“இங்க நிறைய டாய்ஸ் இருக்குல்ல. அதை வச்சு விளையாடலாம் வாங்க!” மனோ கூற,
“போடா… டாய்ஸ் போர். குட்டி வீட்டுக்குள்ள வர மாட்டா. நான் விளையாடப் போறேன்…” என அவன் ஓட, மனோவின் முறைப்பு மற்றவனைத் தொடர்ந்தது. சந்தனா அதற்குள் வீட்டைக் கட்டி முடித்திருந்தாள்.
அதைப் பார்த்த தீனா, “குட்டி, எனக்கும் மரக்குச்சி வேணும். நீ எடுத்துத் தரீயா?” என வினவினான்.
“சரி… நான் குச்சிப் பொறுக்கித் தரேன்!” என அவள் நகர்ந்து குச்சிகளைத் தேடி எடுக்க, சரியாய் மேலிருந்து அவள்புறம் ஒரு கனமான பொம்மையைத் தூக்கியெறிந்திருந்தான் மனோ. நொடியில் அதிலிருந்து தப்பித்த சந்தனா அவனை நிமிர்ந்து முறைத்துப் பார்க்க, அவனும் இவளை முறைத்தான்.
“தீனா, உன் ஃப்ரெண்ட் என் மேல பொம்மையைத் தூக்கிப் போட்றான்…” என்றாள் புதியவனிடம்.
“மனோவா… அவன் பாவம், உடம்பு சரியில்லை. அதான் அப்படி நடந்துக்குறான். அம்மா கூட சொல்லிவிட்டாங்க. அவனை நல்லா பார்த்துக்க…” சந்தனா கேட்டுக் கொண்டே குச்சிகளை அவனது வீட்டின் மேலே அழகாய் அடுக்கினாள்.
“தீனா, சாப்பிட்டு போய் விளையாடு, வா…” சதா குரல் கொடுக்க, “வரேன் அத்தை…” என இவன் பதிலளித்தான்.
“குட்டி, நான் போய் சாப்ட்டு வரேன்…” என நடந்தவன், “நீ சாப்டீயா குட்டி?” என வினவினான். இயல்பாய் அந்தக் கேள்வி வந்திருந்தது.
“அம்மா காலைலயே ஊட்டிவிட்டாங்க. சாப்ட்டுட்டேன், மதியம் கறிசோறு செஞ்சுத் தரேன்னு சொல்லி இருக்காங்க!” என்றாள் உற்சாகமாய்.
“கறிசோறா?” அவன் விழிக்க, “ஆமா… அதான் கறியை சோத்துல போட்டு செய்வாங்க இல்ல. மஞ்ச கலர்ல இருக்குமே!” அவள் விளக்கமளித்தாள்.
“ஓ… பிரியாணியா? சரி…” என அவன் உள்ளே சென்றான்.
“என்ன டா இது? கை காலெல்லாம் அழுக்காக்கி வச்சிருக்க. போ, போய் வாஷ் பண்ணீட்டு வா” என அதட்டிய சதாம்பிகா தட்டில் உணவை எடுத்துக்கொண்டு மாடியேறினார்.
தீனா தன்னை சுத்தம் செய்து வந்து உண்ணத் தொடங்கினான். பூரணி பிரியாணிதான் சமைத்திருந்தார். சந்தனாவின் நினைவு அவனுக்கு. அவளுக்கும் கொடுக்கலாம் என யோசித்தான். அத்தை திட்டினால் என்ன செய்வது என சிந்தித்தவன், அவருக்கு தெரியாமல் எடுத்துச் செல்லலாம் என முடிவெடுத்தான்.
“மா, நான் கீழே தீனாவோட சேர்ந்து சாப்ட்றேன்…” என்ற மகனைப் பார்த்த சதாவுக்கு கண்கள் கலங்கின. இத்தனை நாட்கள் யாரையும் அருகில் விடாதவன் தீனா வந்ததும் மெல்ல மனம் மாறுகிறான் என உணர்ந்ததும் அவருக்கு நிம்மதி பிறந்தது.
“வா மனோ, கீழ போகலாம்!” என்றவர் பூரணியை அழைத்து உணவை கீழே எடுத்துச் செல்லப் பணித்தார்.
காலில் அவனுக்கென்று செய்யப்பட்ட சிறப்புக் காலணியை அணிந்தவன், ஊன்றுகோலை எடுத்து மெதுவாய் நடந்தான். படிகளில் இறங்கும்போது சதா மகனைத் தாங்கிக் கொண்டார்.
மெதுவாய் மிக மெதுவாய் நடந்து வந்து உணவு மேஜையில் அமர்ந்தான். “மனோ… பிரியாணி சூப்பரா இருக்கு டா. சாப்பிடுடா…” என்ற தீனா உணவில் கவனமானான். மனோ எதுவும் கூறாது அமைதியாய் உண்ண, சதா அருகிலிருந்து அவனுக்கு உணவைப் பரிமாறினார். அவன் போதும் என அலறும்வரை இவர் விடவில்லை.
