இதயம் 11.1

நீயில்லாமல் கவிதையும் இசையும் சுவையே தராது…

விழிகளை ஆழியாய் விரித்த மலர், “நிஜமாவே இந்த டிரஸ் எல்லாம் எனக்குத்தானா சார்?” என்று வினவிட, “ஆம்” எனும் விதமாக ரிஷியின் தலை அசைந்தது.

“எல்லாமே புதுசு மாதிரி இருக்கே சார்,” என்றவள் ஐயத்துடன் கேட்க, “எல்லாமே யூஸ் பண்ண டிரஸ்தான்,” என்று ரிஷி பதில் மொழிந்தான்.

“சரி,” என்பதாய் தலையசைத்தவள், “நான் பை ஏதும் கொண்டு வரல சார். சாயந்தரம் வரும்போது கொண்டு வந்து எடுத்துக்கிறேன்,” என்று பதில் இயம்ப, “இந்த ட்ராலியும் உனக்குத்தான். எடுத்துட்டு போ,” என்று ரிஷி கூறினான்.

“உண்மையாவா?” என்று விழிகளை இன்னும் பெரிதாக விரித்து ஆச்சரியமாய் கேட்க, ரிஷி அமைதியாய் தலையாட்டினான்.

“ரொம்ப தேங்க்ஸ், ரிஷி சார். எனக்கு இந்த மாதிரி ட்ராலி வாங்கணும்னு ரொம்ப நாளா ஆசை,” என்றவளது குரலில் மகிழ்ச்சி நிரம்பி வழிந்தது.

ஆசையாய் அந்த ட்ராலியைத் தொட்டுப் பார்த்தவள், “நான் போயிட்டு வரேன் சார்,” என்றபடி ட்ராலியைத் தள்ளிக்கொண்டு நடந்தாள்.

மலர் உள்ளே நுழைந்ததும், அவள் கையில் இருந்த பெட்டியைக் கண்ட வித்யா, “என்னக்கா இது?” என்று வினவிட, “இதுல ஃபுல்லா டிரஸ் இருக்கு, வித்யா. ரிஷி சாரோட தங்கச்சி ஷாலினி இருக்காங்கல்ல, அவங்களோடது. லாஸ்ட் டைம் வந்திருந்தப்போ என்கிட்ட ‘போடாத டிரஸ் நிறைய இருக்கு, உனக்குக் கொடுக்கவானு’ கேட்டாங்க. நானும் சரின்னு சொன்னேன். இப்போ ரிஷி சார் ஊருக்குப் போயிட்டு வரும்போது கொடுத்துவிட்டு இருக்காங்க போல. சார் என்கிட்ட குடுத்தாங்க,” என்று மலர் நீண்டதொரு விளக்கம் அளித்தாள்.

வித்யா ஆவலாக பெட்டியைத் திறந்து பார்க்க, உள்ளிருந்த உடைகள் எல்லாம் புதியது போலவே மின்னின.

“என்னக்கா, பழைய டிரஸ்ன்னு சொன்ன. பாக்க எல்லாம் புதுசு மாதிரியே இருக்கு,” என்று வித்யா வியப்புடன் கேட்க, “அவங்க டிரஸ் எல்லாம் ஒரு தடவை, ரெண்டு தடவைதான் போடுவாங்களாம். அதான் பார்க்க புதுசா இருக்கு,” என்று மலர் விளக்க, “என்ன டிரஸ்?” என்றபடி வெளியே வந்தாள் சாகித்யா.

“அக்கா, இங்க வாயேன். இந்த டிரஸ் எல்லாம் சூப்பரா இருக்கு,” என்று வித்யா சாகித்யாவை அழைக்க, அவளும் அருகில் வந்து பார்த்தாள்.

“ஆமாடி, சூப்பரா இருக்கு. எல்லாமே ரொம்ப காஸ்ட்லி போல,” என்று சாகித்யா கேட்க, “ஆமா சாகி, எல்லாமே ஷாலினி மேடமோட டிரஸ். அவங்க எப்படியும் காஸ்ட்லியாத்தான் போடுவாங்க,” என்று மலர் பதிலளித்தாள்.

“அக்கா, நான் இந்த டிரஸ் எடுத்துக்கிறேன் க்கா,” என்று வித்யா ஒன்றைத் தூக்க, “ஏய், உனக்கு அதெல்லாம் ரொம்ப பெருசா இருக்கும்,” என்று மலர் பதிலளித்தாள்.

“பரவாயில்ல க்கா. நான் வளர்ந்த பின்னாடி போட்டுக்குறேன்,” என்று வித்யா எடுத்துக்கொள்ள, மலர் சாகித்யாவிடம், “உனக்கு வேணுன்றதை எடுத்துக்கோ,” என்றாள்.

“எனக்குத்தான் ஏற்கனவே நீ நிறைய வாங்கிக் கொடுத்து இருக்கியே க்கா. உன் கிட்டதான் டிரஸ் கம்மியா இருக்கு. வேலைக்கு வேற போயிட்டு வர. நீயே வச்சுக்கோ,” என்று சாகித்யா கூற, “நிறைய இருக்கேடி. உனக்கு பிடிச்சதை எடுத்துக்கோ,” என்று மலர் மீண்டும் மொழிந்தாள்.

