அன்பு 18.1

சந்தனா மருத்துவமனைக்குள் நுழைய, குகேஷ் அழைத்துவிட்டான். அதில் முகம் மென்மையாக அழைப்பை ஏற்றுக் காதில் பொருத்தினாள்.

“ஹேப்பி பெர்த் டே சந்தனா!” அவன் வாழ்த்தை தொடர்ந்து, “ஹேப்பி பர்த்டே ம்மா…” என மூன்று வாண்டுகளும் ஒரு சேரக் கத்தவும், இவளது முகம் மலர்ந்து போனது.

“தேங்க் யூ சோ மச் செல்லக் குட்டிங்களா!” சந்தனா உணர்ந்து கூற, “சந்து, ஈவ்னிங் பெர்மிஷன் போட்டுட்டு சீக்கிரம் வா. நம்ப அவுட்டிங் போகலாம். ரெண்டு வருஷமாச்சு ஊரை சுத்தியே. கெட் ரெடி!” குகா ஆரவாரத்துடன் கூற,

“இல்ல குகா, நைட் ஷிஃப்ட் டாக்டர் இன்னைக்கு கொஞ்சம் லேட்டா வருவாங்க‌. நேத்தே என்கிட்ட ஏழு மணி வரை இருக்க முடியுமான்னு கேட்டாங்க. நான் ஓகே சொல்லிட்டேன். சோ, இன்னைக்கு என்னால வர முடியாது!” என மறுதலித்தாள்.

“ப்ம்ச்… அப்போ வர மாட்ட. குழந்தைங்க ரொம்ப ஆசையா இருக்காங்க!” அவன் கொஞ்சம் கடுப்புடன் பேச,
“குகா.‌.‌. சாரி டா. நீங்க ப்ளான் பண்ணது எனக்கு எப்படித் தெரியும்? நேத்தே கால் பண்ணி இருக்கலாம் இல்ல. இப்போ என்னால பெர்மிஷன் போட முடியாது டா. ஹம்ம்… ப்ளானை நாளைக்கு மாத்திக்கலாம். நான் நாளைக்கு லீவ் போட்றேன். வெளிய போகலாம்!” அவனை சமாதானம் செய்ய விழைந்தது சந்தனாவின் குரல்.

அதில் இறங்கியவனும், “கன்பார்மா நாளைக்குப் போறோம். வேற எதுவும் ரீசனை கொண்டுட்டு வந்துடாத நீ. காலைல பத்து மணிக்கு ரெடியா இரு. நாங்க வந்து பிக்கப் பண்ணிக்கிறோம்!” அவன் கண்டிப்பாய் கூற, “ஹம்ம் குகா… நான் ரெடியா இருப்பேன். யசோ வராளா? அம்மா, அப்பாவையும் கூட்டீட்டு வா டா. அவங்களைப் பார்த்தே ரொம்ப நாளாச்சு!” என்றாள் வருத்தத்துடன்.

“ஏன் சந்தனா… நீ அவங்களைப் பார்க்க வர மாட்டீயா? பார்க்குறேன் எத்தனை நாள் நீ இங்க வராம இருக்கேன்னு. சரியான அழுத்தக்காரி டி நீ” குகா குரலில் கொஞ்சம் கோபம் எட்டிப் பார்த்தது.

“பிறந்த நாள் அதுவுமா புள்ளையை ஏன் டா திட்டுற. ஃபோனை கொடு இங்க!” அருகே அமர்ந்திருந்த ராஜகுமாரி அலைபேசியை வாங்கினார்.

“சந்தனா… இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மா. எப்படி இருக்க? இந்த அம்மாவைப் பார்க்க வரணும்னு உனக்குத் தோணலையா?” அவர் உரிமையாய்க் கேட்க, இவளது முகத்தில் வருத்த முறுவல் பிறந்தது.

“இல்ல மா… வேலை இப்போலாம் அதிகம். அதான் வரலை மா. நாளைக்கு நீங்களும் வாங்க மா. நம்ப மீட் பண்ணலாம்!” அவள் கூறுவது பொய்யென அவருக்கும் புரிந்தது.

“என்னமோ சொல்ற சந்தனா. நான் நம்புறேன்…” என்றவர் குரலின் ஆதங்கம் அவளுக்குப் புரியாமல் இல்லை. அவளுக்கு மட்டும் அவர்களைப் பார்க்க வேண்டும் என்ற உந்துதல் இல்லையா என்ன? அவளுக்கு ஒன்றென்றால் எப்போதும் நீளும் கரத்திற்கு சொந்தமானவர்களின் குடும்பமாகிற்றே.

முன்பெல்லாம் வாரத்திற்கு ஒருமுறை அங்கு சென்று வருவாள். ஏனோ தன்னால்தான் குகேஷிற்கும் யசோவிற்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுவிட்டது என்ற குற்றவுணர்வில் அங்கு செல்வதை முற்றிலுமாகத் தவிர்த்திருந்தாள்.

