அன்பு 17.2

“வார்த்தைக்கு வார்த்தை அம்மா இடத்தை ஃபில் பண்ணேன்னு சொல்றீயே சந்தனா. அப்போ நான் உன் நல்லதுக்குத்தான் எதுவும் சொல்லுவேன்னு தோணலை இல்ல? ஹம்ம், உன் இஷ்டத்துக்கு தனியா இருந்துடுவேன்னு பேசிட்டு இருக்க? நீ இப்படி தனியா கஷ்டப்படும் போது நாங்க எப்படி டி சந்தோஷமா இருப்போம்னு நினைக்கிற? காலம் முழுக்க என் மனசுல குறையா தங்கிடும் டி. நான் சொல்றதை கேளு சந்து. உனக்கொரு நல்ல வாழ்க்கை அமைஞ்சு நீ சந்தோஷமா வாழ்றதைப் பார்க்கணும்னு எங்களுக்கும் ஆசை இருக்காதா?” எனக் கேட்ட யசோவின் குரல் ஆதங்கம் ததும்பி வழிந்தது. சந்தனாவிடம் பதிலில்லை.

“இப்போ பேசாத டி… இவ்வளோ நேரம் பேசுன வாய் எங்கப் போச்சு. உன் இஷ்டத்துக்கு வாழ்வேன்னா, நானும் அவனும் உன் வாழ்க்கைல இல்ல. புரிஞ்சுக்கோ, இனிமே என்னைத் தொல்லைப் பண்ணாத. எக்கேடோ கேட்டுப் போ‌. நான் சொல்றதை கேக்க கூடாதுன்னு முடிவெடுத்த உன்கிட்ட பேசுறது வேஸ்ட் டி… இனிமே இந்த மாதிரி எதாவது அழுது பேசி என்னை சமாளிக்கலாம்னு கால் பண்ண, நான் மனுஷியா இருக்க மாட்டேன்!” முழு மூச்சாகக் கத்திய யசோதா அழைப்பைத் துண்டித்திருக்க, சந்தனா விழிகளில் நீர் வழிந்தது.

“ஏன் டி… அவளைக் கஷ்டப்படுத்தணும்னு இப்படி பேசுவீயா?” குகேஷ் மனைவியைக் கடிய, அவனை முறைத்தவள்,

“உங்களை மாதிரியே அவ பண்ற எல்லாத்துக்கும் என்னால சப்போர்ட் பண்ண முடியாது. இனிமே அவளுக்கு ஏத்துட்டு என்கிட்ட வராதீங்க. இதுக்கு முன்னாடி பேசி வாக்குவாதம் வந்து ரெண்டு வருஷம் வனவாசம் போய்ட்டீங்க. இனி அப்படி எதுவும் பண்ணீங்க, பொண்டாட்டி புள்ளை உங்களுக்கு இல்ல. அவளை மாதிரி நீங்களும் தனியாதான் கிடந்து அல்லாடணும்‌. அதை ஞாபகம் வச்சுக்கோங்க!” என வார்த்தைகளைக் கடித்துத் துப்பிவிட்டு போனவளை இவனால் முறைக்க மட்டும்தான் முடிந்தது.

இன்று மட்டுமல்ல, கடந்த சில வருடங்களாக குகேஷ் அவர்கள் இருவருக்கும் இடையில் அல்லாடிக் கொண்டிருந்தான். சந்தனாவின்புறம் பேசினால் யசோதா கோபப்படுவதும், மனைவி கூற்றை ஆதரித்தால் சந்தனா வருந்துவதும் என அவன் எந்தப் பக்கம் நிற்பதென உத்தமமாய்  தெரியவில்லை. தன்னிலையை எண்ணி நொந்து கொண்டான்.

மேலும் இரண்டு நாட்கள் மௌனமாய் கழிந்திருந்தன. சந்தனாவிற்கு அன்றைக்கு எழ சுத்தமாய் விருப்பமில்லை. விழித்தும் அசையாது படுக்கையிலே இருந்தாள். லட்சுமி அம்மா அவளுக்காக கொடுத்த குளம்பி ஆறிப்போயிருந்தது.

