அவன் கூறியதை அட்சர சுத்தமாக பின்பற்றி ஐம்பது வரை எண்ணிக் கொண்டிருக்கும் சந்தனாவை மனோ அன்பாய் பார்த்திருந்தான். ஏனோ குட்டியை அவனுக்கு எவ்வளவுப் பிடிக்குமென வார்த்தைகளில் வரையறுக்க முடியாது. அத்தனையாய் அவள் மீது அன்பும் அள்ள அள்ள குறையாத பாசமும் நேசமும் வைத்திருந்தான்.
ஐம்பது எண்ணி முடித்தவள் கண்ணைத் திறக்க, மனோ நின்றிருந்தான். “மனோ… என்ன சர்ப்ரைஸ், எங்க?” என அவள் சுற்றும் முற்றும் தேட, அவள் கழுத்தைக் காண்பித்தான் அவன். குனிந்து பார்த்தாள் சந்தனா. எம் மற்றும் எஸ் என ஆங்கில எழுத்தில் பொறிக்கப்பட்ட வெள்ளி கழுத்தணி அவள் கழுத்தை அலங்கரிக்க, அதைத் தொட்டுப் பார்த்தாள்.
“மனோ… இது?” என அவள் கேள்வியாகப் பார்க்க, “மனோ அண்ட் சந்தனாவோட ஃபர்ஸ்ட் லெட்டர் குட்டி. என் ஞாபகமா இதை எப்பவும் நீ கழட்டக் கூடாது!” என அவன் கூறவும், இவளது முகம் மாறியது.
அதில் மனோவிடம் மெலிதாய் சுணக்கமும் வருத்தமும் தோன்றிற்று. “ஏன் குட்டி, உனக்காக பாக்கெட் மணியை சேர்த்து வச்சு வாங்குனேன். பிடிக்கலையா?” வருத்தம் மிகுந்த குரலில் கேட்டான்.
“மனோ… இல்ல, இல்ல. செயின் சூப்பரா இருக்கு. எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு டா. ஆனால், அம்மா திட்டுவாங்க டா. உன்கிட்ட எதையும் வாங்க மாட்டேன்னு ப்ராமிஸ் பண்ணியிருக்கேன்னு உனக்கே தெரியும் இல்ல?” என கவலையாய்க் கேட்டாள். இப்போது மனோவிற்கு பூரணி மீது கோபம் வந்தது. அவர்கள் சத்தியத்தின் மீதும் ஏகக் கடுப்பும் வந்து தொலைத்தது.
“அதெல்லாம் எனக்குத் தெரியாது டி. இதை நீ கழட்டக் கூடாது!” அவன் கடுப்புடன் கூற, “மனோ… இல்ல டா. இதை, இதை நானே கூட வச்சிக்குறேன். ஆனால், கழுத்துல போடலை டா!” என சந்தனா கழட்டச் செல்ல,
“குட்டி… இந்த செய்னை நான் கோவில்ல வச்சு வாங்கிட்டு வந்தேன். இதை நீ கழட்டுனா எனக்கு எதுவும் ஆகிடும்…” அவள் கழட்டக் கூடாதென படபடவென வாய்க்கு வந்தப் பொய்யைக் கூறினான் மனோ. சந்தனாவின் கை அப்படியே நின்றுவிட்டது.
“மனோ…போ, போ. நீ பொய்தானே சொல்ற?” என அவள் முகம் முழுவதும் கலவரம் படர்ந்தது. உண்மையிலே அவனுக்கு எதுவும் நிகழ்ந்தது விடுமோ என மனம் நொடியில் பயத்தில் குளித்திருந்தது.
“இந்த விஷயத்துல நான் பொய் சொல்வேனா டி. நிஜமா, நீ கழட்டுனா, என் உயிருக்கு எதாவது ஆகிடும். நான் செத்துடுவேன். பரவாயில்லையா?” அவன் கேட்டதும், இவளது விழிகள் தளும்பிற்று. அவனது கன்னத்திலே பட்டென அறைந்திருந்தாள். மனோவிற்கு சத்தியமாய் வலிக்கவில்லை. அவள் கண்ணீர் தனக்கானது எனும்போது நெஞ்சமெல்லாம் ஏதோ செய்து தொலைத்தது.
“இனிமே இந்த மாதிரி எதுவும் பேசுன, நான் உன்கூட பேச மாட்டேன் மனோ… போ, போ…” என அவள் தேம்ப,
“ச்சு…சாரி டி. நான், அது சாமிகிட்டே ப்ராமிஸ் பண்ணிட்டேன். என் குட்டி இந்த செயினை கழட்ட மாட்டான்னு. அதான்!” என அவள் கண்ணீரைத் துடைத்துவிட்டான். அவனது கையை சந்தனா வெடுக்கென தட்டிவிட்டாள். அவளது உதடுகள் பூட்டுப் போட்டுக் கொண்டன.
