அன்பு 19.2

“ப்ராமிஸ் பண்ணு தீனா…” என்றாள் குரல் அடைக்க‌.

அவளைப் பார்த்த தீனா, “நீ எனக்கொரு ப்ராமிஸ் பண்ணு குட்டி…” என்றான் கையை நீட்டி.

அவள் என்னவென்பதாய்ப் பார்க்க, “நீ உனக்கொரு வாழ்க்கையை அமைச்சுப்பேன்னு ப்ராமிஸ் பண்ணு குட்டி?” என்றவன் பேச்சில் மீண்டும் இவளுக்கு விழிகள் உடைப்பெடுத்தன.

எல்லாம் தெரிந்த நீயே இப்படி பேசுகிறாயே எனப் பார்த்த சந்தனா, “நீங்களாம் கல்யாணம் பண்ணி கஷ்டப்பட்றதால, நான் சிங்கிளா இருக்கது உனக்குப் பிடிக்கலையா தீனா?” எனக் கேட்டு மெலிதாய் சிரித்தாள். அந்தச் சிரிப்பு முழுவதும் விரக்தி நிரம்பி வழிந்தது. தீனா வேதனையோடு அவளைப் பார்த்தான்.

“ஏன் குட்டி இப்படி பேசுற. உனக்கு ஒரு வாழ்க்கை வேணும் டி‌. தனியா எத்தனை நாள் வாழ்ந்துடுவ?” எனக் கேட்டவன் குரல் முழுவதும் அவளுக்கானத் தவிப்பே கொட்டிக் கிடந்தது‌.

தலையை இடம் வலமாக அசைத்தவள், “இந்த ஜென்மத்துல மனோவைத் தவிர யாரும் என் வாழ்க்கைக்குள்ள வர முடியாது தீனா. என் மனோ, அவன் என் மனோ மட்டும்தான் டா. அவனை மறக்குறதை நினைக்க கூட முடியாது. அவனுக்கு நான் ப்ராமிஸ் பண்ணியிருக்கேன் தீனா‌.”

“சாகுர வரைக்கும் அவனுக்காக காத்திருப்பேன்னு வாக்கு கொடுத்திருக்கேன் டா. அதை என்னால மீற முடியாது. நினைவு தப்புனதை தவிர அவன் மேல எந்த தப்பும் இல்லயே. என்னால அவனை வெறுக்கவும் முடியாது, அவன் மேல கோபப்படவும் முடியாது தீனா‌‌. இனிமேல் இதுமாதிரி பேசாத டா. கேட்கவே பிடிக்கலை…” என்றவள்,

“மனோவுக்கு மெமரி மிஸ்ஸாகாம இருந்திருந்தா இந்நேரம் நீ பேசுனதுக்கு உன்னை அடிச்சு வெளுத்திருப்பான் இல்ல?” எனக் கேட்டு நீள்விருக்கையில் சாய்ந்தவளின் வேதனையை சுமந்து வந்த விரக்தி சிரிப்பு அவள் வலியின் வாதையின் உச்சம்.

விழிகளை இறுக மூடினாள். இப்போதும் ஏன் மனோவிற்கு நினைவு தொலைந்தது என எண்ணி சிறுபிள்ளையாய் ஏங்கியழுதாள். ஏனோ அவளால் ஏற்கவே முடியவில்லை.

இத்தனை நாட்கள் பொய்யாய் அரிதாரம் பூசியிருந்த நாட்களுக்கெல்லாம் இப்படியொரு விடுதலை கிடைத்திருக்க, அழுத்தம் மொத்தமும் மௌனமாய் கண்ணீரில் கரைந்தன. அவள் முன்னிருந்த வெளிச்சம் மெதுவாய் மங்கத் தொடங்க, ஏதோ ஓர் உருவம் அங்கே சமீபிக்க, இருவரும் நிமிர்ந்தனர்.

மனோரஞ்சன், இங்கு நடந்த இத்தனைப் போராட்டங்களுக்கும் பாத்தியப்பட்டவன்தான் வந்து நின்றான். அவனை எதிர்பாராத இருவர் முகத்திலும் அதிர்ந்த பாவனை. சந்தனா விழிகளைத் துடைத்துக்கொண்டு எழுந்து நின்றாள்.

இவன் எதையும் கேட்டிருக்க கூடாதென அக்கணம் உலகில் உள்ள அத்தனை தெய்வத்திற்கும் அவள் வேண்டுதல் வைத்த நொடி, “குட்டி…” என்ற ஒரு வார்த்தையில் எதிரிலிருப்பவன் அவளது நம்பிக்கையை மொத்தமாய் உடைத்திருந்தான்.

எத்தனை ஆத்மார்த்தமான அழைப்பு. அவளின் மனோவிற்கு மட்டுமேயான அழைப்பு. பதினெட்டு வருடங்கள் கழித்து அந்தப் பெயரைக் கேட்கையில் சந்தனாவுக்கு உள்ளே உடைந்து உருகி வழிந்திருந்தது.

தலையை இடம் வலமாக அசைத்து உதட்டைக் கடித்து கேவி வந்த அழுகையை அடக்க முயன்றவளின் முகம் அநியாயத்திற்கும் பாவமாய் எதிரிலிருப்பவனில் படிந்து தொலைத்தது. எங்கே விழிகளை சிமிட்டினால் அவன் மறைந்து விடுவானோ என அஞ்சியவள் தளும்பிய நீரோடு அவனைப் பார்த்திருந்தாள். என்னுடைய மனோ என்ற எண்ணமே அவளை உடைக்கப் போதுமானதாக இருந்தது.

