அன்பு – 22.2

“இப்போ எனக்கு அர்ஜெண்ட் வொர்க் இருக்கு டி. நான் கிளம்பணும். நீ இங்கதானே இருப்ப. கண்டிப்பா வீட்டுக்கு வரணும். வீக்கெண்ட் மீட் பண்ணலாம். மனோவுக்குப் ஃபோன் பண்ணி பேசு. உனக்கொரு சர்ப்ரைஸ் இருக்கு. அவனே சொல்லுவான்!” என இவன் அவசரத்தில் மனோவின் மறதியைப் பற்றி உரைக்காது நகர்ந்திருந்தான்.

சந்தனாவுக்கு சந்தோஷத்தில் மூச்சடைத்துப் போனது. விறுவிறுவென தனது அறைக்குள் சென்று தன்னை ஆசுவாசம் செய்து கொண்டாள். மனோவிடம் என்ன பேசவென இத்தனை நாட்கள் உருப்போட்டிருந்த மனது இப்போது வெற்றிடமாக இருந்தது.

சண்டையிட வேண்டும், ஏன் இத்தனை நாட்கள் தன்னைப் பார்க்க வரவில்லை. பேசவில்லை என செல்லக் கோபம் கொள்ள வேண்டும். மனோ எப்படி தன்னை சமாதானம் செய்வான் என அவன் குரல் கேட்க வேண்டும். கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு கடந்திருந்தது. அவளின் மனோவிடம் பேசப் போகிறோம் என்ற நினைப்பே புதுத் தெம்பை அளிக்க, தண்ணீர் குடித்து தன்னை ஆசுவாசம் செய்து கொண்டாள்.

கைகள் லேசாய் வியர்க்க, சில நொடிகள் நிதானித்தாள். ‘அவன் என்னோட மனோ. எதுக்கு இவ்வளோ பதட்டம் எனக்கு. ஹீ இஸ் மை மனோ!’ என தன்னை இயல்பிற்குகொண்டு வந்தவள், அவனுக்கு அழைப்பை விடுத்தாள்.

“ஹலோ…” மனோரஞ்சன் அழைப்பை ஏற்றதும் பேச, இவளுக்கு விழிகள் வேகவேகமாக நனைந்து தளும்பிற்று. எத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரான அவன் குரல் கேட்கிறாள். சந்தோஷத்தில் பேச்சு வரவில்லை போல. மொழியறியாத குழந்தை போல சில நொடிகள் விழித்தாள்.

“ஹலோ… லைன்ல இருக்கீங்களா?” அவன் மீண்டும் கேட்க, அடைத்த தொண்டையை சரிசெய்தவள், “ஹம்ம்… மனோ!” என்றாள் காற்றுக்கும் வலிக்காத குரலில்.

“யெஸ், யாரு பேசுறது?” என அவன் கேட்க, இவளுக்கு மனம் சுணங்கிற்று.

‘என்னை யாருன்னு கேட்குறீயா மனோ?’ மனம் அவனிடம் செல்ல சண்டையிடத் தயாராக, மறுபுறம் யாருடைய பேச்சு சப்தமோ கேட்டது.

“கங்கிராட்ஸ் மை பாய். அப்பாவாகிட்ட. இப்போதான் உங்கம்மா நீ பொறந்து இருக்கன்னு சொன்ன மாதிரி இருந்துச்சு. அதுக்குள்ளேயும் இந்தப் பையன் மனோரஞ்சனுக்கு ஒரு பையன் பொறந்துட்டான்!” என அவர் பேசியதும்,
“தேங்க் யூ மாமா…” என இவன் பதிலளித்தான். சந்தனாவிற்கு தன் காதுகளையே நம்ப முடியவில்லை போல.

‘சே… கண்டிப்பாய் அப்படியெல்லாம் இருக்காது. என் மனோ எனக்கு ஒரு போதும் துரோகமிழைத்திருக்க மாட்டான்!’ என பரிதவித்துப் போனது மனம்.

“ஹலோ… லைன்ல இருக்கீங்களா?” இவளிடம் அவன் பேச, சந்தனாவிற்கு வார்த்தைகள் நடுங்கின.

“மனோ… நான்…” என அவள் பேச வர, “இங்க மனோரஞ்சன் யாரு?” என செவிலியர் அழைத்துவிட்டார்.

“சிஸ்டர், நான்தான்!”

“சார், உங்க வொய்ஃப் ஷோபனா கண் முழிச்சுட்டாங்க. உங்கப் பையனையும் ரூமுக்கு ஷிஃப்ட் பண்ணிட்டோம். உங்களை அவங்க வர சொல்றாங்க!” என செவிலியர் கூற,

“ஓகே சிஸ்டர், இதோ வரேன்…” என்று உரைத்தவனின் குரலில் இருந்த மகிழ்ச்சி சந்தனாவை மறிக்க செய்திருந்தது. கண்களிலிருந்து பொலபொலவென கண்ணீர் வடிய, வாயைப் பொத்திக் கொண்டாள். எங்கே கதறிவிடுவோமோ என அவளுக்குப் பயமாய் போய்விட்டது.

“ஹலோ… ஷோபியோட ஃப்ரெண்டா? அவளைப் பார்க்கணும்னா, சகாயம் ஹாஸ்பிடல் வாங்க. இங்கதான் இருக்கோம்!” என அவன் அழைப்பைத் துண்டித்து சென்றுவிட, சந்தனாவின் மொத்த உலகமும் அந்நொடி தலைகீழாய் சுழன்றிருந்தது. கையிலிருந்த அலைபேசி நழுவி விழுந்து உடைய, அவளது இதயமும் மனோவின் வார்த்தையில் உடைந்து சிதறியிருந்தது.

