அன்பு – 25.5

“மனோவை நல்லா பார்த்துக்கோ தீனா. இப்போ அவன் பொறுப்பா இருக்கான்தான். ஆனாலும் அவனை நீதான் பார்த்துக்கணும். ரெண்டு பேரும் சண்டை போடாம ஒத்துமையா இருங்க. அவனைக் கஷ்டப்படுத்துற மாதிரி நீ எதுவும் பண்ணக் கூடாது டா. அது என்னைக் கஷ்டப்படுத்துறதுக்கு சமம். அவன்கிட்டே சொல்லி நீதான் புரிய வைக்கணும். இனிமே அவன் என்னைப் பார்க்க வரமாட்டான். அப்படி பார்க்கணும்னு சொன்னா, நீ தான் சொல்லணும். உனக்கொரு அழகான பொண்டாட்டி, ரெண்டு குழந்தைங்க இருக்கு டா. பொறுப்பா நடந்துக்கோன்னு சொல்லு!” எனக் கூறி அதிராமல் புன்னகைத்தவளில் மனோவிற்கு கோபம் கூட வந்து தொலைத்தது.

“பார்க்க வர மாட்டேன். பட் கால் பண்ணுவேன். எனக்கு எப்போ தோணுதோ அப்போலாம் கால் பண்ணுவேன். என் குட்டி என்கிட்ட பேசணும் தீனா. அப்படி பேசலைன்னா, நான் நேர்ல வந்துடுவேன்!” அவன் ஆதங்கமாய் உரைக்க, சந்தனாவிடம் சில நொடிகள் மௌனம்.

“சரி தீனா… நீங்க கிளம்புங்க…” மனதை திடப்படுத்தி எல்லாவற்றையும் நான் கடந்துவிட்டேன்,எதுவும் என்னைப் பாதிக்காது என்று உறுதியான குரலில் உரைத்தவளின் கண்களில் ஈரம் இன்னும் சுரந்தது.

மனோவிடம் திரும்பியவள், “போய்டு மனோ… திரும்பிலாம் வராத டா!” என அவன் கையை ஒரு முறை அழுத்திப் பிடித்த போது சந்தனா நூறு முறை செத்துப் பிழைத்தாள்.

அவளை ஒருமுறை இறுக்கி அணைத்தவன், “நான் உன்னை மிஸ் பண்ணிட்டேன் குட்டி. மன்னிக்க முடியாத தப்புதான். ஆனாலும் நீ என்னை எங்கேயும் குற்றவாளி கூண்டுல நிறுத்தலை டி. எனக்கான தண்டனை இது சரிதான். நீ இல்லாம நானும் வாழப் பழகிக்கிறேன்!” என்றுவிட்டு அவள் முகம் பார்க்காது விறுவிறுவென அவன் வெளியேற, சந்தனாவிற்கு விழிகளில் நீர் வழிந்தது.

தீனா தலையை அசைத்து வெளியேற, கதவை சாற்றிவிட்டு அப்படியே சாய்ந்தமர்ந்து முட்டியில் முகம் புதைத்தவளிடம் விசும்பல் வெளிப்பட்டது.

‘ஐ லவ் யூ மனோ… உன்னை எப்பவும் மிஸ் பண்ணுவேன் நான். சாரி டா, சாரி. எதையும் என்னால மாத்த முடியாது. இதுதான் விதின்னு நினைச்சுட்டு உன்னோட இருந்த ஒரு நாளோட நான் வாழ்ந்துட்றேன் டா!’ எனத் தேம்பினாள் பெண். இத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த உணர்வுகள் எல்லாம் பிரவாகமாகப் பொங்க, கண்ணை மூடி கடைசியாய் கண் நிறைந்தவனை நினைத்து அழுதாள் பெண்.‌

மனோ வீட்டிற்கு சென்று அறைக்குள் நுழைந்து கொண்டான். தீனாதான் ஷோபனா கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளித்தான். மறுநாள் தீனா வீட்டிற்கு கிளம்பினான். ஷோபியிடம் அவனைப் பார்த்துக்கச் சொல்லி அறிவுறுத்தி விடை பெற்றவன், சந்தனாவை ஒருமுறை சந்தித்துவிட்டே சென்றான்.

