“நெடுங்காலமாக உறங்கிக்கொண்டு இருக்கும் ஒரு நேசத்தை கொட்டித் தீர்ப்பதற்கு ஒரு நூற்றாண்டு தனிமை தேவை போலும்…”
வெளியே சென்றவர்கள் அரைமணி நேரத்திலே வீடு திரும்ப, ஷோபனா அவர்களைக் கேள்வியாகப் பார்த்தாள். மனோ கையிலிருந்த பையுடன் அறைக்குள் சென்றுவிட, தீனா நிதானித்தான்.
“ஷோபி… அவரைப் பார்த்தோம் டா. ஹீ இஸ் பெட்டர் நவ். அதான் குளிச்சிட்டு ரெடியாகிப் போகலாம்னு வந்தோம்…” என்றான். ஷோபி மனோ கையிலிருந்த பையைப் பற்றி எதுவும் கேட்கவில்லை. அது தீனாவிற்கு வசதியாகப் போயிற்று.
“எங்களுக்காக சேர்த்து குக் பண்ணாத ஷோபி. அந்த தாத்தா இன்னைக்கு எங்க கூட சேர்ந்து சாப்பிடணும்னு சொன்னாரு. நாங்க அவர் கூட சேர்ந்து சாப்பிட்டுக்கிறோம் மா!” என்றான்.
ஷோபனாவிற்கு ஒன்றும் புரியவில்லை. ஆனாலும் அவர்களிடம் கள்ளத்தனம் எதையும் அவளால் கண்டறிய முடியவில்லை. சரியென்று தலையை அசைத்து அஷ்வினைப் பள்ளிக்கு கிளப்பினாள்.
மனோ துவாலைக் குழாயைத் திறந்துவிட்டு அதனடியில் நின்றான். கண்கள் கரித்தது அவனுக்கு. தன் குட்டியோடு நேரம் செலவழிப்பதற்கு அவள் காலக்கெடு நிர்ணயிக்கிறாள் என நினைத்ததும் தன் மீதுதான் அவனுக்கு கோபம் வந்தது.
நேரம் காலம் தெரியாமல் அவளோடு கழித்த பொழுதுகள் இப்போது ஈட்டியாய் அவனைக் குத்தின. அவள் கொடுத்ததை வாங்கிக் கொள் என இறைஞ்சலாய்ப் பார்த்தப் பார்வையில் இவனுக்கு அதிகம் வலித்தது. அவள் கொடுத்து இவன் வாங்காது விடுவானா என்ன? எனத் தோன்றினாலும் நியாய மனது முன்னே வந்து நின்றது.
இப்போது அவள் உன்னுடைய குட்டியில்லை. நீ அவளுடைய மனோவும் இல்லை என்ற நிதர்சனம் அவனைக் குத்திக் கிழிக்க, உவர் நீர் தண்ணீரோடு கரைந்து போனது.
ஆனால் அவனது காயங்கள் எல்லாம் வடுவாய் மனதில் தங்கிவிட்டிருந்தன. சந்தனா காத்துக் கொண்டிருப்பாள் என மூளைக்கு உறைக்க, சில நொடிகளில் தன்னை சமன்படுத்தியவன், குளித்து முடித்து அவள் வாங்கிக் கொடுத்த உடையை அணிந்து வெளியே வர, தீனாவும் தயாராகிவிட்டான். ஷோபனாவிடம் சிறிய தலையசைப்புடன் அவர்கள் விடை பெற, சந்தனா இவர்களுக்காகக் காத்திருந்தாள்.
“வா தீனா… வா மனோ!” என அவள் புன்னகைத்தாள். நீண்ட வருடங்களுக்குப் பின்னர் தன்னவர்களுடன் நேரம் செலவழிக்கப் போகிறோம் என்ற நினைப்பில் அவளது முகம் மலர்ந்திருந்தது. மாலை ஆறுமணி வரை அவளுடைய மனோ அவளுக்காக இருக்கப் போகிறான் என்று அற்பத்தனமாய் மனம் மகிழ்ந்து தொலைத்தது.
“கோவிலுக்குப் போய்ட்டு வந்து சாப்பிடலாம். நான் ஆல்மோஸ்ட் குக் பண்ணி வச்சுட்டேன் டா. வந்து பினிஷ் பண்ணிக்கிறேன்!” என்றவள் அவளுடைய மகிழுந்து சாவியைக் கையிலெடுத்தாள். மூவரும் கீழே சென்றனர்.
சந்தனா மகிழுந்தை இயக்க, அவளருகே மனோ அமர்ந்து கொண்டான். பின்னிருக்கையை தீனா ஆக்கிரமிக்க, பயணம் தொடங்கியது. அவர்களுக்கு இடையே அசாத்திய அமைதி நிலவ, அது அவளுக்குப் பிடிக்கவில்லை போல. மனோரஞ்சனின் பார்வை முழுவதும் சந்தனாதான் நிரம்பியிருந்தாள். தீனா எதுவும் கூறாது வெளியே பார்வையைப் பதித்திருந்தான்.
