அவர் மகனிடம் பேசி புரிய வைத்து, அவரது மனநோய்க்காக மாத்திரையையும் பரிந்துரை செய்திருந்தாள். முதலில் வாரத்திற்கு ஒருமுறை இவளைப் பார்த்து செல்வார் பெரியவர். அவரது மனநிலையில் நல்ல மாற்றம் தென்பட, மாதத்திற்கு ஒருமுறை என மாற்றினாள் சந்தனா. அந்த மாதாந்திர பரிசோதனைக்காகத்தான் வந்திருந்தார் பெரியவர்.
இப்போதெல்லாம் ஞாபக மறதி வரவில்லை என்றும் பேரனுடன் நிறைய நேரம் செலவிடுவதாகவும் உற்சாகத்துடன் கூறுபவரை அமைதியாய் சின்ன சிரிப்புடன் பார்த்தாள். பின்னர் அவரது மருந்து மாத்திரையால் ஏதும் பக்கவிளைவுகள் ஏற்படுகிறதா எனக் கேட்டு, இல்லையென்பதை உறுதி செய்து, அதே மாத்திரைகளையே தொடர்ந்து சாப்பிட வலியுறுத்தி அனுப்பி வைத்தாள்.
“என்ன மனோ, எதுக்கு கூப்பிட்ட? சாப்பிட எதுவும் எடுத்துட்டு வரவா?” சதா வினவினார்.
“அத்தை, அதெல்லாம் ஒன்னும் வேணாம். நானும் அவனும் விளையாடப் போறோம். டிஸ்டர்ப் பண்ணாதீங்க!” தீனா இடைபுகுந்து உரைக்க, சதாம்பிகா மென்முறைப்புடன் நகர்ந்தார். சந்தனாவிற்கு உயிரே திரும்பி வந்தது போலிருந்தது. கண்ணீரை அழுந்தத் துடைத்தாள்.
“இந்தா உன் பட்டம், அழாத நீ!” தீனா அவள் கையில் பட்டத்தைத் திணிக்க, “எனக்கு ஒன்னும் வேணாம்…” என்றவள் பூனை நடைபோட்டு வெளியே எட்டிப் பார்த்தாள். சதா அவரது அறைக்குள் சென்று மறைந்ததும், குடுகுடுவென படிகளில் இறங்கி வெளியே வந்து பொத்தென அமர்ந்தவளின் இதயம் தாறுமாறாய்த் துடித்தது. இன்னும் கண்களில் உவர் நீர் மிச்சமிருந்தது.
எப்படியோ அவர்கள் கண்ணில் தப்பாமல் வந்துவிட்டாள். மனோ தான் வந்ததை அவனது தாயிடம் கூறிவிடுவானோ எனப் பயத்தில் மீண்டும் கண்கள் கலங்கின. அவளது பக்கத்தில் அரவம் கேட்க, நிமிர்ந்து பார்த்தாள். தீனா வந்தமர்ந்தான்.
“சாரி, உன் பட்டத்தை நீயே வச்சுக்கோ…” அவன் கையை நீட்ட, இவள் கோபத்தில் முகம் திருப்பினாள். அவள் தன்னால் தான் அழுகிறாள் என இவனுக்கு வருத்தமாகியது.
“உன் பேர் என்ன?” தீனா கேட்க, சந்தனா பதிலளிக்கவில்லை. தான் அணிந்திருந்த சட்டையைத் தூக்கி முகத்தைத் துடைத்தவள், வெளியே வேடிக்கைப் பார்த்தாள்.
“நம்ப ஃப்ரெண்ட்ஸ் ஆகிடலாமா? உனக்கு சாக்லேட் எடுத்துட்டு வந்தேன்!” அவனுடைய கரம் முன்னே நீள, சந்தனா திரும்பி பார்த்தாள். அடர்நீல வண்ணத்தில் உறையிட்டிருந்த இன்னட்டைப் பார்த்ததும் நாவில் எச்சில் ஊறியது. தாய்க்குத் தெரிந்தால் திட்டுவாள் என ஆசையை அடக்கிக் கொண்டாள்.
“உனக்கு வேணாமா இந்த சாக்லேட்டு? டேஸ்டா இருக்கும். நட்ஸ், சாக்கோசிப்ஸ் எல்லாம் இருக்கும்!” ஆசையைத் தூண்டினான் அவன்.
