அன்பு 19.3

“லூசு மாதிரி பேசாத மனோ. இப்போ இந்த மாதிரி பேசுறதெல்லாம் தப்பு. மிஸ் சொல்லி இருக்காங்க!” சந்தனா பதற்றத்துடன் கூறினாள்.

“குட்டி… இப்போவே கல்யாணம் பண்ணிக்க வேணாம். நம்ப பெரியவங்களான பிறகு கல்யாணம் பண்ணிக்கலாம்…” என்றான்.

“அது அப்போ பார்த்துக்கலாம் மனோ!” அந்தப் பேச்சை கத்தரிக்க முயன்றாள் சந்தனா. அவளது முகத்தில் விருப்பமின்மை தெறித்தது.

“இல்ல… குட்டி என்னை மட்டும்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு நீ ப்ராமிஸ் பண்ணு…” என அடமாய் கையை நீட்டினான் மனோ.

அதில் இவளது முகம் அதிர்ந்து பின் பயத்தில் வெளுத்தது. “மனோ… முடியாது. போடா, அதெல்லாம் பண்ண மாட்டேன். அம்மா யாரை சொல்றாங்களோ அவங்களைத்தான் கல்யாணம் பண்ணுவேன் நான்!” என்றாள் மறுப்பாக.

“அப்போ என்னைப் பிடிக்காதா உனக்கு?” என்றவன் முகம் கசங்கிப் போனது.

“மனோ… உன்னை ரொம்ப பிடிக்கும் டா. ஆனால் கல்யாணம்… அது மட்டும் வேணாம் டா. அம்மாவுக்குத் தெரிஞ்சா முதுகே புண்ணாகிடும்!” என்றாள் பயத்துடன். பூரணி அன்றைக்கு அடித்த அடியே அவளுக்கு வாழ் நாளுக்கும் மறக்காது.

“ப்ம்ச்… புடிக்கும்னா என்னையே கல்யாணம் பண்ணிக்கோ குட்டி. அப்போதான் நீ என் கூடவே இருப்ப‌. நம்ப ரெண்டு பேரும் சேர்ந்தே இருக்கலாம்!”

“போ மனோ… இந்த மாதிரி பேசுன, நான் உன் கூட பேச மாட்டேன்…” என்றாள் சந்தனா பிடிவாதமாக.

“பேச வேணாம் குட்டி… பேசாத. நீ சர்ஜூன் கூட பேசு. நானும் உன்கூட பேச மாட்டேன். எப்போ நீ என்னைக் கல்யாணம் பண்ணிப்பேன்னு ப்ராமிஸ் பண்றீயோ, அப்போதான் பேசுவேன்…” என்றவன் கோபத்தோடு நகர, இவள் விழிகளில் வழியும் நீரோடு அவனைப் பார்த்தாள்.

“மனோ… ப்ளீஸ் டா. இந்த மாதிரி எல்லாம் பேசாத டா!” என்ற சந்தனாவின் குரல் காற்றில் கரைந்திருந்தது.

ஒரு வாரம் ஓடியிருந்தது. மனோ சந்தனாவிடம் பேசவே இல்லை. காலையில் மட்டைப்பந்து விளையாட சென்றவன், மாலை வேண்டுமென்றே வீட்டிற்குள் முடங்கினான். சந்தனாவைக் கண்டும் காணததுமாய் அவன் இருந்துவிட, இவளால் அப்படி இருக்க முடியவில்லை.

மனோ என்ற ஒருவன் அவளது வாழ்வின் பெரும்பகுதியை எவ்வித முகாந்திரம் இன்றி ஆக்கிரமித்திருந்தான். இவள் அவ்வப்போது அவனிடம் பேச முயற்சிக்க, மனோ பிடி கொடுக்கவில்லை. முகத்தைத் திருப்பிக்கொண்டு சென்றான். அவன் வழிக்கு சந்தனா வரும்வரை மனோவிற்கு இறங்கிவரும் எண்ணம் உத்தமமாய் என்பதே உண்மை.

வேண்டுமென்றே நீண்ட நேரம் விளையாடி கால் வீங்கிப் போய் வீட்டிற்குள் நுழைந்தவனைக் கண்டு சந்தனா துடித்துப் போயிருந்தாள். அதைத் தொடர்ந்து இரண்டு நாட்கள் அவன் பள்ளி செல்லவில்லை. வீட்டில்தான் இருந்தான். ஆனாலும் இவளிடம் ஒரு வார்த்தையை உதிர்க்கவில்லை.