தீனா உண்டு முடித்தவன் மெதுவாய் சமையலறைக்குள் நுழைந்தான். பூரணி இல்லை என்பதை உறுதி செய்தவன், சிறிய டப்பாவில் பிரியாணியை அடைத்து மெதுவாய் வெளியே எட்டிப் பார்த்தான். சதா அறைக்குள் சென்றதைப் பார்த்தவன் வெளியே வர, அவர் மீண்டும் வந்துவிட்டார்.
“கைல என்ன டா?” அவர் கேட்டதில் திருதிருவென விழித்தவன், “ஸ்ட்ரீட்ல ஒரு டாக் அழகா இருந்துச்சு. அதுக்குப் பசிக்குமேன்னு கொஞ்சம் பிரியாணி எடுத்துட்டுப் போறேன் அத்தை…” என்றான் சமாளிப்பாய்.
“தூரமா இருந்து வச்சிட்டு வந்துடு டா. கடிச்சு வச்சுடப் போகுது. உங்கம்மாவுக்கு யார் பதில் சொல்றது?” என்றவரிடம் தலையை அசைத்துவிட்டு வெளியே சென்றான்.
“மனோ, ரூம்க்கு கூட்டீட்டுப் போகவா?” மகன் தலையைக் கோதினார் சதா.
அவரது கையைப் பிடித்தவன், “நோ மா… கொஞ்ச நேரம் இங்கேயே இருக்கேன். நீங்க போங்க…” என அவரை அனுப்பி வைத்துவிட்டு வாசலையே நோக்கினான்.
“தீனா… வா, வா. உன் வீடு அழகா இருக்கு பாரு…” சந்தனா இருவருடைய வீட்டையும் ஒரே போல அலங்கரித்து இருந்தாள்.
“சூப்பரா இருக்கு குட்டி …” என்றவன், “உனக்காக பிரியாணி எடுத்துட்டு வந்திருக்கேன்…” என அவளிடம் டப்பாவை நீட்டினான்.
“ஐ! கறி சோறா?” எனக் கேட்டு அதனை வாங்கச் சென்றவள், சில நொடிகள் தயங்கிவிட்டு, “வேணாம் தீனா, அம்மா திட்டுவாங்க!” என்றாள் சோகமாய்.
“ஆன்ட்டி திட்ட மாட்டாங்க. அப்போ சாக்லேட் எல்லாம் வாங்கிக்க சொன்னாங்க இல்ல. இதையும் வாங்கிக்கத்தான் சொல்வாங்க!” என்றான்.
“மேடம்க்கு தெரிஞ்சாலும் திட்டுவாங்களே!” அவள் சோகமாக சொல்ல,
“அத்தைக்குத் தெரியுமே. அவங்க ஒன்னும் சொல்லலை!” என்றான்.
“நிஜமாவா?”
“ப்ராமிஸா?” என அவன் செய்த சத்தியத்தில் அனைத்தையும் கிடப்பில் போட்டவள் டப்பாவைத் திறக்க, “ஸ்பூன்ல சாப்டு…” எனக் கரண்டியை நீட்டினான் தீனா. அதை வாங்கி இரண்டு வாய் வைத்திருப்பாள். பாதி உணவு கீழே சிந்தியது.
“இது வேணாம் தீனா. நான் கைல சாப்ட்றேன்!” என்றவள் கையாலே உண்ணத் தொடங்க, “ஹேண்ட் வாஷ் பண்ணலையா நீ?” என எதிரிலிருந்தவன் பேச்சை அவள் கேட்கத் தயாராய் இல்லை. நீண்ட நாட்கள் கழித்து சுவையான பிரியாணி அவளை மெய் மறக்கச் செய்திருந்தது.
பின்னே யாரோ வந்து நிற்பது போல தோன்ற, தீனா திரும்பி பார்த்தான். மனோ ஊன்று கோல் உதவியுடன் இவர்கள் அருகே வந்து நின்றான். சந்தனா அவனைக் கவனிக்கவில்லை.
“அம்மாகிட்டே சொல்லித் தர போறேன். அவங்களுக்குத் தெரியாம தானே பிரியாணி எடுத்துட்டு வந்த தீனா?” என்ற குரலில் வாயில் பாதி சோறும் கையில் பாதி சோறுமாய் நிமிர்ந்து பார்த்தவளின் கண்களில் லேசாய் பயம் துளிர்க்கத் துவங்கியது.
“மனோ… குட்டி பாவம் டா. அத்தைகிட்ட சொல்லாத டா!” தீனா அவளுக்காக இறைஞ்சினான்.
“நான் கண்டிப்பா அம்மாகிட்டே சொல்லதான் போறேன்!” அவன் கூறியதும் சந்தனாவின் விழிகள் பளபளத்தன. தொண்டையில் உணவு இறங்கவில்லை. அவன் தன்னை மாட்டிவிட்டு விடுவானோ என்ற பயம் நெஞ்சை அடைத்தது. உணவு டப்பாவை கையில் வைத்தவாறு பயத்துடன் அவனைப் பார்த்தாள்.
தொடரும்…