“ப்ம்ச்… என்ன டா நீ. இங்க வா, என் பக்கத்துல வந்து உக்காரு!” என அவனைத் தன்னருகே இருத்தியவள்,
“இதெல்லாம் உனக்காகத்தான் வாங்குனேன் மனோ!” என்றவள் ஒரு சிறிய பெட்டியை மட்டும் கைக்குள் ஒளித்து வைக்க முயன்றாள்.
ஆனாலும் அது அவன் கண்களில் பட்டுவிட, “குட்டி, என்ன அது?” எனக் கேட்டான்.
“ஒன்னும் இல்ல மனோ… அது… அது அம்மாவோட செயின் அதுல இருக்கு!” திக்கித் திணறி அவன் முகம் பார்க்காது உரைத்தவளின் கையிலிருந்ததை பிடுங்கியவன் திறந்து பார்க்க, உள்ளே ஒரு தங்கத்திலான கழுத்தணி இருந்தது. எடுத்துப் பார்த்தான்.
இரண்டு இதயங்கள் ஒன்றிணைந்திருக்க, அதில் மனோ குட்டி என ஆங்கிலத்தில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன. அவன் எதுவும் பேசாது அவளைப் பார்த்தான்.
“ஃபர்ஸ்ட் மந்த் சேலரி வந்ததும் உனக்கு மெமரபிளா எதாவது வாங்கணும்னு தோணுச்சு மனோ. அதான் சும்மா… நான் கிறுக்கு மாதிரி இதை வாங்கி வச்சேன் டா. ப்ம்ச்… இப்போ பார்த்தா ரொம்ப க்ரிஞ்சா இருக்குல்ல?” புன்னகைக்க முயன்ற குரலின் பின்னிருந்த வலிகள் ஏராளம்.
தன்னுடைய காதலை, மனோவின் மீதான நேசத்தை, அவனுக்காக சேர்த்து வைத்திருந்த பிரியத்தை, உரைக்கும்போது அவனுக்குப் பரிசளிக்க வாங்கியிருந்தாள் பெண். இந்த கழுத்தணியை தேர்வு செய்ய அவள் எத்தனை மெனக்கெட்டாள் என நினைவிற்கு வந்ததும் விரக்தி சிரிப்பு உதிர்ந்தது. அப்போதே இதெல்லாம் பயன்படாது பரணியிலேறியிருக்கும் எனத் தெரிந்திருந்தால் என்ன செய்திருப்பாள் என யோசிக்கும்போது மூளை சற்றே மந்தமாகி செயலிழந்துவிட்டது போல. எதுவுமே தோன்றவில்லை.
மனோ அந்தக் கழுத்தணியைத் தொட்டு தடவிப் பார்த்தான். ஏனோ அழுகையாய் வந்தது அவனுக்கு. வேண்டாம் என்று மறுத்தப் பெண்ணின் வாழ்க்கையில் இவன்தானே காதல், திருமணம் என்ற வார்த்தைகளை கட்டாயமாகப் புகுத்தியிருந்தான். தான் அப்போது இப்படியெல்லாம் நடந்திருக்கா விட்டால் இற்றைக்கு இந்தப் பெண் இத்தனை ரணப்பட்டிருக்க மாட்டாளே என அவளுக்காக மனம் வெந்து தணிந்தது.
“சாரி டி…” என்றவனின் குரலில் இருந்த வேதனையில் சந்தனாவுக்குத் துடித்துப் போனது.
“ப்ம்ச்… மனோ. நான் ஏதோ லூசு மாதிரி பண்ணியிருக்கேன். நீ அதெல்லாம் நினைச்சு ஃபீல் பண்ணாத டா!” என்றவள், “டைம் ட்வெல்லாச்சு. லஞ்சுக்கு என்ன சமைக்கலாம்?” எனப் பேச்சை மாற்றினாள்.
“அது ஒன்னுதான் இப்போ குறை…” என்ற முணுமுணுப்போடு தீனா அறையைவிட்டு அகன்றான்.
எப்போதடா இந்த வீட்டைவிட்டு வெளியேறுவோம் என அவன் மனம் தவித்தது. சந்தனா கடந்து வந்தப் பாதையைப் பற்றிக் கேட்கும்போதே தனக்கு இத்தனை வலிக்கிறதே. இந்தப் பெண் எப்படி தவித்திருப்பாள் என நினைத்து இவனுக்கு துடித்தது. என்ன இருந்தாலும் அவர்களின் குட்டியாகிற்றே சந்தனா. அவளைக் கஷ்டப்படுத்தி விட்டோம் என்ற நினைப்பே அவனைக் குற்றக்குழியில் தள்ளியது.
