“குட்டி… பொய் சொல்றீயா நீ?” எனக் கேட்ட தீனாவின் விழிகள் லேசாய் கலங்கப் பார்த்தன.
“நீ… அவனுக்காகத்தான் கல்யாணம் பண்ணியிருக்க மாட்ட. அவனுக்கு செஞ்சு கொடுத்த ப்ராமிஸ்காகத்தான் தனியா இருக்கீயா?” எனக் கேட்டவன் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டிருந்தான். இதோ இப்பெண் இங்கே நிற்பதற்கு தானும் ஒரு காரணம் என எண்ணும்போதே நெஞ்சடைத்துப் போனது.
“நான் சொல்றது உனக்குப் புரியலையா தீனா?” எனக் கத்தமுயன்றவளின் குரல் உடைந்திருக்க, தீனா அவளை இறுக அணைத்திருந்தான்.
“குட்டி… குட்டி… சாரி!” என்றவன் தேம்ப, இவளுக்கும் அழுகை முட்டிக் கொண்டு வந்தது. அவனை உதறித் தள்ளியவள், “தீனா… ப்ளீஸ் கிளம்புடா!” என்றாள் தொண்டை அடைக்க.
“ஏன் டி இப்படி பண்ண? நான்தான்… நான்தான் உன் நிலைமைக்கு காரணம் குட்டி. தப்பு பண்ணிட்டேன். நான்தான் தப்பு பண்ணிட்டேன். என்னை மன்னிச்சிடு குட்டி” என அவன் குரல் மன்றாடியது.
“தீனா… ச்சு… அப்படியெல்லாம் இல்ல டா. நீ என்ன பண்ண? என்னோட விதி… கடவுள் இப்படி எழுதிட்டாரு. யாரும், யாரு வாழ்க்கையும் டிசைட் பண்ண முடியாது டா. இதெல்லாம் கடவுளோட கணக்கு. அம்மா சொல்லுவாங்க!” என சிரிக்க முயன்றவளின் கண்கள் தளும்பிற்று. இதயமும் பாரத்தை சுமக்க முடியாது நிரம்பி வழிந்தது.
“இல்ல குட்டி… நான் சொல்லி இருக்கணும். ஆப்ரேஷன் முடிஞ்சு குட்டி யாருடா… குட்டின்னு யாரையும் தெரியுமான்னு மனோ என்கிட்ட கேட்டான். டாக்டர் பழசை எதுவும் ஞாபகப்படுத்துனா, அவன் ஹெல்த் இஷ்ஷூ ஆகிடும்னு சொன்னதால, நான் அப்போ அதை சீரியஸா எடுத்துக்கலை. அப்புறம் அவனும் மறந்துட்டான். அவனுக்கு ஞாபகம் இல்ல. ஆனால், நான் ஞாபகப் படுத்தியிருக்கணும் இல்ல?” எனக் கேட்டவன் விழிகளில் சூடான உவர் நீர் வெளியேறியது. அவன் கூறிய செய்தி சந்தனாவிற்குப் புதிது.
நினைவே இல்லாத போதும் தன்னை தேடியிருக்கிறான். என் மனோ என்னை மறக்கவில்லை என நினைத்ததும் குபுக்கென நீர் பெருக, “ப்ம்ச்… தீனா. நீ சொல்லி இருந்தா மட்டும் அவனுக்கு ஞாபகம் வந்துருக்குமா என்ன?” என விரக்தியாகக் கேட்டவளுக்கு மனமெல்லாம் வலித்தது. ஏன் என் விதி மட்டும் இப்படியென அழுகையாய் வந்தது.
எதிரிலிருப்பவன் முகத்தைப் பார்த்ததும் புறத்தூண்டல் உறைக்கப் பெற்றவள், “ச்சு… என்ன தீனா நீ?” என அதட்டலிட்டு அவனது கண்ணீரைத் துடைத்து நீரை அருந்தச் செய்தாள். தீனா அவளையே பார்த்திருந்தான். தன்னுடைய சிறிய அலட்சியம் இந்தப் பெண்ணின் வாழ்க்கையில் விளையாடி விட்டதே என நினைக்க நினைக்க துடித்துப் போனான்.
