அன்பு – 24.2

தீனாவைப் பார்த்து தயங்கியவள், “தீனா, என்னையும் மனோவையும் ஒரே ஒரு ஃபோட்டோ எடுத்து தர்றீயா டா? நீ தப்பா எதுவும் நினைக்காத. எனக்கு இப்போ இந்த வயசுல ஒரு ஃபோட்டோ கூட அவனோட எடுக்கலை. ஆசையா இருக்கு டா. அடுத்து எப்போ மீட் பண்ணுவோம்னு தெரியாது. அதான் டா!” என்றவள் குரல் உள்ளே சென்றிருந்தது. குற்றம் செய்யும் பாவனை குரலில். ஆனாலும் ஆசை அவளை அரித்தது போல. அவளது குரலில் எதிரிலிருந்தவர்கள் கண்கள் கலங்கின.

“லூசா டி நீ… நான் அப்படிலாம் எப்பவும் நினைக்க மாட்டேன். ஃபோட்டோ தானே. நான் எடுக்குறேன்!” என அவள் கையிலிருந்த அலைபேசியை தீனா வாங்க, இவள் மனோ அருகே ஒட்டி நின்றாள்.

அவன் கைகளுடன் கையைக் கோர்க்க ஆசையாய் இருந்தது. இருவரில் யாரேனும் ஒருவர் தன்னை தவறாய் நினைத்துவிட்டாலும் சந்தனாவிற்கு தாங்க முடியாதே. கைகளைப் பின்னிழுத்தாள். ஆனாலும் முகத்தில் சிரிப்பு படர்ந்தது. மனோ அவளது கைகளை முன்னே இழுத்து இறுக்கமாகப் பிடிக்க, சட்டென அவள் கண்கள் கலங்கின. தன் முகத்தை வைத்தே அகத்தை அறிந்திருக்கிறான் இவன் என எண்ணி அவனைத் திரும்பிப் பார்த்தாள் பெண்‌.

சந்தனா அவனை ஆசையாய்ப் பார்க்க, மனோ அவளை நிராசையாய்ப் பார்த்தான். தீனா அந்தக் காட்சியை அலைபேசியில் உள்வாங்கினான். பின்னர் இவளே மனோவின் கரத்துடன் பிணைத்து லேசாய் அவன்மீது சாய்ந்து நின்று புகைப்படம் எடுத்ததும் நொடியில் அவனிடமிருந்து விலகினாள்.

“கொடு தீனா, எப்படி வந்திருக்குன்னு பார்ப்போம்!” என அலைபேசியை ஆசையாய் வாங்கினாள். மனோவும் அவளும் இருக்கும் புகைப்படத்தை மெதுவாய் விரல் கொண்டு வருடினாள். நிஜத்தில் அல்லாது, நிழலிலாவது அவனுடன் இருக்கிறோம் என நினைத்து மனம் மகிழ்ந்தது.

“மனோ… இந்த போட்டவைப் பாரேன்!” என அவர்கள் சிறுவயதில் எடுத்தப் புகைப்படத்தை அவனிடம் காண்பித்தாள்.

“இது எப்போ எடுத்தோம்னு உனக்கு ஞாபகம் இருக்கா?” ஆர்வமாய் அவள் கேட்க, இவன் ஆமாம் என்பது போல தலையை அசைத்து கண்களை அந்தப் புகைப்படத்தில் நிலைக்கவிட்டான்.

சந்தனா பயத்துடன் நிற்க, இவன் வாத்சல்யமாக அவளைப் பார்த்திருப்பான். அந்தப் புகைப்படத்தைப் பார்த்ததும் மனோவின் முகம் கசங்கிப் போனது. புகைப்படம் எடுத்த நாள் கண்முன்னே விரிந்து, அவனைக் காயப்படுத்தியிருக்கக் கூடுமென யூகித்த சந்தனா,

“ப்ம்ச்… மனோ, மெமரீஸ் எல்லாம் நம்ப பார்த்து சந்தோஷப்படுறதுக்குத்தான் டா!” என்றாள் ஆறுதலாகப் புன்னகைத்து. ஆனால் அவனால் சத்தியமாய் சந்தோஷப்பட முடியவில்லை. மீண்டும் அந்த நாளுக்கே சென்றுவிட வேண்டும் என்ற நிராசை எழுந்து அவனைக் கலங்க வைத்தது.

“தீனா… வீட்டுக்குப் போகலாமா?” என்ற சந்தனா நேரத்தைப் பார்த்தாள். குகேஷ் நினைவிற்கு வந்தான். ஒரு நொடி ஆழ்ந்த மூச்செடுத்தவள் அவர்களை முன்னே செல்ல பணித்துவிட்டு அவனுக்கு அழைப்பை விடுத்தாள்.

