அவளது அழுகை நிறைந்த குரலில் மனோரஞ்சன் வெகுவாய் அடிபட்டுப் போனான். சந்தனாவின் பேச்சில் தீனாவின் முகம் ஒரு நொடி மாறிவிட, இவளது உதடுகளில் கேலியான புன்னகை.
“தீனா… நீ நினைக்கிற அளவுக்கு நான் மோசமான பொண்ணு இல்ல டா. எனக்கு என் ஃப்ரெண்ட் மனோ மட்டும்தான் வேணும். அவ்வளோதான் டா. வேற எதுவும் நான் எதிர்பாக்கலை. எப்பவும் தப்பான எண்ணம் எனக்கு வந்தது இல்ல டா. அவங்க வாழ்க்கைல என்னால எந்தப் பிரச்சனையும் வராது டா!” என்றாள் ஒருவித விரக்தி சிரிப்புடன்.
ஏனோ தீனாவின் முகமாறுதல் இவளுக்கு வலித்து தொலைத்தது. கேட்டிருக்க கூடாதோ என நொடியில் எண்ணம் பிறக்க, “வேணாம்… நான், ஏதோ சும்மா கேட்டேன் தீனா. இதெல்லாம் சரி வராது. நீங்க போங்க!” என்றாள் கண்களைத் துடைத்து தன்னை தேற்றிக் கொண்ட பாவனையில் புன்னகைத்தாள். ஆனாலும் அழுகையாய் வந்து தொலைத்தது.
“குட்டி… ப்ம்ச்… லூசாடி நீ? நான் நான் போய் உன்னை தப்பா நினைப்பேனா?” அவன் அதட்டலுடன் அவளருகே சென்று அணைத்துக் கொள்ள, சந்தனாவும் அவனை இறுக அணைத்தாள்.
“சாரி தீனா… என்னால முடியலை டா. உங்க ரெண்டு பேரையும் வச்சிட்டு நடிக்க கூட முடியலை பொய் சொல்ல முடியலை. ரொம்ப வலிக்குது டா. இப்படியெல்லாம் நடக்கும்னுதான் நான் உங்க யாரையும் மீட் பண்ணாம இருந்தேன். அட்லீஸ்ட் நீங்களாவது நிம்மதியா இருப்பீங்கன்னு. இப்போ உங்க நிம்மதியையும் கெடுத்துட்டேன் இல்ல?” என அவள் தேம்ப, ஆண்கள் இருவரது கண்ணிலும் நீர் நிரம்பி வழிந்தது.
“குட்டி…” என மனோ அவளைப் பிடித்திழுத்து தோளணைக்க, அவன் தோளில் முகத்தைப் புதைத்தவள், “எனக்கு என் மனோ வேணும். ஒரு ஃப்ரெண்டா வேணும். ரொம்ப வேணாம்… இன்னைக்கு ஒருநாள் மட்டும் கூடப் போதும். அவனோட பேசணும். அவனோட இருக்கணும். அவனுக்கு என் கையால சமைச்சுக் கொடுக்கணும். தெரியலை, உனக்கு ஞாபகம் இல்லாதப்போ வரைக்கும் இந்த மாதிரி எனக்குத் தோணலை டா. குட்டின்னு நீ கூப்பிடும் போது என் மனோன்னு மனசு சொல்லுதுடா. போன்னு தொரத்தவும் முடியலை. கிட்டே வச்சுட்டு ஷோபனாவுக்கு துரோகமும் பண்ண முடியலை. நரக வேதனையா இருக்கு டா. எனக்கு மட்டும் ஏன் இப்படின்னு அழுகை வருது மனோ. நான் என்ன டா தப்பு பண்ணேன்.
நான் ரொம்ப நேசிச்ச ரெண்டு பேர், என் அம்மாவும் என் கூட இல்லை. நீயும் இல்ல. நீங்க ரெண்டு பேரும் இல்லாம, நான் என்னாவேன்னு யோசிக்கவே இல்ல கடவுள். எப்படியோ போன்னு விட்டுட்டாரு டா. யாருக்குமே நான் வேணாம்னு தோணும் போதெல்லாம் செத்துடலாம் போல இருக்கு டா.
