்சாகம் அவளிடம் வடிந்திருந்தது.

நேற்றைக்கு அவன் தனியாய் அமர்ந்திருந்த விதம் இவளுக்கு வருத்தமாய் இருக்க, இன்றைக்கு அவனையும் தங்களுடன் விளையாட்டிற்கு சேர்த்துக் கொள்ளலாம். அவன் சந்தோஷப்படுவான் என எண்ணி வந்தவள், ஏமாந்து போயிருந்தாள்.

தீனா அவள் முகத்தையே பார்த்திருக்க, ஆர்வமே இல்லாது அவனுடன் விளையாடிவிட்டு பள்ளிச் சென்றுவிட்டாள். மாலை அவள் வந்தப்போது கூட மனோ வீட்டில் இல்லை. அவன் மீது சின்னதாய் கோபம் கொண்டாள் இவள்.

தீனா மணல் வீடு கட்டி விளையாடுவோம் என அவளை அழைக்க, மற்றதை மறந்தவள் அவனுடன் அமர்ந்து வீடு கட்டத் தொடங்கினாள்.

“குட்டி… யாரு வீடு பெருசா கட்றான்னு பார்ப்போம்‌…” என தீனா பாதி மணலை வாரியிறைத்து வீடு கட்ட, இவளும் அவனுக்கு சளைக்காது வீட்டைக் கட்டினாள். இருவரும் விளையாடிக்கொண்டிருக்கும் போது உமாநாதனும் மனோவும் வீட்டிற்கு வந்தனர். அவனுடைய காலிலிருந்தக் கட்டு மாற்றப்பட்டிருக்க, கையில் ஒரு ஊன்றுகோல் வைத்திருந்தான்.

மருத்துவரை சந்தித்து அவனது உடல் மற்றும் மனநலத்தை அறிந்திருந்தார் உமாநாதன். முன்பைவிட அவனது உடல்நலம் நன்றாய் தேறியிருந்தது.

காலில் முறிந்திருந்த எலும்பு மெதுவாய் கூடத் தொடங்கியிருக்க, இவருக்கு மனம் முழுவதும் ஆசுவாசம் பிறந்தது. இன்னும் ஆறு மாதத்தில் அவன் காலில் சிறப்பு காலணியோடு யார் உதவியுமின்றி நடக்கலாம் என அவர் கூற, இவருக்கு மகிழ்ச்சி தாளவில்லை. மருத்துவரிடம் நன்றியுரைத்துவிட்டு இருவரும் வீடு சேர்ந்தனர்.

“மனோ, வந்துட்டியா நீ?” என தீனா அவனை நோக்கி ஓட, சந்தனா எழுந்து நின்றாள்.

error: Content is protected !!
Scroll to Top