“கிளம்பிட்டோம் சந்து. ட்வென்டீ மினிட்ஸ்ல வந்துடுவோம்!” அவன் எடுத்ததும் கூற, இவள் தயங்கினாள்.

“குகா, நான் சொல்றதை கோபப்படாம கேட்கணும் டா. என்னால உங்க கூட வர முடியாது!” என்றாள். மறுபுறம் குகேஷூக்கு கோபம் கனன்றது.

“ஏன் வர முடியாது. என்ன காரணம் வச்சிருக்க நீ?” அவன் நறநறத்தப் பற்களுடன் கேட்டான்.

“அது… அது!” சந்தனா தடுமாற, “உண்மையை சொல்லு டி!” என்றான் அதட்டலாய்.

“மனோ… மனோ கூட இருக்கான். என்னால வர முடியலை குகா!” என்றாள் உள்ளே சென்ற குரலில்.

“வந்துட்டானா? நான் இப்போவே கிளம்பி வரேன்!” அவன் கோபமாய்க் கூற,
“குகா… என் மேல சத்தியம். நீ வரக் கூடாது. நான், நான் ரொம்ப நாள் கழிச்சு நிம்மதியா இருக்கேன் டா. ப்ளீஸ் அதை கெடுத்துடாத!” என இவள் கூறியதும் அழைப்பு துண்டானது. அலைபேசியை பார்த்தவளுக்கு வருத்தமாகிப் போனது.

‘எதுவும்னா கால் பண்ணு சந்து. ஐ வில் பீ ஃபார் யூ ஆல்வேய்ஸ்!’ கோபத்திலும் குகேஷ் இவளுக்கு செய்தி ஒன்றைத் தட்டியிருக்க, சந்தனா முகத்தில் முறுவல் பிறந்தது. ஏனோ நண்பர்கள் என்ற விஷயத்தில் அவளை விட கொடுத்து வைத்தவர்கள் யாரும் இருக்க முடியாதென மனம் களிப்புற்றது‌. மூவரும் வீட்டை அடைந்தனர்.

லட்சுமியம்மா பக்கத்து வீட்டில் வசிப்பவர்களின் வீட்டு விழா ஒன்றிற்காக வேலூர் சென்றிருந்தார். சந்தனா தான் செல்ல மாட்டேன் என இவளுக்காகத் தயங்கியவரைக் கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்திருந்தாள்.

“ஒரு டென் மினிட்ஸ் டா. நான் போய் குக் பண்றேன். நீங்க ஜூஸ் குடிச்சிட்டு இருங்க!” என்றவள் அவ்விடத்தை விட்டு அகன்றாள். காலையிலே சப்பாத்தி சுட்டுவிட்டாள். இப்போது மனோவுக்காக முட்டை சப்பாத்தி செய்து, தீனாவிற்காகப் பனியாரம் செய்தாள்.

சமையலறையில் இருந்தவளின் பின்னே நிழலாட வாசனை திரவியத்தை வைத்தே அது மனோ என அவளால் உணர முடிந்தது.

“பசிக்குதா மனோ? சாரி டா… சாரி. ஒரு டூ மினிட்ஸ்!” எனக் கெஞ்சலாய் அவன் முகம் பார்க்காது துரிதகதியில் அனைத்தையும் செய்தாள். அந்தக் குரலை மட்டும் அவதானித்தவன் எதுவுமே பேசவில்லை. அதில் இவள் திரும்பி பார்த்தாள்.

“என்ன மனோ, என்ன வேணும்?” எனக் கேட்டவள் குரல் முழுவதும் வாஞ்சைக் கொட்டிக் கிடந்தது. ஒரு தாய் குழந்தையிடம் கேட்கும் பாவனை அது. எப்போதும் சந்தனா அவனுக்கு அப்படித்தான்.

சிறு வயதிலே அவள்தானே அவனுக்கென்று மெனக்கடுவாள். இவன் எதிலுமே இறங்கி வந்தது இல்லையே. அதை நினைத்ததும் விரக்தி சிரிப்பை உதிர்த்தான் மனோரஞ்சன். ஏனோ இந்த அன்பை ஸ்பரிசிக்க முடியாத துர்பாக்கியசாலி அவன். தன்னிலையை எண்ணி கழிவிரக்கத்தில் மனம் விம்மித் துடித்தது. சந்தனா அருகே சென்று அவளது முந்தானையைக் கையிலெடுத்து சுற்றியவனை இவள் அன்பாய் பார்த்தாள்.