“வயசான காலத்துல எங்களால அலைய முடியாது மா. யசோவும் குகாவும் பிள்ளைகளைக் கூட்டீட்டு வருவாங்க. நீயும் அவங்களோட வெளிய போய்ட்டு வா மா!” என்றார் வாஞ்சையாய்.

அந்தக் குரலிலிருந்த அன்பை முழுமையாய் உள்வாங்கியவள்,
“சரிங்க மா…” என்றாள். குகேஷின் தந்தையும் இவளுக்கு வாழ்த்தைப் பகிர்ந்தார்.

“சரி சந்து, நாளைக்கு மீட் பண்ணலாம்!” குகேஷ் அழைப்பைத் துண்டிக்க செல்ல, “குகா… யசோ விஷ் பண்ணவே இல்லையே!” என்றாள் வருத்தம் மேவிய குரலில்.

“சான்சே இல்ல சந்து. நாளைக்கு நேர்ல மீட் பண்ணும்போது நீ அவளை சமாதானம் பண்ணு, இப்போ வேணாம். பெர்த்டே அன்னிக்கு எதுவும் சொல்லிட்டான்னா, உனக்குத்தான் மனசு கஷ்டம்!” என்றான் பெருமூச்சோடு. மனதே இல்லாது அழைப்பைத் துண்டித்தவளை வேலை இழுத்துக் கொண்டது. அதில் ஆழ்ந்து போனாள்.

அன்றைய நாள் கழிய, வீடு வந்து சேர்ந்தாள் சந்தனா. “சந்துமா… மறந்தே போய்ட்டேன் டா. இன்னைக்கு உன் பிறந்த நாள் இல்ல. உன் மனசு போல என்னைக்கும் சந்தோஷமா இருக்கணும் டா!” என லட்சுமி மனதார வாழ்த்தினார். அவர் வாழும் இந்த வாழ்க்கை சந்தனா கொடுத்தது என எப்போதும் அவருக்கு மனதில் நன்றியுணர்வு உண்டு.

“பரவாயில்லை லட்சுமி மா…” என அவரை அணைத்துப் புன்னகைத்தவள் அறைக்குள் நுழைந்திருந்தாள். அலுப்புத் தீர குளித்தால் நன்றாக இருக்குமென தோன்ற, குளித்து முடித்து வந்தாள். மனோ இல்லாத வெறுமையைப் போக்க புத்தகத்திடம் அடைக்கலம் புகுந்திருந்தாள்.

“ரஞ்சன்… இன்னைக்கு புதுசா யூட்யூப்ல ஒரு டிஷ் பார்த்தேன். பீட்ரூட் புலாவ். டின்னருக்கு அதை செஞ்சுடவா?” என ஷோபனா வினவ, அவன் குறும்புடன் தலையை அசைத்தான்.

“என்ன… என்ன சிரிப்பு உங்களுக்கு!” என முழங்கையால் அவனை இடித்தவள், “நான் செய்றேன். சாப்டுட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க!” என அங்கலாய்த்துவிட்டுப் போன மனைவியில் இவனது புன்னகை நீண்டது.

“ப்பா… நான் ஹண்ட்ரட் ஸ்டேஜ் க்ராஸ் பண்ணிட்டேன்!” என கையில் அலைபேசியுடன் அஷூ குதிக்க, “நீயே உங்கம்மாகிட்டே என்னைப் போட்டுக் கொடுத்துடாதா டா!” என மகனை மென்மையாய் முறைத்தவனை வீட்டின் அழைப்புமணி கலைத்தது. எழுந்து சென்று ரஞ்சன் கதவைத் திறக்க, எதிரில் ஒரு வாலிபன் நின்றிருந்தான்.

அவனைப் பார்த்ததும் இவன் கதவை பூட்ட செல்ல, “டேய்… டேய், கதவை பூட்டாத டா. எட்டு மணி நேரம் ட்ராவல் பண்ணி வந்திருக்கேன். செம்ம டயர்ட் டா!” என அந்த வாலிபன் அலறியபடி உள்ளே நுழைந்தான்.

அந்தக் குரலின் பரிட்சயத்தில் ஷோபனா முகம் மலர்ந்து போனது.‌ “அண்ணா, வாங்க… வாங்க. இப்போதான் பெங்களூருக்கு வழி தெரிஞ்சதா?” என புன்னகையுடன் அவனை வரவேற்றாள்.

“மாமா…” என அஷ்வின் புதியவனிடம் தாவ, புன்னகையுடன் சின்னவனைத் தூக்கினான் அவன்.

