“சாரி டா, சாரி. நான் எதுவுமே பேசலை. சந்தோஷமா இருக்கணும்னு நினைக்கிறேன். ஆனாலும் எதையாவது பேசி உங்களை அப்செட் பண்ணிடுறேன். மூளை சொல்றதை மனசு கேக்க மாட்டுது டா. இன்னைக்கு ஒருநாள் தானே உங்க கூட பேச முடியும். அதனால மனசுலப்பட்டது எல்லாம் வந்துடுது டா!” சங்கடமாய் அவனைப் பார்த்துக் கூறினாள்.
மனோ அவளுக்கு உணவை ஊட்ட வர, “இல்ல… இல்ல மனோ. நீ சாப்பிடு!” என மறுத்தாள்.
“நீயும் சாப்பிடு குட்டி!” என அவன் கூற, “ஹம்ம்…நான் தனியா பிளேட்ல சாப்பிட்டுக்குறேன் டா…” என்றாள் தயக்கமாய்.
“நான் ஊட்டுனா நீ சாப்பிட மாட்டீயா குட்டி?” அவன் வேதனையுடன் கேட்க,
“அச்சோ… அது… அப்படியெல்லாம் இல்ல டா. எனக்கு ஒருமாதிரி கில்டா இருக்கு டா. ஷோபனாக்குத் துரோகம் பண்றமோன்னு ஒரு எண்ணம். அவங்களுக்கு இதெல்லாம் தெரியாது. என்னை ஒரு நல்ல ஃப்ரெண்ட்னு நம்புறாங்க. அப்படி இருக்கும்போது அவங்க நம்பிக்கையை உடைக்க கூடாதுன்னு மனசு பதறுது டா…” சந்தனாவின் குரலில் கொட்டிக் கிடந்த நிராசையில் மனோவின் மனம் ஆர்பாட்டம் இன்றி கத்திப் பேரிரைச்சலிட்டது போல.
ஏனோ இந்நொடியை இந்தப் பெண்ணை அவனால் கடக்க முடியாது. காலம் முழுவதும் இந்தத் தண்டனையில் தான் வாழ்ந்து செத்து மடிய வேண்டுமா என குற்றவுணர்வு கொஞ்சம் கொஞ்சமாக அவனைக் கொன்று தின்றது.
“ஷோபனாவுக்கு நான் ரஞ்சன். பட், என் குட்டிக்கு எப்பவுமே நான் மனோ. அவளுக்குப் போகத்தான் எல்லார்க்கும்!” என்றவன் பேச்சில் சந்தனா முகத்தில் புன்னகை மலர்ந்தது. ஆசையாய் அவன் கொடுத்த உணவை வாங்கி உண்டாள். மூவரும் உண்டு முடிக்க, அவர்களை அறைக்குள் அழைத்துச் சென்றாள்.
“தீனா, பீரோ மேல ஏறி அந்த பையை எடு டா…” என்று அவள் கூறவும், தீனா அந்தப் பையை கீழே இறக்கினான்.
“உன்னை மறந்துட்டேன்னு சொன்னல்ல தீனா. நான் மனோவையும் உன்னையும் எப்பவுமே நினைச்சுப்பேன் டா. எங்கப் போனாலும் நீங்க ரெண்டு பேரும் எனக்கு ஞாபகம் வருவீங்க. உங்களுக்காகன்னு நான் நிறையா வாங்கி வச்சிருந்தேன். மீட் பண்ணும்போது கொடுக்கலாம்னு. பட், சிட்சுவேஷன் அமையலை டா!” எனப் பேசிக்கொண்டே அந்தப் பையின் கடவுச்சொல்லான ஆறிலக்கத்தை அழுத்தி திறந்தாள்.
மனோவினுடைய பிறந்த தேதி தான் அவளுடைய கடவுச்சொல். சந்தனாவின் அனைத்திலும் தான் மட்டுமே நிறைந்திருக்கிறோம் என அவனால் மனதார உணர முடிந்தது. அவளை வேதனை ததும்பும் முகத்துடன் பார்த்திருந்தான்.
“இங்க பாரு தீனா… இந்த வாட்ச், பெர்ஃப்யூம், பிரேஸ்லெட். அப்புறம் உனக்காக இந்த ஷர்ட் எல்லாம் வாங்குனேன்…” என அவள் ஆசையாய்க் காண்பிக்க, தீனாவின் விழிப்படலத்தை நீர் சூழப் பார்த்தது.