அந்த உடையிலிருந்து ஒன்றை மட்டும் எடுத்துக் கொண்ட சாகித்யா, “எனக்குப் போதும் கா. நீயே வச்சுக்கோ. ஆபீஸ் போகையில தினமும் போட்டுட்டு போ. உனக்கு அழகா இருக்கும்,” என்று இயம்ப, மலர் தலையசைத்தாள்.

“டிரஸ்ஸ பார்த்தது போதும். ரெண்டு பேரும் சீக்கிரம் கிளம்புங்க. ஸ்கூல், காலேஜுக்கு டைம் ஆச்சு,” என்று மாதவி நினைவுபடுத்த, “ஆமால, டைம் ஆயிடுச்சு,” என்று இருவரும் அடித்துப் பிடித்து வெளியேறினர்.

மாதவியும் அந்த உடைகளை கண்டுவிட்டு, “இந்த துணி எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு மலரு. ஆனா சைஸ் கொஞ்சம் பெருசா இருக்க மாதிரி இருக்கு. நான் உனக்கு பிடிச்சு தரேன்,” என்று கூற, அந்த உடையில் ஒன்றை தேர்வு செய்து எடுத்தவள், “இதை புடிச்சுதாம்மா. இன்னிக்கு போட்டுட்டு போறேன்,” என்று மலர் ஆசையாக கேட்டாள்.

“நீ போய் சாப்பிடு. அதுக்குள்ளயும் நான் புடிச்சு வச்சுடறேன்,” என்ற மாதவி தையல் இயந்திரத்தை நோக்கி செல்ல, மலர் உணவு உண்ண சென்றாள்.

தாய் தைத்துக் கொடுத்ததும் அந்த உடைகக்கு மாறியவள், கண்ணாடியின் முன் நின்று முன்னும் பின்னும் திரும்பி பார்த்தாள். அந்த வெங்காயத்தாள் நிற உடை அவளுக்கு மிகவும் அழகாய் இருந்தது.

“அம்மா, இந்த டிரஸ் எனக்கு ரொம்ப நல்லா இருக்குல்ல?” என்று மலர் தாயிடம் கேட்க, “ஆமா மலரு. இந்த கலர் உனக்கு பொருத்தமா இருக்கு,” என்று மகளை புன்னகையுடன் பார்த்தார் மாதவி.

“எல்லா டிரெஸ்மே நல்லா இருக்கு. ஷாலினி மேடம் கிட்ட தேங்க்ஸ் சொல்லணும்,” என்று எண்ணிக் கொண்டவள் அலுவலகத்திற்கு புறப்பட்டாள்.

அலுவலகத்திலுமே அவளது உடையை பார்த்து நிறைய பேர் நன்றாக இருப்பதாக கூற, மலர் அன்று முழுவதுமே முகம் முழுவதும் புன்னகையுடன்தான் வலம் வந்தாள்.

மறக்காமல் ரிஷிக்கு புலனத்தில் செய்தி அனுப்பி ஷாலினியின் எண்ணை பெற்றுக் கொண்டவள், அவளுக்கு நன்றி கூறி செய்தியும் அனுப்பி இருந்தாள்.

மலருக்கு சிறுவயதிலிருந்தே புதிய உடைகள் வாங்குவதென்றால் அலாதி பிரியம்தான். தந்தை இருந்தவரை மகளது ஆசையை நிறைவேற்றினார். அவர் இறந்த பிறகு குடும்ப கஷ்டத்தை பார்க்கவே மலருக்கு நேரம் சரியாக இருக்க, புதிய உடை வாங்கவெல்லாம் பணம் இருந்ததில்லை. இப்போது ஷாலினி கொடுத்த உடையெல்லாம் மிகவும் அழகாக இருக்க, தினமும் ஒன்றை உடுத்தி மகிழ்வுடன் சுற்றி வந்தாள்.

“சார், எம்ப்ளாயிஸ்க்கு இந்த மந்த் தீபாவளி போனஸ் கொடுக்கணும். நீங்க இந்த பைலை பாத்துட்டு ஓகே சொன்னா அமௌன்ட் கிரெடிட் பண்ணிடலாம்,” என்று உதவியாளர் கூறியதை கேட்டுக் கொண்டவன், “நான் பாத்துட்டு உங்களுக்கு இன்பார்ம் பண்றேன். யூ மே கோ நவ்,” என்று அனுப்பிவிட்டு அந்த கோப்பை எடுத்து புரட்டிப் பார்த்தான்.

அப்போதுதான் மலருக்கு தீபாவளிக்கு போனஸ் கொடுக்க வேண்டும் என்ற நினைவு வந்தது. எவ்வளவு கொடுக்க வேண்டும்? வேறு ஏதும் வாங்கி கொடுக்க வேண்டுமா? என்று அவனுக்கு தெரியவில்லை. இதற்கு முன் வீட்டில் உள்ள பணியாளர்களுக்கு நேரடியாக அவன் சம்பளம் எதுவும் கொடுத்திருந்ததில்லை.

எல்லாவற்றையும் அண்ணனும் தந்தையும் பார்த்துக் கொள்வதால் அவனுக்கு பெரிதாக இதைப் பற்றி தெரியவில்லை. அலுவலகத்தில் ஒரு மாத சம்பளத்தை தீபாவளி போனஸாக ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று தெரியும். ஆனால் மலருக்கு எப்படி என்று யோசித்தவன், சுதாகரிடம் அழைத்து அவன் என்ன கொடுப்பான் என்று விசாரித்தான்.

error: Content is protected !!
Scroll to Top