“ஐயோ…குட்டி… குட்டி என்னாச்சு டி?” என அவர் பதறிப் போய் மகளது கையைத் தொட, இத்தனை நாட்கள் ஸ்மரணையற்றிருந்தவள் தாயின் குரலில் உயிர்ப்புற்றாள்.
அவரைக் கண்டதும் அடிவயிற்றிலிருந்து கேவி அழுகை வர, “அம்மா… மனோ என்னைவிட்டுப் போய்ட்டான் மா. என்னை மறந்துட்டான் மா!” என இவள் வெடித்து கதறி அழுததில், பூரணியின் சர்வமும் ஆட்டம் கண்டிருந்தது.
“குட்டி… என்னாச்சு டி?” என அவர் பதறித் துடிக்க, மகள் அழுது கரைந்திருந்தாள். இரண்டு நாட்களும் அவள் கதறலும் அழுகையும் மட்டுமே கண்டிருந்தது அந்த வீடு. குகேஷூம் யசோவும் படிப்பு மற்றும் பணியின் பொருட்டு சந்தனாவை மனதே இல்லாமல் விட்டுச் சென்றனர்.
பூரணி மகளை ஒருவழியாய் தேற்றி உண்ண வைத்து என கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக் கொண்டார். முன்பு போல அவளிடம் எந்தப் பேச்சுகளும் இல்லை. எப்போதும் அமைதியாய் இருந்தாள். அவளது விழிகள் எதையோ வெறித்த வண்ணமிருந்தன. இவர் எப்படியோ அவளைக் கெஞ்சி அதட்டி என உண்மையை வாங்கிவிட்டார். அவள் கூறிய செய்தியில் பூரணி அதிர்ந்து போனார்.
“அறிவிருக்காடி உனக்கு? ஏன் டி இப்படி பண்ண? அந்தம்மா நம்ப சாப்பிட்ட தட்டுல கூட சாப்பிட கூடாதுன்னு தனியா தட்டு வாங்கி வச்சிருந்தவங்க. அவங்க பையனை எப்படிடி உனக்கு கல்யாணம் பண்ணி வைப்பாங்கன்னு நீ எதிர்பார்த்த? ஏன் குட்டி இப்படி பண்ற?” என மகளை கன்னம் கன்னமாக அறைய, அவள் எந்த எதிர்வினையும் ஆற்றாது அடியைப் பெற்றுக் கொண்டாள். வலித்தாலும் ஒரு நொடி கூட முகத்தைச் சுளிக்கவில்லை.
பூரணிக்குத் தாயாய் பயம் நெஞ்சைக் கவ்வியது. பொறுமையாய் அவளிடம் பேசி நிதர்சனத்தைப் புரிய வைக்க முயன்றார். அவரால் முடியாது போனது. மகளிடம் எவ்வித முன்னேற்றமும் இல்லை. அவளை நினைத்தே கவலை அரிக்க, அவரது உடல் கொஞ்சம் கொஞ்சமாக உருகிக் கொண்டே சென்றது.
“பூரணி, நான் சொல்றதை கேளு. பேசாம உன் மகளுக்கு நல்ல பையனா பார்த்துக் கல்யாணம் பண்ணி வச்சிடு. அதுக்கப்புறம் அவ சரியாகிடுவான்னு எனக்குத் தோணுது. இந்தக் காலத்து பிள்ளைக காதல்னு வந்து நிக்கிறது எல்லாம் சாதாரணம் தான். நீ இதுக்கெல்லாம் விசனப்பட்டுட்டு இருக்காதே!” என உறவினர்கள் அனைவரும் ஒன்று போல கூற, பூரணிக்கும் அதுவே சரியெனப்பட்டது.
ஒரு நல்ல பையனாகப் பார்த்து மகளுக்குத் திருமணம் செய்து வைத்துவிட்டால், அவள் சரியாகிவிடுவாள் என அவர் மாப்பிள்ளையைத் தேட, ஒரு மாதத்திலே ஒரு வரன் அமைந்தது. பையனும் மருத்துவம் பயின்றிருக்க, சந்தனாவின் புகைப்படம் பார்த்து மாப்பிள்ளையின் வீட்டார் சம்மதம் தெரிவித்திருந்தனர்.
