There’s a post office near my college. Whenever I see it I feel like writing you a letter if you ask me if this is a love letter I don’t know but I love you Kutty. Every minute without you feels like months I badly miss you desperately like a plant withering for a lack of sunlight. Wait for me, Kutty.
I’ll come soon to you like a river rushing to the sea.
Yours
Mano
மனோ கனத்த மனதுடன் வாசித்து முடித்திருந்தான். இந்தக் கடிதத்தை அவன் எழுதி முடிக்கும்போது எதையோ சாதித்த திருப்தியில் இரண்டு நாட்களாக புன்னகையுடன் வலம் வந்த நாட்கள் கண்ணில் நீரைப் பெருகச் செய்தன.
சந்தனா ஒரு புகைப்படத்தை எடுத்துக் காண்பித்தாள். “போன்ல காட்டுனேன். இல்ல மனோ. அந்தப் போட்டோதான் இது. நீ ப்ரிண்ட் போட்டு கொடுத்தது!” என்றாள் ஆசையாய் அதை தடவி.
“மனோ… இந்த ஷேர்ட் பாரு. போகும்போதும் நீ ரூம்ல விட்டுட்டு போய்ட்ட. நான் எடுத்து வச்சிருந்தேன். உன்கிட்ட சொன்னதுக்கு வேணும்னேதான் விட்டுட்டுப் போனேன். என் ஞாபகமா வச்சுக்கோன்னு சொன்னல்ல நீ? இதை அப்படியே பத்திரமா வச்சிருக்கேன் டா!” என அந்த சட்டையை விரல் கொண்டு வருட, மனோ கொஞ்சம் கொஞ்சமாக உடைந்து கொண்டிருந்தான் போல. அவன் முகம் அதை அப்படியே பிரதிபலித்தது.
“உன்னை ரொம்ப கஷ்டப்படுத்துறேனா மனோ? சாரி டா!” என அனைத்தையும் எடுத்து உள்ளே வைத்துப் பூட்டி சாவியை அதனிடத்தில் சொருகிவிட்டு அவன் முன்னே வந்து நின்றாள். தரையைப் பார்த்திருந்த மனோவின் விழிகள் நிமிர்ந்து அவளை நோக்கின. அவன் கட்டிலில் அமர்ந்திருந்தான்.
அவன் விழிகளில் கோர்த்திருந்த நீரைத் துடைத்துவிட்டவளுக்கு கண்கள் கலங்கின. இன்னும் சிறிது நேரத்தில் மனோ கிளம்பிவிடுவான் என நினைக்க நினைக்க நெஞ்சடைத்துப் போனது.
அவன் முகத்தைக் கைகளில் தாங்கிய சந்தனா, “மனோ…” என உருகும் குரலில் அழைத்தாள்.
மனோ இமைக்காது அவளையே பார்க்க, “நீ அப்போலாம் கேட்டுட்டே இருப்ப டா. ஆனால் எனக்கு சொல்ல மனசில்லை. ம்கூம் பயம்டா. பட், நான் சொல்லணும்னு நினைக்கும் போது நீ கூட இல்ல டா!” என்றாள் வருத்தமான குரலில். மனோரஞ்சன் அசையாது அவளிடம் தன்னை ஒப்படைத்தான். அவள் பேசும்போது இவனது கீழிமைத் தொட்டு மெதுவாய் விழிகளில் நீர் தளும்பி நின்றது.
“ஐ லவ் யூ மனோ… ஐ லவ் யூ சோ மச் டா. உன்னை எனக்கு எவ்வளோ பிடிக்கும்னு கேட்டுட்டே இருப்ப டா நீ. என் வாழ்க்கை முழுசும் நீ வருவன்னு உனக்காக காத்திருக்க அளவுக்குப் பிடிக்கும் . நீ இல்லாம என்னால இருக்க முடியாதுன்னு அழுததை நினைச்சு இப்போ சிரிச்சுக்கிறேன் டா. ஏன்னா நீ இல்லாம பதினெட்டு வருஷம் வாழ்ந்துட்டேன். இப்போ நினைச்சா கூட மலைப்பா இருக்கு. இன்னும் நான் ஒரு இருபது முப்பது வருஷமாவது வாழ்வேன். மொத்த வாழ்க்கைக்கும் இந்த ஒருநாள் போதும் டா. ஐ லவ் யூ மனோ!” என அவன் நெற்றியில் அழுந்த உதடுகளைப் பதித்து விழிகளை இறுக மூடிக் கொண்டாள்.
இன்னும் சில நிமிடங்கள் மட்டுமே இவனது அண்மை தனக்கு சொந்தம் என நினைத்ததும் குபுகுபுவென நீர் பொங்கியது. நீ இல்லாமல் வாழ்ந்து விடுவேன் என்ற வார்த்தைகள் எல்லாம் அவளுடைய மனோவைத் தேற்றிக் கொள்ளத்தான். தன்னையே நம்ப வைக்கப் போராடியபடி அவனிடமிருந்து பிரிந்தாள்.
