அன்பு 17.1

சந்தனா மௌனமாய் தன் முன்னிருந்தப் பெண்ணைக் காண, அவள் முகம் ஆழ்ந்த அமைதியில் இருந்தது. இரண்டு வாரங்களுக்கு முன்னே அழுது ஆர்ப்பாட்டம் செய்த பெண்ணா இவள் என எண்ணுமளவிற்கு அவளது உதடுகள் இறுகப் பூட்டியிருந்தன. கண்களில் தெரிந்த சோகம் உதட்டை எட்டக் கூடாதென இதழ்களில் புன்னகையை புகுத்த முயன்று தோற்றிருந்தாள்.

சந்தனாவிற்கு அந்த முகத்தை, விழிகளைக் கண்டதும் மனம் பாரமேறியது. ஒரு மருத்துவராய் அவளைத் தேற்றுவது தன் கடமையென எண்ணியவள், “ப்ரியா, உங்களுக்கு யார்கிட்டேயாவது மனசுவிட்டுப் பேசணும்னு தோணுச்சுன்னா, என்கிட்டே பேசுங்க. என்னை டாக்டரா பார்க்காம, ஒரு ஃப்ரெண்டா பாருங்க. மனசுல இருக்கதை ஷேர் பண்ணா பாரம் குறையும்.‌..” என்றாள் ஆதரவாகக் கையைப் பிடித்து.

அந்த கரத்தின் அழுத்தத்தில் எதிரிலிருந்தவளின் உதடுகளில் விரக்தி சிரிப்பு உதிர்ந்தது. “பேசி என்னாகப் போகுது டாக்டர்? என்னை விட்டுட்டுப் போனவன் திரும்ப வருவானா என்ன? இல்ல, நடந்ததைதான் மாத்த முடியுமா?” எனப் பேச பேச அவளது விழிகள் கலங்கின.

“ப்ரியா, அதான் சொல்லிட்டீங்களே. அவர் தான் உங்களைவிட்டு மூவ் ஆன் பண்ணிட்டாரு. பட், நீங்க இன்னும் ஏன் அதே இடத்துல நிக்குறீங்க? உங்களோட வாழ்க்கை இது. உங்களை வேணாம்னு விட்டுட்டுப் போனவருக்காக லைஃபை ஸ்பாயில் பண்ணிக்கப் போறீங்களா? இல்ல, இதுல இருந்து மீண்டு உங்களுக்கான வாழ்க்கையை அழகா அமைச்சுக்கப் போறீங்களான்றது உங்களோட முடிவுதான் ப்ரியா…”

”நான் ஆயிரம் சொன்னாலும், உங்களோட வலியையும் வேதனையும் என்னால வாங்கிக்க முடியாது. உங்களை அதுல இருந்து மீட்டெடுக்க மட்டும்தான் முடியும்…” சந்தனா நிதர்சனத்தை உரைக்க, அந்தப் பெண் மேஜை மீது கவிழ்ந்து படுத்தாள். என்ன முயன்றும்‌ மனதில் கதறலைக் கட்டுப்படுத்த முடியாது போக, உதடு விம்மியது.

விழிகளில் சரசரவென கண்ணீர் வழிய, “முடியலை டாக்டர். என் மனசு… அது சிவாவுக்கு மட்டும்தான். இந்த ஜென்மத்துல அவனை மட்டும்தான் என்னால லைஃப் பாட்னரா ஏத்துக்க முடியும். யாரையும் என்னால அக்செப்ட் பண்ண முடியாது.”

“அவன் என்னை விட்டிருக்கலாம். பட், என்னால அப்படி விட முடியாது. ஐ லவ் ஹிம் தட் மச். ஒவ்வொரு நாளும் அவனோட எப்படியெல்லாம் வாழணும்னு ஆசை வச்சிருந்தேன். அதெல்லாம் ஒரு நிமிஷத்துல உடைச்சுட்டான். அவனை வேற ஒரு பொண்ணோட பார்க்கும் போதே செத்துட்டேன் டாக்டர். என்னதான் வீட்ல கட்டாயப்படுத்துனாலும் என்னை மறந்துட்டு இன்னொரு பொண்ணு கழுத்துல தாலி கட்ட அவனுக்கு எப்படி மனசு வந்துச்சுன்னு நினைக்கும் போதே நெஞ்சைப் போட்டு அழுத்துது…”

“நானா அவனைக் காதலிக்கிறேன்னு சொன்னேன். அவன்தான் ரெண்டு வருஷமா என் பின்னாடி சுத்தி லவ் பண்ண வச்சான். நான் அவன் மேல உண்மையான அன்பு வச்சிருந்தேன். அவனுக்காகத்தான், அவங்க வீட்ல இருக்கவங்களால அவனுக்குப் பிரஷர் வரக்கூடாதுன்னு மொழி தெரியாத இடத்துல போய் கஷ்டப்பட்டேன்…”