“மனோ… உன்கிட்டதான் கேட்டேன் நான். என்ன குக் பண்ணலாம்?” என சந்தனா அவனை உலுக்க, “நான் செத்துப் போயிருந்தா, என்ன பண்ணிருப்ப குட்டி?” எனக் கேட்டவனிடம் இவள் பார்வையால் கண்டனம் தெரிவித்தாள்.
“ப்ம்ச்… இந்த மாதிரியெல்லாம் பேசாத டா. கோபமா வருது. கன்ட்ரோல் பண்ண முடியாம அடிச்சிடப் போறேன்!” என சந்தனா வருத்தமும் ஆதங்கமுமாய்ப் பேசினாள்.
“நான் செத்திருந்தா என்ன பண்ணியிருப்ப நீ?” அதேக் கேள்வியைக் கேட்டவனை முறைத்தவள்,
“நான் கண்டிப்பா செத்துப் போயிருக்க மாட்டேன் மனோ. அந்தளவுக்கு நான் சுயநலவாதி இல்ல. நான்… நான் ஈஸியா செத்துடுவேன். பட், என் கூட இருக்கவங்க காலம் முழுக்க என்னை நினைச்சு கஷ்டப்படுவாங்க இல்ல?” எனக் கேட்டு நிறுத்தியவள்,
“ஹாஹா… பாரு மனோ. நான் கூட இருக்கவங்க, எனக்கானவங்கன்னு சொல்லும்போது யாரை சொல்றன்னு என் மனசே கேள்வி கேட்குது டா. யார் இருக்கா எனக்கு. அம்மாவும் என் கூட இல்லை. நீயும் இருந்திருக்க மாட்ட.
ஹம்ம்… எவ்வளோ யோசிச்சாலும் வேற யாருமே வர மாட்றாங்க. ச்சு, என் குகா இருக்கான். யசோ இருக்கா. அவங்க ரெண்டு பேரும் எனக்காக பீல் பண்ணலாம். அப்புறம் என் மனோ… மனோ நான் இல்லாம தவிச்சுப் போய்டுவான்.
அம்மா, அம்மான்னு என் பின்னாடியே சுத்தி வர்றவன் அவன். அப்புறம் லட்சுமி மா. அவங்களுக்கு என்னைவிட்டா யாரும் இல்ல டா. அவங்க தனியா நின்னுப் போய்டுவாங்க. இந்த நாலு பேருக்காகவாது வாழ்ந்திருப்பேன் டா!” என்றாள் விளையாட்டான குரலில்.
ஆனாலும் அந்தக் குரல் அவனை வலிக்க வலிக்க அடித்தது. நீ எனக்காக இல்லை என்றுரைக்கிறாளா என காயம்பட்ட குழந்தையாய் அவளை நோக்கினான்.
சில நொடிகள் மௌனமாய் இருந்தவள், “கடவுள் அந்த அளவுக்கு எனக்கு கஷ்டத்தைத் தர மாட்டாரு மனோ. அவருக்கும் மனசாட்சி இருக்குல்ல. என்னால எவ்வளோ கஷ்டத்தை தாங்க முடியும்னு தெரிஞ்சுதான் இதெல்லாம் கொடுத்திருக்காரு. நீ… நீ என் கூட இல்லைன்றது மட்டும்தான் மனோ இப்போதைக்கு குறை. அது கூட நீ ஷோபனாவோட சந்தோஷமா வாழ்றதைப் பார்த்து, கரைஞ்சு காணாமப் போய்டுச்சு.
உன் முகத்துல சிரிப்பை பார்த்தா, என் கஷ்டம் எல்லாம் பறந்துடும்டா. சப்போஸ் நீ சொன்ன மாதிரி நடந்திருந்தா, நீ இல்லாத உலகத்துல வாழ்ற ஒவ்வொரு நிமிஷமும் எனக்கு நரகம்தான். அப்படியெல்லாம் கடவுள் என்னை விட்ற மாட்டாரு டா. நீ… நீ ஷோபனா, அஷ்வின் அப்புறம் ஷோபி மாதிரி அழகான ஒரு பெண் குழந்தைன்னு சந்தோஷமா மனசு நிறைஞ்சு நீ வாழணும் மனோ!” என்றவள், அன்பாய் அவன் கையைத் தட்டிக் கொடுத்தாள்.