“குட்டி… இந்தப் போட்டோவைப் பாரு டி. இந்தப் பையனைதான் உனக்குப் பார்த்திருக்கேன். உனக்குப் பிடிச்சிருக்கான்னு பாரு!” என்ற பூரணியின் வார்த்தைகளில் வெற்றுப் பார்வை பார்த்தவள் எதையும் கூறாது சுவரை வெறித்தாள்.
“வாயைத் தொறந்து சொல்லு டி. உன்னை இப்படி பார்க்க பயமா இருக்கு டி. உனக்கொரு நல்ல வாழ்க்கை அமையணும் குட்டி. அம்மா உன் நல்லதுக்கு மட்டும்தான் டி செய்வேன். இந்தப் பையனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு நீ சந்தோஷமா வாழ்றதை நான் பார்க்கணும் டி!” என அவர் குரல் தழுதழுக்க, சந்தனாவின் விழிகள் நனைந்தன.
“செத்துருவேன் மா. யாரையும் கல்யாணம் பண்ணிக்கோன்னு சொன்னா, நான் செத்துப் போய்டுவேன் மா. என் மனோவைத் தவிர யாரையும் நான் நினைக்க கூட மாட்டேன். அவனுக்கு ப்ராமிஸ் பண்ணியிருக்கேன் மா. என்னை உயிரோட கொன்னு புதைச்சுடாத மா. இனிமே கல்யாணம்னு ஒரு வார்த்தை உன் வாய்ல இருந்து வந்தா, இந்த சந்தனா உனக்கில்லை. உன் கூடவே கடைசி வரை இப்படியே உன் மகளா இருந்துட்றேன் மா…” என அவள் தேம்பியழ, பூரணி துடித்துப் போனார். அதுதான் அவர் கேட்ட மகளின் கடைசி அழுகை. சந்தனாவைப் பற்றிய கவலையிலே இரண்டு நாட்களில் அவரது உயிர் பிரிந்திருந்தது. காலையிலிருந்து திறக்கப்படாத கதவும் தெளிக்கப்படாத வாசலும் சந்தனாவை சிந்திக்க செய்தன. தாயருகே சென்று அமர்ந்தாள்.
“ம்மா…” என அவரைத் தொட்டாள். உடல் ஜில்லென்றிருந்தது.
“ம்மா… எழுந்திரி மா. நேரமாச்சு மா!” என அவள் பதற்றத்தில் அவரை உலுக்க, பூரணியின் உடலில் உயிரில்லை என மகளுக்கு உறைத்தது.
“ம்மா… ப்ளீஸ் மா. ம்மா, என்னை பயமுறுத்த தானே இப்படி படுத்திருக்க. ப்ளீஸ் மா. எழுந்திரி மா!” என அவள் கதறல்கள் எல்லாம் படுத்திருந்த பூரணியை எழுப்பிவிடவில்லை.
“ம்மா… இனிமே உன் பேச்சை கேட்குறேன் மா. ப்ளீஸ் மா, எழுந்திரி மா!” என அவள் அழுதாள், கதறினாள், தேம்பினாள். பூரணியின் உயிரற்ற உடல் அவளுக்கு எவ்வித பதிலும் அளிக்கவில்லை. அவரது கையைப் பிடித்துக்கொண்டு அவரை இறுக்கியணைத்துப் படுத்தாள். எத்தனை நேரம் அப்படியே படுத்திருந்தாள் என்பது அவள் மட்டுமே அறிவாள்.
