தன்னுடைய தோழி தன்னை அவ்வாறு உரிமையாகக் கடிந்து கொண்டதைக் கேட்டுப் புன்னகைத்து விட்டு,”சாரிடி!”என அவளிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டாள் மதுபாலா.
“ம்ஹ்ம். சரி விடு. இது வரைக்கும் என்ன நடந்துச்சுன்னு முழுக்கதையைச் சொல்லு?”என்று அவளிடம் விசாரித்தாள் பிரேமா.
உடனே முதலாளியைச் சந்தித்தது முதல் இப்போது உணவுண்டு கொண்டு இருப்பது வரையில் நடந்த நிகழ்வுகளை அவளிடம் ஒப்புவித்து முடிக்க,
“ஓஹ்! பார்றா! சூப்பர்! அப்போ நீ சீக்கிரமாகச் சாப்பிடு. நாம சாயந்தரம் வீட்டுக்குப் போறப்போ ஃப்ரீ ஆகப் பேசிக்கலாம்”என்று தோழிக்கு அறிவுறுத்தி விட்டுத் தானும் உணவை உண்பதில் கவனம் செலுத்த தொடங்கி விட்டாள்.
சில நிமிடங்களிலேயே தனது உணவை உண்டு முடித்து விட்டு,”சரி டி. நான் தனியாகப் போய் உட்கார்ந்து என்னைக் கொஞ்சம் தயார்படுத்திக்கிறேன். நீயும் உன்னோட இடத்துக்குப் போ”என அவளிடம் தெரிவித்தாள் மதுபாலா.
“ஓகே டி. ஆல் தி பெஸ்ட்”என்று அவளுக்கு வாழ்த்து தெரிவித்த பிரேமாவோ, அங்கிருந்து அகன்றுத் தன்னுடைய இடத்திற்குச் சென்று விடவும்,
இங்கே தனியாக இருந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்து கொண்டு இவ்வளவு மாதங்களாகச் செய்து வைத்திருந்த வடிவமைப்புப் படங்கள் மற்றும் சில தையல்கள் அடங்கிய துணி வகையறாக்களையும் சரியாக இருக்கிறதா என்று தனது பையைத் திறந்து சரிபார்த்துக் கொண்டு விட்டு, மீட்டிங்கின் போது என்னப் பேச வேண்டும் என்பதை மனதிற்குள்ளேயே சொல்லிப் பார்க்கத் தொடங்கினாள் பெண்ணவள்.
அதே சமயம் தனது மதிய உணவை முடித்துக் கொண்டு அறையிலிருந்து வெளியே வந்தப் புகழேந்தியோ எதேச்சையாக அவளைப் பார்க்க நேர்ந்தது.
ஆனால் அவன் தன்னைக் கவனித்துக் கொண்டிருக்கிறான் என்பதை அறியாமல் தன் வேலையில் மும்முரமாக இருந்தாள் மதுபாலா.
அவளைத் தன் புருவத்தை உயர்த்தி மெச்சி விட்டு வந்த சுவடு தெரியாமல் தன்னுடைய அறைக்குச் சென்று விட்டிருந்தான் புகழேந்தி.
தனது நண்பனைச் செல்பேசியில் அழைத்து தன்னறைக்கு வருமாறு கூறி விட்டு வைக்க, அடுத்தப் பத்தாவது நிமிடத்தில் அவனது அறைக்கு வந்திருந்தான் வெற்றிச்செல்வன்.
அவனை உட்கார வைத்து,”நீ அந்தப் பொண்ணு மதுபாலாவைப் பத்தி என்ன நினைக்கிற? உன்னோட பொதுவானப் பகுப்பாய்வைச் சொல்லு”என்று அவனிடம் வினவ,
“அந்தப் பொண்ணுக்கு இந்த வேலை ரொம்ப முக்கியம் போல. அதனால் இங்கே எப்படியாவது சேர்ந்துடனும்னு ரொம்பவே உறுதியாகத், தன்னம்பிக்கையாக இருக்கிறாள். அதே சமயம், தனக்கு நியாயமாக கிடைக்க வேண்டியதை மட்டும் தான் வாங்கிக்கிறாள்! இப்போதைக்கு எனக்கு அவளைப் பத்தி இவ்வளவு தான் தெரியும்”என்றுரைக்க,
“ம்ஹ்ம். சரி”எனத் தனது கைக்கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்து விட்டு,
“அவங்களை மீட்டிங் ஹாலிற்கு வரச் சொல்லிட்டு அப்படியே மத்தவங்களையும் வரச் சொல்லிரு”என்று கூறி அவனை அனுப்பி வைத்து விட்டுத் தானும் அதற்காகத் தன்னைத் தயார்படுத்திக்க ஆரம்பித்தான் புகழேந்தி.
