அன்பு 6.1

மாலை மங்கிய இரவு நேரத்தில் அந்த பல்பொருள் அங்காடி பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது. வேலை முடித்து உழைத்து களைத்து சோர்ந்த முகங்கள்தான் முழு அங்காடியையும் ஆக்கிரமித்திருந்தனர்.

குழந்தைகளுக்கு அந்த சோர்வெல்லாம் இல்லை போல. ஓடியாடியபடி தங்களுக்கு வேண்டிய பொருட்களை எடுத்துக் கொண்டிருந்தனர்.

மகிழுந்தை நிறுத்திவிட்டு கூட்டத்தை விலக்கி உள்ளே நுழைந்த ரஞ்சனுக்கு ஐயோவென்றானது. இந்தக் கூட்டத்தில் எப்படி பொருட்களைத் தேடி எடுப்பதென அலுப்புத் தட்டியது. கைபேசி இசைக்க, அழைப்பை ஏற்று காதெலிப்பானில் இணைத்து அதை செவிக்கு ஈந்தான்.

“சொல்லு ஷோபி, என்ன வாங்கணும்?” என்றவனின் விழிகள் கடையை அலசின.

“காலைல சட்னில உப்பு கூடிருச்சே. ஏன் நீங்க சொல்லலை?” அதிமுக்கியமாய் கேள்வி கேட்ட மனைவியை இங்கிருந்தே முறைத்துத் தள்ளினான்.

“அது ரொம்ப முக்கியமாடி இப்போ?” என்றவன், “என்னென்ன வாங்கணும்னு முதல்ல சொல்லு!” என்றான் சற்றே கடியாய்‌. அதில் எதிரிலிருப்பவள் முகம் சுணங்கிப் போனது.

“வாட்சப் பண்றேன். அதை மட்டும் வாங்கிட்டு வாங்க!” என அவள் அழைப்பைத் துண்டிக்க, “ச்சு…” என உச்சுக் கொட்டியவன் புலனத்தில் தொடர் சங்கிலியாய் வந்து விழுந்த செய்தியைத் திறந்தான்.

“பால்பாக்கெட் 2, தேங்காய் 1” என உதடுகள் முணுமுணுக்க, தேவையானவற்றை தள்ளும் கூடையில் எடுத்து வைத்தவாறு கூட்டத்தில் கலந்தான்.

“பன்னீர் எங்க இருக்குன்னுத் தெரியலையே!” என விழிகளை சுழலவிட்டவன் அது அகப்பட்டதும் அருகே சென்று பன்னீரை எடுத்துக் கூடையில் சேர்த்தான்.

“பாஸ்தா வாங்கித் தராம நான் வர மாட்டேன் மா!” கையைக் கட்டிக்கொண்டு நின்ற மகனை சந்தனா கண்டு கொண்டதாய் தெரியவில்லை. தனக்குத் தேவையானவற்றிலே அவளது கவனம் குவிந்தது.

“ம்மா… பாஸ்தா வேணும்!” அடம்பிடித்தபடி அவளது முந்தானையைக் கைகளில் சுற்றினான்.

“பாஸ்தா இஸ் நாட் குட் பார் ஹெல்த்!” இவள் கூற, “நோ… ஒன் டே மா. ப்ளீஸ் மா!” என்றான் சின்னவன். கண்கள் பளபளத்தன அவனுக்கு.

அவன் அழுவது தெரிந்தாலும் இவள் எதிர்வினையேதும் ஆற்றவில்லை. அழுகிறான் என ஒருமுறை துரித உணவுகளை வாங்கிக் கொடுத்தால், கண்டிப்பாக வேறு எதுவாகினும் இதே குணம் தலை தூக்கும் என அமைதியாய் இருந்தாள்.

“ஏன் சந்தனா மா, ஒருநாள் தானே கேக்குறான். வாங்கித் தரலாமில்ல?” லட்சுமி மனோவுக்கு ஆதரவு கரம் நீட்ட, “பாட்டீ!” என அவரை கட்டிக் கொண்டு தேம்பினான்.

“லட்சுமி மா… அவனைக் காருக்கு கூட்டீட்டு போங்க. நான் பில் போட்டுட்டு வரேன்!” பேச்சு முடிந்தது என்பது போல அவள் பணம் செலுத்துமிடம் விரைய, லட்சுமி அழும் மனோகரை சமாதானம் செய்தவாறே சென்றார்.

ரஞ்சன் அவர்கள் உரையாடலைக் கேட்டாலும் கைகள் தன் போல பொருட்களை தேடி எடுத்தன. கடைசியாய் அவர்களை அன்று மின்தூக்கியில் சந்தித்தது. அடுத்து ஒரு வாரம் கடந்திருக்க, சந்திக்கும் வாய்ப்பின்றி போனது.

