“டேய்… குட்டி, சந்தனா டா இவ!” தீனா திக்கியபடியே கூற,
“டாக்டரை உனக்கு ஏற்கனவே தெரியுமா? இது அவங்கப் பையன் மனோகர்!” என ரஞ்சன் பதிலளித்ததும் தீனா அமர்ந்த இடத்திலிருந்து எழுந்துவிட்டான்.
“தீனா… என்ன டா?” எனக் கேட்ட ரஞ்சன் முகத்திலும் யோசனை.
‘குட்டி… குட்டி?’ இந்தப் பெயர் எங்கோ உள்மனதின் ஓரத்தில் எப்போதுமே ஒலித்து அவனது நிம்மதியைப் பறித்த நாட்கள் ஏராளமாகிற்றே.
“என்ன அண்ணா? என்னாச்சு?” என ஷோபனா அவர்கள் அருகே வர, தீனா சற்றே நிதானித்தான்.
“ஒன்னும் இல்ல ஷோபி… ஆஃபிஸ் கால் ஒன்னு பேசணும். அதான்!” என அலைபேசியை எடுத்து அவன் காதிற்கு ஈந்த, அவள் நகர்ந்தாள்.
அவன் பொய்யுரைப்பதை அவதானித்த ரஞ்சன், “தீனா, ஏன் டாக்டரைப் பத்தி பேசுனதும் பதட்டமாகுற நீ?” என கூர்மையாய் அவனைப் பார்த்து வினவினான்.
“இல்லயே... ஐ’யம் ஓகே டா. சின்ன வயசுல அவளோடதான் விளையாடுவோம். அதான் ஒரு எக்ஸைட்மெண்ட்ல கேட்டேன் டா!” என முயன்று குரலை சமநிலைக்குக்கொண்டு வந்தவன், “எந்த பிளாட்ல இருக்கா அவ?” என வீட்டு எண்ணை விசாரித்தான். அவனை சந்தேகமாகப் பார்த்த ரஞ்சன் சந்தனாவின் வீட்டு இலக்கத்தை உரைத்தான்.
இப்போது என்ன பொய்யுரைத்துவிட்டு அவளைப் பார்க்க செல்வது என அவன் தவிக்க, அலைபேசி கைகொடுத்தது. யாரோ அழைக்க, ஏற்றுக் காதில் பொருத்தியவன், “நான் கால் பேசிட்டு வரேன் டா!” என விறுவிறுவென வெளியே சென்றுவிட்டான்.
தீனாவை சந்தேகமாகப் பார்த்த ரஞ்சன், அவன் பின்னே செல்ல, அலைபேசியை துண்டித்துவிட்டு கடகடவென படிகளில் ஏறினான் தீனா. அவன் சந்தனாவின் வீட்டிற்குத்தான் செல்லக் கூடும் எனக் கணித்த ரஞ்சனுக்கு யோசனையானது. தன்னிடம் கூறிவிட்டே அவளைப் பார்க்க செல்லலாமே.
ஏன் இவன் பொய்யுரைக்கிறான் என எண்ணியவன், “ஷோபி… ஒரு டென் மினிட்ஸ்ல வரேன்!” எனக் குரல் கொடுத்துவிட்டு மனைவி கேள்விக்குப் பதிலளிக்காது தீனா பின்னே சென்றான்.
தீனா விறுவிறுவென சந்தனா வீட்டு வாயிலின் முன்னே நின்றான். மூச்சிரைத்தது, கதவைப் பலங்கொண்டு தட்டினான்.
“யாராது... எதுக்கு இவ்வளோ வேகமா கதவைத் தட்டுறீங்க?” எனக் குரலை உயர்த்தி வினவியவாறு கதவைத் திறந்தார் லட்சுமி.
