சந்தனா மனோவிடம் செய்த சத்தியத்தை மனதில் உருப்போட்டவாறு நாட்களை கடத்த, மனோ அவளிடம் கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்காக தினமும் அவளுடன் அமர்ந்து படித்தான். காலையில் கூட விளையாட செல்லவில்லை.
நன்றாய் படித்து நல்ல வேலையில் சேர்ந்தால்தான் சந்தனாவைத் திருமணம் செய்து கொள்ள முடியும் என்ற எண்ணமே அவனது படிப்பிற்கு ஒரு உந்துதலைக் கொடுத்தது. அதைவிட குட்டியிடம் அவன் செய்து கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்ற வேண்டும்.
மனோ, சந்தனா போன்று சத்தியத்திற்கு எல்லாம் அத்தனை மதிப்புக் கொடுப்பவனில்லை. ஆனாலும் அவனது குட்டியின் விஷயத்தில் எல்லாமே தலைகீழ்தான். அவளை எள் அளவும் ஏமாற்றக் கூடாதென அன்றைக்குப் பிறகு எப்போதும் அவன் திருமணம், காதல் என்ற வார்த்தைகளைப் பற்றி பேசவில்லை. பேச்சு படிப்பு சம்பந்தமாகத்தான் இருந்தது.
முன்பு போல அவளிடம் எந்த வேலையும் மனோ கொடுக்கவில்லை. இவனே முடிந்தளவிற்கு தன்னுடைய வேலையை செய்தான். சந்தனாவை இன்னுமே அக்கறையாய், அன்பாய்ப் பார்த்துக் கொண்டான்.
நேசம் காதல் என்ற வார்த்தையைத் தாண்டி குட்டி அவனுடையவள். சாகும்வரை அவள் தன்னுடன்தான் இருக்கப் போகிறாள். அவளை யாரும் தன்னிடமிருந்து பிரிக்க முடியாது என்றொரு எண்ணமும் அவள் மீதான அன்பை பிரவாகமாகப் பொங்கச் செய்தது.
தேர்வு நாளும் வந்தது. மனோ சந்தனாவிற்கு புதிய எழுதுகோல் வாங்கிக் கொடுக்க, அவள் மறுத்துவிட்டாள். அவனுக்கு வருத்தம்தான். இருந்தும் அவள் நன்றாய் தேர்வை எழுதினால் போதுமென்று நினைத்துக் கட்டாயப்படுத்தவில்லை.
சந்தனாவிற்கு முதலில் தேர்வுகள் முடிந்துவிட, மனோவிற்கு இன்னும் ஒரு பரிட்சை மட்டும் இருந்தது. இவள் அமர்ந்து அவனுக்கு உதவி செய்தாள். அவன் மிக மிக நன்றாக உற்சாகமாக தேர்வுகளை முடித்துவிட்டான்.
மகன் படிப்பில் திடீரென இத்தனை ஆர்வம் காண்பிக்கவும் வாழ்க்கையைப் பற்றிய கவலை அவனை மாற்றியிருக்கிறது எனப் பெற்றவர்கள் பூரித்துப் போயினர். அவன் நல்ல மதிப்பெண் எடுத்துவிடுவான் என்று பெற்ற உள்ளம் உவகை கொண்டது.
தேர்வு முடிந்து விடுமுறை வந்துவிட, சந்தனாவின் வகுப்பாசிரியர் நாட்களை வீணாக்காமல் கணினி வகுப்பிற்கு செல்லுமாறு பரிந்துரை செய்தார். அவள் வகுப்பில் ஒரு சில மாணவ, மாணவிகள் கணினி கற்கும் வகுப்பில் சேர, இவளுக்கும் ஆசையாய் இருந்தது. பூரணியிடம் கேட்க நினைத்தாலும், அவரிடம் பணமிருக்காது என எண்ணித் தயங்கியபடி கேட்கவில்லை.
சந்தனாவின் ஆசிரியர் ஒருவர், “சந்தனா, நீ கம்ப்யூட்டர் க்ளாஸ் ஜாய்ன் பண்ணலையா?” என அழைத்துக் கேட்க, இவள் பதிலேதும் உரைக்காது அமைதியாய் நின்றாள்.
“ஏன்னாச்சு சந்தனா, மணிதான் இஷ்ஷூவா?” என அவர் சரியாய்க் கேட்க, இவள் மெதுவாகத் தலையை அசைத்தாள்.
“பணப்பிரச்சனை எதுவும்னா என்கிட்டே சொல்ல சொல்லியிருக்கேன் இல்ல. ஹம்ம், நான் பீஸ் கட்றேன். நீ கம்ப்யூட்டர் க்ளாஸ் ஜாய்ன் பண்ணு!” என்று அவர் கூற, இவள் மறுத்தாள். அவர் கொஞ்சம் அழுத்தியுரைக்க, சரியென்றுவிட்டாள்.