ரஞ்சனும் பணம் செலுத்துமிடம் சென்றான். இவனுக்கு முன்னேதான் சந்தனா நின்றிருந்தாள். அவர்களுக்கு முன்னால் சிலர் நின்றிருக்க, கூட்டம் மெதுவாய் நகர்ந்தது.

அவள் தனக்குரிய பணத்தைச் செலுத்தவும், “டென் ருபீஸ் சேஞ்ச் இருந்தா கொடுங்க மேடம்…” என பணியாள் வினவ, இவள் கைப்பையைத் துழாவினாள்.

“சேஞ்ச் இல்லையே மா…” என சந்தனா பதிலளித்து முடிய அவளுக்குப் பின்னிருந்து ஒரு கரம் பத்து ரூபாய் தாளை நீட்டியிருந்தது. இவள் யாரென பார்க்க, ரஞ்சன் நின்றிருந்தான்.

“சார், பரவாயில்லை. நானே கொடுத்துக்குறேன்…” சந்தனா கூற, “பத்து ரூபால கோட்டைக் கட்டிட மாட்டேன் டாக்டர். இட்ஸ் ஓகே…” எனப் புன்னகைத்தவன், கடை ஊழியரிடம் தான் எடுத்தப் பொருட்களை நீட்ட, இவள் நிற்பதா செல்வதா எனத் தெரியாது தயங்கினாள்.

இரண்டு நிமிடங்களிலே ரஞ்சன் வந்துவிட, இருவரும் ஒன்றாகவே வாகனத் தரிப்பிடம் சென்றனர்.

லட்சுமி பின்னிருக்கையில் அமர்ந்திருக்க, அவர் மடியில் படுத்திருந்த மனோ தாயைக் கண்டதும் முகத்தைத் திருப்பிக் கொண்டான். அதில் இவளுக்கு முறுவல் பிறந்தது. வாகனத்தை உயிர்ப்பித்து சாலையில் கலந்தாள். ரஞ்சனும் தன் மகிழுந்தை ஒரே சீராக அவளுடனே இயக்கினான்.

அடுக்குமாடிக் கட்டிடம் வந்ததும் லட்சுமி பொருட்களை எடுத்துக்கொண்டு மனோவுடன் முன்னே செல்ல, இவள் மகிழுந்தை நிறுத்திவிட்டு வந்தாள். ரஞ்சனும் அவளும் மின்தூக்கியில் நுழைய, ஏற்கனவே அது நிரம்பி வழிந்தது. அவன் இரண்டு கைகளிலும் பையுடன் இருக்க, இவள் இரண்டெட்டு பின்னகர்ந்து படிகட்டில் கடகடவென ஏறத் துவங்கினாள். ரஞ்சன் எதுவும் கூறாது மின்தூக்கியில் காலியாய் இருந்த இடத்தில் தன்னைப் புகுத்திக் கொண்டான்.

“சொல்லு குகா…” சந்தனா ஒலியெழுப்பிய அலைபேசியை உயிர்ப்பித்து செவிக்கு ஈந்தாள்.

“டிக்கெட் புக் பண்ணிட்டேன்…” அவன் கூற, இவளது முகம் மலர்ந்தது.

“ரொம்ப நல்லது, எப்போ புக் பண்ணிருக்க?”

“ஃபிப்ரவரில…”

“இன்னும் மூனு மாசம் ஆகுமா டா?”

“ஆமா, அதுவரைக்கும் அப்பாய்ன்மெண்ட்ஸ் இருக்கு. என்னால கேன்சல் பண்ண முடியாது. வெய்ட் பண்ணித்தான் ஆகணும்…” என்றவன் குரலில் ஏக சலிப்பு.

இரண்டு வருடத் தனிமை வாழ்க்கை எத்தனையோ பாடங்களைப் புகட்டி இருந்தது. அவனே ஏற்றுக் கொண்டது எனினும் அத்தனை கசந்தது யாருமற்ற வாழ்வு. வீடு நுழைந்ததும் மனைவி மகன், மகள் என மூவருடைய சிரித்த முகத்திற்கு ஏங்கினான்.

“ஏன் இவ்வளோ சலிச்சுக்குற குகா… போகும் போதே சொன்னேன். பேசி தீர்க்கலாம்னு. ஆனால் சார்தான் வீராப்பா மகளை மட்டும் கூட்டீட்டு போனது!” என அதட்டியவள்,

“ரெண்டு வருஷம் போய்டுச்சு. மூனு மாசம்தானே, சீக்கிரம் பறந்துடும். எதையும் நினைச்சுக்காம வந்து சேரு. நானும் உன்னையும் பாப்பாவையும் ரொம்ப மிஸ் பண்றேன்…” என்றாள் உணர்ந்து.