உன்னை ஃபர்ஸ்ட் டைம் இங்கப் பார்த்தப்போ எப்படி இருந்துச்சுன்னு தெரியுமா மனோ. என்னமோ போன ஜென்மத்துல பெரிய பாவம் பண்ணிட்டேன் போல. அதான் கடவுள் உன்னை என் முன்னாடி இப்படி நிப்பாட்டியிருக்காரு போலன்னு நைட்டெல்லம் தூங்கவே இல்ல டா.
நீ யாரோ மாதிரி பார்க்கும்போது ரொம்ப வலிச்சுது டா. குட்டின்னு என்னை சுத்தி வர்ற மனோ இவரில்லை. இவர், வெறும் ரஞ்சன்னு இத்தனை நாள் என்னை நானே தேத்திப்பேன் மனோ. ஏன் டா என்னைவிட்டுப் போன?” என்றவள் உடைந்து கதற, மனோ அவளை இறுக அணைத்துக் கொண்டான்.
கொட்ட வேண்டாம் என மனம் கொண்ட உறுதியெல்லாம் வடிந்திருந்தது. இனிமேல் இவனைக் காண முடியாது. கடைசியாக ஒரு முறைக் கண்களில் நிரப்பப் போகிறோம் என்று நினைத்ததும் மனதிலிருந்த வார்த்தையெல்லாம் கொட்டியிருந்தாள் பெண்.
“குட்டி… நீ கேட்குற எந்த கேள்விக்கும் என்கிட்டே பதில் இல்ல டி. இப்படியெல்லாம் நடக்கும்னு தெரிஞ்சிருந்தா, உன்னை விட்டுட்டு நான் போய்ருக்கவே மாட்டேன் டி. சாரி டி… சாரியைத் தவிர என்கிட்ட எதுவுமே இல்ல!” என்றவன்,
“இப்பவும் நான் உன் மனோதான் குட்டி. உன் ஃப்ரெண்டா எப்பவும் உன் கூட நான் இருப்பேன். பேசாத, பார்க்காதன்னு எல்லாம் சொல்லாத டி. உன் கூட வாழக் கொடுத்து வைக்கலை. அட்லீஸ்ட் என் குட்டியோட ஃப்ரெண்ட்ஷிப்பாவது வேணும்!” என அவன் குரல் கலங்கி ஆதங்கத்துடன் வந்தது. சந்தனா எதுவுமே பேசவில்லை. சில நிமிடங்கள் அவனின் அணைப்பில் இருந்தாள்.
‘சாரி ஷோபி’ என மானசீகமாக ஷோபனாவிடம் மன்னிப்பை வேண்டியவள், அவனிடமிருந்து பிரிந்தாள். “மனோ… தீனா, ரெண்டு பேரும் கிளம்பி வாங்க. கோவிலுக்குப் போய்ட்டு வரலாம்!” என்றவள், மனோவின் பேச்சைக் கவனிக்கவில்லை என்பது போல கத்தரித்தாள்.
“போங்க… ரெண்டு பேரும் இப்படியே நின்னா என்ன அர்த்தம். ஹம்ம், எனக்கு ஆறுமணி வரைதான் டைம் இருக்கு!” என்று வருத்தப் புன்னகையை உதிர்த்தாள். அந்த வார்த்தையில் அதிலிருந்த ஏக்கத்தில் எதிரிலிருந்தவனுக்கு நிறைய வலித்தது.
அவர்கள் அகல முயல, “மனோ, ஒரு நிமிஷம் இரு…” என்றவள் உள்ளே சென்று ஒரு பையை எடுத்து வந்து அவனிடம் கொடுத்தாள்.