“ட்யூட்டி டைம்ல இங்க என்ன பண்ற டி?” எனக் கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்த யசோதா இவளது தோளைத் தொடவும், சந்தனா மயங்கிச் சரிந்திருந்தாள்.

“ஹே… சந்து… சந்தனா, என்னாச்சு டி?” என அவள் பதற, குகேஷ் வந்துவிட்டான். அவளை பரிசோதித்து அங்கேயே அனுமதித்தனர். இரண்டு மணிநேரங்கள் கடந்து கண்விழித்த சந்தனாவிற்கு புறத்தூண்டல் எதுவுமே உறைக்கவில்லை. எதையோ வெறித்தவாறே இருந்தவளின் விழிகளில் இருந்து கண்ணீர் மட்டும் வடிந்த வண்ணமிருக்க, அவளிடம் எந்தவித அசைவும் இல்லை. மனம் மட்டும் மனோ மனோ என்ற ஜெபத்தை மட்டும் உதிர்த்த வண்ணமிருந்தது.

“சந்து… என்னாச்சு டி உனக்கு? ஏன் இப்படி இருக்க? எதாவது பேசு டி?” அவள் கண்களிலிருந்து ஊற்றாய்ப் பெருகும் கண்ணீரை துடைத்த யசோ தோழியை உலுக்க, அவளிடம் எவ்வித எதிர்வினையும் இல்லை.

யார் வந்தார்கள், போனார்கள், என்ன பேசினார்கள் என எதுவுமே அவளுக்கு சிந்தையில் பதியவில்லை. மனோ என்ற வார்த்தையை மட்டுமே உதிர்த்தாள். குகேஷ் அவளை அதட்டி, அடித்துக் கூடப் பார்த்துவிட, ஒரு வார்த்தையை அவளிடமிருந்து வாங்க முடியவில்லை.

இரண்டு நாட்கள் கடந்திருந்தது. துளி உணவு ஆகாரமின்றி சாதித்து விட்டாள் இந்தப் பெண். யசோ மற்றும் குகேஷூக்குத்தான் பயம் அப்பியது. ஒரு வாரம் இதே போலவே கடக்க, கண்கள் உள்ளே சென்று தேகம் மெலிந்து சந்தனாவைக் காண்போருக்கு நெஞ்சம் பதைபதைத்துப் போனது. தூங்காத விழிகள் செவ்வரியோடியிருந்தன. உயிர்ப்பற்றிருந்த கண்களில் கண்ணீர் மட்டும் வற்றவில்லை.

பேராசிரியர்கள், உடன் பயிலும் மாணவர்கள் என அவளை எத்தனை வற்புறுத்தியும் சந்தனாவின் சிந்தனை இங்கே இல்லை. மனோ தன்னை விட்டுவிட்டான் என்ற நிதர்சனத்தை அவளால் துளியும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என் மனோ என்றைக்கும் அப்படி செய்பவன் இல்லையே என செயல் சிந்தனை முழுவதும் மனோரஞ்சன் மட்டுமே நிறைந்து கிடந்தான்.

ஆசை ஆசையாய் அவர்களுக்கென அவள் கட்டியிருந்த வீடு குடிபுகுமுன்னே இடிந்து சரிந்து விழுந்ததை அவளால் துளியும் நம்பமுடியவில்லை. காதில் கேட்ட வார்த்தைகள் பொய்யாய் இருக்குமென தன்னைத் தானே சுறத்தேற்றலில் மீட்க முனைந்தவள், மோசமாய் உடைந்தழுதாள். ஏனோ மனோ தனக்கில்லை என்பதை அவளால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.

மனோவை தன் உயிரில் பொத்திப் பாதுகாத்திருந்தாளே. அவளது ஊண் உயிர் என அனைத்தையும் அவனுக்காகவென அர்ப்பணிக்கும் அளவிற்கு தனது ஒவ்வொரு அணுவிலும் நிறைந்து கிடப்பவன், தன்னைவிட்டுச் செல்ல மாட்டான் என பேதை மனம் நம்பியது.

‘மனோ… என்னை விட மாட்டான். மனோ என்னை விட மாட்டான்!’ என மனம் பதறித் துடிக்க, யாரிடமும் கூறாது சகாயம் மருத்துவமனைக்கு கிளம்பிவிட்டாள். இவள் உள்ளே செல்ல, அன்றைக்குத்தான் ஷோபனாவை வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக மொத்தக் குடும்பமும் அங்கே குழுமியிருந்தது.

ரஞ்சன் மனைவியைக் கைத்தாங்கலாக அழைத்து வர, சதாவின் கைகளில் அவரது பேரன் வீற்றிருந்தான். குடும்பமாய் அவர்களைக் கண்டதும் சந்தனா உடல் அங்கேயே சரிந்து விழுந்தது. உணவு ஈயாத உடலில் துளியளவும் தெம்பில்லை. அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் அவளை மருத்துவமனையில் சேர்க்க, அவளது அலைபேசியில் கடைசியாய் அழைத்த குகேஷூக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவனும் யசோவும் அடித்துப் பிடித்து வந்திருந்தனர். ஏனோ தோழியை இப்படிக் கண்டதும் அவர்களுக்கு உயிரே போய்விட்டது.

இதற்கு மேலும் இவளை இங்கே வைத்திருக்க முடியாதென கருதி வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். சொல்லாமல் கொள்ளாமல் வந்திருப்பவர்களைப் பார்த்த பூரணி, “வாமா யசோ…வா குகா!” என அழைத்தவருக்கு அப்போதுதான் மகளின் ஓய்ந்த தோற்றம் கண்களில் தென்பட்டது போல.

error: Content is protected !!
Scroll to Top