இரண்டு நாட்கள் கடந்திருக்க, காலையில் சந்தனாவின் குறுஞ்செய்தியில்தான் கண்விழித்தான் மனோரஞ்சன்.

“நான் கிளம்பிட்டேன் மனோ. டேக் கேர்!” என அவள் அனுப்பியிருக்க, இவன் அடித்துப் பிடித்து அவள் வீட்டிற்கு சென்றான். பூட்டிய வீடே அவனை வரவேற்க, மனம் கனத்துப் போனது.

பாரமேறிய மனதுடன் மெதுவாய் அவன் கால்கள் நடக்க, ஒரு நொடி மூளை விழித்துக் கொள்ள கீழே காவலாளியிடம் சென்று நின்றான். “வாங்க சார், டாக்டரம்மா நீங்க வருவீங்கன்னு இந்த சாவியைக் கொடுக்க சொன்னாங்க!” என சந்தனாவின் வீட்டு திறவுகோலைக் கொடுத்தார். அதைப் பெற்றுக் கொண்டவன் விரைந்து சென்று வீட்டைத் திறந்தான்.

அவள் அறைக்குள்ளே நுழைய, மேஜை மீது ஒரு கடிதம் இருந்தது. அதைப் பிரித்துப் படித்தான். “மனோ… உன் அளவுக்கு எனக்கு இங்கிலீஷ் எல்லாம் வராது டா. அதனால தமிழ்லயே எழுதுறேன்டா‌. நான் கிளம்பிட்டேன். உன்னைப் பார்த்து சொல்லலாம்னு எனக்கும் ஆசைதான்.

ஆனாலும் உன்னைப் பார்த்தா இங்க இருந்து போக எனக்கு மனசு வராது. நீ என்னைப் பார்க்குற பார்வையே என்னைப் பிடிச்சு வச்சிடும். இந்த பிரிவு ரெண்டு பேருக்கும் நல்லது டா. என்னை நினைச்சு அழாத, ஃபீல் பண்ணாத‌. நீ எப்படி இருக்கீயோ, அப்படித்தான் நான் இருப்பேன். நீ சந்தோஷமா இருந்தா, நான் சந்தோஷமா இருப்பேன்.

அதை நினைவுல வச்சுக்கோ. எங்க இருந்தாலும் நான் உன்னைப் பத்தி கேட்டுத் தெரிஞ்சுப்பேன் டா. இன்னும் ஒன் வீக் ஆர் ஒன் மந்த்ல எல்லாம் சரியாகிடும்‌. ரொட்டீன் லைஃப்க்கு போய்டுவ நீ.

நான் உன் மனசுல ஏதோ ஒரு ஓரத்துல இருப்பேன். அடுத்த வருஷம் உன் நினைப்புல கூட இருக்க மாட்டேன். அதான் உண்மை. எப்போவாது எனக்குப் பேச தோணுனா, நானே கால் பண்ணுவேன் டா. நீ எனக்கு கால் பண்ணாத. அப்படியே பண்ணாலும் நான் அட்டெண்ட் பண்ண மாட்டேன். பை மனோ… ஐ வில் மிஸ் யூ மனோ….” என எழுதி, என்றென்றும் அன்புடன் சந்தனா என முடித்திருக்க, அதில் அவளது கண்ணீர் தடங்கள் தெரிந்தன. இவன் விழிநீரைத் துடைத்துவிட்டு அதைப் பத்திரப்படுத்திக் கொண்டான்.


“சேஃபா ரீச் ஆகிட்டீயா சந்தனா?” எனக் குகேஷ் கேட்க, “யெஸ் டா… திங்க்ஸ் எல்லாம் அடுக்கிட்டு இருக்கோம்!” என பதிலளித்தவாறே வீட்டின் ஜன்னலைத் திறந்துவிட்டு ரோஜா செடியை எடுத்து பால்கனியில் வைத்தாள் சந்தனா. அதை ஒரு முறை தொட்டுத் தடவினாள்.

“ஹம்ம்… இப்போ அங்க ட்ரான்ஸ்பராகிப் போகணும்னு என்ன அவசியம் உனக்கு?” இத்தோடு நூறு முறை கேட்டுவிட்டான். அவன் குரலில் ஆதங்கம் நிரம்பி வழிய, இவளுக்கு முறுவல் பூத்தது.

