அன்பு 9.1

அன்பு – 9

சந்தனாவிற்கும் ஷோபனாவிற்குமான நட்பு நாளுக்கு நாள் நெருங்கிக் கொண்டே போனது. இருவரும் தங்களது அலைபேசி இலக்கங்களைப் பரிமாறிக் கொண்டனர்.

தினமும் பார்த்துப் பேசும்போது குடும்பம், மருத்துவமனை என இருவரது பேச்சும் தொட்டு நீளும். இங்கு வந்து கிடைத்த முதல் நட்பு என்பதால் சந்தனா ஷோபனாவிற்கு மனதிற்கு நெருக்கமாகிப் போனாள்.

அடுத்த வாரம் ரஞ்சனுக்குப் பிறந்தநாள் என ஷோபனா தோழியை அழைத்திருக்க, அவளும் வருவதாய் ஒப்புக் கொண்டிருந்தாள். கணவனுக்குத் தெரியாது அவனுக்கு எதாவது வாங்கிக் கொடுக்க வேண்டும் என சந்தனாவிடம்தான் என்ன வாங்கிக் கொடுக்கலாம் எனக் கேட்டாள். இருவரும் சேர்ந்து ஆலோசனை செய்து அவனுக்குப் பரிசு பொருளை வாங்கிவிட்டனர்.

“தேங்க் யூ சந்தனா… கண்டிப்பா இந்த கிஃப்ட் அவருக்கு ரொம்ப பிடிக்கும். உங்களோட ஐடியா சூப்பர்!” என ஷோபனா மகிழ்ச்சி ததும்பிய குரலில் உரைக்க, சந்தனா அவளை இளம் புன்னகையுடன் பார்த்தாள்.

“உங்க ஹஸ்பண்ட் மேல ரொம்ப அன்பா இருக்கீங்க நீங்க. இதே போல எப்பவும் சந்தோஷமா இருங்க…” என அவள் வாழ்த்த, ஷோபியின் முகம் மலர்ந்து போனது.

“அவர்தான் என் உலகமே. என்னமோ தெரியலை, ஒரு சிலரைப் பார்த்ததும் பிடிக்கும். பட், இவர் கூடப் பழகலை நான். பார்க்க கூட சந்தர்ப்பம் எதுவும் அமையலை. ரெண்டுமே இல்ல. பட் ஐ லவ்ட் ஹிம் அ லாட். ஏன்னுத் தெரியலை. எந்த நம்பிக்கையில மூனு வருஷம் அவருக்காக வெயிட் பண்ணேன்னு தெரியலை. அவரே அப்போ அப்போ கேட்பாரு சந்தனா. என்கிட்ட பதில் இல்ல. பட், அவரை மட்டும்தான் ரொம்ப ரொம்ப பிடிக்கும். அவரோட முகத்துல சிரிப்பை பார்க்குறதுக்காக என்ன வேணா பண்ணலாம்னு ஒரு எண்ணம். இதெல்லாம் ப்யூர்லி அவருக்காகத்தான்!” என்றவளின் பேச்சில் கணவன் மீதான காதல் நிரம்பி வழிந்தது. சந்தனாவிடம் பேச்சே இல்லை. அமைதியாய் அவளைப் பார்த்தாள்.

“என்ன டாக்டரம்மா அமைதியா இருக்கீங்க?”

“ஒன்னும் இல்ல. உங்களோட காதல் ரொம்ப அழகானது மட்டுமில்ல. ஆத்மார்த்தமானது கூட. என் கண்ணே பட்டுடும் போல. சுத்திப் போட்டுக்கோங்க!” என்றாள் உண்மையான குரலில்.

மற்றவள் புன்னகைத்து, “சரி சந்தனா, நாளைக்குப் பார்க்கலாம். எனக்கு இன்னைக்குத்தான் பேக்கிங் க்ளாஸ்க்கு லாஸ்ட் டே. இதை முடிச்சிட்டா, நிம்மதியா இருக்கும்…” என ஷோபி விடை பெற, அவளையே சில நொடிகள் பார்த்த சந்தனா தனது மகிழுந்தை நோக்கி நகர்ந்தாள்.

