அவன் லாவகத்தைப் பார்த்தவள், “மனோ… மேடம் உன்னை கிச்சன்குள்ள எல்லாம் விடுவாங்களா டா? இவ்வளோ நல்லா காய் கட் பண்ற?” அவள் குரல் பின்னே கேட்க, திரும்பாது பதிலளித்தான்.
“லண்டன்ல பீஜி பண்ணேன் குட்டி. அப்போ நானா குக் பண்ணி சப்பிடணும். சோ, கத்துக்கிட்டேன்!”
“பாருடா… பாரின் எல்லாம் போய்ருக்கீயா மனோ…” எனக் கேட்டவள், “ஆமா, மேடமும் சாரும் எப்படி இருக்காங்க டா?” எனக் கேட்டாள்.
“நல்லா இருக்காங்க. இப்போ அவங்க உனக்கு மேடம் சார் இல்ல. பூரணி ஆன்ட்டி எங்க வீட்ல வேலையும் பார்க்கலை. அதனால அப்படி கூப்பிட்டாத குட்டி!”
“ப்ம்ச்… எப்பவுமே அவங்க எனக்கு மேடம்தான் மனோ. அதையெல்லாம் மாத்த முடியாது. எப்படி இருக்காங்க. அவங்களுக்கு என்னை ஞாபகம் இருக்குமா டா? வேலைக்காரங்களை எல்லாம் ஞாபகம் வச்சிருக்க மாட்டாங்கல்ல டா…” அவள் மென்னகையுடன் கேட்க, மனோ அவளைப் பார்த்தாலும் பதில் கூறவில்லை.
“உன்கிட்டதான் கேட்குறேன் டா. பதில் சொல்லு!” அவள் அதட்ட,
“அதான் நீயே வேலைக்காரங்களை மறந்துருப்பாங்கன்னு சொல்லிட்டீயே. அப்புறம் எப்படி ஞாபகம் வச்சிருப்பாங்க!” அவன் கூறியதும், இவளது விழிகள் லேசாய் கலங்கின. பதில் பேசாது மௌனமாய் நின்றாள். அவள் கூறும்போது தெரியாதது அவன் அதைக் குறிப்பிடும்போது வலித்தது.
வேலைக்காரப் பெண்மணியின் மகள்தானே இவள். ஒருவேளை கடவுள் அதுதான் இவளை மனோவிடமிருந்து பிரித்துவிட்டாரோ? மனோவிற்கு நினைவு தப்பாமல் இருந்திருந்தால், சதாம்பிகா தன்னை மருமகளாக ஏற்றிருப்பாரா எனத் தோன்ற, கசந்த முறுவல் பிறந்தது.
“ஏன் மனோ உனக்கு மெமரி லாஸானதும் நல்லதுக்குத்தான். இந்த வேலைக்காரியோட பொண்ணை என்னைக்கும் உங்கம்மா மருமகளா அக்செப்ட் பண்ணியிருக்க மாட்டாங்க டா. ஷோபனா மாதிரி உங்களோட அந்தஸ்துக்கு ஏத்தவங்கதான் கரெக்ட். என்னதான் நான் படிச்சு முடிச்சு பெரிய டாக்டரா இருந்தாலும் நான் என்னைக்குமே உங்கம்மாவுக்கு வேலைக்காரியோட பொண்ணுதான் மனோ. என்னவோ அவங்களுக்கு என்னைக் கண்டாளே பிடிக்காதுல்ல டா. எனக்கு கூட பயமா இருக்கும் அவங்ககிட்டே பேச. ஆனால் சார் அப்படியில்ல. ரொம்ப ஸ்வீட் அவரு?” அவள் எதையோ பேச, மனோ அனைத்தையும் கேட்டாலும் எந்தவித எதிர்வினையும் இல்லை.
அழைப்பு மணி ஒலிக்க இவள் இறைச்சியை வாங்கி வந்து வைத்துவிட்டு அறைக்குச் சென்று ஒரு போர்வையை எடுத்து வந்தாள். தீனா நீள்விருக்கையில் படுத்தவாறே உறங்கியிருந்தான். அவனுக்குப் போர்த்திவிட்டு சமையலறைக்குள் சென்றாள்.