“நான் மட்டும் வாழ்ந்தா போதுமா டி. நீ எப்போ சந்தோஷமா வாழ்றது. உனக்காக ஒரு வாழ்க்கையைத் தேடிக்கோ குட்டி!” என்றவனின் பேச்சு உவப்பாய் இல்லை என்பதை முகத்தைச் சுளித்து வெளிப்படுத்தினாள்.
“இந்த மாதிரியெல்லாம் என் மனோ என்னைக்கும் பேச மாட்டான். யாருக்காகவும் என்னை அவன் விட்டுக் கொடுக்க மாட்டான் டா. பட் நீ என் மனோ இல்லைல. அதனாலதான் இப்படி பேசுற?” கலங்கிய கண்களை சிமிட்டியபடி பேசியவளைப் பார்த்த மனோ,
“யூ ரிசர்வ் பெட்டர் லைஃப் டி. நான்… நான் வேணாம் குட்டி. பார்த்த முதல் நாள்ல இருந்தே உன்னை அழ மட்டும்தானே வைக்கிறேன் நான். அப்படிப்பட்டவனுக்காக ஏன் டி இவ்வளோ பண்ற?” எனத் தொண்டை அடைக்க கேட்டான்.
“ப்ம்ச்… என் மனோவுக்கு நான் அழுதா பிடிக்காது டா. மனசறிஞ்சு அவன் என்னை அழ விடுவான்னு நினைக்கிறீயா என்ன?” எனக் கேட்டவள் தலையை இடம் வலமாக அசைத்தாள்.
மனோ வேதனையுடன் அவளைப் பார்க்க, “பேசிட்டே இருந்தா, கிச்சன்ல சமையல் அதுவா ஆகிடுமா மனோ. பசிக்குது டா!” என்றவள்,
“உனக்கு குக் பண்ணத் தெரியும்னு ஷோபி சொன்னாங்க. எனக்காக எதாவது சமைச்சு தரீயா டா? உன் கையால சாப்பிடணும் எனக்கு…” ஆர்வமாய்க் கேட்டாள். மனோ அவளை வெறுமையாய் பார்த்தான்.
“ப்ம்ச்… உனக்கு இஷ்டம் இல்லைன்னா வேணாம் மனோ. ஷோபனா உன் வொய்ஃப், அவங்களுக்கு சமைச்சு கொடுப்ப. நான் வெறும் ஃப்ரெண்ட் தானே. எனக்கெதுக்கு நீ மெனக்கெட்டு செய்யணும். நானே எதாவது குக் பண்றேன்!” முனைத்துக்கொண்டு முந்தியை உதறிவிட்டு சந்தனா நடந்து செல்ல, ரஞ்சன் முகத்தில் முறுவல் பூத்தது.
“என்ன வேணும் குட்டி?” அவன் குரல் அவளது நடையை மொத்தமாய் நிறுத்த, நொடியில் திரும்பினாள்.
“நிஜமாவா மனோ?” கண்களை விரித்து ஆசையாய் ஆர்வமாய்க் கேட்ட பெண்ணை கண்களில் நிரப்பிக் கொண்டான். சிறுவயது சந்தனா நினைவிற்கு வந்தாள். அவளும் இப்படித்தான் அவன் கூறும் பொய்களை எல்லாம் கண்களை விரித்துக் கேட்பாள். மனோ தலையை அசைத்தான்.
“என்ன வேணும் உனக்கு?”
“ஹம்ம்… கறிசோறு வேணும் டா!”
“பிரியாணி!” அவன் திருத்த, “ச்சு… எனக்கு அது கறிச்சோறுதான். சமைச்சு தருவீயா மாட்டீயா?” அவள் அடமாய் நிற்க, மனோ தலையை அசைத்தான்.
“ஓகே, நான் சிக்கன் ஆர்டர் போட்றேன். ஹாஃப் அன் அவர்ல வந்துடும் டா. நீ அதுக்குள்ளே தேவையானதை செய்!” என்றவள் அலைபேசியில் தலையைப் புதைத்தாள்.
மனோ அகல, இவள் இறைச்சியை முன்பதிவு செய்துவிட்டு சமையலறைக்குள் நுழைந்தாள். மனோ எது எங்கே இருக்கிறது எனத் தடுமாற, “மனோ… என்ன வேணும்னு சொல்லு டா. நான் எடுத்துத் தர்றேன்!” என இவள் உதவ, அவன் வெங்காயத்தையும் தக்காளியையும் நறுக்கினான்.