ரஞ்சன் அவனை முறைத்துவிட்டு நகர, “ஏன் மா… உன் புருஷன் ரொம்ப கோவக்காரனா இருக்கானே. லாஸ்ட் டைம் பெங்களூர் வரும்போது நிஜமாவே என் ஆஃபிஸ் கொலிக்ஸ் எல்லாம் இருந்தாங்க. எனக்கு மீட்டிங் அட்டெண்ட் பண்ணவே டைம் சரியா போச்சு. எல்லாரும் வெளிய சுத்தீட்டு அப்படியே கிளம்பிட்டோம். இதை எத்தனை தடவை அவன்கிட்டே சொல்றது!” அவன் அலுத்துக் கொண்டான். ஷோபனா சிரித்துவிட்டாள்.

“தேஞ்ச டேப்ரிகார்டர் போல சொன்னதையே சொல்லாத டா நாயே!” ரஞ்சன் கையிலிருந்த தொலைவியக்கியை அவன் மீது எறிய அதை லாவகமாகப் பிடித்தவன், “அதானே டா உண்மை. அப்போ அதைதானே சொல்ல முடியும்!” என இவனும் முனைத்தான்.

“சண்டையை அப்புறம் போட்டுக்கலாம் அண்ணா. போங்க, போய் குளிச்சிட்டு வாங்க. நான் டின்னர் செய்றேன்!” என அவள் நகர,

இவன் தலையை அசைத்து அஷ்வினுக்கு வாங்கி வந்த பொருட்களை அவனிடம் கொடுத்துவிட்டு அறைக்குள் நுழைந்தான்.

ரஞ்சன் அவனை முறைத்துவிட்டு வெளியேற பார்க்க, “மனோ… ரொம்ப பண்ற டா நீ!” என்றான் அவன்.

“ஆமா டா… அப்படித்தான் பண்ணுவேன். தீனான்னு பேர் வச்சிருக்க யாரும் உண்மையை பேச மாட்டாங்களாம்!” என்ற ரஞ்சனின் குரலில் கொஞ்சம் கோபம்தான். சென்ற முறை சென்னைக்கு வந்த போது ரஞ்சனின் தாய் ஏதோ கூறிவிட்டார் என தீனா இவனைக் காண வரவில்லை. ரஞ்சன் அப்போதே தீனாவை சமாதானம் செய்திருந்தான். இருந்தும் அவன் அதை நினைத்து இவர்களைத் தவிர்க்க, ரஞ்சனுக்கு அதில் கோபம் பொங்கியது.

“ப்ம்ச்… சாரி டா மனோ… இனிமே எப்போ பெங்களூர் வந்தாலும் நான் இங்க வர்றேன்…” என அவனைத் தோளணைத்தான். இவனும் பெருமூச்சுடன் அவனை கட்டிக் கொண்டான்.

“அத்தை பேசுனதை எல்லாம் நான் அப்போவே மறந்துட்டேன் டா. அவங்க என் அத்தை தானே?” என தீனா உரைக்க, ரஞ்சன் முகத்தில் புன்னகை மீண்டிருந்தது.

“ஹம்ம்… லாஸ்ட் டைம் பார்க்க வராததுக்கு உனக்கொரு பனிஷ்மெண்ட் இருக்கு டா. குளிச்சிட்டு வா, உன் பாசமலர் யூட்யூப் பார்த்து ஏதோ செய்யப் போறா. போ…” ரஞ்சன் குறும்பாய்க் கூற, தீனாவுக்கும் சிரிப்பு பொங்கியது.

“டேய் நீ அடங்கு… அவ நல்லாதான் சமைப்பா!” தீனா ஷோபனாவிற்கு ஆதரவுக்கரம் நீட்டினான்.

“ஹக்கும்… அவளைவிட்டுத் தர மாட்டீயே… போடா!” ரஞ்சன் வெளியேற, தீனா குளித்து முடித்து வந்தான். ஷோபனா சமைத்ததை கேலி செய்து கொண்டே உண்டு முடித்திருந்தனர்.

“மாமா… இங்க பாருங்க. அப்பா பெர்த்டேக்கு எடுத்த போட்டோஸ்!” என அஷ்வின் ரஞ்சனின் அலைபேசியை எடுத்து ஒவ்வொன்றாய் காண்பித்தான்.

அதை பார்த்துக் கொண்டே வந்த தீனாவின் கைகள் ஒரு நொடி நின்றிருந்தன. அந்தப் புகைப்படத்தில் இருக்கும் பெண்ணை உற்றுப் பார்த்தவனின் இதழ்கள் குட்டி என முணுமுணுத்தன. “மனோ… மனோ, இது!” என அவன் அவளின் புகைப்படத்தைக் காண்பித்துக் கேட்டான்.

“இவங்க டாக்டர் சந்தனா… இந்த அப்பார்ட்மெண்ட்லதான் இருக்காங்க தீனா!” என்றான் அவன்.

error: Content is protected !!
Scroll to Top