தலையை உயர்த்தி தாயின் புகைப்படத்தை வேதனையாய்ப் பார்த்தாள். அவரில்லாது ஆறு வருடங்களை கடந்துவிட்டாள். ஒவ்வொரு பிறந்தாளின் போதும் ஆசையாய் உச்சி நுகர்ந்து முத்தமிட்டு வாழ்த்து சொல்லும் தாயின் ஸ்பரிசத்திற்கு மனம் வெகுவாய் ஏங்கியது. தலையணையில் முகம் புதைத்து கண்ணீரை உகுத்தாள்.

“குட்டி, இனிமே நான்தான் உன் பெர்த்டேக்கு ஃபர்ஸ்டா விஷ் பண்ணுவேன்!” எனக் கூறிய மனோவின் கடைசியும் முதலுமான வாழ்த்து அதுதான் என நினைக்கும் போது இன்னும் அழுகை வந்தது.

சிறிது நேரம் படுத்தே கிடந்தாள். இப்படியே இருந்தால் எதுவும் மாறிவிடுமா என்ன என மனம் கேள்வியெழுப்ப, விழிகளைத் துடைத்துக்கொண்டு எழுந்தமர்ந்தாள். தாய், தந்தையின் புகைப்படத்தை தொட்டு வணங்கினாள். கழிவறைச் சென்று முகம் கழுவி, பல் துலக்கிவிட்டு வந்தாள்.

அறையிலிருந்து வெளியே வந்தவளைப் பார்த்து, “காபி ஆறிப்போச்சு சந்துமா. சூடு பண்ணித் தரவா?” என லட்சுமி அடுக்களையிலிருந்து குரல் கொடுத்தார்.

“இல்லை மா… வேணாம்!” எனக் கசந்த குளம்பியை ஒரே மிடறில் குடித்து முடித்தாள். என்ன உடுத்துவது என தெரியாது நிலைபேழையைத் திறக்க, ஷோபனா அவளுக்குப் பரிசளித்த பச்சை நிற சேலை விழிகளுக்குப் புலப்பட, அதை எடுத்து ஆசையாய்த் தடவியவள், அதற்குத் தோதாக மேல்சட்டை ஒன்றை எடுத்துக்கொண்டு குளித்து தயாராகினாள்.

லட்சுமி அம்மா சமையலை முடித்திருந்தார். “ரெண்டு நாள் இந்தப் பையன் இல்லைன்னதும் வீடே வெறிச்சோடி போச்சு சந்தனா. சீக்கிரம் அவனைக் கூட்டீட்டு வா!” என அவர் கூறியபடியே உணவை எடுத்து வைக்க, சந்தனாவின் உதடுகளில் முறுவல் பிறந்தது. அவளுக்கும் மனோகர் இல்லாதது எதையோ இழந்த உணர்வை கொடுத்திருந்தது. வீட்டிலிருக்கும் போது எப்போதும் அவள்பின்னே சுற்றிக் கெண்டிருப்பான். அவனில்லாது கொஞ்சம் வெறுமையை உணர்ந்தாள்.

ஒவ்வொரு உயிருக்கும் பற்றிக் கொள்ள, வாழ்க்கையை நகர்த்த ஏதோ ஒரு காரணம் தேவையாயிருக்கிறது. அப்படியில்லையென்றால் வாழ்க்கை எவ்வித பிடிப்புமின்றி சலித்துவிடுவது மனித இயல்பு. சந்தனாவை உயிர்ப்புடன் வைத்திருப்பவன் மனோதான். அந்த பெயரா, இல்லை அந்தப் பெயருக்கு உரியவனா என யாரும் அறியார்.

உண்டு முடித்தவள் மருத்துவமனைக்கு கிளம்ப, ஷோபி எதிர்ப்பட்டாள். “டாக்டரம்மா… சேரி உங்களுக்கு ரொம்ப நல்லா இருக்கு!” என்றாள் ஆர்ப்பாட்டமாய்.

“தேங்க்ஸ் ஷோபி!” என இவள் முறுவலிக்க, சில பல நிமிடங்கள் பேசிவிட்டு இருவரும் விடை பெற்றனர். ஷோபி கருதரித்திருப்பதால் ரஞ்சன் அவளை எங்கும் வெளியேவிடவில்லை. அவனே அனைத்தையும் செய்தான். இன்றைக்குத்தான் அவள் அடம்பிடித்து அஷூவைப் பள்ளி வாகனத்தில் ஏற்றிவிட வந்திருந்தாள். இடைப்பட்ட நாட்கள் பார்த்துக் கொள்ளவில்லை எனினும், குறுஞ்செய்தி வழியே அவளது நலத்தை சந்தனா நாடியிருந்தாள்.