“இங்க உக்காரு டா. இதெல்லாம் நல்லா இருக்கா? வாங்கி ஒரு ஏழெட்டு வருஷம் இருக்கும்ல. ரொம்ப ஓல்டா இருக்கே. இதெல்லாம் நீ யூஸ் பண்ணலைனாலும் பரவாயில்லை. சும்மா என் ஞாபகமா வச்சுக்கோடா!” என்று சிறுமி போல ஆர்வமாய்க் கூறியவளை இவன் அன்பாய்ப் பார்த்தான்.
“என் குட்டி வாங்கிக் கொடுத்திருக்கா.பழைய மாடலா இருந்தாலும் நான் யூஸ் பண்ணுவேன்!” என அவன் குரல் சற்றே கரகரத்து வர, சந்தனா அவனை வாஞ்சையாய்ப் பார்த்தாள்.
“ஏன் தீனா, என்னைக் கேட்குறல்ல நீ? ஒரு நாளாவது நீ என்னை நினைச்சுப் பார்த்திருக்கீயா டா. நான் எல்லாம் உன் ஞாபகத்துலயே இருந்திருக்க மாட்டேன் இல்ல?” இவள் அவனை மென்மையாய் முறைக்க, தீனா அவளருகே அமர்ந்து தோழியைத் தோளோடு அணைத்தான்.
“உண்மையை சொல்லவா? பொய் சொல்லவா?” அவன் கேட்க, “வலிச்சாலும் பரவாயில்லை. நீ உண்மையை மட்டும் சொல்லு டா!” என்றாள் சின்ன சிரிப்புடன்.
“ரொம்ப நினைச்சதுல்ல குட்டி. மனோவுக்கு ஆப்ரேஷன் பண்றதுக்கு முன்னாடி வரைக்கும் எப்போ கால் பேசுனாலும் குட்டி அது பண்றா, இது பண்றான்னு அவன் சொல்லிட்டே இருப்பான். நீ டென்த்ல ரேங்க் ஹோல்டர் இல்ல? அப்போ அதை சொல்லி சொல்லி என்னமோ இவனே மார்க் எடுத்த மாதிரி பீத்துவான். அப்போ எல்லாம் உன்னைப் பத்தி பேசிட்டே இருப்போம் டி. அதனால மறக்கலை.
அப்புறம் அவனுக்கு ஆப்ரேஷன் முடிஞ்சப் பிறகு, நானும் உன்னைப் பத்தி சொல்லலை. அப்படியே விட்டுப் போச்சு. மறந்துட்டோம். ஆனா காலேஜ் முடிச்சிட்டு வேலைக்கு ட்ரை பண்ணிட்டு இருந்த நேரம் ஒருநாள் மனோ கால் பண்ணி, ‘குட்டின்னு யாரையும் தெரியுமா டா? இந்தப் பேர், ஒரு பொண்ணு என் கனவுல வந்து ரொம்ப டிஸ்டர்ப் பண்றா. என்னால எந்த வேலையும் பார்க்க முடியலை. தலையெல்லாம் வலிக்குதுடா’ன்னு புலம்புனான்.
எனக்கும் உன்னைப் பத்தி சொல்ல ஆசைதான். ஆனால் டாக்டர் சொன்னதை நினைச்சு எதுவும் ஷேர் பண்ணலை. அதுவும் இல்லாம நிறைய வருஷமாகிடுச்சு. நீயும் உன் வாழ்க்கையைப் பார்த்துட்டு இருப்ப. இடையில இவன் வந்து எதுவும் டிஸ்டர்ப் பண்ணக் கூடாதுன்னு சொல்லலை டி…” என்றவனை இவள் சிரிப்புடன் நோக்கினாள்.
“சாரி குட்டி… எனக்குத் தெரியாது. நீ மனோவை இவ்வளோ விரும்பியிருக்க, அவனுக்காக காத்துட்டிருக்கன்னு தெரியாது டி. தெரிஞ்சா அப்போவே நான் மனோகிட்டே சொல்லி இருப்பேன்!” என்றவன் குரல் வருத்தத்தில் தோய்ந்து விழ, சந்தனா முகம் மாறவேயில்லை. புன்னகையும் வாடவில்லை.
“மனோவும் நானும் வாழ்க்கைல சேரணும்னு விதியிருந்தா, நீ அப்போவே சொல்லி இருப்ப டா. பட், அவனுக்கு என்னைவிட பெட்டரான ஷோபனா வொய்ஃபா வரணும்னு கடவுள் நினைச்சு அவங்களை அவர் கூட சேர்த்து விட்டிருக்காரு.