அலைபேசி அடித்து அடித்து ஓய்ந்தது. சிறிது நேரத்தில் எடுத்துப் பேசினாள். “குகா… குகா, அம்மா எழுந்திரிக்கவே மாட்றாங்க டா. நீ வந்து பாரு டா!” என அவள் விசும்ப, குகேஷிற்கு என்ன செய்வதென தெரியவில்லை. அவன் சென்னையிலிருந்து கோயம்புத்தூர் வர நேரமாகும் என்பதால், இளங்கலையில் படித்த நண்பர்களை சந்தனாவின் வீட்டிற்குச் சென்று பார்க்க பணித்துவிட்டு இவனும் யசோவும் அங்கே விரைந்தனர்.
பூரணியின் மரணத்தைக் கேட்டதும் நண்பனாய் இவன் துடித்துப் போனான். யசோவிற்கு சந்தனாவின் நிலையை எண்ணி துக்கம் தொண்டையை அடைத்தது. தாய் இறந்ததை கூட உணர முடியாது பித்துப் பிடித்தது போல அமர்ந்திருந்தாள் அவள். இவர்களைக் கண்டதும் ஓடி வந்து கட்டிப் பிடித்து வெடித்தழுதாள்.
“அம்மாவை வர சொல்லு குகா. நான் இனிமே அவங்க பேச்சைக் கேட்குறேன். அவங்களை வர சொல்லு டா!” என இவள் அழுது கரைய, பூரணியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. வந்திருந்த உறவினர்கள் இரண்டு நாட்களில் விடை பெற, சந்தனாவை தனித்து விட்டுச் செல்ல யசோவிற்கும் குகேஷூக்கும் மனதில்லை. அவளைத் தங்களுடனே அழைத்துச் சென்றனர்.
சந்தனாவின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்தது. யசோதா அன்னையாய் அவளைத் தாங்கி உடனிருந்து பார்த்துக் கொண்டாள். அவளைத் தேற்றி மனநல மருத்துவரிடம் காண்பித்து பழைய சந்தனாவை மீட்க முழுதாய் இரண்டு வருடங்கள் கடந்திருந்தது. சந்தனா மீண்டிருந்தாள். ஆனால் எதையும் மறக்கவுமில்லை, கடக்கவும் இல்லை. மனமென்னும் உள்ளக்கிடங்கில் பதுக்கிக் கொண்டாள்.
மனோ இல்லையென்ற நிதர்சனம் கன்னத்தில் அறைய, வலிக்க வலிக்க ஏற்றுக் கொண்டாள். முதுகலையை அவள் முடித்திருக்க, இடைப்பட்ட வருடத்தில் யசோவிற்கும் குகேஷிற்கும் திருமணம் முடிந்திருந்தது.
குகேஷ் பெங்களூரிலே ஒரு மருத்துவமனையில் சந்தனாவிற்கு பணியைத் தேடி, தன்னருகே இருத்திக் கொண்டான். லட்சுமி அம்மா சந்தனா தங்கியிருந்த விடுதியில் வேலை பார்த்தவர். யசோவுடன் சேர்ந்து சந்தனாவை அவரும் கவனித்துக் கொண்டார். உடல்நிலை காரணமாக அவரால் விடுதியில் பணியைத் தொடர முடியவில்லை. வயதின் மூப்பும் அனுமதிக்கவில்லை. அவருக்கென யாருமற்று நின்றுவிட, சந்தனா அவரைத் தன்னுடன் அழைத்துக் கொண்டாள்.
நடந்ததை அசைப்போட்டவாறு முயன்று மெதுமெதுவாக சந்தனாவின் விழிகள் உறக்கத்தை தழுவின. லட்சுமி அவளைக் கவலையாகப் பார்த்தார். இந்தப் பெண்ணின் வாழ்க்கையில் நடந்தவை அவரறியாதது. இப்போது தான் அனைத்தையும் தெரிந்து கொண்டார்.
காலையில் ரஞ்சன் விடிந்ததும் சந்தனாவிடம் வந்து நிற்க, “என் மனோ ஒரே ஒரு நாள் மட்டும் எனக்கு கிடைப்பானா?” என நிராசையாய் உயிரை விழிகளில் தேக்கி கேட்டவளின் முன்னே அவனின் மொத்தமும் சரணடைந்திருந்தது. உடைந்தழுதிருந்தான்.
தொடரும்..