“நேத்துல இருந்து அவர் முகத்துல அந்த ஸ்மைல் குறைஞ்சு போச்சுன்னு வருத்தமா இருக்கு. அவர் சந்தோஷமா இருந்தா தானே, நான்… ஐ மீன் நம்ப சந்தோஷமா இருக்க முடியும். நான் இப்போ பேசறது அவருக்கு கஷ்டமா இருந்தாலும், இன்னும் ஒரு வாரம்… அதிகபட்சம் ஒரு மாசம் கழிச்சு அவர் யோசிச்சார்னா, என் பேச்சோட பிராக்டிகல்னெஸ், நியாயம் எல்லாம் புரியும் டா!” சந்தனா மனோவின் முகத்தைப் பார்க்காது ஒட்ட வைத்தப் புன்னகையுடன் கூறினாள்.
“இப்போ ஃபைனலா என்ன சொல்ல வர்ற நீ?” தீனா கொஞ்சம் கோபமும் ஆதங்கமுமாய்க் கேட்டான்.
“ப்ம்ச்… தீனா, கோபப்படாத டா. பெருசா ஒன்னும் இல்ல. ரஞ்சன் இனிமே என்னைப் பார்க்க வரக்கூடாது. முக்கியமா மனோவா வரக்கூடாது. என்ன நடந்துச்சுன்னு கேட்க கூடாது. அதெல்லாம் ஜஸ்ட் பாஸ்ட் டா. அதை ஞாபகப்படுத்தி என்ன பண்ணப் போறோம் நம்ப? இப்போ நம்ப என்னவா இருக்கமோ, அதுதான் நம்பளோட பெர்மனென்ட் லைஃப். அதை அக்செப்ட் பண்ணிட்டு அவர் நிம்மதியா சந்தோஷமா இருக்கணும். இதை தவிர வேற எதுவும் வேணாம் டா!” என்றாள்.
இப்போதும் கூட அவளது கட்டளைகளில் மனோவின் மீதான அன்பும் பிரியங்களும் கொட்டிக் கிடந்தன. அவனுக்கு மனக்கஷ்டத்தைக் கொடுக்க கூடாதென எண்ணிப் பேசிய தோழியைப் பார்த்த தீனா விழிகளை சிமிட்டிக் கொண்டான். மனோ எதுவும் பேசாது சந்தனாவைத்தான் பார்த்திருந்தான். அவள் பேசியது அவளுக்கு வலித்ததை விட அவன் அதிகமாய் இரணப்பட்டான்.
“குட்டி… மனோவுக்கு உன்னோட அன்புல வாழ கொடுத்து வைக்கலைடி!” என்ற தீனாவின் குரலில் சந்தனா முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டாள். அவளது விழிகள் தளும்பிற்று.
“தீனா, நீங்க ரெண்டு கிளம்புங்க. என்னைப் பார்க்க வராதீங்க. இதுக்கும் மேல உங்ககிட்டே என்னால ஹார்ஷா சொல்ல முடியலை டா. சோ ப்ளீஸ்!” என வாயிலைக் கைகாட்டியவளின் குரல் தழுதழுத்தது.
“சோ, நான் இனிமே உன்னைப் பார்க்க வரக்கூடாது. அப்படித்தானே குட்டி?” மனோ ஆதங்கமாய்க் கேட்க, அவளிடம் பதில் இல்லை. வாய் வார்த்தையாக மனோவிடம் அவளால் கூற முடியவில்லை. தலையை மட்டும் அசைத்தாள். முகம் பார்க்கவில்லை. திரும்பியபடியே பேசினாள்.
“குட்டி… வலிக்குது டி எனக்கு. நேத்துல இருந்து யார்கிட்டேயும் சொல்லி கூட அழ முடியலை. இப்படி நீ யாரோவா பேசும்போது, நீ… நீ எனக்கில்லைன்னு நினைக்கும்போது ரொம்ப வலிக்குது. கடவுள் நான் செஞ்ச தப்புக்கு எனக்கு கொடுத்த தண்டனை எது தெரியுமா? என் ஞாபகம் எல்லாம் திரும்பி வந்ததுதான். என் கண்ணு முன்னாடி உன்னை வச்சுட்டே யாரோ மாதிரி நான் துடிச்சுப் போகணும். என் வாழ்க்கையில நீ இல்லன்றதை நினைச்சு நினைச்சு நான் கொஞ்சம் கொஞ்சமா சாகணும். அதான் எனக்கான தண்டனை.