“அவசியம் வந்ததாலதான் டா கிளம்பிட்டேன். நான் நிம்மதியா இருக்கணும்னு நினைச்சதால இந்த முடிவு குகா!” என்றவள் செடிக்குத் தண்ணீர் ஊற்றினாள்.

மனோ அதைக் கைவைத்து தடுத்து அவள் மீது தெளிக்க, “மனோ… தண்ணில விளையாடாத. ஏற்கனவே கோல்ட் உனக்கு!” என்ற அதட்டலுடன் சின்னவனை உள்ளே அனுப்பினாள்.

“எல்லாம் அந்த மனோவால தானே?” குகா பல்லைக் கடிக்க, இவள் சிரித்துவிட்டாள்.

“சிரிக்காத டி. அவன் மட்டும் என் கையில கிடைக்கட்டும்!” அவன் கடுப்புடன் கூற, “என்னை மீறி உன்னால அவனை எதுவும் பண்ண முடியாது டா!” என்றாள் புன்னகையுடன்.

“பார்க்கலாம்… பார்க்கலாம்!” என்றவன், “எப்போ ட்யூட்டி ஜாய்ன் பண்ணணும்?” எனக் கேட்டான்.

“டூ டேய்ஸ் பெர்மிஷன் வாங்கியிருக்கேன். அப்புறம்தான் ஜாய்ன் பண்ணணும்!” பதிலளித்தாள் பெண்.

“சரி… சரி. அவ்வளோ தூரம் போய்ருக்க. உதவினா என்னால உடனே வரக் கூட முடியாது. அதுக்காக எதையும் என்கிட்ட சொல்லாம நீயா இழுத்துக்காத. ஃபோன் பண்ணு!” என்ற அறிவுறுத்தலுடன் அவன் அழைப்பைத் துண்டித்தான்.

“லட்சுமி மா… இப்போ குக் பண்ண வேண்டிய திங்க்ஸை மட்டும் எடுத்து வைங்க. ட்ராவல் பண்ணது டயர்டா இருக்கும். நீங்க ரெஸ்ட் எடுங்க. நான் பார்த்துக்கிறேன்…” என அவரை ஓய்வெடுக்க பணித்தவள், தாயின் புகைப்படத்தை எடுத்து கூடத்தில் மாட்டினாள்.

‘மிஸ் யூ மா‌‌…’ என அவருக்கு ஒரு முத்தத்தைக் கொடுத்துவிட்டு பொருட்களை கொஞ்சம் கொஞ்சமாக பிரித்தடுக்கினாள். மனோவிற்காக அவள் வாங்கிய பொருட்கள் அடங்கிய பை வர, அதை எடுத்துப் பரணியிலேற்றினாள்.

“ம்மா… உங்களுக்கு பர்பிள் ரோஸ்!” மனோகர் ஊதா நிற ரோஜாவை அவளிடம் நீட்ட, சந்தனாவின் முகம் புன்னகையில் மலர்ந்தது.

“இந்த கலர் ரோஸ் நம்மகிட்டே இல்லையே. ஏது டா?” அவள் அதட்ட,
“பக்கத்து வீட்டுல இருந்துச்சு. அந்த அங்கிள் பறிச்சுக்க சொன்னாரு!” எனக் கூறியவன்,

“திஸ் இஸ் ஃபார் யூ. வாங்கிக்கோங்க மா!” என்றான் அடமாய்.

சிரிப்புடன் சந்தனா அதை வாங்கிக்கொண்டு அவன் கன்னத்தில் முத்தமிட, சின்னவன் ஓடிவிட்டான். சந்தனா அந்தப் பூவை விரல்கொண்டு வருடினாள். மனம் ஓரளவிற்கு சமன்பட்டிருந்தது அவளுக்கு. அடுத்து என்னவென யோசித்து இங்கே புலம்பெயர்ந்துவிட்டாள்.

யாரோ கதவைத் தட்டும் சப்தமும் மனோ பேசும் குரலும் கேட்க, இவள் சென்று என்னவென விசாரித்தாள். பக்கத்து வீட்டிலிருப்பவன் வந்து பேசவும், இவள் மெல்லிய புன்னகையுடன் பதிலளிக்க, கூடத்திலிருந்த புகைப்படத்தில் பூரணி மகளின் சிரித்த முகத்தையே பார்த்திருந்தார்.

சுபம்

error: Content is protected !!
Scroll to Top