“குட்டி, யார்கிட்ட பேசுற?” பூரணி வெளியே எட்டிப் பார்த்தார். தீனாவைக் காலையிலே கவனித்து, சொந்தக்காரப் பையனாக இருக்கக் கூடுமென எண்ணினார்.
அவர்தான் சந்தனாவின் தாய் என உணர்ந்தவன், “ஆன்ட்டி, குட்டிக்கு சாக்லேட் கொடுத்தேன். வாங்க மாட்றா, வாங்கிக்க சொல்லுங்க…” என சின்னவன் கூற, சந்தனா ஆசையாய் தாய் முகம் பார்த்தாள். பூரணிக்கு மறுக்கத் தோன்றவில்லை. தலையை மட்டும் அசைத்தார்.
அதில் சின்னவளின் முகம் பூவாய் மலர, தீனாவின் புறம் திரும்பி அவன் கையிலிருந்த இன்னட்டை வாங்கி ஆர்வமாய் பிரிக்க, பூரணி உள்ளே சென்றுவிட்டார்.
அவள் இன்னட்டை ரசித்து ருசித்து உண்ண, “நீ இந்த சாக்லேட் சாப்ட்டது இல்லையா?” என அவன் கேட்டான்.
“இல்லையே!” உதடு பிதுக்கினாள் சின்னவள்.
“ஏன்?”
“அம்மா வாங்கித் தர மாட்டாங்க. காசிருக்காது அவங்ககிட்டே. ரொட்டி மட்டும் எப்பவாது வாங்கித் தருவாங்க…”
“அப்பாகிட்டே கேக்க வேண்டியது தானே?”
“அப்பா செத்துப் போய்ட்டாரு…” என்றவளின் குரலில் தந்தை மீதான ஏக்கம் தொனித்தது.
“சரி, நானே இனிமே உனக்கு டெய்லி சாக்லேட் தரேன்!” என்றவனை இவள் விழிகள் விரித்துப் பார்த்தாள்.
“நிஜமா வாங்கித் தருவீயா?” சற்று முன்னே நாவில் கரைந்த இனிப்பின் சுவை அவளது ஆசையை மேலும் கூட்டியது.
“ப்ராமிஸா வாங்கித் தரேன் குட்டி. பட், என் கூட நீ விளையாட வரணும். நாம சேர்ந்து விளையாடலாம்!” என்றான்.
சில நொடிகள் யோசித்தவள், “சரி… உன் பேரென்ன?” என அவனிடம் வினவினாள்.
“தீனா, குட்டி என்ன ஸ்டாண்டர்ட் படிக்கிற நீ?”
“நான் அஞ்சாவது படிக்கிறேன்…” இவள் கெத்தாய் சொல்ல, “நான் ஏழாவது, செவன்த் ஸ்டாண்டர்ட். உன்னைவிட பெரியவன்!” என அவன் அலட்டிக் கொண்டான்.
“நம்ம மண்ல வீடு கட்டி விளையாடலாமா? யாரு பெரிய வீடு கட்றாங்கன்னு பார்ப்போமா?” சந்தனா கேட்க, இவன் வேகமாய் தலையை அசைத்தான்.
“நான்தான் பெரிய வீடா கட்டுவேன்…” தீனா ஓடிப்போய் மணலைக் குவிக்கத் தொடங்க, சந்தனா மறுபுறம் சென்று வீட்டைக் கட்டத் தொடங்கினாள்.
அவள் அழகாய் கட்ட, தீனா எட்டிப் பார்த்தான். அவளுடைய வீட்டைப் போலவே இவனும் கட்டத் தொடங்கினான். சந்தனா குச்சிகளையெல்லாம் தேடி எடுத்து வீட்டின் மேற்கூரை அமைக்க, இவனும் அதே போல செய்தான்.
ஜன்னலில் இவர்களையே முறைத்துப் பார்த்திருந்த மனோ, “தீனா… இங்க வாடா!” எனக் கத்தி அழைத்தான்.
தீனா நிமிர்ந்து பார்க்க, அவன் கையை அசைத்தான். “குட்டி, நீ வீடு கட்டிட்டே இரு. நான் போய்ட்டு வந்துட்றேன்…” என இவன் குடுகுடுவென இரண்டிரண்டு படிகளாகத் தாவி மேலே சென்றான்.
“என்ன மனோ, என்ன டா?” இவன் கேட்க, “ரெண்டு பேரும் இங்க வந்து விளையாடுங்க…” என்றான் மனோ.
“இல்ல டா… மண்ல வீடு கட்றோம் டா. இங்க விளையாட முடியாது…”