அன்பு – 21.2

இரண்டு கைகளிலும் முகத்தைத் தாங்கியிருந்த மனோவின் கண்கள் இரண்டும் சிவந்து செவ்வரியோடியிருந்தன. இத்தனை நேரம் கண் இரைப்பைகள் தன் வேலையை செவ்வனே செய்ததன் விளைவால் அவனது முகம் உவர்நீரில் பிசுபிசுத்துப் போயிருந்தது.

உயிர்ப்பற்றிருந்த கண்களும் கனத்த இதயமும் எதிரிலிருந்தவளை தனக்குள் புகுத்திக் கொள்ள முனைந்தன. ஆனால் சத்தியமாய் முடியவில்லை. அப்பட்டமாய்த் தோல்வியைத் தழுவிய இதயம் இவனை இறுக்கிப் பிடித்து மூர்ச்சையடைய செய்தது போல. அதன் வலியில் முகத்தைச் சுளித்தவன், அப்படியே அசையாது சிலை போல அமர்ந்திருந்தான்.

அவனுக்கு என்ன செய்வது, என்ன பேசுவது என எந்த பிரக்ஞையும் இல்லை. புறத்தூண்டல் அற்றுப் போய் சந்தனாவையே வெறித்தான். குட்டி குட்டி என உயிர் வரை தீண்டும் அழைப்பு இந்நொடி அவனை உயிர் வதை செய்தது என்னவோ உண்மை.

இதோ உயிரும் உடலுமாய் தனக்காகவென இத்தனை வருடங்கள் காத்திருந்தப் பெண்ணை மறந்திருக்கிறான். மானசீகமாக ஒன்றல்ல இரண்டல்ல பதினெட்டு வருடங்கள் தன்னுடனே வாழ்ந்தப் பெண், இப்போது தன்னுடைய நினைவில் நிஜத்தில் என எதிலுமே இல்லை என நினைத்ததும் அடிவயிற்றிலிருந்து குபுகுபுவென வாதை தொண்டையை அடைத்து, இன்னுமே விழிகளில் நீரைப் பொங்கச் செய்தது‌.

சந்தனாவிற்கு அவனுடைய அழுகையை காணப் பொறுக்கவில்லை போல. என் மனோ எங்கேயும் உடைந்துவிடக் கூடாதென எண்ணித்தானே இத்தனை நாட்கள் எத்தனை வேதனை தனக்குள்ளிருப்பினும் அதை வெளிக்காட்டாது தன்னம்பிக்கை மிகுந்த பெண்ணாய் தன்னைக் காட்ட விழைந்தாள்.

ஆனால், இந்தப் பையன் மனோ என்று வரும்போது அவளுடைய வேலிகள் எல்லாம் உதிர்ந்து விடுகின்றன. அனைத்தையும் உடைத்து தூள் தூளாக்கிவிடுகிறானே என நினைத்ததும் ஆற்றாமையில் மனம் விம்மித் துடிக்க, “மனோ… ப்ளீஸ்டா… அழாத டா!” என்றாள் விசும்பலாய்.

அதற்கு மேலும் பேச திராணியற்ற குரல் சதி செய்தது. இவள்பட்ட பிரயத்தனங்கள் எல்லாம் விழலுக்கு இரைத்த நீராய் வீணாய்ப் போனதை நினைத்து துடித்துப் போனாள். அவனுடைய கண்ணிலிருந்து வழியும் ஒவ்வொரு சொட்டு நீரும் தனது உயிரை மெதுமெதுவாய் உறுஞ்சிக் கொண்டிருந்ததை சந்தனா மட்டுமே அறிவாள்.

“என்னைத் தேடுனியா குட்டி?” உயிரைக் கண்களில் தேக்கி கேட்டிருந்தவனின் கேள்வியில் சந்தனாவின் உணர்வுகள் பிரவாகமாகப் பொங்கின.

ஏன் தேடவில்லை. இந்நொடி கூட ரஞ்சனிடம் மனோவின் சாயலைத் தேடித் தேற்றவள்தானே இந்த சந்தனா. தாயைத் தொலைத்துவிட்டு தேடும் சேயாய் பத்து வருடங்கள் அவனைப் பையத்தியமாய்த் தேடினாளே. எங்காவது மனோ என யாராவது விளித்தால் இவனாக இருக்க வேண்டுமென கடவுளிடம் மன்றாடி திரும்பி இல்லையென்றான நாட்கள் எல்லாம் அவளது தேடலின் எச்சங்கள்.

மனோ வாய் வழியாய்க் கேட்டதும் மனம் முழுவதும் அவனில்லாது தான் வாழ்ந்த நாட்களின் வலியை கூறி கதறச் சொல்ல, தாங்க மாட்டானே. என் மனோ அதையெல்லாம் தாங்க மாட்டானே என மனம் அவனுக்காய்த் துடித்து தவித்துப் போனது.

தன்னுடனே போகட்டும் இந்த வலியும் வேதனையும். என்னுடைய மனோ என்றைக்கும் அதையெல்லாம் புரட்டிப் பார்க்க கூடாத பக்கங்கள். இத்தனை நாட்கள் எப்படி தனக்குள்ளே புதைத்து வைத்திருந்தாளோ, இனிமேலும் அது அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்.

கடந்த காலத்தை எண்ணி அவனின் நிகழ்கால வாழ்க்கை எவ்விதத்திலும் பாதிக்கப்பட்டு விடக் கூடாதென மனம் இப்போது அவன் மீதான கரிசனத்தில் கவிழ, இமையோரம் ஈரம் அதிகமாய் படர்ந்தது.