“மனோ… ஏன் டா இப்படி பண்ற. அறிவிருக்கா உனக்கு? ரொம்ப நேரம் நிக்க கூடாது. விளையாட கூடாதுன்னு சொல்லி இருக்கேன் இல்ல. கால் வீங்கிப் போச்சு. ரெண்டு நாள் ஸ்கூலுக்கும் போகலை. படிப்பும் கெட்டுப் போகுது. ஒழுங்கா படி டா!” என்ற சதாவின் வார்த்தைகளைக் கேட்டவளுக்கு சரசரவென கண்ணில் நீர் வழிந்தது.

இரண்டு நாட்கள் பின்னர் ஓரளவிற்கு கால் சரியானதுதான். ஆனாலும் மிதிவண்டியை அவனால் மிதிக்க முடியவில்லை. உமாநாதன் மகிழுந்தில் மகனை அழைத்துச் சென்றார். மாலை ஒரு தானி ஏற்பாடு செய்தார். மனோ வேண்டாம் எனத் தடுத்தும் பெற்றவர்கள் கேட்கவில்லை. கால் வலி நன்றாய் குறையும் வரை இப்படியே பள்ளிச் சென்று வரட்டும் என்று விட்டனர்.

அவன் வந்திறங்கியதும் எழுந்து நின்ற சந்தனா தவிப்பாய் அவன் முகத்தைப் பார்த்தாள். அருகே சென்று பேச முயற்சிக்கவில்லை. சதா அவனது பள்ளிப் பையை வாங்கிக்கொண்டு உள்ளே செல்ல, இவள் கண்ணீரைத் துடைத்தவாறே அவனைப் பார்த்தாள். சில நொடிகள் அவளையே பார்த்திருந்தவன், உள்ளே சென்றுவிட, சந்தனா அமர்ந்துவிட்டாள்.

ஒரு வாரமாய் அவளால் சரியாக எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. எங்கு சென்றாலும் மனோதான் கண்முன்னே வந்து நின்றான். அவன் பேசவில்லை என்பது அவள் நாட்களின் பெரும் பகுதியை இழந்தது போலொரு எண்ணத்தை விதைத்தது.

வகுப்பாசிரியர் கூட, “சந்தனா, என்னாச்சு? ஏன் லாஸ்ட் டெஸ்ட்ல ரொம்ப லோ மார்க் எடுத்திருக்க?” எனக் கேட்டிருந்தார்.

என்ன பதிலுரைப்பது எனத் தெரியாது அவள் விழிக்க, “நெக்ஸ்ட் டெஸ்ட் ஒழுங்கா பண்ணலைன்னா, உன் அம்மாவைக் கூட்டீட்டு வரணும்…” என்று அறிவுறுத்தியிருக்க, அதில் இன்னுமே இவளுக்கு அழுகை வந்தது.

விசும்பியபடியே சந்தனா புத்தகத்தையே பார்த்திருந்தாள். விழிகளை மறைத்த நீர் எழுத்துக்களை மங்கலாக்க, அவளருகே வந்து அமர்ந்தான் மனோ. அவனைப் பார்த்ததும் கோபம்கொள்ள வேண்டும் என்றெண்ணியிருந்தவை எல்லாம் கானல் நீராகியிருந்தன.

“மனோ… கால் எப்படி இருக்கு டா?” என அவனது காலைப் பிடித்துப் பார்த்தாள். வீக்கம் சற்றே குறைந்திருந்தாலும், இன்னுமே அவனால் சரியாக நடக்க முடியாது தாங்கி தாங்கிதான் நடந்தான்.

“ஏன் மனோ இப்படி பண்ற? எதுக்கு ரொம்ப நேரம் க்ரவுண்ட்ல விளையாடின நீ? அறிவே இல்லையா உனக்கு? மத்தவங்க கூப்ட்டா உனக்கு சொந்தமா அறிவு கிடையாதா? எக்ஸாம் வேற வரப்போகுது!” என்றாள் அக்கறையும் கோபமுமாய்.

மனோவுக்கு இந்த அக்கறை நிரம்ப பிடித்தது. தனக்காக அவள் கண்ணீர் சுகித்தது. இத்தனை நாட்கள் சந்தனா அவனுடைய குட்டி. அவ்வளவுதான். அவள் அவனுடைய உடைமை என்றொரு எண்ணம். ஆனால், இப்போது சந்தனாவை அவன் பார்க்கும் பார்வையில் கொஞ்சம் வேறுபாடிருந்தது. ஈர்ப்பிற்கும் காதலுக்கும் இடையில் அவன் இளமனது ஊஞ்சலாடியது. இந்த அன்பும் அக்கறையும் வாழ்க்கை முழுவதும் வேண்டும் என்றொரு உந்துதல்.