“மனோ… உன் போன் பாஸ்வேர்ட் என்ன டா?” அவள் கேட்க, சில நொடிகள் மௌனமாய் இருந்தவன், “ஷோபிஅஷூ…” என்றான்.
“சூப்பர் டா… ரெண்டு பேர் பேரையும் சேர்த்து வச்சிருக்கீயா நீ?” உண்மையான மகிழ்ச்சியுடன் கேட்டாள் சந்தனா. இவனுக்குத்தான் வலித்தது. சந்தனா எதாவது எதிர்வினையாற்றி இருந்தால் கூட அதை ஏற்றுக் கொண்டிருப்பான். அமைதியாய் எல்லாவற்றையும் இயல்பாகக் கடந்து விட்டேன் என்றவளிடம் உத்தமமாய் அவனுக்குப் பேச வார்த்தை இல்லை.
“மனோ… இதெல்லாம் உன் பெர்த்டேல எடுத்தது தானே. செம்மையா இருக்கு டா. இது டூர் போனப்போ எடுத்தீங்களா? இது எப்போ எடுத்தது. அஷூ பொறந்தப்போ எடுத்ததா? சகாயம் ஹாஸ்பிடல் தானே இது?” எனக் கேட்டவளை அவன் திரும்பிப் பார்க்க, சந்தனா ஒரு நொடி நிதானித்தாள்.
“உனக்கெப்படி தெரியும் குட்டி?” அவன் இறைச்சியை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொண்டே கேட்டான்.
“அது… அது, ஹம்ம். நான் தீனாவைப் பார்க்கும் போது அவன்தான் சொன்னான்!” என்றாள்.
“மனோ… இதென்ன உங்க மேரேஜ் அப்போ எடுத்ததா? ரொம்ப அழகா இருக்கு டா. ஷோபியைப் பாரேன். அழாக வெள்ளையா பொம்மை மாதிரி இருக்காங்க. உன்னோட அப்பியரன்ஸ்க்கு அவங்கதான் கரெக்டா இருப்பாங்க.
கல்யாண போட்டோல அவங்களோட கண்ணுல அவ்வளவு சந்தோஷம் இருக்கு மனோ. அப்போ மட்டும் இல்ல, ஒவ்வொரு டைம் ஷோபனா உன்னைப் பத்தி பேசும்போதும் அவங்க கண்ல சந்தோஷம் இருக்கும் டா. அந்த அளவுக்கு அவங்களுக்கு நீன்னா பிடிக்கும் மனோ. உனக்கே தெரியும் தானே?” என அவள் கேட்க,
விசிலை எடுத்து காமைக் கலத்தை மூடிய மனோ ஒரு பெருமூச்சுடன் அவளைத் திரும்பி ஊன்றி கவனித்தவன், “நீ என்ன ப்ரூஃப் பண்ணணும்னு நினைக்கிற குட்டி?” எனக் கேட்டான்.
“நான்… நான் என்ன ப்ரூஃப் பண்ண நினைக்கப் போறேன் மனோ. அப்படிலாம் இல்ல டா. சும்மா சொன்னேன்!” சந்தனா குரல் வெகுவாய் தடுமாறியது.
அவனும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறான். அவள் பேச்சின் தாத்பரியம் முழுவதும் ஷோபனா மட்டும்தான் அவனுக்கு மிகப் பொருத்தமானவள், சிறந்தவள். நான் எந்த வகையிலும் உனக்கு நிகரல்ல, பொருத்தமற்றவள் என அவர்களுக்கிடையே இல்லாத காரணங்களை அடுக்கி அவனை சமாதானப்படுத்த முயன்றாளா? இல்லை தன்னைத் தானே சமாதானம் செய்து கொள்ள விழைந்தாளா என்பது அவள் மட்டுமே அறிவாள்.
