அன்பு 19.4

“இல்ல மனோ… நீங்க… நீங்க பணக்காரங்க டா. நாங்க உங்க வீட்ல வேலைதானே பார்க்குறோம். உங்க அம்மாவுக்கு எங்களையெல்லாம் பிடிக்காது டா. நான் வீட்டுக்குள்ள வராததுக்கு அதான் காரணம். அம்மா கூட சொல்லி இருக்காங்க. உங்களுக்கு நிறைய சொத்து இருக்காம். உங்கப்பா பெரிய வேலை பார்க்குறாரு. இவ்வளோ பெரிய வீடெல்லாம் வச்சிருக்கீங்க. உங்க வீட்ல எதுவும் வாங்க மாட்டேன் நான். ஏன்னு உனக்குத் தெரியும் தானே. அம்மாவுக்கு உங்க வீட்ல எதுவும் சாப்பிட்றது பிடிக்காது டா. அப்போ எப்படி சம்மதிப்பாங்க…” என்றாள் தேம்பலாய். மரிக்கொழுந்து பேசும்போது ஒரு சிலமுறை மனோ வீட்டின் செல்வ செழிப்பை பற்றிக் கூறியிருக்கிறார்.

அதுவும் இல்லாது பூரணி கூட இவளுக்கு விவரம் தெரிந்ததும் சதா வேலைக்காரர்களை வீட்டில் உண்ண அனுமதிக்க மாட்டார். அவர்களுக்கென்று தனியாய் தட்டு வைத்திருப்பார்.

வேலை பார்க்கும் நம்மை போன்றவர்கள் அவர்களைப் பொறுத்தவரை கீழானவர்களாகத்தான் மதிப்பார். அவர்கள் வீட்டில் எதையும் வாங்கி உண்ணக் கூடாது. நன்றாக படித்து முன்னேற வேண்டும். படிப்பு மட்டும்தான் நமது சொத்து. அதைப் பிடித்துக்கொண்டு உன்னுடைய வாழ்க்கையை நீ நன்றாய் அமைத்துக் கொள்ள வேண்டும் என்று எத்தனையோ முறை அறிவுறுத்தியிருக்க, இவளுக்குத் தங்களது நிலை புரிந்தது. குணமும் இப்போது நன்றாய் விளங்கியிருந்தது. அதனாலே தாய் சொன்னவை மனதில் ஆழப்பதிந்து போயின.

மனோ தன்னிடம் நட்பு பாராட்டுவதே சதாவிற்குப் பிடிக்கவில்லை என்று அவரது முக பாவத்திலே உணர்ந்திருந்தவள், அவர் முன்னே அவனிடம் அதிகமாகப் பேச மாட்டாள். சற்று முன்னே கூட அதனால்தான் தயங்கி நின்றாள். அதன் பொருட்டே சில சமயங்களில் அவளால் இயல்பாக இருக்க முடிந்ததில்லை.

“குட்டி… மனோகிட்டே பேச்சைக் குறைச்சுக்கோ. நீ பேசி அரட்டையடிக்குறதாலதான் அவன் படிக்கலைன்னு அவங்கம்மா நினைச்சுடுவாங்க. ஒழுங்கா அங்க வந்து புத்தகத்தை எடுத்து வச்சு படிடி. உங்கப்பா போனப்புறம் கருமாயப்பட்டு உன்னை வளர்க்குறேன். ஒழுங்கா படி!” என அடிக்கடி கூறிக் கொண்டே இருந்தார். மகள் பத்தாம் வகுப்புத் தேர்வெழுதப் போகிறாள் என அவருக்கும் பயம் வந்தது. தலையை அசைத்துக் கேட்டுக் கொண்டாள் சந்தனா.

மனோ அளவிற்கு தங்களிடம் பணமில்லை, சொத்தில்லை. ஏன் அவன் படிக்கும் பள்ளியின் உள்ளே சென்று பார்க்க வேண்டும் என்று அவளுக்கு நிறைய ஆசையிருந்தது. ஆனாலும் உள்ளே செல்ல விட மாட்டார்கள் என தூரத்திலிருந்தே பார்த்துவிட்டு வருவாள். அப்படியிருக்கையில் மனோவின் தாய் தன்னை எப்படி ஏற்றுக் கொள்வார் என அச்சிறு பெண்ணின் மூளை யோசிக்க கூடாதது அனைத்தையும் யோசித்தன.