“சாரி டி… சாரி, நிஜமா இனிமே இப்படி பேச மாட்டேன்!” என மனோ கெஞ்சலில் சந்தனா சமாதானமடைந்தாலும் அவளது முகம் பயத்தில் மெதுவாய் வெளுத்தது.
“அம்மா கேட்டா, என்ன சொல்லுவேன் மனோ. நீ வாங்கிக் கொடுத்தன்னு தெரிஞ்சா, வெளுத்துடுவாங்க!” என்றவளின் குரலில் பயம் அப்பிக் கிடந்தது.
“நான் வாங்கிக் கொடுத்தேன்னு சொல்லாத. பொய் சொல்லு குட்டி. அதான் உன் ஃப்ரெண்ட் ராதிகா இருக்கால்ல, அவ வாங்கி கொடுத்தான்னு சொல்லு…” என்றான் அவன்.
“பொய் சொல்றது தப்பு மனோ…” அவனை முறைத்தாள்.
“என் உயிர் முக்கியமா இல்ல, உண்மையைப் பேசறது முக்கியமா?” அவன் கேட்க, இவளிடம் கலக்கம் சூழ்ந்தது.
“குட்டி… எனக்காக ஒரே ஒரு பொய்தானே. இது சில்வர் இல்ல, உங்க ஸ்கூல் பக்கத்துல ஒரு கடைல ராதிகா வாங்கி குடுத்தான்னு சொல்லிடு…”
“அம்மா ராதிகிட்டே கேட்டுட்டா?”
“குட்டி… என் ஃப்ரெண்ட்ஸ் எனக்கு எவ்வளவோ கிஃப்ட் பண்ணியிருக்காங்க. அவங்ககிட்டே எல்லாம் என் அம்மா, அப்பா போய் கேட்டாங்களா என்ன? அதெல்லாம் கண்டு பிடிக்க மாட்டாங்க. நீ பயப்படாம சொல்லு…” என அவன் தைரியம் கொடுக்க, இவள் அரைமனதாக தலையை அசைத்தாள்.
“மனோ… இதான் லாஸ்ட். இதுமாதிரி எதுவும் நீ வாங்கி கொடுக்க கூடாது!” என்றாள் கண்டிப்புடன்.
“சரி டி. இனிமே எதுவும் கொடுக்க மாட்டேன். கல்யாணத்துக்கப்புறம் வாங்கித் தரேன்!” என்றுரைத்தவன், தனது அலைபேசியை எடுத்தான்.
“குட்டி, ஒரு ஃபோட்டோ எடுத்துப்போமா? புது செயின் கிஃப்ட் பண்ணி இருக்கேன் இல்ல?” என மனோ இறைஞ்சலாகக் கேட்க,
எட்டிப் பூரணியைப் பார்த்தவள், “சீக்கிரம் எடு மனோ. அம்மா பார்த்தா திட்டுவாங்க!” என்றவளின் தோளில் கையைப் போட்டவன், தங்களுக்கான முதல் சுயமிப்புகைப்படத்தை அலைபேசியில் பதிந்தான்.
சுயமி எடுத்து முடிய சந்தனா அவன் கையைத் தட்டிவிட்டு விலகி அமர்ந்தாள். மனோ அந்தப் புகைப்படத்தை பெரிதாக்கிப் பார்த்தான். அழகாய் வந்திருந்தது. மனம் நிறைந்து போனது அவனுக்கு. சந்தனா விடைபெற, அவன் விளையாடச் சென்றான்.
பூரணி சந்தனாவின் கழுத்திலிருந்த கழுத்தணியை கவனிக்கவில்லை. ஆனால் இவளுக்குத்தான் ஒவ்வொரு நிமிடமும் மனது தடதடவென்றிருந்தது. உணவு உண்ணும்போது கேட்டுவிட்டார் பெண்மணி.
“குட்டி… என்ன அது? கழுத்துல செயின்?” அவர் வினவ, “ம்மா… ராதிகா வாங்கி கொடுத்தா மா…” என்றாள் நடுக்கத்தை மறைத்து.
“யார்கிட்டேயும் எதுவும் வாங்க கூடாதுன்னு சொல்லி இருக்கேனில்ல டி?” அவர் அதட்டலாய்க் கேட்க, “ம்மா… நான் நான் வேண்டாம்னுதான் சொன்னேன். ஆனால் அவதான்மா கட்டாயப்படுத்தி குடுத்தா. அவளுக்கு நான் மேக்ஸ் சொல்லி கொடுத்தேன் மா. அதுக்காக வாங்கி குடுக்குறேன்னு சொன்னாளா, நான் வாங்கிட்டேன் மா…” என்றாள் பதற்றத்துடன்.