“ஆனால் அவன் எல்லாத்தையும் மறந்துட்டான். என்னை தானே கல்யாணம் பண்ணிப்ப? என்னை விட்டுட்டு போய்ட மாட்டதானேன்னு ஒவ்வொரு தடவையும் கேட்டுட்டே இருப்பான் டாக்டர். பட், அவன் என்னை விட்டுப் போய்ட்டானே டாக்டர். அவன் இனிமே என் வாழ்க்கைல இல்லைன்றதை என்னால ஏத்துக்கவே முடியலை. எனக்கு மட்டும் ஏன் இப்படின்னு நினைச்சு நினைச்சு அழுகையா வருது டாக்டர்…” தேம்பியபடி உரைத்தப் பெண்ணைக் காண்கையில் சந்தனா விழிகளிலிருந்து ஒரு சொட்டு நீர் கன்னத்தில் இறங்கியது.

“அவர் உங்க கூட இனிமே இருக்க மாட்டருன்றதுதான் நிதர்சனம் ப்ரியா. இதை அக்செப்ட் பண்ணித்தான் ஆகணும். உங்க கூட இல்லாத ஒருத்தருக்காக உங்களைப் பெத்து வளர்த்த அம்மா அப்பாவை காலம் முழுக்க கஷ்டப்படுத்தப் போறீங்களா?”

“உங்களை நினைச்சு தவிச்சுப் போய் வெளிய உக்கார்ந்து இருக்காங்க. அவங்களுக்காகவாது நீங்க மூவ் ஆன் பண்ணித்தான் ஆகணும். யார் இல்லைனாலும், உங்களோட வாழ்க்கை நின்னுப் போய்டாது. உங்களோட வாழ்க்கையை நீங்க வாழ்ந்துதான் ஆகணும். நடந்ததை நினைச்சு மிச்சமிருக்க வாழ்க்கையை தொலைச்சுடாதீங்க. இப்போ முடியாதுன்னு தோணலாம். பட், இன்னும் ஒரு வருஷம் இல்ல, ரெண்டு வருஷம் கழிச்சு உங்களோட வாழ்க்கை கண்டிப்பா நீங்க நினைக்கிறதைவிட பெஸ்ட்டா இருக்கும்…”

“பேசுறது ஈசிதானே டாக்டர்? உங்களுக்கு என்னை மாதிரி ஒரு சிட்சுவேஷன் வந்திருந்தா என்னப் பண்ணுவீங்க நீங்க? ஹம்ம்? சொல்லுங்க டாக்டர்? உங்க இஷ்டத்துக்குப் பேசாதீங்க!” கோபமும் ஆற்றாமையுமாய் அவள் பேச, சந்தனா பெருமூச்சை வெளிவிட்டாள். அவளிடம் மேலும் சில நிமிடங்கள் பேசியவள், அவளது தாய் தந்தையை அழைத்து உரையாடினாள். அவர்கள் முகம் வருத்தத்தில் தோய்ந்திருக்க, ஆறுதலாகப் பேசி அனுப்பினாள்.

காலையிலிருந்து உணவுண்ண கூட செல்லாது அடுத்தடுத்து வந்த நோயாளிகளை கவனித்தலில் உடல் மேலும் சோர்ந்தது. மனமும் பாரமேறியிருக்க, கண்ணை மூடி மேஜையில் சாய்ந்தாள். சற்று முன்னே பேசிச் சென்ற பிரியாவின் வார்த்தைகள் இப்போதும் இவளது செவிகளில் எதிரொலிக்க, மெது மெதுவாக விழிகள் கலங்கின. அமைதியாய்ப் படுத்திருந்தாள். ஏனோ பல வருடங்களுக்கு முன்னே அவள் அரற்றிய அதே வார்த்தைகள்தான்.

பித்துப் பிடித்ததைப் போல சுற்றிய நாட்கள் நினைவில் நிழலாட, நெஞ்சடைத்துப் போனதொரு நினைவு. எல்லாவற்றையும் மறந்துவிட்டேன் என தன்னையே ஏமாற்றி வைத்திருந்தவளின் வேலி உதிர்ந்து கொண்டிருந்தது.

நெஞ்சு முட்டுமளவிற்கு வாதை வதைத்தப் போதும் எதையும் காண்பிக்காது எப்போதும் போல தன்னைக் காண்பித்துக் கொண்டிருக்கும் முகமூடி விரைவில் கழன்று விடுமோ என பயபந்து சுழலாமல் இல்லை. அதற்குள்ளே இவ்விடத்தை, தன்னிலையை இழக்கச் செய்யும் இந்த சூழ்நிலையிலிருந்து விடைபெற்று கண்காணாத இடத்திற்கு சென்றுவிட வேண்டும் என்ற முனைப்பு அவளைத் தூண்டியது.