ஐ டிசர்வ் திஸ். நான் ஏத்துக்கிறேன். உனக்குப் பண்ண துரோகத்துக்கு இது கூட நான் அனுபவிக்கலைனா எப்படி டி?” எனக் கேட்டவன் குரல் ஆதங்கத்தில் தொடங்கி இறுதியில் இடறிப் போனது போல. அந்தக் குரல் சந்தனாவின் விழிகளில் குபுகுபுவென நீரைப் பெருகச் செய்தது.
“ப்ம்ச்… இந்த மாதிரி எல்லாம் பேசாதீங்க ரஞ்சன். நான் உங்களோட மறந்து போன ஞாபகம். ஜஸ்ட் நேத்துதானே என்னை உங்களுக்குத் தெரியும்? அதுக்கு முன்னாடி நான் உங்களுக்கு எப்படி அறிமுகமானேனோ, அப்படியே இருக்கலாம்னுதான் சொன்னேன். உங்களை காயப்படுத்தணும்னு ஒருநாளும் நான் நினைக்க மாட்டேன்!” என்றவளின் குரல் லேசாய் தடுமாறியது.
“நீ என்னைக்கும் என்னைக் கஷ்டப்படுத்த நினைக்க மாட்டடி. ஆனால், நான் உனக்கு கொடுத்ததெல்லாம் வெறும் வலியும் வேதனையும் மட்டும்தான். அப்போ கூட என் மேல ஏன்டி கோபப்பட மாட்ற. ஏன்டா என்னை ஏமாத்துனேன்னு கேட்டு நீ என்னை நாலு அடிச்சிருந்தா கூட இப்போ நான் இந்தளவுக்கு கில்டோட இருந்திருக்க மாட்டேன். எனக்கு வலிக்கும்னு அத்தனை வலியையும் நீயே சுமக்குற தெரியுமா, அதான் என்னைக் கொல்லுது. கொஞ்சம் கொஞ்சமா செத்துட்டு இருக்கேன் டி!” என்றவன் குரல் உடைந்தழவும்,
“மனோ… ப்ம்ச். அப்படியெல்லாம் இல்ல ரஞ்சன். உங்களுக்காக நான் ஏன் பார்க்கணும். நான், என் மனோவுக்கு வலிக்க கூடாதுன்னு தான் நினைச்சேன். ஞாபகமே இல்லாதப்போ கூட குட்டின்னு என்னைக் கேட்டவன் அவன். மனசறிஞ்சு அவன் தப்பு பண்ணியிருக்க மாட்டான். தெரியாம செஞ்ச தப்பு. என் மனோவை நான் மன்னிக்காம யாரு மன்னிப்பா? என்னால அவன் மேல கோபமெல்லாம் பட முடியாது ரஞ்சன். அவன், அவன் என்னோட மனோ. என்னைக் கஷ்டப்படுத்த மாட்டான்!” உதடுகளில் சிரிப்பிருக்க, கண்களில் குளம் கட்டியிருந்தது. என் மனோ என்றொரு கர்வம் அவளிடமிருந்தது.
“அப்படி என்ன டி பண்ணேன் நான். இந்தளவுக்கு என் மேல அன்பு வச்சிருக்க உன்னை ஏமாத்தியிருக்கேன் நான். ரொம்ப மோசமானவன் நான்! என்னை ரெண்டு அடி அடிச்சிடு குட்டி!” என்று அவள் கையைப் பிடித்தான் மனோ.
தலையை இடம் வலமாக அசைத்தவள், “நான் நிம்மதியா இருக்கணும்னு உங்களுக்கு எண்ணம் இருக்கா ரஞ்சன்?” எனக் கேட்டாள், உதட்டைக் கடித்து அழுகையை உள்ளடக்கினாள். அவன் வேதனையுடன் அவளைப் பார்த்தான்.