“ஏன் டி?” எனக் கேட்டு அவளை இழுத்து இறுக அணைத்தவனில் சந்தனா மொத்தமாய் உடைந்திருந்தாள்.

இத்தனை வருடங்கள், மாதங்கள், வாரங்கள், நாட்கள் என அவனுக்காய் காத்திருந்து கானல் நீராய் சென்றிருந்தவை எல்லாம் இந்நொடி இவனின் வார்த்தைகளில் சரணாகதி அடைந்திருந்தன.‌ சந்தனா மொத்தமும் சிதறியிருந்தாள்‌. முடியும் என்ற வார்த்தைகள் எல்லாம் இந்த மனோவிடம் மட்டும் தோற்றுப் போனது. விம்மித் துடித்த அழுகையில் குலுங்கிய உடலோடு சர்வ நிச்சயமாய் ரஞ்சனின் உயிர் மொத்தமும் நடுங்கிப் போயிருந்தது.


சந்தனா எதுவுமே பேசாது அவளுண்டு அவள் படிப்பு உண்டு என்பது போல கட்டிலில் அமர்ந்திருந்தாள். மனோ அவள் அருகே வந்ததையோ இல்லை தன்னை முறைத்துப் பார்ப்பதையோ ஒரு பொருட்டாய் கூட மதிக்கவில்லை.

“நேத்து ஏன் குட்டி வரலை?” அவன் கோபமாய்க் கேட்க, அவளிடம் சில நொடிகள் மௌனம்.

“குட்டி… உன்னைத்தான் டி கேக்குறேன். பதில் சொல்லு…” அவள் புத்தகத்தைப் பிடுங்கினான்.

நிமிர்ந்து அவனை அனல் கக்கும் விழிகளால் பார்த்தவள், “வயித்தவலி மனோ… அதான் வரலை!” என்றாள் ஏனோ தானோவென்று.

“என்னாச்சு குட்டி.‌‌.. இப்போ வலி பரவாயில்லையா? டாக்டர்கிட்டே போனீயா? மாத்திரை சாப்டீயா?” என நொடியில் அவனது பாவனை மாறியிருந்தது. சந்தனாவும் கவனித்தாள். ஏனோ இவனிடம் சட்டென கோபம் வர மறுத்தது.

“ஏன் மனோ அப்படி சொன்ன?” எனக் கேட்டவளுக்கு விழிகள் கலங்கின.

“என்னாச்சு குட்டி… நான் என்ன சொன்னேன்?” அவன் முகம் சுருங்கியது.

“ஏன் என்னை லவ் பண்றேன்னு சொன்ன? என்னைக் காப்பாத்த‌ தானே பொய் சொன்ன நீ. ஆனால் இது மட்டும் மிஸ்க்கு தெரிஞ்சா என்னாகும்‌. அம்மாவுக்குத் தெரிஞ்சா வெளுத்துடுவாங்க டா!” என்றாள் மெலிதாய் விசும்பியபடி. கோபம் வடிந்து அழுகை வந்தது பெண்ணுக்கு.

“குட்டி… ஏன், எதுக்கு நீ இப்படி அழற?” என அவள் கண்ணீரை துடைத்துவிட்டவன், “நான்… அது…” எனத் தயங்கி, “நான் பொய் சொல்லலை குட்டி. எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு. என் குட்டி எனக்கு மட்டும்தான் வேணும்!” என்றான் அவளது முகத்தைப் பார்த்து.

காதலுக்கும் ஈர்ப்பிற்கும் இடையேயுள்ள வேறுபாட்டின் அடிநாதம் கூட அறியாத வயதில் தன்னுடைய பொம்மை தனக்கு மட்டுமே என்ற மனநிலையில் இருந்தான் மனோ. அவனைப் பொறுத்தவரை குட்டி அவனுக்குப் பாத்தியப்பட்டவள். அவளை எக்காரணம் கொண்டும் விட்டுக் கொடுக்கும் எண்ணம் இல்ல. அவனது பேச்சில் சந்தனாவிற்கு விழிகள் மேலும் கலங்கின.

“மனோ… இப்படிலாம் பேசாத டா. அப்புறம் நான் இங்க வரமாட்டேன்!” என்றாள் கோபமும் அழுகையுமாய்.

“குட்டி… என் கேள்விக்குப் பதில் சொல்லு முத. நான் உனக்கு யாரு?” எனக் கடுப்புடன் கேட்டான்.

அவனை முறைத்தவள், “ப்ரெண்ட்…” என்றாள்.

“அப்போ சர்ஜூன் யாரு உனக்கு?” அவன் பேரைச் சொல்லும் போதே பல்லைக் கடித்தான்.

“அவனும் எனக்கு ஃப்ரெண்ட்தான் மனோ!” இவள் முறைப்புடன் கூறினாள்.

“அதான் குட்டி… அவனும் ஃப்ரெண்ட், நானும் ஃப்ரெண்டா உனக்கு. நான்… எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் குட்டி. நான் உன்னை நல்லா பார்த்துப்பேன். என்னையே கல்யாணம் பண்ணிக்கோ டி. எனக்கு நீ அவன் கூட பேசுறது பிடிக்கலை. இனிமே அவன் கூட சேராத நீ, பேசாத!” என்றான் தவிப்பாக.

error: Content is protected !!
Scroll to Top