பூரணியும் சம்மதம் தெரிவித்துவிட, இவள் கணினி வகுப்பில் சேர்ந்த மறுநாளே மனோவும் அதே வகுப்பில் சேர்ந்துவிட்டான். அவள் காலையில் வீட்டிலிருந்து அங்கே செல்ல, மனோவும் வந்துவிடுவான். வகுப்பு முடிந்து இருவரும் இங்கே வந்துவிடுவார்கள்.
நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக அவர்களது பிணைப்பு அதிஇறுக்கத்துடன் பிரிக்க முடியாததாக மாறிப் போயிற்று. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் தான் எப்போதும் முதலில் வெளிவரும்.
ஓரீரு நாளில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என செய்தியில் அறிவிப்பு வந்துவிட, சந்தனா பதற்றத்துடன் சுற்றினாள். மனோ அவளைப் பார்த்துப் புன்னகைத்தான். அவனுக்கு எந்தவித சந்தேகமும் இல்ல. அவனுடைய குட்டி நல்ல மதிப்பெண் பெறுவாள் என சர்வ நிச்சயமாய் நம்பினான். அதனாலே மதிப்பெண் பற்றிய கவலை அற்றுப் போனது.
“எல்லா டீச்சர்ஸூம் நான் நல்ல மார்க் எடுப்பேன்னு ரொம்ப நம்பிக்கையா இருக்காங்க மனோ. எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு டா. மார்க் கம்மியா வந்துட்டா, நான் படிக்காதப் பொண்ணுன்னு நினைச்சுடுவாங்க இல்ல?” சந்தனா பயத்துடன் வினவ, மனோ பதிலளிக்காது அமர்ந்திருந்தான்.
“மனோ… உன்கிட்டதான் டா கேட்குறேன் நான்!” இவள் முறைக்க,
“ஏன் குட்டி, நான் டென்த்ல கம்மி மார்க்தான் எடுத்தேன். சோ, நீ என்னை மக்குப் பையன்னு நினைச்சுட்டீயா என்ன?” எனக் கேட்டான்.
அவன் கேள்வியில் தலையை நொடியில் இடம்வலமாக அசைத்தவள், “மனோ… அப்படிலாம் நினைக்கலை டா. நீ படிக்கிற பையன்தான்…” என்றாள் அவசரமாய்.
“ஹம்ம்… அப்போ மார்க் கம்மியா எடுத்தாலும் படிக்கிற பசங்கதான்னு ஒத்துக்குற. அப்போ நீ மார்க் குறைச்சு எடுத்தாலும் மிஸ் எதுவும் நினைச்சுக்க மாட்டாங்கடி. எதையும் போட்டு குழப்பிக்காத. நாளைக்கு வர்றதை நாளைக்குப் பார்த்துக்கலாம்…” என்றான் அவளின் கையை அழுத்தி. சந்தனாவின் உடல் தளர்ந்தது. பதற்றம் வடிந்து போக, அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள்.
“குட்டி… உனக்கொரு சர்ப்ரைஸ் வச்சிருக்கேன் தெரியுமா?” மனோ கூற, இவள் ஆர்வமானாள்.
“என்ன மனோ, என்ன சர்ப்ரைஸ்?” சந்தனா மற்றவற்றை மறந்திருந்தாள்.
“ஹம்ம்… கண்ணை மூடி பிஃப்டி வரை கவுண்ட் பண்ணுடி. நான் சர்ப்ரைஸை எடுத்துட்டு வரேன்!”
“ஹே மனோ… மேஜிக் பண்ணி ரோஸ் வர வைக்கப் போறீயா?” சந்தனா துள்ளியபடி கேட்டாள்.
மனோவுக்கு சிரிப்பு வந்தது. அவன் சிறுவயதில் கூறிய பொய்யை இந்தப் பெண் இப்போதும் நம்பிக் கொண்டிருக்கிறாளே என எண்ணி புன்னகைத்தான். ஆனால் அவனறியாதது மனோ கூறிய அனைத்தையும் சந்தனா கண்ணை மூடி ஏற்றுக் கொள்வாள் என்று.
“ப்ம்ச்… அதெல்லாம் இல்ல குட்டி. நீ கண்ணை மூடுவியா? மட்டீயா?” அவன் மென்மையாய் அதட்ட, “ஹம்ம்… சரி சரிடா. கோபப்படாத!” என்றவள் கண்ணை மூடி எண்ணத் துவங்க, மனோ தன் கால்சராயில் வைத்திருந்த வெள்ளி கழுத்தணியை எடுத்து அவளது கழுத்தில் அணிந்தான்.