அன்பு – 25.2

“அடியே… அப்படியே சொல்லி வைப்பீயா நீ?” என்ற ரதி அதட்டலுடன் அலைபேசியை வாங்கும் குரலும் கேட்க, இங்கே சந்தனாவின் முகம் மலர்ந்து போனது.

“எங்க இருக்கீங்க? எப்போ வருவீங்க?” ரதி கேட்க, “ஃப்ரெண்ட் வீட்ல இருக்கேன் டி. நாளைக்கு வரேன்” என்றான்.

“உங்களுக்கு பெங்களூர்ல ஃப்ரெண்ட் இருக்கதா சொல்லவே இல்லை. மனோ அண்ணா வீட்டுக்குத்தானே போறேன்னு சொன்னீங்க. அதென்ன புது ஃப்ரெண்ட். எனக்குத் தெரியாம? என்ன திருட்டுத்தனம் பண்றீங்க? அங்கப் போய் குடிச்சீங்க, வீட்டுக்கு வராதீங்க. எங்கேயாவது சந்நியாசம் போய்டுங்க?” அவள் கண்டிப்புடன் கூற, இவன் முறைத்தான். சந்தனா சிரிப்புடன் அவர்களைப் பார்த்தாள்.

“நீயே பாரு அந்தப் ஃப்ரெண்டை…” என அவன் சந்தனாவிடம் அலைபேசியை கொடுத்தான். ரதி திருதிருவென விழித்துவிட்டு ஒரு அசட்டுச் சிரிப்பை உதிர்த்தாள்.

“ஹாய் ரதி?” இவள் சின்ன சிரிப்புடன் தன்னை அறிமுகம் செய்ய, முதலில் தயங்கினாலும் பின்னர் ரதி இவளிடம் சரளமாகப் பேசினாள்.

இடையே குழந்தையிடமும் பேசி முடித்து அவர்கள் அழைப்பைத் துண்டிக்க, “இவ்வளோ ஸ்வீட்டா இருக்காங்க ரதி?” என்று கேட்டவளைப் பார்த்து தீனா முகத்தைக் கோணினான்.

“சரி… வாங்க வீடியோ கேம் விளையாடலாம். ரெண்டு பேரும் என்னை அப்போ விளையாட கூப்பிட்டுட்டே இருப்பீங்க. நான்தான் வர மாட்டேன். இப்போ மனோகருக்காக வாங்குன ப்ளே ஸ்டேஷன் இருக்கு…” என்றவள் தொலைவியக்கியை கையிலெடுத்தாள்.

“மனோகர் யாரு?” மனோ கேட்க, அவனைத் திரும்பிப் பார்த்துப் புன்னகைத்தவள், “என் பையன்டா!” என்றாள்.

“அவன் யாருன்னு கேட்டேன் நான்!” மனோ அழுத்தமாகக் கேட்க,

“அதான் டா நானும் சொல்றேன். அவன் என்னோட பையன்…” என்றாள் இவளும் சளைக்காமல்.

“மனோவை அடாப் பண்ணியா குட்டி?” தீனா கேட்க, இவள் தலையை இடம் வலமாக இல்லையென அசைத்துப் புன்னகைத்தவள், “அவன்தான் என்னை அம்மாவா தத்தெடுத்துகிட்டான்!” என்றாள் உணர்ந்து.

“புரியலை எனக்கு?” தீனா முகத்தைச் சுருக்கினான்.

“ஹம்ம்… அது நான் ஒரு கிராமத்துக்கு மெடிகல் கேம்ப் போய்ருந்தேன்‌. அப்போதான் இவனை அங்கப் பார்த்தேன். ஒரு ஆக்ஸிடென்ட்ல பேரண்ட்ஸ் இறந்துட்டாங்க. தலையில ஒரு கட்டும் கையில ஒரு கட்டும் போட்டு இருந்தான்‌. என்ன நினைச்சான்னு தெரியலை என்னைப் பார்த்து ஓடி வந்து கட்டிப் பிடிச்சு மடியில முகத்தைப் புதைச்சு அழுதான். என்னமோ ஒரு மாதிரி என்ன சொல்லன்னுத் தெரியலை டா. அம்மான்னு கூப்ட்டு அழுதான். சரின்னு நான் சமாதானம் பண்ணேன். அப்புறம் சாப்பாடு எல்லாம் ஊட்டிவிட்டேன். சிஸ்டர் தான் இவனோட டீடெயில்ஸ் எல்லாம் சொன்னாங்க. கேஸ் ஷீட்ல பேரைப் பார்த்தா மனோகர்னு போட்டிருந்துச்சு டா. அப்புறம் அவனுக்கு நான் அம்மவாகிட்டேன்‌.

கடவுள் ஒரு மனோவை என்கிட்டே இருந்து பறிச்சாலும் இன்னொரு மனோவைக் கொடுத்துட்டாருன்னு நினைச்சு சட்டபடி அவனுக்கு அம்மாவாகிட்டேன் நான். ஃபர்ஸ்ட் அவனைப் பார்த்தப்போ எனக்கு மனோவை சின்ன வயசுல பார்த்த மாதிரிதான் இருந்துச்சு. அதான்… அப்படியே லட்சுமிமாவையும் கூப்ட்டுகிட்டேன். இவனுக்கு மைல்டா ஏ.டி.ஹெச்.டி இருக்கு. அப்படின்னா நார்மலை விட கொஞ்சம் அதிக ஆக்டீவா இருப்பாங்க. சோ நான், மனோ, லட்சுமி அம்மான்னு ஒரு ஃபேமிலியா மாறிட்டோம்!” என்றவளை இருவரும் அமைதியாய்ப் பார்த்தனர்.