“ப்ம்ச்… மனோ, தீனா. ஏன் ரெண்டு பேரும் இவ்வளோ அமைதியா வர்றீங்க. எனக்குப் பிடிக்கவேயில்லை. எதாவது பேசலாம் இல்ல?” இவள் கெஞ்சலாகக் கேட்க,
“என்ன பேச சொல்ற குட்டி. எது பேசுனாலும் என்னமோ கஷ்டமா இருக்கு. உன்னைப் பார்த்தாலே வலிக்குது டி. எது பேசுனாலும் நடந்தது எதையும் மாத்த முடியாதே. பேசி என்ன பிரயோஜனம்!” தீனா ஆதங்கத்துடன் கூற,
முன்பக்க கண்ணாடி வழியே அவனைப் பார்த்தவள், “தீனா, கொஞ்ச நேரம்தான் டா நம்ப ஒன்னா இருக்கப் போறோம். அந்த டைம்ல கூட ஏன் இப்படி பேசுற. எனக்கு என் ஃப்ரெண்ட்ஸ் வேணும். நம்ப மூனு பேரும் எப்படி சந்தோஷமா இருந்திருக்கோம். அந்த மாதிரி சிரிச்சுப் பேசணும்னு ஆசையா இருக்கு டா. நீ முதல்ல சோக கீதம் வாசிக்கிறதை விடு டா!” என்றாள் மெலிதான வருத்தத்துடன்.
“என்னால உன்னை மாதிரியெல்லாம் நடிக்க முடியாது குட்டி. பொய்யா சிரிக்கவும் முடியாது. உன் பக்கத்துல இருக்கவனைப் பேச சொல்லு…” என அவன் கோபத்துடன் முகத்தைத் திருப்பிக் கொள்ள, கோவில் வந்துவிட்டது.
சந்தனா மகிழுந்தை நிறுத்தியவள், “மனோ, அர்ச்சனை தட்டு வாங்கிட்டு வாடா…” என அவனை அனுப்பிவிட்டு தீனாவுடன் கோவிலுக்குள் நுழைந்தாள். கூட்டமில்லாது வெறிச்சோடி கிடந்தது சன்னிதானம். ஆங்காங்கே ஓரிரண்டு பேர் மட்டுமே அமர்ந்திருந்தனர்.
இவர்கள் உள்ளே சென்றனர். மனோ வரவும் பூசாரியிடம் அர்ச்சனைத் தட்டை நீட்டினாள் பெண். “யார் பேருக்கு அர்ச்சனை பண்ணணும் மா?” அவர் தட்டைக் கையில் வாங்கியபடி வினவ, “மனோ ரஞ்சன் ரிஷப ராசி, கார்த்திகை நட்சத்திரம், ஷோபனா மகர ராசி, உத்திராடம் நட்சத்திரம், அஷ்வின் மேஷ ராசி, பரணி நட்சத்திரம்!” என் அவள் கூற, மனோ அவளைத்தான் பார்த்திருந்தான். இவள் என்னைப் பற்றி அடிமுதல் நுனி வரை அறிந்திருக்கிறாள். ஆனால் நான் இவளின் இருப்பைக் கூட உணர முடியாது இருந்திருக்கிறேன் என அவன் முகம் கசங்கிப் போனது.
ஐயர் மந்திரங்களைக் கூற கண்ணை மூடி நின்ற சந்தனாவிற்கு விழிகள் கலங்கின. இந்நொடி மனோவின் இருப்பிற்கு மனதார கடவுளிடம் நன்றி நவில்ந்தாள்.
‘ என் மேல கொஞ்சமே கொஞ்சம் கருணை உங்களுக்கு இருக்கு போல காட். ரொம்ப நன்றி இந்த நிமிஷம் மனோ என் கூட இருக்கான். என் மனோ வந்துட்டான். இதை நான் மறக்கவே மாட்டேன்!” என கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டு அவள் விழிகளைத் திறக்க, சுப்ரமணியன் சர்வ அலங்காரத்தில் அழகாய் அவர்களுக்கு காட்சியளித்தார்.
மூவரும் சாமியை தரிசித்துவிட்டு சிறிது நேரம் அங்கேயே அமர்ந்தனர். சந்தனா தீனாவிற்கும் மனோவிற்கும் நெற்றியில் விபூதி குங்குமம் வைத்துவிட்டாள்.
“ரெண்டு பேரும் ஏன் இப்படி இருக்கீங்க. எனக்கு பிடிக்கவே இல்லை. எனக்காகவாது நார்மலா இருக்கலாம் இல்ல. மனோ ப்ளீஸ் சிரி டா. நீ இப்படி இருக்கதை என்னால பார்க்க முடியலை!” என்றவளின் குரலில் அவர்கள் மீதான அக்கறை கொட்டிக் கிடந்தது.
மனோரஞ்சன் அவளுக்காகப் புன்னகைக்க முயன்றான் அவ்வளவே. மற்றபடி சர்வ நிச்சயமாய் அவனது உதடுகள் பொய்யைத் தழுவின. தீனாவிடம் பொய்யாய் கூட சிரிப்பில்லை. தோழியைக் கவலையாய்ப் பார்த்தான்.
“தீனா, வா… நம்ம செல்ஃபி எடுக்கலாம். மெமரீஸா இருக்கும். நான் அப்பப்போ பார்த்து சந்தோஷப்பட்டுப்பேன் டா. சின்ன வயசுல எடுத்த போட்டோ மட்டும்தான் இருக்கு என்கிட்ட. அதுவும் ரொம்ப தெளிவா இல்லை டா!” என அவள் எழ, தீனா முன்னே நின்று சுயமிப் புகைப்படத்தை எடுக்க, சந்தனா அவர்கள் இருவருக்கும் இடையில் நின்று இருவரின் கைகளையும் பிடித்துக் கொண்டாள். அகத்தின் மகிழ்ச்சி அவளது முகத்தில் வெளிப்பட்டது போல. முகம் அத்தனையாய் அவளுக்கு விகசித்தது.