“ஹம்ம்… வரேன்!” என்றவன் பொதுவான பேச்சிற்குத் தாவியிருந்தான்.

தான் வந்தும் முகத்தைக் கூடப் பார்க்காத மனைவியின் செயலில் ரஞ்சனுக்கு புன்னகை பூத்தது. எதுவும் கூறாது உடை மாற்றி வர, அஷ்வின் கூடத்தில் அமர்ந்து தொலைக்காட்சியில் பொம்மைப் படம் பார்த்துக் கொண்டிருந்தான். இவன் வந்ததை கவனிக்காத அளவுக்கு அவன் திரையில் மூழ்கி இருந்தான். சமையல் கூடத்தை எட்டிப் பார்த்தான். சுடசுட இவனுக்கு தேநீர் சமையல் மேடையில் இருந்தது.

ஷோபனா மறுபுறம் நின்று பன்னீரை சிறு துண்டுகளாக கர்ம சிரத்தையாக வெட்டிக் கொண்டிருந்தாள்‌. அருகில் அவன் அரவம் உணர்ந்தும் நிமிரவில்லை‌.

ரஞ்சன் தேநீரை எடுத்து உதட்டுக்கு கொடுத்தவன், “ஷோபி, டீல சுகர் போடலையா?” எனக் கேட்க, விழுக்கென நிமிர்ந்தவள், “ச்சு… போட மறந்துட்டேன் போல!” என நெற்றியில் லேசாய் தட்டிவிட்டு சர்க்கரை டப்பாவை அவள் அவசரமாய்த் தேட, இவனது சிரிப்பு அவளைத் தொடர்ந்தது. அவன் தன்னிடம் விளையாடுகிறான் என்பதை உணர்ந்து முறைத்தாள்.

“பொய் சொன்னீங்களா?” தன்னை முறைத்த மனைவியின் தோளில் கையைப் போட்டு இழுத்தணைத்தவன், “ஆமா… பின்ன மனுஷன் உழைச்சு களைச்சு ஆபிஸ்ல இருந்து வந்ததும் பொண்டாட்டி சந்தோஷமா என்னை இன்வைட் பண்ணுவான்னுப் பார்த்தா, மூஞ்சியைத் தூக்கி வச்சிருக்கா!” என்றான் அவளது மூக்கைப் பிடித்து ஆட்டியபடி.

அவனது கையைத் தட்டிவிட்டவள் பன்னீரை நறுக்கத் துவங்க, “என்னடி?” என வாஞ்சை ததும்பிய குரலில் கேட்டவனிடம் சர்வ நிச்சயமாக கோபத்தை இழுத்துப் பிடிக்க முடியவில்லை.

“ப்ம்ச்…” என நிமிர்ந்தவள், “நான் ரொம்ப இம்பெர்பெக்ட்-ஆ இருக்கேன் ரஞ்சன்…” என்றாள் சோர்ந்தக் குரலில். சில நாட்களாகவே அவளுக்கு தாழ்வு மனப்பான்மை அரித்தது.

“பெர்பக்டா இருந்தா யாரும் உனக்கு அவார்ட் தர போறாங்களா ஷோபி?” என கிண்டலாய் உரைத்தவனை மென்மையாய் முறைத்தாள்.

“ஒன்னைப் புரிஞ்சுக்கோ ஷோபி. எல்லாத்துலயும் எல்லாரும் பெர்பெக்டா இருக்க முடியாது!”

“எனக்கு குக்கிங் கூட ஒழுங்கா தெரியலை. வீட்டை சுத்தம் பண்ணத் தெரியலை. அஷூவை தனியா ஹேண்டில் பண்ண முடியலை…” குரலில் ஆற்றல் வடிந்திருந்தது. வீட்டில் தனிமையில் இருப்பது அவளை யோசிக்க வைத்துவிட்டதோ என எண்ணியவன்,

“ஷோபி, குக்கிங் எல்லாம் கத்துக்கிட்டா ஈஸி‌. அங்க அம்மா உன்னைக் குக் பண்ண விடலை. அஷ்வினைக் கேர் பண்றது உன்னோட பொறுப்பு மட்டும் இல்ல. அது நம்மளோட ரெஸ்பான்சிபிலிட்டி. சேர்ந்தே செய்யலாம். தெரியலைன்னா கத்துக்கலாம். எதையும் போட்டு மனசைக் குழப்பிக்காத டி…” என்றான் மென்மையாய். அவன் பேச்சில் ஷோபனாவின் மனம் கொஞ்சம் சமாதானமடைந்திருந்தது.

error: Content is protected !!
Scroll to Top