“அம்மா போனப்புறம் யாருமே இல்லை டா. என்னதான் குகா யசோ இருந்தாலும் அவங்களுக்குத் தனிப்பட்ட வாழ்க்கை இருக்கு இல்ல. என்னையவே பார்த்திட்டிருக்க முடியுமா அவங்களால. அதனால தான் இந்த முடிவு.

ஹம்ம்… தனியா இருக்கதெல்லாம் ரொம்ப கொடுமை தீனா. ஒவ்வொரு நாளும் வீட்டுக்குள்ள நுழையும்போதே யாரும் இல்லாத வீடு முகத்துல அறைஞ்ச மாதிரியிருக்கும். சாப்டீயா, தலைவலிக்குதா? ஒரு காஃபி போட்டுத் தரவான்னு யாராவது கேட்டா நல்லா இருக்கும்னு தோணும்.

பட், யாருமே இல்லையேன்னு நானே பண்ணிப்பேன். சம்டைம்ஸ் எதுவுமே செய்யத் தோணாம அப்படியே படுத்துடுவேன். தனிமை ரொம்ப கொடுமைன்னு அப்போதான் எனக்குப் புரிஞ்சது.

வாழணும்னு எந்த ஒரு பிடிப்புமே இல்லை என்கிட்ட. யாருக்காக வாழணும்னு நினைச்சிட்டிருந்த நேரம்தான் இவங்க ரெண்டு பேரும் என் வாழ்க்கையில வந்தாங்க. என்னைப் பிடிச்சு வச்சிருக்கதும் அவங்கதான். மூனு நாள் மனோகர் வீட்ல இல்ல. அவனை ரொம்ப மிஸ் பண்ற மாதிரி ஃபீல். அவன் இருந்தா வீடே ரெண்டாகிடும். உனக்கு அது தெரியும் இல்ல மனோ?” என தீனாவிடம் ஆரம்பித்து மனோரஞ்சனிடம் முடித்தாள். அவன் பதிலே சொல்லவில்லை.

“இப்படி தனியா கிடந்து கஷ்டப்படணும்னு என்ன தலையெழுத்து உனக்கு?” தீனா கோபமாய்க் கேட்க, இவள் பதிலளிக்காது தொலைக்காட்சியை உயிர்ப்பித்தாள்.

“வாங்க ரெண்டு பேரும்… வீடியோ கேம் விளையாடலாம். சின்ன வயசுல விளையாடணும்னு அவ்வளோ ஆசை டா. பட் இப்போ இந்த கேம் வாங்கி எத்தனையோ வருஷமாச்சு. ஒருநாள் கூட நான் விளையாண்டது இல்ல. நம்மகிட்ட இருக்கதால இதோட மதிப்பு தெரியலை போல?” என அதிராமல் புன்னகைத்தவளை மனோ இறுக அணைத்துக் கொண்டான்.

அவனுக்கு அதிகமாய் வலித்தது. இத்தனை வருட தனிமை வாழ்க்கை, இந்தப் பெண்ணின் வாழ்வில் நடந்தது என அனைத்தையும் கேட்கும்போதே அவனுக்கு நெஞ்சடைத்தது. இவள் தங்களுக்காகவென அனைத்தையும் இலகுவாகக் கூறினாலும் அவள் கடந்து வந்த பாதையின் வலியும் வாதையும் அவனால் உணர முடிந்தது.

என் குட்டியின் வாழ்வில் இத்தனை துன்பங்களை அவள் சந்தித்திருக்க, எங்குமே தானில்லை என்ற எண்ணம் இன்னுமே அவனைக் கலங்க வைத்தது. ஆக மொத்தத்திற்கும் இந்தப் பெண்ணின் கண்ணீருக்கு முழுமுதற் காரணம் தான்தான் என்ற நினைப்பே அவனை உருக்கியது.

“ப்ம்ச்… விடு மனோ… இன்னும் கொஞ்ச நேரம்தான் இருக்கு. வாங்க விளையாடலாம்!” என்றாள் கெஞ்சலாய் அவன் முகம் பார்த்து. அவனும் பார்த்துக் கொண்டுதானே இருந்தான். சந்தனாவின் கண்கள் அடிக்கடி கடிகாரத்தை தொட்டு மீண்ட வண்ணமிருந்தன. நேரம் செல்ல செல்ல அவளின் தவிப்பான முகம் இவனை இறுக வைத்தது. அசையாமல் நின்றான்.

“எப்படி குட்டி இப்படியெல்லாம் பேசிட்டு, எதுவுமே நடக்காத மாதிரி விளையாடக் கூப்பிட்ற நீ? கேக்குற எங்களுக்கு நெஞ்சு வலிக்குது டி. நாங்க ரெண்டு பேர் இருந்தும் உன்னைத் தனியா விட்டுட்டோம்னு குற்றவுணர்வா இருக்கு டி. அவன், அவனுக்குத்தான் மறந்து போச்சு. பட், நான் நானும் உன்னை நினைக்கவே இல்ல டி!” என்றவன் குரலில் வருத்தம் கொட்டிக் கிடந்தது.

“ஏன் தீனா… உனக்கு ஒரு ட்வென்டீ ஃப்ரெண்ட்ஸ் இருப்பாங்களா?” என அவள் கேட்க, புரியாது நோக்கினான் தீனா.

error: Content is protected !!
Scroll to Top