இப்போ அஷ்வினும் அவுங்க காதலோட அடையாளம். சோ, நீ இப்படி பேசாத டா. இட்ஸ் ஆல் ஃபேட். நம்ப ஏத்துக்கிட்டாலும் இல்லைனாலும் உண்மை மாறாது இல்ல. அதனால இதையே நினைச்சு நீ ஃபீல் பண்ணாத டா. நானே எல்லாத்தையும் ஓவர் கம் பண்ணிட்டேன்!” என்றாள்.
நான் நன்றாய் இருக்கிறேன் எனப் புன்னகைத்தாள். மனோவின் புறம் அவள் பார்வை செல்லவே இல்லை. நடந்து முடிந்தது என்றாலும் கூட நினைவிழந்தப் போதும் கூட தன் மனோ தன்னை கைவிட நினைக்கவில்லை என மனம் உவகையில் நனைந்து தோய்ந்தது.
மனோ சந்தனாவைத்தான் பார்த்திருந்தான். அவன் கண்இரைப்பைகள் நீரை உகுக்கத் தயாராகின. முயன்று கட்டுப்படுத்திக்கொண்டு நின்றான்.
“எனக்கு வாங்குனதை என்கிட்ட கொடுக்க மாட்டீயா டி?” தனக்குப் பின்னே கேட்ட குரலை அலட்சியம் செய்ய முயன்று தோற்றவள், சின்ன புன்னகையுடன் முடியாது என தலையை அசைத்தாள்.
“ஏன்?” அவன் பார்வை கேள்வியைத் தாங்கி நின்றது.
“ஏன்னா… ஏன்னா இதெல்லாம் என் மனோவுக்காக வாங்குனது. இதோடதான் நான் வாழ்ந்துட்டு இருக்கேன். அவன்… அவன் என்னைத் தேடி வரும்போது கொடுக்கலாம்னு பத்திரப்படுத்தி வச்சிருந்தேன். ஒருநாள் அவன் வரமாட்டான்னு தெரிஞ்சதும் வலிக்கத்தான் செஞ்சுது. இருந்தாலும் இது அவனுக்காக வாங்குனது. வேற யாருக்கும் கொடுக்க சத்தியமா எனக்கு மனசு வராது டா!” என்றாள் வலி மிகுந்த குரலில்.
“அப்போ நான் உன் மனோ இல்லையா குட்டி?” அவன் அடிப்பட்டக் குரலில் கேட்க, சில நிமிடங்கள் அவனையே பார்த்திருந்தவள்,
“இப்போ இருக்கது என் மனோதான். பட் நீ என் ஃப்ரெண்ட் டா. காலைல நான் சொன்னதுதான். நான் உன் கூட டைம் ஸ்பெண்ட் பண்ண நினைச்சது ஒரு ஃப்ரெண்டாதான். மத்தபடி இதெல்லாம் கொடுக்குறதுக்கு இல்ல. இது… எந்த உரிமைல கொடுக்குறது? அப்படியே நான் குடுத்தாலும் ஷோபி ஏன், ஏதுன்னு கேட்காம இருப்பாங்களா என்ன?
எனக்காக நீ அவங்ககிட்டே பொய் சொல்லி, நாளைப் பின்னே ஏதும் தெரிஞ்சா, அவங்க வருத்தப்படுவாங்க டா. என்னை வச்சு என்னைக்கும் உங்களுக்குள்ள சண்டை வரக் கூடாது. நீங்க எப்பவுமே இதே அன்போட சந்தோஷமா இருக்கணும் மனோ. இப்போ ஷோபி ப்ரெக்னன்டா வேற இருக்காங்க. நீ… நீ இந்த மாதிரி நேரத்துல அவங்களை இன்னும் நல்லா பார்த்துக்கணும் டா!” என்றாள் அவன் கையை அழுத்திப் பிடித்து.
உன்னுடைய சந்தோஷத்தில்தான் நான் வாழ்கிறேன் என வார்த்தையில் உரைக்காது செயலில் காட்டியிருந்தாள் சந்தனா. மனோவுக்கு இந்தப் பெண்ணின் அன்பைத் தாங்கவே முடியவில்லை.
அவளின் ஒவ்வொரு செயலிலும் வார்த்தையிலும் மனோவின் மீதான பிரியமே கொட்டிக் கிடந்தது. ஏனோ அதை நினைத்து சந்தோஷப் பட முடியாத இடத்திலிருந்தான் இந்த துர்பாக்கியசாலி மனோரஞ்சன்.
“இதை நான் பார்க்கலாமா? இல்ல, அதுக்கும் பெர்மிஷன் இல்லையா?” என்ன முயன்றும் கோபத்தைக் காண்பிக்க முடியாது மனோவின் குரல் ஆதங்கத்தில் தோய்ந்தது.