ஒரு வாரம் கடந்திருந்தது. காலையிலே பெற்றவர்களின் வாழ்த்து மழையில் நனைந்து போயிருந்தான் ரஞ்சன். இந்த பிறந்த நாளில் மட்டும்தான் மகன் தங்களுடன் இல்லையென ரஞ்சனின் தாய் ஏக வருத்தத்தோடு பேச, இவன் அவர்களை சமாதானம் செய்து அழைப்பைத் துண்டித்தான்.

“ஹேப்பி பெர்த் டே டாடி…” என காலையிலே தந்தை முகத்தை எச்சில் செய்தான் அஷ்வின். அவனைத் தூக்கி தானும் முத்தமிட்டவன், மனைவியைத் தேடி சமையலறை நோக்கிச் செல்ல, அவள் இவனைக் கவனித்தும் கண்டு கொள்ளவில்லை. வேலையில் மும்முரமாக இருந்தாள்.

“ஷோபி…” ரஞ்சன் சென்று நிற்க, “எழுந்துட்டீங்களா? ரெண்டு நிமிஷம் காபி தரேன்…” என சில பல நிமிடங்களில் அவனுக்குக் குளம்பியைக் கொடுத்தாள். எதுவும் பேசாது புன்னகையுடன் எடுத்துக் கொண்டவனின் பார்வை மனைவியைக் குறுகுறுக்கச் செய்தது.

“என்ன வேணும் அஷூப்பா?” எனக் கணவனிடம் கேட்டவள், திரும்பவே இல்லை.

“மம்மி… டேடி பெர்த் டே டுடே. விஷ் ஹிம்…” சின்னவன் கத்த, ஷோபனா பாவமாய் ரஞ்சனைப் பார்த்தாள்.

“சாரி ரஞ்சன்…சாரி‌. சாரிங்க, நான் மறந்துட்டேன்!” எனப் பொய்யாய் அசடு வழிந்தவளின் மீது இவனது ரசனைப் பார்வை ஆசையாய் வருடியது.

அந்தப் பார்வையில் திணறியவள், “நிஜமா மறந்துட்டேன் ரஞ்சன்…” என்றாள் சிணுங்கலாய். இவனது முகம் மலர்ந்தது‌.

“பரவாயில்ல ஷோபி. மறந்துட்டாலும், காலைல சீக்கிரமே எழுந்து குளிச்சிட்டு இவ்வளோ குக் பண்ணி வச்சிருக்கீயே டி… நீ மறந்துட்டேன்றதை நான் நம்பிட்டேன்!” நமுட்டுச் சிரிப்பு சிரித்தவனைப் பார்த்தவளின் முகம் சிவந்து போனது.

“போங்க… போங்க!” அவள் பொய்யாய் கோபம் கொள்ள,

“ஒரு வருஷமாவது என் பெர்த்டேவை மறந்த மாதிரி உண்மையா நடிப்பியா ஷோபி?” எனக் கேலியாய் கேட்டான். ஆனாலும் மனம் நிறைந்திருந்தது. ஒவ்வொரு வருடமும் இவன் பிறந்த நாளுக்கு ஒரு மாதம் முன்பே என்னென்ன செய்ய வேண்டும் எனப் பட்டியலிட்டு அது இதுவென அந்நாளை சிறப்பாய் மாற்றிவிடுவாள் மனைவி. அவளது மெனக்கெடல்கள் முழுவதும் அவன் மீதான அன்பே கொட்டிக் கிடக்கும்.

“இந்த ஜென்மத்துல நடக்க வாய்ப்பில்லை போங்க…” என அவள் சமையலைத் தொடர, ரஞ்சன் மகனைத் திரும்பிப் பார்த்தான். இவர்கள் இருவரையும்தான் அவன் பார்த்திருந்தான்.

“அஷூ… அப்பா ஃபோன்ல கேம் விளையாடலையா?” அவன் கேட்டதும் சின்னவன் துள்ளிக் குதித்து ஓட, ஷோபனா கணவனை முறைக்க, பின்னிருந்து மனைவியை அணைத்தான் ரஞ்சன்.