***

சந்தனா பத்தாம் வகுப்பின் இறுதி தேர்வுக்காகப் மும்முரமாக படித்துக் கொண்டிருந்தாள். தேர்வுக்கு இன்னும் ஒரு மாதமே இருந்தன. அதனாலே விளையாட்டு, பேச்சு, கலாட்டாக்கள் என எல்லாம் அருகிப் போய்விட்டன. சில நாட்களாக மருத்துவராக வேண்டும் என்றொரு ஆசை அவளுக்கு முகிழ்த்திருக்க, அதை நிறைவேற்ற வேண்டும் என்ற உந்துதல் மனம் முழுவதும் பிறந்தது.

அதனாலே முழு மூச்சாக படிப்பில் ஆழ்ந்திருந்தாள். அவளது வகுப்பு ஆசிரியர்கள் அனைவரும் சந்தனா நல்ல மதிப்பெண் பெறுவாள் என அவள் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை வைத்திருக்க, அவர்களுக்காகவும் சிந்தனையை சிதறவிடாது பார்த்துக் கொண்டாள்.

மனோவும் பனிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும். தாய், தந்தையைப் பெருமைபடுத்த வேண்டும் என்று தன்னால் இயன்ற அளவு படிப்பில் கவனத்தை செலுத்தினான்.

மாலையில் இருவரும் ஒன்றாக அமர்ந்து படிப்பதை வழக்கமாக்கியிருந்தனர். சந்தனாவிற்குத் தெரியாதவற்றை மனோ சொல்லிக் கொடுக்க, இவனுக்குத் தெரியாதவை எல்லாம் அவள் பயிற்றுவித்தாள்.

அன்றைக்கும் அது போல அவர்கள் படிப்பில் கவனமாய் இருக்க, மனோ சந்தனாவின் புத்தகம் ஒன்றைக் கையிலெடுத்து புரட்டிக் கொண்டிருந்தான்.

“மனோ, நான் இந்த சம்மை புரியுற மாதிரி போட்டிருக்கேன் டா. நீ பாரு, புரியலைன்னா சொல்லு, எங்க மிஸ்கிட்டே கேட்டுட்டு வரேன்!” என அவள் கூறுவதை கேட்டவன் புத்தகத்தை சுழற்ற, அதிலிருந்து ஒரு காகிதம் வெளியே வந்து விழுந்தது.

“குட்டி… என்ன பேப்பர் இது?” அவன் வினவ, “தெரியலையே மனோ…” என்ற சந்தனா நிமிரவே இல்லை. மறுநாள் நடக்கவிருக்கும் மாதிரித் தேர்வுக்காகப் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தாள்.

அந்த காகிதத்தை அசட்டையாகத் திறந்த மனோவின் முகம் சில நொடிகளில் மாறியது. “குட்டி… சர்ஜூன் யாரு?” என அவன் கோபமாய்க் கேட்க, “ஏன் டா… என் ஸ்கூல்தான் அவன். பட் ட்வெல்த் படிக்கிறான்!” எனப் புரியாமல் வினவினாள்.

“இதைப் பாரு… என்ன எழுதியிருக்கான்னு!” மனோ காட்டமாய் அவளிடம் காகிதத்தைக் கொடுக்க, அதைப் படித்த சந்தனாவின் முகம் நொடியில் வெளுத்திருந்தது.

“மனோ… இது, எனக்கு… யார் என் புக்ல வச்சதுன்னு தெரியலை டா. இதை மிஸ் பார்த்திருந்தா, என்னை என்ன நினைச்சிருப்பாங்க!” என்றவளின் விழிகளில் சரசரவென நீர் கோர்த்தது.

“குட்டி… நீ ஏன் டி அழற? நீதான் எந்த தப்பும் பண்ணலையே. அவன்தானே லவ் லெட்டர் கொடுத்தது?” மனோ கோபமாய் வார்த்தைகளைத் துப்பினான்.

error: Content is protected !!
Scroll to Top