இங்கே மதுபாலாவிடம் வந்து,”நம்ம எம்.டி உன்னை மீட்டிங் ஹாலுக்கு வரச் சொன்னார்ம்மா”என்றிருந்தான் வெற்றிச்செல்வன்.
உடனே,”இதோ வர்றேன்ண்ணா”என்றவளிடம்,
“இங்கே மட்டும் என்னைச் சார்ன்னுக் கூப்பிடும்மா”என்று தயக்கத்துடன் கூற,
அதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்டு,”ஓகே சார்”எனக் கூறிப் புன்னகைத்தாள் மதுபாலா.
“சரி வாங்க”என்று அவளைத் தன்னுடன் அழைத்துக் கொண்டுச் செயல்பாட்டு விளக்கம் நடக்கும் அறைக்குச் சென்றான் வெற்றிச்செல்வன்.
அங்கே இருந்த உபகரணங்களைப் பற்றி அவளுக்குப் பொறுமையாக விளக்கம் அளிக்க,”எனக்கு இதில் ஒரு சில உபகரணங்களைப் பத்தித் தெரியும் சார்”என்று அவனிடம் கூறி விட்டு ஆழ்ந்த மூச்சை எடுத்துக் கொண்டு முதலாளி மற்றும் மற்றவர்களின் வருகைக்காக காத்திருந்தாள் மதுபாலா.
அப்போது தனது செல்பேசியில் இருந்து முதலாளிக்கு அழைப்பு விடுத்து இவளது வரவைத் தெரிவித்து விட்டிருக்க,
மறுமுனையில்,”ம்ம்ம். நானும் வந்துட்டு இருக்கேன்”என்று கூறி விட்டு வைத்தான் புகழேந்தி.
அதே சமயம், அந்த செயல்பாட்டு விளக்கத்தைப் பார்வையிட வரச் சொல்லி இருந்தவர்களும் அங்கே வந்து சேர்ந்து விட்டிருந்தார்கள்.
அதில் மதுபாலாவின் தோழி பிரேமாவும் அடக்கம்!
மற்றவர்களோ இவளைக் கண்டதும் புன்னகைத்தனர்.
அதில் ஒருவள்,”நீங்க தான் டெமோ எடுக்கப் போறதாக? உங்கப் பேரு?”எனக் கேட்கவும்,
“ஆமா மேம். என் பேர் மதுபாலா”என அவளுக்குப் பதிலளித்தாள்.
“ஓஹ் ஓகே. ஆல் தி பெஸ்ட் மேம்”எனக் கூறிய சமயத்தில் அவ்விடத்திற்கு வந்து சேர்ந்தான் புகழேந்தி.
உடனே மற்றப் பெண்களோ தத்தமது இடத்திற்குப் போய் உட்கார்ந்து கொண்டார்கள்.
“நீங்க டெமோ எடுக்கத் தயாராக இருக்கீங்களா?”என்று மதுபாலாவிடம் கேட்டான் புகழேந்தி.
உடனே அவளும்,”எஸ் சார்”என்று தன்னம்பிக்கையுடன் உரைத்தாள்.
“ஓகே! நீங்க முதல்ல உங்களை எல்லாருக்கும் அறிமுகப்படுத்திக்கிட்டு அதுக்கப்புறம் டெமோ எடுக்க ஆரம்பிங்க”என அவளுக்கு அனுமதியும், வாய்ப்பும் அளித்து விட்டு வெற்றிச்செல்வனை அமரச் சொன்னவனோ, தானும் தனது இருக்கையில் அமர்ந்து கொண்டான்.
அங்கேயிருந்த ஒளிப்படக்காட்டியின் முன்பு நின்று கொண்டு முதலில் தன்னைப் பற்றிய சுய அறிமுகத்தைச் சொல்லும் விதமாக,
“மதிப்பிற்குரிய புகழேந்தி சாருக்கும், உங்க எல்லாருக்கும் என்னோட மதிய வணக்கங்களைத் தெரிவிச்சிக்கிறேன்! என் பேர் மதுபாலா!” தனது கல்வித் தகுதியைப் பற்றி வெளிப்படையாக கூறி விட்டு,
“எனக்கு இந்தத் துறையில் ரொம்ப ஆர்வம். ஆனால் என் வாழ்க்கையில் நடந்த சில எதிர்பாராத நிகழ்வால் என்னோட படிப்பைத் தொடர முடியலை! நான் வேலைக்குப் போய்த் தான் ஆகனும்னு சூழ்நிலை இருந்தாலும் அது எனக்குப் பிடிச்ச வேலையாக இருந்தால் இன்னும் மன நிறைவோட செய்வேன்ற எண்ணத்தில் தான் இந்தத் துறை சம்பந்தப்பட்ட வேலை தேடிட்டு இருந்தேன்! அப்போ தான், என் லைஃப்ல எப்பவும் என் கூட இருக்கிற ஏஞ்சல் ஒருத்தவங்க இந்த வேலையைப் பத்தி எனக்குச் சொல்லி முயற்சிப் பண்ண சொன்னாங்க!”என்றவளைப் பொய்க் கோபத்துடன் முறைத்துப் பார்த்தாள் பிரேமா.