அவளது கண்ணீரைத் துடைத்துவிட்டவன், “குட்டி என்னைக் கல்யாணம் பண்ணிக்குறீயா?” எனக் கேட்டான். ஒரு வாரத்திற்கு முன்பு வெறும் அடம்தான் பிரதானமாய் இருந்தது. ஆனால் இப்போது நிச்சயமாக அப்படியில்லை. அன்பாய்க் கேட்டான், ஆசையாய்க் கேட்டான். நேசம் ததும்பியபடி அவளைப் பார்த்திருந்தான்.

தான் கேட்ட கேள்விக்குப் பதில் கூறாது மீண்டும் மீண்டும் அதையே சுற்றி வருகிறானே என வேதனையுடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள் சந்தனா. “ஏன் மனோ இப்படி பண்ற? இதை தவிர வேற எதுவும் பேசு டா!” என்றாள் அழும் குரலில்.

“முதல்ல நீ அழாத குட்டி. மூஞ்சியைக் கழுவிட்டு வா, போ…” என்றவன் காலை மெதுவாய் தூக்கி அமர முயற்சிக்க, சந்தனா குனிந்து அவனது காலைத் தூக்கி மேலே வைத்தாள்.

“ஓகே வா மனோ… தள்ளி உக்கர்றீயா? சாஞ்சுக்கோ!” என அவனைத் தாங்கி சாய்த்து அமர வைத்தவளின் மீது மனோவின் பார்வை வாஞ்சையாய் படிந்தது. என்னுடைய குட்டி என மனம் முழுவதும் தித்தித்தது.

முகத்தைக் கழுவிவிட்டு அவன் முன்னே அமர்ந்தாள் சந்தனா. அவளது கையைப் பிடித்தான் மனோ.

அவள் கையை இழுக்கப் பார்க்க, “குட்டி… அமைதியா நான் கேக்குற கேள்விக்குப் பதில் சொல்லு. என்னைப் பிடிக்குமா? இல்லையா?” எனக் கேட்டான். அவளது தலை ஆமாம் என்பது போல அசைந்தது.

“எவ்வளோ பிடிக்கும்?” என அவன் விவன, சில நொடிகள் யோசித்தவள், “அது… ரொம்ப பிடிக்கும் மனோ. எவ்வளோன்னு தெரியலை. ஹம்ம், இந்த வானத்து அளவுக்குப் பிடிக்கும் டா!” என்றாள் தயங்கியபடி‌.

“லைஃப் லாங் என் கூட இருக்க உனக்கு ஆசையா இல்லையா? நான் உன்கூட இப்படியே இருக்கணுமா? வேணாமா?” எனக் கேட்டான். ஆமாம் எனத் தலையை அசைத்தாள் அவள்.

“நமக்குப் பிடிச்சவங்க நம்ம கூட இருக்கணும்னா அவங்களை நம்ம கல்யாணம் பண்ணிக்கணும் குட்டி. நான் பெரியவனாகி உன்னைக் கல்யாணம் பண்ணிட்டா, உன்னை யாரும் என்கிட்ட இருந்து பிரிக்க முடியாது டி. உனக்கு என்ன வேணுமோ நான் வாங்கித் தரேன். நீ டாக்டரானதும் நான் பெரிய ஹாஸ்பிடல் கூட கட்டித் தரேன் குட்டி. நீ என்கூடவே இருப்பீயா?” என்றான் உணர்வு பூர்வமாக.

அவனையேப் பார்த்த சந்தனா விழிகள் துளிர்த்தன. சில நொடிகள் தயங்கியவள், “வேணாம் மனோ… நான், அது என் அம்மாவுக்குப் பிடிக்காது டா!” என்றாள் தயங்கியபடி.

“குட்டி… நான் படிச்சு முடிச்சிட்டு நல்ல வேலைக்குப் போய்ட்டு ஆன்ட்டிகிட்டே வந்து பேசுறேன். கண்டிப்பா அவங்களை சம்மதிக்க வச்சுடலாம்!” என்றான் அவளை சமாதானம் செய்யும் நோக்கோடு.

error: Content is protected !!
Scroll to Top