எங்கே இன்னும் மோசமாய் உடைந்துவிடுவோம் எனப் பயமாய் இருக்க, அவனைப் பார்த்து புன்னகைக்க முயன்றாள். முடியாது தேம்பல் வெளிப்பட, மனோரஞ்சன் இந்தப் பெண்ணை கண்களில் வலியுடன் பார்த்தான்.
அவனுக்குமே நெஞ்சு முட்டும்வரை அழுகை வந்து நின்றது போல. எத்தனை முறை அவளிடம் அவன் கெஞ்சியிருப்பான். ஆனாலும் அப்போதெல்லாம் சந்தனா வாயைத் திறந்ததே இல்லை. இப்போது அவளுடைய அன்பை காதலை ஏற்றுக் கொள்ளும் நிலையில் இல்லாத தன்னை எண்ணி அவனுக்கு கழிவிரக்கம் பிறந்தது.
“குட்டி… ஏன் டி?” எனக் கேட்டு அவளை வயிற்றோடு புதைத்து விம்மி வந்த அழுகையை அடக்கினான். தொண்டையை அடைத்த உணர்வை எதைக்கொண்டு சரிசெய்வது என அவனுக்குத் தெரியவில்லை.
“மனோ… ப்ம்ச்… என்ன டா?” என அப்போதும் தன்னை தேற்றிக் கொண்டு அவனது விழிநீரை சந்தனா துடைத்துவிட, “நான் ரொம்ப அன்லக்கி குட்டி. இந்த சந்தனாவை… இந்த குட்டியோட அன்புல வாழ எனக்குக் கொடுத்து வைக்கலை போல!” என்றவன் கண்களில் கண்ணீர் வழிந்தது.
“என் மனோவைத் தவிர யாருக்கும் என் அன்பு கிடையாது டா. உனக்கு மட்டும்தான். நீ கூட இருந்தாதான் உன்னை நான் காதலிப்பேன்னு நினைக்காத மனோ. நீ எங்க இருந்தாலும் என் அன்பும் காதலும் உனக்கு மட்டும்தான். கஷ்டமா இருந்தாலும் ஏத்துக்கிட்டு கடந்துடு மனோ. எங்கேயும் தேங்கி நின்றாத டா!” என்றாள் புன்னகையுடன்.
உருண்டு திரண்டு நின்ற கண்ணீரைத் உள்ளிழுத்துக் கொண்டவள், அவனிடமிருந்து பிரிய முற்பட, மனோ அவளது கையை இறுக்கிப் பிடித்தான். தாயைப் பார்க்கும் குழந்தையின் பார்வை அது.
சந்தனா அவன் தலையைக் கலைத்துவிட்டாள். “டைம்க்கு சாப்பிடு மனோ. அன்னைக்கு லிஃப்ட் கிட்டே நீ தடுமாறுனப்போ என் உயிரே போய்டுச்சு டா. பார்த்து பத்திரமா இரு. ஷோபனாவை நல்லா பார்த்துக்கோ. இந்த டைம்ல அவங்களுக்கு நிறைய ஆசையிருக்கும். நீதான் அனுசரணையாப் பார்த்துக்கணும். அஷ்வினை ரொம்ப மிஸ் பண்ணுவேன் நான். அவன் அப்படியே உன்னை மாதிரி இல்ல மனோ?” எனக் கேட்டவள் விழிகளை ஒருமுறை சிமிட்டிக் கொண்டாள்.
பொறாமை இல்லை என்று கூற முடியாது. கொஞ்சம் வருத்தம் பொறாமை எல்லாம் அவளிடம் உண்டு. இனிமேலும் அவர்கள் பக்கத்திலே இருந்து அனைத்தையும் பார்க்குமளவிற்கு மனதைரியத்தைக் கடவுள் கொடுக்கவில்லை என்றெண்ணி விரக்தி சிரிப்பை உதிர்த்தாள்.
மனோவிடமிருந்து கையைப் பிரித்தவள், “டைமாச்சு ரஞ்சன்… நீங்க கிளம்புங்க!” என்று நொடியில் அந்நியமாய் பேசிய பெண்ணை இவன் அடிபட்ட குழந்தையென பார்க்க, சந்தனாவிற்கு தாள முடியவில்லைதான். எனினும் இவனை வெளியேற்ற அவளுக்கும் வேறு வழி தெரியவில்லை.
“நீங்க இனிமே என்னைப் பார்க்க முயற்சி பண்ண கூடாது ரஞ்சன். இது என் மேல ப்ராமிஸ்!” என்றவளை இவன் பாவமாய் பார்க்க, அவன் கையைப் பிடித்து அழைத்துச் சென்றாள்.
தீனா வெளியேதான் இருந்தான். நேரம் ஆறைத் தொட்டு நொடி முள் நகரத் தொடங்க, “தீனா… ஹம்ம். போய்ட்டு வாங்க ரெண்டு பேரும். இனிமே எப்போ மீட் பண்ணுவேன்னு தெரியலை. உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன் டா!” என்றவளை அவன் தோளோடு அணைத்துக் கொண்டான்.
“உனக்காக நான் எப்பவுமே இருப்பேன் குட்டி. எதுனாலும் எனக்கு நீ கால் பண்ணணும்!” என்று அவன் அன்பாய் கட்டளையிட, கண்ணீருடன் தலையை அசைத்தாள்.