“இப்போ எதுக்கு அவன்கிட்டே ஃபோனைக் கொடுத்தீங்க?” அவள் கேட்க, “இதோ… இதுக்குத்தான்!” என அவள் கன்னத்தில் முத்தமிட்டான். அவளது முறைப்பு மென்மையாய் மாறியது‌.

“தேங்க்ஸ் டி பொண்டாட்டி…” என மீண்டுமொரு முத்தத்தை அவளது மறுகன்னத்தில் இட்டான். ஒட்டியிருந்த கொஞ்ச முறைப்பும் ஷோபியிடமிருந்து விடை பெற, அவனது முகம் மலர்ந்து போனது. கணவனின் முகத்தை ஆசை ததும்ப பார்த்திருந்தாள் ஷோபனா.

“ஏன் ஷோபி இவ்வளோ செய்யணுமா?” சுகமாய் சலித்தபடி கேட்டான் ரஞ்சன். அவளிடம் பேச்சில்லை.

“உன்கிட்ட தான் டி கேக்குறேன்…” அவன் மனைவி கன்னத்தோடு இழையவும், அவளது கையிலிருந்த கரண்டி தடுமாறியது.

“ப்ம்ச்… என் புருஷனுக்காக நான் செய்றேன்!” என்றாள் காதலாய்.

“அதான் ஏன்… எதுக்கு என் மேல இவ்வளோ காதல், பாசம் எல்லாம்?” எனக் கேட்டவனைப் பக்கவாட்டாய்த் திரும்பிப் பார்த்தவள், “தெரியலையே…” என உதட்டைப் பிதுக்கினாள்.

“போடி…” என அவன் நகர, கையைப் பிடித்திழுத்தவள்,

“ஹேப்பி பெர்த்டே அஷூப்பா…” என்றாள் ஆசையாய். இவனது அகமும் முகமும் நிறைந்து போனது. எதுவும் கூறாது அவளையே பார்த்தான் ரஞ்சன்.

“என்னையே பார்த்துட்டு இருக்காம போய் உங்கப் பையனை ஸ்கூலுக்கு கிளப்புங்க. நீங்களும் குளிச்சு முடிச்சு ரெடியாகுங்க. கோவிலுக்குப் போகணும்…” என்றாள். நேற்றே மாமியார் கோவிலுக்குப் போக வேண்டும் எனக் கட்டளையிட்டிருந்தார்.

“அம்மா சொன்னாங்களா?” அவன் சின்ன புன்னகையுடன் வினவ, “ஆமா… நேத்தே சொல்லிட்டாங்க. கோவிலுக்குப் போய் உங்க பேர்ல ஒரு பூஜை போட்றலாம், அத்தைக்காக!” என்றாள். சரியென்று தலையை அசைத்தவன், தானும் குளித்துவிட்டு மகனையும் பள்ளிக்குத் தயார் செய்தான்.

இருவரும் உணவு மேஜையில் அமர்ந்ததும், ரஞ்சனுக்கு லேசாய் தலையே சுற்றியது.

“என்னடி இவ்வளோ குக் பண்ணியிருக்க? எப்போ டி எழுந்த?” என ஆச்சர்யமாய்க் கேட்டான்.

அவனைப் பார்த்துப் புன்னகைத்தவள், “ஆராய்ச்சி பண்ணாம சாப்டுங்க மிஸ்டர் ரஞ்சன்…” என அவன் தட்டை நிரப்பினாள். மகனது தட்டும் கொஞ்சம் நிரம்பியது.

“இவ்வளோ சாப்ட்டா, ஆஃபிஸ் போய் தூங்கிடுவேன் டி. பரவாயில்லையா?” மனைவியை வம்பிழுத்தாலும் அவள் செய்தவற்றை ஆசையாய் உண்டான் ரஞ்சன். அப்படியே அவளையும் அருகே அமர்த்தி ஊட்டிவிட்டான். மறுக்காமல் மனைவியும் சாப்பிட்டாள். இடையிடையே அஷ்வின் வேறு ‘ஆ‌‌’ காண்பிக்க அவனது வாயிலும் உணவு ஊட்டப்பட்டது.

error: Content is protected !!
Scroll to Top