“என்ன டா, எதுவும் சொல்லணுமா?” எனக் கேட்டவளிடம் தலையை மட்டும் அசைத்தான் அவன்.

“என்ன சொல்லணும்?” எனக் கேட்டுவிட்டு திரும்பி வெந்திருந்த பனியாரங்களை எடுத்து கிண்ணத்தில் வைத்துவிட்டு மீண்டும் மாவை பனியார சட்டியில் ஊற்றினாள்.

“பிலேட்டட் பெர்த்டே விஷ்ஷஸ் குட்டி!” என அவன் கூறியதும் இவளது கைகள் ஒரு நொடி நின்று போயின. விழிகள் நீரால் நிறைய, அவனைத் திரும்பிப் பார்த்தாள்.

“ஞாபகம் இருக்கா மனோ? நீ செலக்ட் பண்ண சேரிதான் நேத்து கட்டியிருந்தேன். பாரேன், இந்த பெர்த் டே எவ்வளோ ஸ்பெஷல் தெரியுமா? என் மனோ என் கூட இருந்திருக்கான். எனக்கு விஷ் கூடப் பண்ணிட்ட நீ. ரொம்ப லக்கியான பெர்த் டே இது?” என்றாள் கண்களில் வழியும் நீரைத் துடைத்து. இவன் சில நொடிகள் அமைதியாய் இருந்துவிட்டு அவளது கழுத்திலிருந்த கழுத்தணியை வெளியே எடுத்தான். அன்னிச்சையாய் அவள் பின்னகர்ந்தாள்.

மனோ அவளுக்கு வாங்கி கொடுத்த கழுத்தணிதான். இன்னமும் இதை இவள் வைத்திருக்கிறாளா என்று ஆச்சர்யப்பட வேண்டிய மனது அதை எண்ணித் துயரப்பட்டது.

“இதை நீ கழட்டவே இல்லையா டி?” எனக் கேட்டவன் குரலில் அவளுக்கான தவிப்புக் கொட்டிக் கிடந்தது.

“சா… சாமிகிட்டே வச்சு வேண்டுனதுன்னு நீ தானே டா சொன்ன. அப்புறம் எப்படி கழட்டுவேன் நான். நீ என் கூட இல்லாதப்போ எல்லாம் இதுதான் என் கூட இருக்கும். நீ இல்லைன்றதை இந்த செயின் என்னை பீல் பண்ண விடலை. நீயே கூட இருக்க மாதிரி இருக்கும் டா. அதான் கழட்டத் தோணலை!” என்றாள்.

மனோ அன்று சந்தனா அந்தக் கழுத்தணியைக் கழட்டக் கூடாதென்றுதான் பொய்யுரைத்திருந்தான். ஆனால் அந்தப் பொய்யை இந்தப் பெண் இந்நொடி வரை நம்பியிருக்கிறாள் என மனம் கனத்துப் போனது.

“நான் பொய் சொன்னேன் குட்டி. சாமிகிட்டே வச்செல்லாம் வேண்டலை. அது… நான் உனக்கு சும்மா கொடுத்தா நீ வாங்க மாட்ட. அதான் அப்படி சொன்னேன்!” என்றவனை இவள் பாசமாய்ப் பார்த்தாள். சிறுவயதில் புரியவில்லை எனினும் வளர்ந்தப் பின் அவளுக்கும் புரிந்தது. கோபம் வரவில்லை. மனோவிற்கு தன் மீதான பிரியம் மட்டுமே பிரதானமாகத் தெரிய, அவனது அன்பை எண்ணிக் களிப்புற்ற காலங்கள் எல்லாம் சொர்க்கமாகிற்றே.

“எனக்குத் தெரியும் டா!” என்றாள் சிரிப்புடன்.

“சின்ன சின்ன விஷயத்துல கூட உன்கிட்டே நான் பொய் சொல்லி ஏமாத்தி இருக்கேன் இல்ல?” அவன் வருத்தமாய்க் கேட்க,

“ப்ம்ச்… மனோ, என்ன டா. அப்படிலாம் இல்லை. நீ சொன்ன பொய்யைவிட உனக்கு அப்போ என் மேல இருந்த அன்புதான் அதுல எனக்குத் தெரிஞ்சது!” என்றவள் ‘இருந்த’ எனக் கடந்தக் காலத்தைப் பயன்படுத்த, இவனுக்கு வலித்தது.