“நான் நிம்மதியா இருக்கணும்னு நினைச்சீங்கன்னா, இனிமே இந்த மாதிரி என்னை எமோஷனல் பிளாக் மெயில் பண்ணாதீங்க. என்னை டிஸ்டர்ப் பண்ணாதீங்க. என் மனோவோட ஐஞ்சு வருஷம் வாழ்ந்திருக்கேன். அவன் என்னை எந்த வகையிலும் கஷ்டப்படுத்துனது இல்ல. நீங்க என்னை அழ வச்சுப் பார்க்குறீங்க. நான், நான் தியாகி எல்லாம் இல்ல. எனக்கும் உணர்ச்சி எல்லாம் இருக்கு. நீங்க பேச பேச எங்க உடைஞ்சு போய்டுவேனோன்னு பயமா இருக்கு. ஏற்கனவே நடந்ததுல இருந்து மீண்டு வர ரெண்டு வருஷமாச்சு. என் ஃப்ரெண்ட்ஸ் ரொம்ப கஷ்டப்பட்டுட்டாங்க. மறுபடியும் அந்த மாதிரி ஒரு சூழ்நிலைக்கு என்னைத் தள்ளிடாதீங்க. நான், நான்… மனோவோட வாழ்ந்த கொஞ்ச காலமே போதும். சாகுறவரை அதை நினைச்சு சந்தோஷமா வாழ்ந்துடுவேன். நீங்க என் வாழ்க்கையில எந்த வகையிலயும் குறுக்கிடக் கூடாது. இது என் மேல சத்தியம்!” என்றாள் தேம்பலாய். மனோவின் கண்களில் சரசரவென நீர் வழிந்தது.
“தீனா உனக்கும்தான் டா சொல்றேன். உன் ஃப்ரெண்ட்காக என்கிட்ட வரக்கூடாது. என் ஃப்ரெண்டா நீ என்னைப் பார்க்க வா. அதுக்கும் மேல எதுவும் வேணாம்!” என்றாள் தீர்க்கமாய்.
ஒரு நொடி இருவரது முகத்தையும் பார்த்தவள், “ரெண்டு பேரும் போங்க. எனக்கு கொஞ்சம் அழணும் போல இருக்கு. உங்க ரெண்டு பேர் முன்னாடியும் நிம்மதியா என்னால அழக் கூட முடியலை. சோ ப்ளீஸ்!” என்றாள் கைகளைக் கூப்பி. விழிகள் இரண்டிலும் நீர் நிரம்பியிருந்தது.
மனோவிற்கு அவள் அழுகையைப் பார்க்க முடியவில்லை. இந்தப் பெண்ணை பார்த்த முதல் நாளிலிருந்தே தான் அழ வைக்கிறோம் எனத் தோன்றியதும் நெஞ்சு முட்டுமளவு வேதனைப் படர்ந்தது. இதற்கு மேலும் அவளைத் துன்பப்படுத்த திராணியற்றவனின் கால்கள் மெதுவாய் வாயிலை நோக்கி நகர்ந்தன.
தீனா வேதனையோடு தோழியைப் பார்த்துவிட்டு தானும் அகல, சந்தனாவிடம் மெலிதாய் விசும்பல் வெளிப்பட்டது. வேகவேகமாக கண்ணை மறைத்த உவர்நீரைத் துடைத்துக்கொண்டு மனோவை விழிகளில் நிரப்ப முயன்றாள். நெஞ்சடைத்தது அவளுக்கு. தன்னுடைய மனோவை இனிமேல் பார்க்க வர வேண்டாம் என அவள் வாயாலே உரைத்ததை நினைத்து நெஞ்சு விம்மித் துடிக்க, உதட்டைக் கடித்தவள், “மனோ…” என்றாள் மெதுவாய்.
தொண்டை வரை வந்த வார்த்தையை விழுங்க மனமற்று அழைத்து விட்டவளின் குரலுக்கு அவன் நொடியில் திரும்பினான். தீனாவும் நிற்க, “நான்.. அது கொஞ்சம் மனோ விஷயத்துல செல்ஃபிஷ்தான். இவ்வளோ நேரம் வர வேணாம்னு சொல்லிட்டு, நானே இப்படி பேசுறேன்னு நினைக்காத தீனா. எனக்கு, எனக்கு என் மனோ ஒருநாள் வேணும் டா. எனக்கே எனக்குன்னு வேணும் டா!” என்றாள் அழுகுரலில். கேட்க வேண்டாம் என நினைத்தாலும் மூளை இதயத்தின் பிடியில் நழுவியது.