அதைக் கண்டுப் புன்னகைத்து விட்டாள் மதுபாலா.
ஏனெனில் அவள் கூறிய அந்த ஏஞ்சல் பிரேமா தானே?
அவளால் தானே இந்த வாய்ப்புத் தனக்குக் கிடைத்திருக்கிறது என்பதால் அவளுக்கு நன்றித் தெரிவிக்கும் வகையில் இவ்வாறு கூறியிருந்தாள் மதுபாலா.
அதைக் கேட்டுத் தான் அவளை முறைத்து விட்டுத் தனது முக பாவனைகளை அடுத்தவர்களுக்குத் தெரிவதற்குள்ளாக மாற்றிக் கொண்டாள் பிரேமா.
அதற்குப் பிறகுத் தனக்கு இந்தத் துறையில் இருக்கும் ஈடுபாட்டைக் கச்சிதமாக, எந்த வித சர்க்கரை வார்த்தைகளைப் போடாமலும், அதே சமயத்தில், தனது குரல் கமறப் பேசி அனைவர் முன்னிலையிலும் தன்னைப் பரிதாபமாக காட்டிக் கொள்ளாமலும் தனது குரலில் தெளிவையும், தன்னம்பிக்கையையும் வெளிப்படுத்திக் கூறி முடித்தவளின் அறிமுகப்படலம் ஈர்க்கப்பட்டு அவளது அடுத்தக் கட்ட செயல்பாடுகளைக் காண ஆவலாகத் தயாராகினர் அனைவரும்.
ஆனால் தன்னுடைய முகத்தில் எந்தவித உணர்வையும் காட்டாமல் அவளை மட்டுமே கூர்மையாக நோக்கிக் கொண்டிருந்தான் புகழேந்தி.
மதுபாலாவின் விழிகள் அவ்வப்போது அவனையும் தொட்டு மீண்டது!
அப்போதும் கூட அவனது கண்களை நேராகப் பார்த்து விட்டுத் தான் வேறு புறம் திருப்பிக் கொண்டிருந்தாள்.
அதைக் கவனித்து தன் மனதில் குறித்துக் கொண்டான் புகழேந்தி.
சில மணி நேரங்கள் கழிந்ததும் தனது செயல்பாட்டு முறையை வெற்றிகரமாகச் செய்து முடித்து விட்டிருந்தாள் மதுபாலா.
அதில் அனைவரும் அவளைப் பாராட்டும் விதமாகப் பலத்த கரகோஷத்தை எழுப்பினர்.
உடனே தானும் தனது கைகளைத் தட்டினான் புகழேந்தி.
இந்தத் துறையின் மீதான தன்னுடைய தோழியின் ஈடுபாட்டை அறிந்து தான் அவளைத், தான் வேலை செய்யும் கம்பெனியிலேயே வேலைக்கு வருமாறு நீண்ட நாட்களாக அவளிடம் வலியுறுத்தினாள் பிரேமா.
ஆனால் அந்த நேரத்தில் நிகழும் ஏதாவதொரு விஷயத்தால் அப்பொழுதெல்லாம் தன்னிடம் வேண்டாம் என்று மறுத்து விட்டிருந்தவளோ,
ஒரு கட்டத்திற்கு மேல் பணத் தேவைக்காகத் தனது யோசனைக்கு முன்னுரிமை அளித்து இப்போது இந்த இடத்தில் நின்று கொண்டிருக்கும் தனது தோழியைக் கண்டுக் கண்களில் ஆனந்தக் கண்ணீர் மல்கப் பார்த்தாள் பிரேமா.
மதுபாலாவுமே அப்போது அவளைத் தான் பார்த்தாள்!