“தீனா… நீ… அது என்னை பாவமா எல்லாம் பார்க்காத டா. நான், நான் நல்லா இருக்கேன். என்னை அம்மா மாதிரி பார்த்துக்க லட்சுமி அம்மா இருக்காங்க. என்னையே சுத்தி வர்ற மனோ இருக்கான். எல்லாத்துக்கும் மேல எனக்குன்னதும் துடிச்சுப் போற அளவுக்கு ஃப்ரெண்ட் ஒருத்தன் இருக்கான். நான் ரொம்ப சந்தோஷமா நிம்மதியா இருக்கேன்!” என்றவள் சில நொடிகள் நிறுத்தி,
“ரஞ்சனைப் பார்த்தீயா நீ? ஷோபனாவோட சந்தோஷமா இருக்காரு. என் கூட வாழ்ந்தா கூட அவர் இவ்வளோ சந்தோஷமா இருப்பாரான்னு தெரியாது டா. ஷோபி ரொம்ப நல்ல பொண்ணு டா. ரஞ்சனை ரொம்ப விரும்புறாங்க. அவரை நல்லா பார்த்துக்குறாங்க. என்னைவிட அவங்கதான் அவனுக்கு நல்ல பொருத்தம் டா!” என்றாள். வலிக்க வலிக்கத்தான் பேசினாள்.
மரத்துப் போகாத இதயம் இப்போதும் அவளைக் காயப்படுத்தி ரசித்தது. தன்னை தேற்றிக்கொண்டு பேசினாள். எதிரிலிருப்பவனை சமாதானம் செய்யும் நோக்கோடு பேசினாள். தீனா எதுவும் கூறாது அவளையே வெறித்திருந்தான். இப்பிரபஞ்சத்தின் ஆகப்பெரும் குற்றவுணர்வொன்று அவனைக் கொன்று புதைத்திருந்தது.
“சாரி சந்தனா!” என அவளை அணைத்துக்கொண்டு அழுதவனின் முதுகில் தட்டிக் கொடுத்தவள் சுயதேற்றலில் மெது மெதுவாக வெற்றிக் கண்டிருந்தாள்.
“தீனா… ஒன்னை மட்டும் நினைச்சுக்கோ. நீ எந்த தப்பும் பண்ணலை. அதே மாதிரி நான் நல்லா இருக்கேன். எனக்கொரு குடும்பம் இருக்கு. மனோ இல்லாம நான் செத்தா போய்ட்டேன். யார் இல்லைனாலும் நம்ப செத்தெல்லாம் போக முடியாது. நமக்கான வாழ்க்கையை வாழ்ந்துதான் ஆகணும். இப்போ ரஞ்சனுக்கு அழகான ஒரு குடும்பம் இருக்கு. அதைப் புரிஞ்சுக்கோ. நம்மளால யாருக்கும் கஷ்டம் வரக்கூடாது டா!” என்றாள் விசும்பியபடி.
அவளது தோளில் கைப்போட்டு அணைத்தவன், “அவன்கிட்டே சொல்லலையா நீ?” என்றான் வருத்தம் மிகுந்த குரலில்.
“என்ன சொல்லணும் தீனா. என்ன எதிர்பார்க்குற நீ? ரஞ்சன் ஷோபியோட சந்தோஷமா வாழ்றாரு. இப்போ போய் நான் நடந்தது எல்லாத்தையும் சொன்னா என்ன மாறிடப் போகுது. இப்படியெல்லாம் நடந்துச்சுன்னு தெரிஞ்சா என் மனோ கஷ்டப்படுவான், அழுவான். எனக்கு அதுல விருப்பம் இல்ல. என்னைக்கும் அவன் சந்தோஷமா இருக்கணும். அவன் என்கூட இருக்கணும்ன்றதை விட நிம்மதியா இருக்கணும் டா. அவன் எங்க இருந்தாலும் நல்லா இருக்கட்டும். தேவையில்லாம அவன் வாழ்க்கையில தலையிட எனக்கு விருப்பம் இல்ல!” என்றவளை வேதனையோடு பார்த்தான் தீனா.
“ப்ம்ச்… தீனா, உனக்குத் தெரியுமா? மனோவுக்கு மெமரி மட்டும் போகலைன்னா, செத்தா கூட என்னை விட்டிருக்க மாட்டான்டா. என் மனோவைப் பத்தி எனக்குத் தெரியும். இப்போ இருக்கது மனோ இல்ல. ரஞ்சன், வெறும் ரஞ்சன்தான். என் மனோ… அவன் என் மனோ மட்டும்தான். யாரும் அவனை என்கிட்ட இருந்து பறிக்க முடியாது டா. தினம் தினம் நான் விடுற மூச்சு காத்துல கூட அவன் இருப்பான். சாகுற வரைக்கும் இருப்பான் டா. தப்புதான். கல்யாணமானவனை நினைக்க கூடாதுன்னு மனசு சொல்லுது. ஆனாலும், என் மனோவை நினைக்காம இருக்க முடியலை டா!” என்று அவன் தோளில் முகத்தைப் புதைத்துக் விசும்பியவளின் அழுகையில் தீனா மொத்தமும் உருக்குலைந்து போயிருந்தான்.