“யாரு வேணும் பா உங்களுக்கு?” அவர் புதியவனை ஆராய்ச்சியாகப் பார்க்க, “குட்டி… குட்டி இருக்காளா? அது… டாக்டர் சந்தனா இருக்காளா?” எனக் கேட்டவன் குரலில் அவளைக் காணும் ஆர்வம் கொட்டிக் கிடந்தது.
அவனது ஒருமை விளிப்பில் சந்தனாவின் நண்பனாக இருக்கக் கூடுமென கருதியவர்,
“உள்ளேதான் இருக்கா தம்பி. வாங்க, வந்து உக்காருங்க!” என அவனை இருக்கையில் அமர்த்திவிட்டு சந்தனாவின் அறைக்குச் சென்றார்.
“சந்துமா… உன்னைப் பார்க்க ஒரு தம்பி வந்திருக்காரு…” என லட்சுமி உரைக்க, யாரது என்ற யோசனையுடன் புத்தகத்தை மூடிவைத்துவிட்டு எழுந்து வெளியே வந்தாள்.
தீனாவை அந்நொடி மனம் எதிர்பார்க்கவில்லை போல. சட்டென உள்ளே ஏதோ அழுத்துவது போலிருக்க, சடுதியில் தன் முக பாவனைகளை மாற்றியவள், “தீனா, எப்படி இருக்க? வாட் அ சர்ப்ரைஸ்?” எனப் புன்னகைக்க முயன்றாள். நீண்ட நாட்கள் கழித்து நண்பனைக் கண்டதும் முகத்தோடு உதடுகளும் மலர்ந்தன. ஆனாலும் விழிகள் உள்ளத்தை உள்ளபடியே காண்பித்துக் கொடுக்க வெகு பிரயாசைப்பட்டன.
“குட்டி… குட்டி, எப்படி இருக்க நீ? ஏன் என் கால்ஸ் எதையும் எடுக்கலை நீ?” உரிமையாய்க் கேட்டவனுக்கு சில பல வருடங்களுக்கு பின்னர் அவளை சந்தித்ததில் குரல் முழுவதும் உற்சாகம் ததும்பி வழிந்தது.
“தீனா… ஏன் இவ்வளோ படபடன்னு பேசுற? மூச்சு வாங்குது பாரு!” என அவனை அதட்டியவள், “தண்ணியை குடி நீ…” என மேஜையின் புறம் திரும்பி நின்றவள் தண்ணீரைக் குவளையில் நிரப்பினாள். கைகளில் மெல்லிய நடுக்கம்தான். அவனறியாது மறைத்துவிட்டாள்.
ஆசுவாசமாக அமர்ந்தவன், அவள் கொடுத்த நீரை எடுத்துப் பருகினான். “சரி இப்போ சொல்லு குட்டி… லாஸ்டா நம்ப மீட் பண்ணி எத்தனை வருஷம் ஆச்சு. நான் உன்கிட்ட நம்பர் கொடுத்துட்டுதானே போனேன்? ஏன் ஒரு கால் பண்ணலை நீ? நான் பண்ணாலும் ரெஸ்பான்ஸ் இல்ல? கல்யாணமாகி குழந்தை கூட இருக்கு. என்கிட்டே ஒரு வார்த்தை சொல்லணும்னு உனக்குத் தோணலை இல்ல?” சற்றே கடுப்பாய் வினவினான். அவனது பேச்சில் சந்தனா புன்னகைத்தாள்.
“சாரி டா… சாரி, என் ஃபோன் மிஸ் ஆகிடுச்சு. அதான் நான் உன்னைக் காண்டாக்ட் பண்ண முடியலை. சரி, நீ எப்படி இருக்க? என் வீடு உனக்கு எப்படி தெரியும்?” என வினவினாள்.
“நல்லா இருக்கேன். கல்யாணமாகி ரெண்டு புள்ளைங்களோட ஜெகஜோதியா இருக்கேன்!” என்றான் கிண்டலாக.
“பாரு டா… வொய்ஃபை கூட்டீட்டு வரலையா நீ?” எனக் கேட்டவள் அவனுக்கருகே நீள்விருக்கையில் அமர்ந்தாள்.