“அது… உன் பெர்த் டேக்கு கொடுக்கலாம்னு ட்ரெஸ் எடுத்தேன். பட், எந்த உரிமைல கொடுக்கன்னு தெரியாம குடுக்கலை. இதை போட்டுட்டு வரீயா மனோ, ப்ளீஸ்?” என்றாள் இறைஞ்சுதலாய்.
அவன் வருத்தமாய் இந்தப் பெண்ணைப் பார்க்க, “ப்ம்ச்… உனக்கு வேணாம்னா விடு மனோ. நான் கட்டாயப்படுத்தலை. நீ… நீ இன்னைக்கு என் கூட டைம் ஸ்பென்ட் பண்ணாலே போதும்!” என பின்னிழுக்க முயன்ற கைகளைப் பிடித்திழுத்து அந்த உடையை எடுத்துப் பார்த்தான் மனோரஞ்சன். அவனது அளவுகளுக்கு சரியாய் வாங்கி இருந்தாள்.
ஆலீவ் இலை நிறத்தில் சட்டையும் அடர் கருமை நிறத்தில் கால்சராயும் வாங்கியிருந்தாள். நொடி நேரம் எனினும் அவனது முகத்தை சந்தனா ஆர்வமாய்ப் பார்த்தாள். அவனிடமிருந்து எதையோ எதிர்பார்த்து பின் தன்னையே தேற்றிக் கொண்டாள்.
“உன் செலக்ஷன் ரொம்ப நல்லா இருக்கு குட்டி!” என்றவன் கூற்றில் அவளது முகம் மலர்ந்து போனது. ஏனோ அந்த ஒரு வார்த்தையில் அந்நொடி அவளது கஷ்டங்கள் அகன்றிருந்தன.
“ஏன் குட்டி… அவன் மட்டும்தானே உன் ஃப்ரெண்ட். அவனுக்கு மட்டும்தானே வாங்கிக் கொடுப்ப. நான் யாரு உனக்கு?” தீனா முகத்தை திருப்ப, இவளுக்குப் புன்னகை முளைத்தது. நீண்ட நாட்களுக்குப் பின்னர் தன்னவர்கள் தன்னருகில் இருக்கிறார்கள் என்ற எண்ணத்தில் அவளது மனம் ஆசுவாசம் அடைந்தது.
“ப்ம்ச்… தீனா, அவனுக்கு பெர்த் டேன்னு வாங்குனேன் டா. கொடுக்க மறந்துட்டேன். அதான் இப்ப கொடுத்தேன்!” அவள் கூற,
அவன், “ஓ… அப்படியா சரி. என் பெர்த் டே எப்போன்னு சொல்லு!” என தீனா கேட்க, சந்தனா தெரியாது விழித்தாள்.
“அதானே… அவன்தானே உன் ஃப்ரெண்ட். நான்லாம் யாரு?” என தீனா சிலிர்த்துக்கொண்டு வெளியேற, சந்தனா மனம் நிறைந்த புன்னகையுடன் அவனைப் பார்த்தாள். மனோ சிறிய தலையசைப்புடன் நகர, இவள் நேரே சென்று தாயின் புகைப்படம் முன்பு நின்றாள்.
சில நொடிகள் அவரது முகத்தைப் பார்த்தவள், ‘கடவுளுக்கு கொஞ்சம் என் மேல கருணை இருக்கு போல மா. என் மனோ ஒருநாள் முழுசும் என் கூட எனக்காக இருக்கப் போறான். எனக்கு இது போதும் மா. ஆனாலும் கொஞ்சம் குற்றவுணர்வா தான் இருக்கு, ஷோபியை நினைச்சு. நான்… நான் அவங்களுக்குத் துரோகம் எல்லாம் செய்யலை. ஒரு ஃப்ரெண்டா மனோ கூட இருக்கணும்னு ஆசை மா. என்னை மன்னிச்சிடு மா. ஷோபியும் என்னை மன்னிச்சிடுவாங்க!’ மனதிலே மன்னிப்பை வேண்டினாள் பெண்.
தொடரும்…