“அவனுக்காக வெயிட் பண்ணீயா குட்டி?” குரல் அடைக்க கேட்டிருந்தான். அந்தக் கேள்வியில் சந்தனாவின் கண்ணீர் பெருகியது. தலையை மட்டும் அசைத்தாள்.
பத்து வருடங்கள், நூற்றி இருபது மாதங்கள், ஆறாயிரத்து இருநூற்று நாற்பது வாரங்கள், இரண்டாயிரத்து எண்ணூற்று எண்பது மணி நேரங்கள், ஒரு லட்சத்து எழுபத்து இரண்டாயிரத்து எண்ணூறு நிமிடங்கள் காத்திருந்தாள்தான்.
மனோ என்ற ஒற்றைச் சொல்லை மட்டுமே ஆதாரமாய்ப் பற்றிக்கொண்டு ஒவ்வொரு நொடியும் அவன் வருவான் என எண்ணி நம்பிக்கையுற்றிருந்த காலங்கள் எல்லாம் அவளுடைய காத்திருப்பின் சொச்சங்கள். வெறும் வார்த்தைகளால் வடித்திட முடியுமா என்ன? நூற்றில் ஒரு சதவீதம் கூட அவன் வரமாட்டான் என்ற வார்த்தையை மனம் பிடித்து வைக்கவில்லையே.
என்னுடைய மனோ அவன். என்னை மட்டும் நேசிக்கும் பரிசுத்தமானவன் அவன். என் நிழலையே சுற்றி வரும் பேரன்புக்காரன். என்னுடைய சிரிப்பில் பெருமகிழ்வு கொள்ளும் காதல்காரன் அவன். சிரித்துப் பேசியே காரிங்களை ஆகச் செய்யும் வசியக்காரன்.
என்னுடைய மனோ… எப்போதுமே மனோ என்னுடையவன்தான். அதில் எந்தவித மாற்றமும் இல்லை. என்னருகில் இல்லையென்ற குறையைத் தவிர, அவனோடுதானே ஆதியும் அந்தமுமாய் உணர்வுபூர்வமாக உளமாற பத்து வருடங்களைக் கழித்திருந்தாள்.
அவனுடன் நிஜத்தில் வாழ்ந்த ஐந்து வருடங்களோடு நிழலாய் வாழ்ந்த பத்து வருடங்களில் அவளுடைய அன்பு கதிமோட்சம் பெறவில்லை. இப்போது அண்டப் பெருவெளியில் அவனுக்கான அன்பை சுமந்தவாறே ஜீவித்துக் கொண்டுதான் இருக்கிறது. சாகும் வரை ஜீவிக்கும் என்பதில் எள் அளவும் சந்தேகமில்லையே.
சந்தனா கைகளில் முகத்தைப் புதைத்து நீள்விருக்கையில் அமர்ந்திருக்க, தீனா வார்த்தைகளற்று வேதனையாய் அவளையே பார்த்திருந்தான். இந்தப் பெண்ணின் ஒவ்வொரு சொட்டு கண்ணீருக்கும் தானும் ஒரு காரணம் என எண்ணும் போதே கத்தியைக்கொண்டு இதயத்தை யாரோ ஓங்கி குத்தும் உணர்வு.
“தீனா… எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுவீயா டா?” என்ற சந்தனாவின் குரல் நலிந்திருந்தது. அழுததில் ஆற்றல் வடிந்திருக்க, அசையாதிருந்தாள்.
அவன் வார்த்தையில்லாது என்னவென பார்க்க, “இது… இது எதுவும் மனோவுக்குத் தெரிய வேணாம் தீனா. அவன், அவன் சந்தோஷமா இருக்கணும். தெரிஞ்சா அழுவான், வருத்தப்படுவான் டா. அவன் அழறதை என்னால பார்க்க முடியாது டா. அவன் அழுகைக்கு நான் காரணமா இருந்தா, என் மனசே என்னைக் கொன்னுடும் டா. அவன் உடைஞ்சுப் போய்டுவான். உன்னையும் என்னையும் தவிர இது யாருக்கும் தெரியக் கூடாது தீனா…” என்றாள் தேம்பலாய். சொல்லி விடாதே என்ற இறைஞ்சல் குரலில் மண்டிக் கிடக்க, கையை அவன் முன்னே நீட்டினாள்.