“இல்ல டி… நான் ஆஃபிஸ்ல மீட்டிங்க்னு வந்தேன். அப்படியே மனோவையும் பார்க்கலாம்னு வந்தா, நீ இங்க இருக்கன்னு தெரிஞ்சது. அதான் உன்னைப் பார்க்க ஓடி வந்தேன். சண்டை போடணும்னுதான் நினைச்சேன் நான்!” என்றான் மென்முறைப்பாய். அவளிடம் மெல்லிய புன்னகை.
“நல்ல வேளை… அஷூ போன்ல நீ இருக்க ஃபோட்டோ காட்டுனான். அதான் என்னால கண்டு பிடிக்க முடிஞ்சது!” என்றவன் சற்றே யோசித்து, “மனோ… மனோவுக்கு உன்னைத் தெரிஞ்சதா?” எனக் கேட்டான்.
அந்தக் கேள்வியில் உள்ளே உடையத் தயாராகி நின்ற உணர்வுகளை அணையிட்டுத் தடுத்தவள், “அது… அது தெரியலை தீனா. அவருக்கு என்னை அடையாளம் தெரியலை!” என்றாள் முயன்று வரவழைக்கப்பட்ட புன்னகையுடன்.
“ப்ம்ச்… பாரேன் விதியை. ஐஞ்சு வருஷம் அவனோட பழகியிருக்க நீ. ஆனால், அவனுக்கு உன்னை அடையாளம் தெரியலை! நான் கூட இங்க வரும்போது அவனுக்குத் தெரியாம, பொய் சொல்லிட்டுத்தான் வந்தேன்” எனப் பெருமூச்சுவிட்டவன்,
“ஆப்ரேஷன்ல அவனோட பாஸ்ட் மெமரீஸ் மறந்து போக பிஃப்டி பிஃப்டி சான்ஸ் இருக்குன்னு டாக்டர் சொன்னாரு. நாங்க அவனுக்கு மெமரி லாஸ் ஆகும்னு நினைக்கவே இல்லை குட்டி!” என்றான் வருத்தம் மிகுந்த குரலில்.
சந்தனா அவனை வெறுமையாய் பார்த்திருந்தாள். ஏனோ இவன் கிளம்பிவிட்டால் தேவலை என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை. மீண்டும் மீண்டும் என் ரணத்தைக் கீறிப் பார்ப்பதில் ஏன் இவனுக்கு இத்தனை ஆர்வம் என நினைத்ததும் குபுக்கென விழிகள் கலங்கின.
“ஆமா குட்டி… லாஸ்ட் டைம் நான் மீட் பண்ணப்போ மனோகிட்டே பேசப் போறேன்னு நம்பர் வாங்குன. அப்போ அவன்கிட்ட பேசலையா நீ?” யோசனையாய் வினவினான்.
“அது… உன்கிட்ட நம்பர் வாங்குனப்போ அவர்கிட்டே பேசலாம்னு நினைச்சேன் தீனா. அந்த டைம்லதான் போன் தொலைஞ்சு போச்சு. அதனாலே காண்டாக்ட் எல்லாம் மிஸ் ஆகிடுச்சு!”
“ஓ… சரி சரி. இப்பவும் ஏன் அவன்கிட்டே நீ சொல்லலை. அவன் உன்னைப் பத்திப் பேசும்போது ஷோபியோட ஃப்ரெண்ட்னுதான் சொன்னான்?”
அந்தக் கேள்விக்கு என்ன பதிலுரைப்பது எனத் திணறியவள், “தீனா, அவரோட ஹெல்த் கண்டிஷன் என்னென்னு தெரியாம எப்படி நான் பழைய மெமரீஸ்ல போய் பேச முடியும். அது எதுவும் ப்ராப்ளம் ஆகிடக் கூடாதில்லை…” என்றாள் அவன் பார்வையை சந்திக்காது.