ஸ்மரணையற்றிருந்தவள், செய்தி வந்ததற்கான அறிகுறியாய் ஒலியெழுப்பிய அலைபேசியில் புறத்தூண்டல் உறைக்கப் பெற்றாள். அதைப் புறக்கணிக்க முயன்று தோற்றவள், எடுத்துப் பார்க்க குகேஷிடமிருந்துதான் செய்திகள் வந்திருந்தன. அதை திறந்து பார்த்தாள். குடும்பம் சகிதமாக மகிழ்ச்சியாய் புகைப்படம் எடுத்து இவளுக்குப் பகிர்ந்திருந்தான். அதைக் கண்டதும் சந்தனாவின் மனம் எத்தனை ஆசுவாசம் அடைந்தது என அவள் மட்டுமே அறிவாள்.

கைகள் தன் போல அவனுக்கு அழைப்பை விடுத்தன. அவன் ஏற்றதும், “யசோகிட்ட சமாதானமாகிட்டீயா குகா. உங்க ரெண்டு பேரையும் இப்படி பார்க்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு டா. எனக்காக இனிமே உங்க ரெண்டு பேருக்குள்ள சண்டை வரக்கூடாது டா!” என்றாள் அக்கறையும் கண்டிப்புமாய். அவனிடம் பதிலில்லை.

“குகா, லைன்ல இருக்கீயா?” இவள் வினவ, “இருக்கேன் சந்தனா. நீ சாப்டீயா?” என கேட்டான்.

அந்தக் கேள்வியில் இவளுக்கு விழிகள் கலங்கப் பார்க்க, “ஹம்ம்… சாப்டேன் டா!” என்றாள்.

“பொய் சொல்றீயா சந்தனா? நீ சாப்பிட்டிருக்க மாட்டேன்னு எனக்குத் தெரியும். இங்க என்ன நடக்குமோன்னு யோசிச்சு எதையும் குழப்பிக்காத. நாங்க சமாதானமாகிட்டோம்…” என்றான் அவளுக்காகப் பார்த்து. சந்தனா முகத்தில் முறுவல் பிறந்தது.

“உன் பொண்டாட்டியை சமாளிக்கிறது கஷ்டம்னு நினைச்சேன். சண்டைக்காரியாச்சே டா அவ. பரவாயில்லை டா. நீ தேறிட்ட!” என்றாள். நீண்ட நாட்கள் கழித்து சந்தனா குரல் தன்னவர்களுக்காக மீண்டிருந்தது.

குகேஷ் முகத்தில் புன்னகை ‌நீண்டது. “இதை மட்டும் அவ காதுல பட்ற மாதிரி சொல்லு சந்து…” என்றான்.

“ஹம்ம்…சொல்லிட்டா போச்சு. நீ அவகிட்டே ஃபோனை கொடு டா. நான் பேசணும்!”

“தர்றேன். பட் பேசுவாளா, மாட்டாளான்னு எனக்குத் தெரியாது. நீயாச்சு, அவளாச்சு!” என்ற குகேஷ் குரலில் வருத்தமில்லாமல் இல்லை.

“யசோ, சந்தனா பேசுறா…” தன் முன்னே நீண்ட அலைபேசியை வெறித்த யசோதா, “கண்டவங்ககிட்டே பேசணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லங்க!” என்றாள் அலட்சியம் மிகுந்த குரலில்.

அதில் சந்தனாவின் மனம் காயம்பட்டது. வார்த்தைக்கு வார்த்தை அந்நியர் என்று சொல்லித் தன்னைக் காயப்படுத்துபவளின் மீது சந்தனாவிற்கு துளியும் கோபம் வரவில்லை. அந்தக் குரல் அவளுக்கானது, அவள் மீதிருக்கும் அக்கறையில்தான் வருகிறது என அவள் மட்டுமே அறிவாள்.

“குகா… நீ அவ காதுல ஃபோனை வை டா. நான் பேசுறதை அவ கேட்கட்டும்!” சந்தனா இறைஞ்ச, அவன் பெருமூச்சுடன் மனைவியின் காதில் அலைபேசியைப் பொருத்தினான்.

“யசோ… ப்ளீஸ் டி… ரெண்டு நிமிஷம். நான் பேசுறதை மட்டும் கேளு. நீங்க ரெண்டு பேரும் இப்படியே சந்தோஷமா இருக்கணும் யசோ. என்னை வச்சு இனிமே சண்டை போடாதீங்க. எனக்கு கஷ்டமா இருக்கு. நான், அது என் வாழ்க்கை இப்படி தான். அதை மாத்த முடியாது. எனக்கு மனோ இருக்கான் டி. ஏன் நான் சொல்றது உனக்குப் புரியலை. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு, என் யசோ எனக்கு வேணும். என் அம்மாவுக்குப் பிறகு நீதான் டி அந்த இடத்தை நிரப்புன. பட், இப்போ நீயே என்னை அவாய்ட் பண்ணா, நான் என்ன பண்றது?” எனக் கேட்க சந்தனா குரல் லேசாய் கமறிவிட, யசோதாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது.

error: Content is protected !!
Scroll to Top