ஆனால் மதுபாலாவின் பார்வைப் பிரேமாவிடம் இருப்பதை அறியாமல் அவள் வெற்றிச்செல்வனைத் தான் இத்துணைப் பரவசத்துடன் பார்த்துக் கொண்டு இருக்கிறாள் என்று தவறாகப் புரிந்து கொண்டு அவளைப் புருவத்தைச் சுருக்கிப் பார்த்து விட்டுச் சில நொடிகளிலேயே தனது இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டான் புகழேந்தி.
அவன் நெடுநேரம் எதுவுமே சொல்லாமல் இருந்ததால் அங்கேயிருந்த அனைவரும் அவனையே பார்த்துக் கொண்டிருக்க, அவனது வாய்மொழிக்காக நிதானமாக காத்திருந்தாள் மதுபாலா.
அனைவரின் பார்வையும் தன்னில் பதிந்து இருப்பதைக் கண்டு,”உங்களோட டெமோ நல்லா இருந்துச்சு! நாங்க கலந்துப் பேசிட்டுச் சொல்றோம். உங்களை வேலைக்கு எடுத்திட்டா இரண்டு நாளில் நாங்களே உங்களைக் காண்டாக்ட் செய்வோம்”என்று மதுபாலாவிடம் கூறி விட்டு,
“இப்போ எல்லாரும் அவங்க, அவங்க வேலையைப் பார்க்கப் போகலாம்”என்றதுமே,
அனைவரும் சிட்டாய்ப் பறந்து சென்று தங்களது வேலையில் மூழ்கி விட்டார்கள்.
“நீங்க இப்போ வீட்டுக்குக் கிளம்பலாம் மிஸ். மதுபாலா”என்றவனிடம்,
“எனக்கு இந்த வாய்ப்பைக் கொடுத்ததுக்குத் தாங்க்யூ சோ மச் சார்”என்று அவனிடம் நன்றி தெரிவித்து விட்டு, வெற்றிச்செல்வனிடம் கண்களாலேயே விடைபெற்றுக் கொண்டு அலுவலகத்தில் இருந்து கிளம்பி விட்டாள்.
“வெற்றி! இவங்களோட டெமோ நடந்த நேரத்தில் இருந்த எல்லாரையும் நாளைக்குக் காலையில் பதினொரு மணி மீட்டிங்கிற்கு வரச் சொல்லிடுங்க”என்று அறிவுறுத்த,
“ஓகே சார்”என அவனிடமிருந்து பதில் வந்ததும்,
தன் அறைக்குச் சென்று மதுபாலாவின் செயல்பாட்டு விளக்கத்தின் போது அவளது கண்ணசைவுகள் மற்றும் கையசைவுகள் தனது இதயத்தை வெகுவாக உலுக்கி விட்டிருப்பதை உணர்ந்து அதிர்ந்து போய் விட்டான் புகழேந்தி.
தனக்கு இப்போது முப்பத்தி மூன்று வயதாகிறது!
இதுவரைக்கும் எந்தப் பெண்ணைப் பார்த்தும் இந்த மாதிரியான ஈர்ப்பு வந்ததில்லை!
அப்படி இருக்கும் போது இவளிடம் மட்டும் எப்படி இப்படியானதொரு உணர்வுத் தனக்குத் தோன்றி இருக்கிறது என்றெண்ணிக் குழம்பிப் போனான்.
‘அந்தப் பொண்ணு என்னை என்னவோ செய்றா! இது ரொம்பவே தப்பாச்சே! அவளை நம்மக் கம்பெனியில் வேலைக்கு எடுக்காமல் இருக்கிறது தான் நமக்கு நல்லது என்று முடிவெடுத்தவனோ,
அடுத்தக் கணமே, அவனது தொழில் தர்மம் அந்த எண்ணத்தைத் துடைத்து எறிந்திருந்தது.
ஏனெனில் அவளது செயல்பாட்டு விளக்கம் அந்தளவிற்கு நன்றாக இருந்தது!
அதைக் கவனித்திருந்த தன்னுடைய மற்ற ஊழியர்களும் மறுநாள் தெரிவிக்கப் போகிறார்கள் என்பது அவனுக்குச் சர்வ நிச்சயமாகத் தெரியும்!
அதனால் அவளுக்குக் கண்டிப்பாகத் தனது கம்பெனியில் வேலைக் கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டவனோ, ஆனால் மதுபாலாவின் மீது தனக்குத் தோன்றும் உணர்வுகளுக்குக் கடிவாளம் போட்டுக் கொண்டு அவளைப் பற்றிய எண்ணங்களை எல்லாம் தனது மூளையில் இருந்து அழித்து விட்ட மமதையில் தன்னை வேலையில் மூழ்கடித்துக் கொண்டான் புகழேந்தி.
- தொடரும்