“நீ பேசுற எல்லாம் அப்படித்தான் இருக்கு குட்டி. எனக்கு எல்லாம் புரியுது!” அவன் கொஞ்சம் குரலில் கடுமையைக் கூட்ட,
“ச்சு… மனோ இதெல்லாம் எதார்த்தம் டா. நான் சொல்லும்போது கோபம் வரலாம். பட், இது உண்மை!” அவள் அதிராமல் புன்னகைத்துக் கூற,
அவள் முழங்கையின் மேலே பற்றிய மனோ, “இந்த மனோ உன்னை மறக்காம இருந்திருந்தா இந்த எதார்த்தம் எந்த வகையிலும் என்னைத் தடுத்திருக்காது குட்டி!” என்றவனின் பார்வையும் வார்த்தையும் சந்தனாவை வாயடைத்துப் போக செய்தன. அவன் கூறித்தான் தெரியவேண்டும் என்றில்லை. அவள் மனதுக்கும் சர்வ நிச்சயமாய் தெரியுமே. இருந்தாலும் அவனாகக் கூறும்போது கொஞ்சம் வலித்தது.
மெதுவாய் விழிகள் கலங்கின அவளுக்கு. காமைகலத்தின் விசில் சத்தம் இருவரையும் நிதானத்திற்கு கொண்டுவர, “மனோ… விசில்… விசிலடிக்குது பாரு…” என அவள் அவனது கையை விலக்கிவிட்டு கண்களில் வழிந்த நீரைத் துடைத்தாள்.
மனோவினருகே சென்று அவன் கரத்துடன் தன் கைகளைப் பிணைத்தவள், “சாரி மனோ… நான் உன்னைக் கஷ்டப்படுத்த சொல்லலை டா. உனக்கு… உனக்கு எதார்தத்தைப் புரிய வைக்கத்தான் முயற்சி பண்ணேன்!” என்றாள் வருத்தமான குரலில்.
“பட் அந்த எதார்த்தம் என்னைக் கொஞ்சம் கொஞ்சமா கொன்னுட்டிருக்கு குட்டி. உன் வாழ்க்கையை நான் கெடுத்திட்டேன்ற நினைப்பு என்னை சும்மாயிருக்க விடாது டி!” மனோவின் கண்களின் ஓரம் ஈரம் படர்ந்தது.
“ச்சு… மனோ, என்ன டா?” என அவன் கண்ணீரைத் துடைத்துவிட்டவளின் கையைப் பிடித்துக் கொண்டவன், “எப்போ இங்க இருந்து கிளம்புற?” எனக் கேட்டான்.
ஒரு நொடி அவளிடம் அதிர்ந்த பாவனை. அதை நொடியில் மறைத்தவள், “என்ன… எங்க கிளம்புறேன் டா?” என சமாளிக்க முயன்றாள்.
“நான் உன் ட்ரான்ஸ்ஃபர் லெட்டரைப் பார்த்துட்டேன்!” மனோ வேதனையுடன் அவளைக் குற்றம் சுமத்தினான்.
“ப்ம்ச்… பார்த்துட்டீயா டா?” இத்தனை நேரப் பதற்றம் தணிந்துவிட, சமையல் மேடையில் இலகுவாய் சாய்ந்து நின்றாள். முகத்தில் மெல்லிய புன்னகை படர்ந்தது.
“உன்னை ஃபர்ஸ்ட் டைம் மீட் பண்ணும் போதே நான் ட்ரான்ஸ்ஃபர் கேட்டுட்டேன் டா. அந்த லெட்டர் என் கைக்கு வந்து ரொம்ப நாளாச்சு. ஆனாலும் உன்னைவிட்டு போக மனசே வரலை மனோ. முதல்ல உன்னையும் ஷோபியையும் சேர்த்து வச்சுப் பார்க்கும்போது அழுதேன் தான். கொஞ்சம் வருத்தம், பொறாமைன்னு எல்லாமே வந்துச்சு டா. ப்ச்… நான் ஒன்னும் முற்றும் துறந்த முனிவரெல்லாம் இல்ல டா. எனக்கும் வலிக்கும் இல்ல மனோ?” எனக் கேட்டவளின் கண்களிலிருந்து சரசரவென நீர் வழிந்தது. அதைத் துடைத்துவிட்டு தொடர்ந்தாள்.