அவன் பதிலுக்காய் இவளது முகத்தைப் பார்த்திருந்தான். அடிப்பட்ட பாவனை மனோவின் முகத்தில். இந்தப் பெண்ணிற்கான தவிப்பு மட்டுமே அவனிடம் இந்நொடி. அடித்த தாயிடமே சரணடையும் குழந்தை போல சந்தனாவின் விழிகள் வேகவேகமாக நனைந்தன.

உதட்டைக் கடித்து, ஆமாமென தலையை அசைத்தாள். வேறு எதுவும் கூறவில்லை. வாய் வார்த்தையாய் உரைத்து அவனை ரணப்படுத்த கிஞ்சிற்றும் எண்ணவில்லை.
மனோ அசையாதிருந்தான். அந்த தலையாட்டலில் அவனது மனம் வெகுவாய் காயம்பட்டது.

தீனாவிற்கும் கண்களில் கண்ணீர் வழிந்தது. “குட்டி… அழாத குட்டி!” என்றான் தோழியை சமாதானம் செய்யும் விதமாக. அவளது இழப்பை யாராலும் ஈடுகட்ட முடியுமென தோன்றவில்லை. இந்தப் பெண் இப்படியொரு முடிவை எடுத்திருக்க வேண்டாம் என ஆயிரமாவது முறையாக மனம் அவளுக்காகத் துடித்துப் போனது.

ஏனோ குற்றம் செய்த பாவனையில் அமர்ந்திருந்த மனோவைக் காண்கையில் சந்தனாவுக்கு தாளவே முடியவில்லை. தன்னை தேற்ற முயன்றாள். கண்களில் ஊற்றாகப் பெருகும் நீரை அணைப்போட்டு தடுத்து முகத்தை துடைத்தாள். நான் நன்றாய் இருக்கிறேன் என உதடுகளில் புன்னகையை புகுத்தினாள். இத்தனை நாட்கள் எல்லோரிடமும் பூசிய அரிதாரத்தை இப்போதும் முகத்தில் அப்பிக் கொண்டாள்.

எதுவும் என்னைப் பாதிக்கவில்லை என்ற எண்ணத்தை தன்னுள் விதைத்தவள், “ப்ம்ச்… மனோ. என்ன டா, ஏன் இப்படி உக்காந்து இருக்க. உன் மேல எந்த தப்பும் இல்ல மனோ… நான்தான் கிறுக்கச்சி. லூசு நான். கண்டதையும் உளறி உன்னைக் கஷ்டப்படுத்திட்டேன் இல்ல. சாரி டா. சாரி.‌..” என தளும்பிய விழிகளை சிமிட்டி அவன் தோளைத் தொட்டாள்.

இந்நொடி கூட இந்தப் பெண் எனக்காகவென எல்லாவற்றையும் தன் தலையில் ஏற்றிக் கொள்கிறாளே என மனோ நினைத்ததும் நெஞ்சுமுட்டுமளவிற்கு வாதை வலியைப் பரப்பியது.

ஏனோ இத்தனைக் காதலுக்கும் பிரியத்திற்கும் தனக்கு தகுதியில்லை எனத் தோன்றிற்று. ஆமாம், இந்த உலகத்திலே இப்போது மிகவும் அற்பமான பிறவியாய் தன்னை நினைத்தே அருவருத்துப் போனான். எனக்காகவென அனைத்தையும் உதறிவிட்டு காத்திருந்த பெண்ணின் நம்பிக்கையை உடைத்திருக்கிறேனே.

எனக்கொரு குடும்பம் குழந்தை என நான் வாழ, இந்தப் பெண் அத்தனையும் எனக்கு அர்ப்பணித்திருக்கிறாளே என எண்ணி வேதனையோடு அவளை நிமிர்ந்து பார்த்தவன், சந்தனாவை இடையோடு கட்டிக் கொண்டான். ஒரு நொடி அவள் இதை எதிர்பார்க்கவில்லை போல. அந்த அணைப்பில் உயிர் வரை நடுங்கிப் போனது.

“சாரி டி… சாரி குட்டி. எனக்கு எதுவுமே ஞாபகம் இல்ல டி…” என விசும்பியவனிடம் இவளது மொத்தமும் சரணடைந்திருந்தது. இத்தனை நேரம் தயங்கித் தவித்த கரங்கள் அவனைத் தன்னோடு இறுக்கிக் கொண்டன.

ஏனோ இத்தனை நாட்கள் கை சேராது என எண்ணியிருந்த தன்னுடைய மனோ இப்போது தன்னருகில் என நினைத்ததும் குபுகுபுவென கண்ணில் நீர் பெருகியது. எத்தனை வருடங்களுக்குப் பிறகான அவனுடைய ஸ்பரிசம். கிடைக்கவே கிடைக்காது என்றெண்ணிய பொக்கிஷம். அவளின் பொக்கிஷம் இந்த மனோரஞ்சன்தானே.

“மனோ… இல்ல டா. என் மனோ தப்பு பண்ண மாட்டான். உனக்கு ஞாபகம் இருந்தா, என்னைத் தேடி வந்திருப்ப மனோ. இப்படியெல்லாம் நடக்கணும்னு விதி டா. யாராலும் அதை மாத்த முடியாது டா!” என்றாள் தேம்பலாய்.

இந்நொடி கூட தன் விதியை கடவுள் மாற்றி எழுதி இருக்கலாம் என நிராசையில் அழுது கரைந்தது அவளின் காயம்பட்ட மனது. நடந்ததை ஏற்றுக்கொண்டு நான் கடந்துவிட்டேன் என்ற பசப்பு வார்த்தைகள் யாவும் குட்டியென்ற விளிப்பில் கரைந்து காற்றில் கலந்திருந்தன. தங்களை இப்படியொரு கோலத்தில் நிறுத்திய விதியை நினைத்து தேம்பினாள் சந்தனா.

error: Content is protected !!
Scroll to Top