பக்குவம் என்பது வயதைப் பொறுத்தது அல்ல. வாழும் சூழ்நிலையை, வறுமையைப் பொறுத்தது என்பதை சந்தனா நிரூபித்திருந்தாள்.

“லூசா டி நீ.‌. யார் இப்படியெல்லாம் உனக்கு சொன்னது?” மனோ கோபமாய்க் கேட்டான்.

“யாரும் சொல்லலை மனோ. எனக்குத்தான் தெரியுமே. உங்க வீட்ல கார், வீடியோ கேம், பெரிய டீவி எல்லாம் இருக்கு. உங்க வீடு எவ்வளோ பெருசா இருக்கு. இப்படியிருந்தா அவங்க பணக்காரங்கதானே. அப்போ நீங்க பணக்காரங்க மனோ!” என்றாள் குரலில் சற்றே நிராசை எட்டிப் பார்த்ததோ. அவளுக்கும் நிறைய ஆசைகள் இருந்தன.

மனோவுடன் சேர்ந்து வீடியோ கேம் விளையாட வேண்டும், அவன் தந்தை வாங்கி வருவது போல பெரிய பெரிய இன்னட்டுகளை வாங்கி உண்ண வேண்டும். மனோ போல கேட்கும் போதெல்லாம் தாய் காசு கொடுக்க வேண்டும். அவனைப் போல நிறைய புது புது உடைகள் உடுக்க வேண்டும் என்று வயதிற்கு உரிய ஆசைகள் ஏராளம். எதையும் அவள் வெளிக்காட்டிக் கொண்டது இல்லை.

பூரணி ஓடியாடி வேலை பார்த்து தன்னைப் படிக்க வைப்பதற்கே கஷ்டப்படுகிறார் என மகளுக்குப் புரிந்தது. அதனாலே இப்போதெல்லாம் அது இது வேண்டும் என்று தாயிடம் அவள் அடம் பிடிப்பது இல்லை.

பள்ளிக்கு அணிந்து செல்லும் சீருடை கிழிந்திருக்க, அடுத்த வருடம் புது உடை எடுத்து தருவதாகத் தாய் கூறியிருக்க, கிழிந்ததை தைத்துப் போட்டுக் கொண்டுதான் சுற்றுகிறாள். எங்கே மீண்டும் அது கிழிந்து விடுமோ என்ற பிரக்ஞை எப்போதும் அவளுக்கு உண்டு. இது போல நிலையெல்லாம் படித்தால் மாறிவிடும் என பூரணிக் கூறிய வார்த்தையைப் பற்றுக் கோலாகக்கொண்டு தீவிரமாகப் படிக்கிறாள். அப்படியிருக்கையில் சர்ஜூன் காதல் என்று வந்து நின்ற போது தன் படிப்பு கெட்டுவிடும் என மனம் முழுவதும் பயம்தான் படர்ந்தது.

ஆனால் மனோவிடம் சர்ஜூனிடம் காட்டிய கடுமையைக் காண்பிக்க முடியவில்லை. அவளுக்கும் மனோவை நிரம்ப பிடிக்கும். அவன் பேசவில்லை என்றால் அழுவாள்.

அவனுக்கு ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்வாள். அவனை அக்கறையாகப் பார்த்துக் கொள்வாள். ஆனால் இதெல்லாம் அவளைப் பொறுத்தவரை நட்பு என்ற வார்த்தையில்தான். அதற்கு மேலே யோசிக்க விருப்பமில்லை.

“இந்த வயசுல லவ் எல்லாம் சொல்ல நல்லாத்தான் இருக்கும். ஆனால் படிப்பு கெட்டுப் போய் கஷ்டப்படும் போதுதான் வாழ்க்கையோட ஏதார்த்தம் எல்லாம் புரியும். உங்களோட வாழ்க்கை உங்க கையிலதான். காதல்னு வாழ்க்கையை இழந்துடாதீங்க!” என ஆசிரியர் கூறிய வார்த்தைகள் காதில் எதிரொலித்தன.