“அதான் நான் உனக்குத் துரோகம் பண்ணி இருக்கேன்ல குட்டி. நான் கொடுத்த செயினை ஏன் இன்னும் வச்சிருக்க. கழட்டிப் போடு டி!” எனக் கை வைக்க சென்றவனிடமிருந்து நொடியில் விலகியவள், “அதை தொடாத மனோ. எனக்கு கோபம் வரும். அது… அது என் கழுத்துல இருக்கணும்!” கலங்கிய குரலில் உரைத்தாள்.

“நான் செத்துடுவேன்னு பயமா?” எனக் கேட்டவன் வாயிலே அடித்தவள், “லூசு தனமா பேசாத டா… போ, போய் டைனிங் டேபிள்ல உக்காரு. நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்!” என்றவள் சமைத்தவற்றை மேஜை மீது அடுக்கி மனோவை அமர வைத்தாள். தீனா வராது அவர்களையே பார்த்தான்.

“தீனா வாடா, சாப்பிடலாம்!” சந்தனா அழைக்க, “எனக்குப் பசிக்கலை. நீங்களே சாப்பிடுங்க…” என அவன் கூற, எழுந்து சென்று அவனை இழுத்து வந்து அமர வைத்தாள்.

“தீனா, உனக்குப் பனியாரம் பிடிக்கும்ல. அதான் சுட்டேன் டா. இட்லி மாவுலதான் வெள்ளம் போட்டு சுட்டேன். மாவு தனியா அரைக்க டைமில்ல டா!” என அவனுக்குப் பனியாரத்தை பரிமாறியவள், “மனோ, உனக்காக முட்டை சப்பாத்தி செஞ்சேன் டா…” என அவனுக்கும் உணவை தட்டிலிட்டாள்.

தீனா உண்ணாது அவளையே பார்க்க, “என்ன டா… என் முகத்தையே ஏன் பார்க்குற? சாப்பிடு…” அதட்டலிட்டாள் பெண்.

“நீ இன்னும் எதையும் மறக்கலையா குட்டி?” அவன் வேதனையுடன் கேட்க,

ஒரு நொடி கலங்கிய கண்களை சிமிட்டியவள்,“மறக்கலாம்னு நினைச்சிருக்கேன் டா. ஆனால், ட்ரை பண்ணலை. ஏன்னா, இந்த ஞாபகத்தோடதான் இத்தனை வருஷம் வாழ்ந்திருக்கேன். என்னை உயிர்ப்போட வச்சிருக்கது உங்களோட இருந்த காலம்தான். எனக்கொரு பிடிப்பைக் கொடுத்து வாழுன்னு டெய்லி சொல்லும் டா. அதை நினைச்சு சந்தோஷப்பட்டுப்பேன்!” என்றவள் குரலிலிருந்த வலியில் தீனாவிற்கு மனம் கலங்கியது.

“தீனா… சாப்பிட்டு எப்படி இருக்குன்னு சொல்லு. என் அம்மா அளவுக்கு இல்லைனாலும் சுமாராவாது இருக்கும் டா!” என்றாள் தன்னைத் தேற்றிக் கொண்ட சிரிப்புடன்.

மனோ இவளையே பார்த்திருப்பது தெரிய, “உனக்குத் தனியா சொல்லணுமா மனோ? சாப்பிடு!” என்றாள்.

“நீயே ஊட்டி விடு டி…” மனோ அவள்புறம் தட்டை நகர்த்த, சந்தனாவிற்கு விழிகள் மீண்டும் உடைப்பெடுத்தன. தளும்பி நின்ற விழிகளை இமையை சிமிட்டி உள்ளிழுத்துக் கொண்டவள், அவனுக்கு ஊட்டிவிட, மனோ பாரமேறிய மனதுடன் உண்டான்.

“அப்போலாம் நீ என்னை ஊட்டிவிட சொல்லிக் கேட்டுட்டே இருப்பல்ல மனோ. அம்மா பார்த்திருவாங்கன்னு பயமா இருக்கும் டா. நீ கேட்டன்னு பயந்துட்டே ஊட்டுவேன். இப்போ உனக்கு ஊட்டிவிட ஆசையா இருக்கு. பாரேன், அந்த நிலைமைல நம்ப ரெண்டு பேருமே இல்ல. இப்படியெல்லாம் நடக்கும்னு தெரிஞ்சிருந்தா, அப்போவே உன்னை நான் நல்லா பார்த்திட்டு இருப்பேன் டா!” என்றாள். மனோ அவளை அடிபட்ட பார்வை பார்த்தான்.

error: Content is protected !!
Scroll to Top