“குட்டி… இப்படிலாம் பேசாத முதல்ல. பணக்காரங்க, ஏழை அப்படிலாம் இல்ல. எல்லாரும் ஒன்னுதான். இது மாதிரி பெரிய வீடா உனக்கு நான் கட்டித் தரேன் குட்டி. படிச்சு முடிச்சு வேலைக்குப் போனதும் நான் வீடு கட்ட ஆரம்பிச்சுடுவேன். அப்புறம் உங்கம்மா கிட்டே வந்து பேசுறேன். நீ, நான், ஆன்ட்டி, என் அம்மா, அப்பா எல்லாம் ஒன்னா சந்தோஷமா இருக்கலாம் குட்டி. நான் அம்மாகிட்டே சொல்றேன். குட்டியைத்தான் எனக்கு பிடிக்கும், அவளைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்லுவேன்!” என்றான் வேகவேகமாக. சந்தனா எதுவும் பேசாது அவனையே வெறித்திருக்க, மனோவுக்கு கோபம் வந்தது.

“நீ ஒன்னும் என்னைக் கல்யாணம் பண்ணிக்கத் தேவையில்லை!” என அவன் விருட்டென்று எழ முயல, இத்தனை நேரம் ஒரே இடத்தில் வைத்திருந்ததில் காலில் ரத்தம் ஒட்டம் குறைந்திருந்து மதமதத்திருக்க, எழத் தடுமாறியவனைத் தாங்கிப் பிடித்த சந்தனா, “நான் உன்னை கல்யாணம் பண்ணக்கிறேன் மனோ!” என்றுவிட்டாள்.

அந்த வார்த்தையில் கடுகடுவென்றிருந்த மனோவின் முகம் மலர்ந்து விகசித்தது. “உண்மையா குட்டி… என்னைக் கல்யாணம் பண்ணிப்ப தானே?” எனக் கேட்டு பொத்தென அமர்ந்தான். அவள் தலையை ஆமாம் என்பது போல அசைத்தாள்.

“ப்ராமிஸ் பண்ணு குட்டி…” என அவன் கையை நீட்ட, “அதுக்கு முன்னாடி நீ எனக்கொரு ப்ராமிஸ் பண்ணு மனோ. இதுதான் இதைப் பத்தி பேசுற கடைசியா இருக்கணும். நீ படிச்சு நல்ல வேலைக்குப் போ. நானும் டாக்டராகுறேன்‌. அம்மா எனக்கு கல்யாணம்னு பேசும்போது நான் உன்கிட்ட சொல்றேன். நீ வந்து என் அம்மாகிட்ட பேசு. அதுவரைக்கும் இந்தப் பேச்சு வேணாம் டா!” என்றாள்.

“ப்ராமிஸா குட்டி…” யோசிக்காமல் சத்தியம் செய்தவனுக்கு வாழ்நாள் முழுவதும் சந்தனா தன்னுடன் இருப்பாளென்றால் ஆயிரம் சத்தியம் கூட செய்யலாம் எனத் தோன்றிற்று.

“அதே மாதிரி இனிமே நீ காலை பத்திரமா பார்த்துக்கணும். ஓடக் கூடாது. நிறைய நேரம் விளையாடக் கூடாது. டெய்லி என்னோட உக்காந்து படிக்கணும். நல்ல மார்க் வாங்கணும்!” என்றாள்.

“கண்டிப்பா குட்டி. நான் நல்ல மார்க் எடுப்பேன்!” என்றான் உறுதியாக.

‘சாரி மா… சாரி. மனோவை எனக்கு ரொம்ப பிடிக்கும் மா. அவன் கஷ்டப்பட்டா என்னால தாங்க முடியல. அவனைக் கல்யாணம் பண்ணிட்டு, நான் அவனை நல்லா பார்த்துப்பேன் மா. உனக்குத் தெரியாம தப்பு பண்றேன். என்னை மன்னிச்சிடு மா!’ என மனதில் மானசீகமாக தாயிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு மனோவின் கையில் தன் கையை சேர்த்தவள்,

“ப்ராமிஸா உன்னை மட்டும்தான் கல்யாணம் பண்ணிப்பேன் மனோ. உன்னைத் தவிர யாரையும் கட்டிக்க மாட்டேன்!” என்றவளின் கரத்தை அழுத்திய மனோ சாகும்வரை அவளை விடக்கூடாது என உறுதியெடுத்திருந்தான். மனோவைத் தவிர யாரையும் திருமணம் செய்யக் கூடாதென சந்தனா அந்நொடி சத்தியப்பிரமாணம் எடுத்திருந்தாள். ஆம், அவளைப் பொறுத்தவரை அது சத்தியப்பிரமாணம்தான்.

தொடரும்…

error: Content is protected !!
Scroll to Top